Archive for the ‘பாராளுமன்றத் தேர்தல் 2009’ Category

விஜயகாந்த் கட்சியின் எதிர்காலம்..!

மே 18, 2009

18-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே.!


தமிழகத்தை மொட்டையடித்து தங்களது குடும்பத்தின் மொத்த சொத்துக்களை அதிகரிப்பதில் போட்டோ போட்டியில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட அரசியல் கட்சிகளுமே ஒரு விஷயத்தில் மட்டுமே உறுதியுடன் உள்ளன. அது தங்களைத் தவிர வேறு யாரையும் இப்போதைக்கு மட்டுமல்ல.. எப்போதுமே வளர விடக்கூடாது என்பதில்தான்.

அடிக்கின்ற கொள்ளையைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வது. முடிந்தால் தங்களுக்குள் மட்டுமே விட்டுக் கொடுத்துவிட்டுப் போவது.. மற்றபடி வேறு எவனாவது நானும் திராவிடன் என்று சொல்லி வந்தால் அவனை வெட்டிவிடுவது என்பதை இந்தத் தேர்தல் வரையிலும் பின்பற்றி வருகின்றன திமுகவும், அதிமுகவும்.

இரண்டு கழகங்களும் வைகோவுக்கு தேர்தல் நேரத்தில் கழுத்தில் கத்தி வைப்பதுபோல் நெருக்கடி கொடுத்தது இதனால்தான். தங்களுக்கு அடங்கியிருக்கும் கட்சி என்பதோடு, நாய்க்கு போடும் பிஸ்கட்டைப் போல் 1, 2-ஐ வாங்கிக் கொண்டு வாங்கியதற்கு நன்றியாக கேட்கும்போதெல்லாம் வாலாட்டும் கட்சிகள்தான் அவர்களுக்குத் தேவை..

இன்றுவரையிலும் விஜயகாந்த் மீது தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் இரு கட்சியினருமே தாக்குதலைக் கொடுக்காமல் வருவதற்குக் காரணமே நாம் ஏன் வளர்த்து விட வேண்டும் என்று இந்த சிவனும், ஆண்டாளும் (அப்படி என்று நினைப்பு ரெண்டு பேருக்கும்..!) நினைப்பதுதான்..

இவர்களுடைய புறக்கணிப்பில் இன்னொரு லாபமும் உண்டு. அது விஜயகாந்தால் பிரியப் போகும் பொதுவானவர்களின் ஓட்டு. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தமிழ்நாட்டில் நிரந்தரமான ஓட்டு வங்கி ஒன்று உண்டு. அந்த இரு கட்சியின் ரசிகர்களைத் தவிர பொதுவாக இருப்பவர்களில் அதிகம்பேர் எந்தப் பக்கம் வாக்களிக்கிறார்களோ, அவர்களே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஜெயித்து வருகிறார்கள்.

அப்படி பொதுவாக இருப்பவர்களில் லட்சணக்கணக்கானோர் இந்த இரண்டு திருடர்களைத் தவிர வேறு யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் விஜயகாந்துக்கு கடந்த தேர்தலிலும், இந்தத் தேர்தலில் தங்களது வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதன் பயனாக சென்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8.38 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றிருந்த தே.மு.தி.க., இந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் 10.1 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று தனது ஓட்டு வங்கியை உயர்த்தியிருக்கிறது.

இந்த தேர்தலில் திமுக 22 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இக்கட்சி பெற்றிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 76 லட்சத்து 25 ஆயிரத்து 421. இது 25.10 சதவிகிதம்.

அதிமுக 23 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை வென்றிருக்கிறது. இக்கட்சி வாங்கியிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 69 லட்சத்து 63 ஆயிரத்து 510. இக்கட்சியின் ஓட்டு சதவிகிதம் 22.91.


இந்த மக்களவைத் தொகுதியில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் பதிவான ஓட்டுக்கள் 3 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்து 49. இதில் 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது தே.மு.தி.க.

35 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளியுள்ளது தேமுதிக.

25 தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தைவிட தேமுதிக வேட்பாளர் பெற்ற ஓட்டுக்கள் அதிகம்.

தேமுதிக தனித்துப் போட்டியிட்டு ஓட்டுக்களைப் பிரித்ததினால் அதிகப்பட்சமாக அதிமுக 8 தொகுதிகள், காங்கிரஸ் 7 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதி, மதிமுக 1 தொகுதி, விடுதலைச்சிறுத்தைகள் 1 தொகுதி, மற்றும் பாரதீய ஜனதா 1 தொகுதி என்று பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள்.

ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெற உதவியிருக்கிறது தேமுதிக.

வடசென்னை, திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி வித்தியாசத்தைவிடவும், தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகம்.

அதே போல் திருவள்ளூர், தென்சென்னை, சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கும் தேமுதிக வேட்பாளர்கள் பிரித்தெடுத்த வாக்குகளே காரணம்.

ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்று மதிமுக ஈரோட்டில் வென்ற கதையிலும் தேமுதிகவின் வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய 7 தொகுதிகளில் அக்கட்சி பெற்ற வெற்றிக்கும் காரணம் தேமுதிகதான்.

நான் பெரிதும் வருத்தப்படுவது வைகோவின் தோல்விக்காகத்தான்.. அவர் தோற்றது 15764 வாக்குகள் வித்தியாசத்தில். ஆனால் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாபா பாண்டியராஜன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 229. நடிகர் கார்த்திக் வாங்கியிருந்த ஓட்டுக்களும் பத்தாயிரத்துக்கும் மேல்..

இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..

கடைசி நிமிடத்தில் புதுமனைபுகுவிழா வீட்டில் நடந்த பேரம் நல்லபடியாக நடந்து முடிந்து காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தால், தேமுதிக மூலம் திமுக கூட்டணிக்கு 12 இடங்களாவது கூடுதலாக கிடைத்திருக்கும்.

அல்லது கொட்டிவாக்கம் பங்களாவில் நடத்திய பேச்சுவார்த்தை ஜெயித்து பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் ‘அம்மா’வுடன் இணைந்திருந்தால், அந்தக் கூட்டணிக்கும் 12 இடங்களாவது கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.

கூடவே விஜயகாந்திற்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இருவருமே கொடுக்க முன் வந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மாத்திரை கொடுக்காமலேயே மருத்துவர் ராமதாஸுக்கு பேதியை வரவழைத்திருக்கலாம்.

இப்படி ஜெயிக்க முடிந்த விஷயங்களையெல்லாம் கைவிட்டுவிட்டு, தங்களது கட்சிக்காரர்களை அல்லல்பட வைத்தாலும் தைரியமாக தனித்து நின்று வீரம் காட்டிய அண்ணன் விஜயகாந்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன்..

அதோடு காங்கிரஸுடனான தேமுதிகவின் கூட்டணியை முறியடித்த பெருமையும் கலைஞரையே சேரும். திமுகவின் தொகுதிப் பட்டியலில் ஒதுக்க முடியாது. வேண்டுமானால் உங்களது பட்டியலிலேயே 5 தொகுதிகளை ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

முடிந்தவரை கேட்டுப் பார்த்தும், போராடிப் பார்த்தும் 8 தொகுதிகளுக்குக் குறையாமல் விஜயகாந்த் கேட்க.. இழுபறி நிலைமை இருக்கும்போதே விஜயகாந்துக்கே 5 போய்விடும் என்றால் உங்களது மற்றத் தலைவர்களுக்கும், அவர்களுடைய அடிப்பொடிகளுக்கும் சீட்டு எப்படி கிடைக்கும் என்று டெல்லிக்கு காவடி எடுக்க வைத்து அந்தத் திட்டத்தையே முறியடித்தது திமுக.

இந்தப் பக்கம் வழக்கம்போல அம்மா.. சும்மா பேச்சுக்கு ஒரு பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு 4 தர்றோம்.. இஷ்டம்னா வாங்க.. இல்லாட்டி மரியாதை படத்துக்கு டப்பிங் இருக்காம்ல.. போய்ச் செய்யுங்க என்று சொல்லி கவுரவமாக அனுப்பி வைத்தார் அம்மா..

வேறு வழியில்லாமல் தனித்தே நின்று ஓட்டு வங்கியை உயர்த்திக் கொண்ட பெருமையை மட்டுமே இத்தேர்தல் விஜயகாந்திற்குக் கொடுத்துள்ளது.

அடுத்தத் தேர்தலில் கேப்டன் திராவிட பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் அவருக்கு தற்போது இருக்கும் பத்து சதவிகித வாக்குகள் அப்படியே இனிமேல் கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. “இரண்டு திருட்டுக் கட்சிகளுமே வேண்டாம் என்றுதான் உன்னை கூப்பிடுறோம்.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கிட்டு வோட்டு கேட்டு வந்தா என்ன அர்த்தம்..?” என்று மக்கள் திருப்பி பொடனியில் அடித்துக் கேட்பார்கள்.

ஆக புரட்சிக் கலைஞர் அடுத்தத் தேர்தலிலும் தனித்து நின்று ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பெறலாம்.

அல்லது இந்த இரண்டு பெரிய திருட்டுக் கட்சிகளைத் தவிர மற்ற சில சில்லரை உதிரி பாகங்களைக் கொண்ட கட்சிகளை வைத்து மூன்றாவது அணி அமைத்தால் ஒரு பத்து, பதினைந்து தொகுதிகளாவது அண்ணனுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். விஜயகாந்திற்கு இன்னும் வயது இருக்கிறது.. ஒரு வேளை அடுத்தடுத்தத் தேர்தல்களின்போது அவருக்கான வாய்ப்பு இருக்குமானால் அதனை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்..

பார்ப்போம்..!