Archive for the ‘பந்த்’ Category

பந்த் தேவைதானா..?

செப்ரெம்பர் 26, 2007

26-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி விரைவில் செயல்படுத்தக் கோரி வரும் அக்டோபர் 1-ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் முழு அளவிலான பந்த் நடத்தப்படும் என்று தமிழக அரசை ஆளும் கூட்டணியின் சார்பில் அதன் தலைவரான முதல்வர் அறிவித்துள்ளார்.

பந்த் என்றால் என்ன நடக்கும்?

அரசுப் பேருந்துகள் இயங்காது.. ரயில் சேவை நிறுத்தப்படும். தொழிற்சாலைகள், கடைகள் அனைத்தும் மூடப்படும். சினிமா தியேட்டர்கள் மூடப்படும். சாலைகள் அமைதியாக யாருமற்று காணப்படும்.

இவை அனைத்தும் ஊடகங்களின் கவனத்திற்குட்பட்டு, ‘பந்த் மாபெரும் வெற்றி’ என அறிவிக்கப்படும்.

இதனால் யாருக்கு லாபம்..?

ஒரு நாளின் தொழிலும், வர்த்தகமும் நிறுத்தப்படுமாயின் எவ்வளவு ரூபாய்கள் அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு நாளைய வர்த்தகமே 5 கோடி என்கிறார்கள். இவை சாதாரண இடைநிலை, கடை நிலை வர்த்தகர்களுக்கு கிடைக்கப் போகும் பணம். அன்று ஒரு நாள் அவர்களுக்குக் கிடைக்காது. சரி.

ஆனால், அழுகும் நிலை காய்கறிகளை விற்பனை செய்யும் இந்த அன்றாடங் காய்ச்சிகளுக்கு அது இழுப்புதானே.. அன்றைக்கு அழுகிப் போன காய்கறிகளை மறுநாள் மார்க்கெட்டின் எதிர்ப்புறம் இருக்கும் குப்பையில்தான் போட வேண்டும். அதை உற்பத்தி செய்ய ஒவ்வொரு விவசாயியும் எவ்வளவு போராடியிருப்பான்..? இதை யாரிடம் போய் இவன் சொல்லுவான்..?

பேருந்துகள் ஓடாது.. அன்றைக்கு தாம்பரத்தில் இருக்கும் ஒருவரின் உறவினர் வண்ணாரப்பேட்டையில் இறந்துவிட்டால் அவர் என்ன செய்வார்..? கால்டாக்ஸி பிடித்துச் செல்ல வேண்டுமா..? அல்லது அவரால்தான் முடியுமா? எத்தனை பேரால் இந்த சமூகச் சீர்கேட்டை உடனடியாக ஒரே நாளில் எதிர் கொள்ள முடியும்..? இதற்கான வசதியும், வாய்ப்புகளும் மக்கள் அனைவரிடமும் இருக்கின்றதா..?

ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவனைக்கு எப்படிச் செல்வது? ரோட்டில் பஸ், கார், லாரி எதுவும் போகக்கூடாது என்று சில கும்பல்கள் கையில் கம்புகளுடன் நடு ரோட்டில் வந்து நிற்கும்போது அந்த உயிரைப் பற்றிக் கவலைப்படப் போவது யார்..?

நகரப் பகுதிகளில் பரவாயில்லை.. எப்படியாவது ஆட்டோ, டாக்ஸி பிடித்தாவது சென்றுவிடுவார்கள். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று முறை வந்து செல்லும் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கும் கிராமப்புற மக்கள் என்ன செய்வார்கள்? அது அவர்களது தலையெழுத்தா..? அல்லது ஓட்டுப் போட்டதற்கு கிடைத்த பரிசா..?

வர்த்தகர்கள் குறித்த நேரத்தில் பணம் அனுப்பினால்தான் பொருட்கள் கிடைத்து அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் நம்பகத்தன்மைதான் அவருடைய மிகப் பெரிய முதலீடு. அதையும் உடைத்துவிட்டால் அவர் எங்கே போய் புலம்புவார்..?

பந்த் என்பதற்காக அன்றைய ஒரு நாளைய வட்டி கேட்கப்பட மாட்டாது என்று எந்த வங்கியும், லேவாதேவிக்காரர்களும், வட்டி பிஸினஸ் செய்பவர்களும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை..

