Archive for the ‘பாரதிராஜா’ Category

சேலத்தில் பாரதிராஜா-சீமான் கூட்டணியின் முழக்கம்..!

மே 10, 2009

10-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாரதிராஜா தலைமையிலான திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் சேலத்தில் கடந்த 5-ம் தேதி பொதுக்கூட்டம் நடந்துள்ளது.

அக்கூட்டம் பற்றி நேற்று வெளிவந்திருந்த ஜூனியர் விகடன் பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கே உங்களுக்காக தருகிறேன்..

இனி ஜூனியர் விகடனில் இருந்து..!

‘இருப்பாய் தமிழா நெருப்பாய்..’ என்ற முழுக்கத்தோடு தமிழ்த்திரை உலகினர் காங்கிரஸுக்கு எதிரான அனல் பறக்கும் பிரச்சாரத்தில் குதித்திருக்கிறார்கள்.

“தமிழ் இனத் துரோகிகளை அடையாளம் காட்டுகிறோம். அவர்களுக்கு வாக்காளிக்காதீர்கள்..” என்பதுதான் இவர்களது பிரதான குரல். காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகள்தான் இவர்களின் டார்கெட்.

இயக்குநர்கள் பாரதிராஜாவும், சீமானும் அனல் கக்கும் பிரச்சாரத்துக்குத் தலைமையேற்று செல்கிறார்கள். பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் கடந்த 40ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பிடிபிடியெனப் பிடித்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார் சீமான். வழி நெடுக, காங்கிரஸின் கை சின்னத்துக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டபடியே சேலம் போய் சேர்ந்தார்கள்.

5-ம் தேதி மாலை சேலம் போஸ் மைதானத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடைக்கு முதல் ஆளாக வந்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. “கேப்டன் பிரபாகரனை உருவாக்கியவன் நான்தான். தமிழ்நாட்டில் பிரபாகரனைப் பற்றி அதிகம் பேச வைத்தவனும் நான்தான்.. தமிழகத்தில் தமிழினத் துரோகிகள் பதினாறு பேர் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்கள். வாக்குச்சீட்டு என்கிற ஆயுதம் இப்போது நம் கையில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அந்தப் பதினாறு துரோகிகளையும் ஓட ஓட விரட்டியடிப்போம்..” என்று அறிமுக உரை கொடுத்தார்.

அந்தச் சமயத்தில் பாரதிராஜாவும், சீமானும் மேடையேற, ‘தென்னகத்து பிரபாகரன் சீமான் வாழ்க..!’ என்ற கோஷங்களும், கரவொலியும் விண்ணைப் பிளந்தது.

கவிஞர் அறிவுமதி பேசும்போது, “தலைவன் பிரச்சாரத்துக்கு வந்தாலே காசு கொடுத்துத்தான் ஆளைப் பிடிச்சிட்டு வர்றாங்க.. ஆனா வராத ஒரு தலைவனுக்கு(பிரபாகரன்) இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு. தமிழ் உணர்வுள்ள அத்தனை கட்சியினரும் இங்கே கூடியிருக்கீன்னு எனக்குத் தெரியும். நாங்க சென்னைல இருந்து வரும்போது, தி.மு.க.வினர் பலர் எங்களைச் சந்திச்சு உணவு கொடுத்து உபசரிச்சாங்க..” என்று பேசினார்.

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பாகப் பேச வந்த ராஜபிரபு, “சேலத்துல சத்தியமா தங்கபாலுவை ஜெயிக்கவிட மாட்டோம். அந்த ஆளு மட்டும் ஜெயிச்சிட்டா.. இந்த போஸ் மைதானத்துலேயே நான் தீக்குளிச்சு சாவேன்.. எங்க தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது ஆச்சுன்னா.. ஜாக்கிரதை..” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

அடுத்து மைக் பிடித்தவர் பாரதிராஜா,

“என் இனிய தமிழ் மக்களே..” என்று தன் வழக்கமான பாணியில் ஆரம்பித்தவர், “என் அப்பனும், ஆத்தாளும் அந்தக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இருந்தவர்கள். நானே பல காங்கிரஸ் மேடைகளில் பொய்யாகப் பேசியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு உணர்வோடு, உண்மையாக உங்கள் முன் பேச வந்திருக்கிறேன். சினிமாவில் நாங்கள் எப்போதுமே கதாநாயகனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் இங்கே வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். வில்லன் யார் என்பதை நாங்கள் உங்களுக்கு அடையாளம் காட்டப் போகிறோம்.. கதாநாயகன் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..” என்றவர் சற்றே தொனியை மாற்றிக் கொண்டு

“சோனியாம்மா.. நீங்க வெளிநாட்டுப் பொம்பளையா இருந்தாலும் எங்க மண்ணுக்கு வந்ததால உங்களைப் பெருந்தன்மையோட ஏத்துக்கிட்டு அழகு பார்த்தது எங்க மண். ஆனா, உங்களுக்கு அந்தப் பெருந்தன்மை கொஞ்சம்கூட இல்லாமப் போச்சேம்மா.. உங்களோட ஒரு தாலி அறுந்ததுக்காக எம்தமிழச்சிகளோட ஒரு லட்சம் பேரோட தாலிகலை அறுத்துப் போட்டிருக்கீங்களே.. இது நியாயமா தாயி..” என்று வடக்கு நோக்கி இறைஞ்சிவிட்டுத் தொடர்ந்தார்.

“ஈழத்தில் எம் தமிழ்ப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக விட்டு ரசித்துப் பார்க்கிறான் சிங்கள வெறியன். குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்து பார்த்து ஆறு மாத காலமாக என்னால் தூங்கக்கூட முடியவில்லை. கண்ணை மூடினால் ரத்தமும் சதையுமாகக் கிடக்கும் பிஞ்சுக் குழந்தைகள்தான் வந்து நிற்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய யாருமே கேட்கவில்லை. மாறாக அவர்களுடன் கைகோர்த்துக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

சேலத்தில் என் அன்புக்குரிய நண்பர் தங்கபாலு போட்டியிடுகிறார். ஈரோட்டில் பெரியாரின் பேரன் என்று அவருடைய பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கும் இளங்கோவன் போட்டியிடுகிறார். சிவகங்கையிலே ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி சிதம்பரம் நிற்கிறார். உங்க அத்தனை பேருக்கும் கண்டிப்பாக எம்தமிழர்கள் பாடம் புகட்டுவார்கள். உலகத் தமிழர்களுக்கெல்லாம் ஒரே அடையாளம் எங்கள் பிரபாகரன்தான் என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் நிரூபிப்பார்கள்..” என்று உணர்ச்சிப் பிழம்பாக பேசி முடிக்க மேடையிலிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

நிறைவாக இயக்குநர் சீமான் சிவந்த கண்களோடு வந்து நின்றார்.

“காமராஜர் ஆட்சி அமைக்கிறோம்னு காங்கிரஸ்காரங்க சொல்றாங்க.. ரொம்ப சந்தோஷம்.. ஆனா உங்கள்ல யாரு காமராஜர்னு முதல்ல சொல்லுங்க.. ஈழத்து எம்தமிழர்கள் செத்து ஊரே அழுதுட்டு இருக்காங்க. இங்கே நீங்க வாயெல்லாம் பல்லைக் காட்டிகிட்டு வாக்குக் கேட்க வர்றீங்களே.. வெட்கமா இல்லே..? எழவு வீட்டுல வந்து ஓட்டுக் கேட்குறீங்களே..? உங்களுக்கெல்லாம் மானமே கிடையாதா..? எங்ககிட்ட வாக்கு இல்லடா.. வாக்கரிசிதான் இருக்கு.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரியாருக்கு உறவு வழியில் பேரனா இருக்கலாம். நான் உணர்வு வழிப் பேரன்.

ஈரோட்டு நான் இப்படி சொன்னதைக் கேட்ட இளங்கோவன், “எங்க தாத்தா சின்ன வயசுல கொஞ்சம் அப்படி, இப்படின்னு இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. அப்படி இருந்ததுல இவரு பொறந்திருக்கலாம்னு என்னைக் கிண்டல் பண்ணியிருக்காரு.. அந்த ஈனப் பயலை என்னன்னு சொல்றது..?

நான் தப்பாப் பேசியதாச் சொல்லி என்னைக் கைது செய்யச் சொன்னார் கருணாநிதி. பெரியாரைப் பத்தி இப்படி தரக்குறைவா பேசும் லூசுப்பயல் இளங்கோவன் மேல கருணாநிதி என்ன நடவடிக்கை எடுக்கப் போறாரு..?

அங்கே ஈழத்தில் செத்துப் போன தாயின் மடியில் குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கிறது. எந்தக் கல்நெஞ்சக்காரனுக்கும் இதைப் பார்த்தால் இரக்கம் வரும். ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்களோ.. அங்குள்ள நம் தமிழர்களை அழிக்க உதவி செஞ்சுக்கிட்டிருக்காங்க.. இங்கே இலை மலர்ந்தால்தான்.. அங்கே ஈழம் மலரும்.. அதனால இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க..” என்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு இரவு பத்து மணிக்குள் தன் பேச்சை முடித்தார்.

பாவம் காங்கிரஸ்.. தி.மு.க. கூட்டணி..!

கொட்டல் குடைச்சலை இன்னும் எத்தனை திசையிலிருந்துதான் சமாளிக்க வேண்டுமோ..?

நன்றி : ஜூனியர் விகடன்(மே 13, 2009)