அன்றைக்கு கடைசி தேதி என்று அறிவிக்கப்படும் எந்தவொரு தொழில், நுகர்வோர் விஷயங்களும் பந்த் என்பதால் விட்டுக் கொடுக்கப்பட்டு விடுமா..? இல்லையெனில் யாரிடம் போய் கேட்பது..?

அன்றைய நாளில் ஏதேனும் ஒரு கடை திறந்து வைக்கப்பட்டு அதனை கலவரக்காரர்கள் தாக்கினால் அதற்கு யார் பொறுப்பு..?

ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படியரு பந்தை நான் எதிர்க்கிறேன் என்று சொல்லி ஆங்காங்கே சிலர் கடைகளைத் திறந்து வைத்திருந்தால் அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்கப் போவது யார்..?

அரசே சொல்லிவிட்டதால் கடைகளை இழுத்து மூடியே தீர வேண்டும் எனில் அந்த ஒரு நாளைய வருமானத்தை அந்தக் கடைக்காரர்களுக்கு யார் தருவது..? அந்தத் தொகையை இழக்க வைப்பது அவரிடமிருந்து திருடுவதற்கு சமமில்லையா..?

அரசுகள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டுமெனில் இங்கே என்ன கருத்து சுதந்திரம் உள்ளது..?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அவர்களுடைய அடாவடித்தனத்தைக் காட்டுவதற்கு ஒரு மேடை அமைத்துக் கொடுப்பதுதான் அரசின் வேலையா..?

நகரங்களில் பேச்சிலராக இருப்பவர்கள் சோத்துக்கு என்ன செய்வார்கள்?

இது மாதிரி பந்த் அறிவித்தால் முதலில் மூடப்படுவது ஹோட்டல்கள்தான். ஏனெனில் அன்றைக்கு கூட்டம் குறைவாக வந்துவிட்டால் செய்தது எல்லாம் வீணாகிவிடுமே என்பது ஒன்று.. மற்றொன்று கலவரக்காரர்கள் முதலில் குறி வைக்கப்போவது இது மாதிரியான ஹோட்டல்களைத்தான்.. அதுதான் இப்போது தட்டிக் கேட்கவும் ஆட்களே இல்லையே.. அரசே சொல்லிவிட்டதால் போலீஸ் கை வைத்துவிடுமா என்ன?

நானும் முன்னொரு சமயம் இதே போன்று ஒரு பந்த் தினத்தன்று கடைகளைத் தேடி நாயாக அலைந்து பின்பு வேறு வழியில்லாமல் 5 ஆண்டுகளாக நான் சென்னையில் இருப்பது தெரிந்திருந்தும் அழைக்காமல் இருந்த ஒரு வீட்டிற்கு, அழையா விருந்தாளியாகச் சென்று ‘முழுங்கிவிட்டு’ வந்ததை வெட்கத்துடன் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும்..

சென்னையில் ரூம் டுத்துத் தங்கியிருப்பவர்களுக்கு அன்றைய உணவுக்கான பொறுப்பு எவருடையது என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.. அது அவர்கள் பாடு.. பேச்சிலர்களாக இருந்து, இது போல் கடைகளையே நம்பி வாழுகின்ற ஜீவன்களை உணவுக்காகவே “நாளை யார் வீட்டுக்குப் போகலாம்..” என்று யோசிக்க வைக்கின்ற கொடுமையை அரசுகளே செய்வது பசியின் கொடுமையைவிட கொடியது..

ஏற்கெனவே செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை… அக்டோபர்-1 திங்கள்கிழமை பந்த்-கட்டாய விடுமுறை, அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி.. விடுமுறை நாள்தான்..

இப்படி தொடர்ந்து மூன்று விடுமுறை நாட்கள் வந்ததெனில் அரசுத் துறையின் வேலைகள் எவ்வளவு பாதிக்கப்படும்..?

அன்றைய நாளில் கிடைப்பதாக இருப்பவை மூன்று நாட்கள் கழித்தெனில் அந்த மூன்று நாட்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படப் போவது யார்? பொதுமக்கள்தானே..

ஏற்கெனவே மாதத்திற்கு 10 நாட்களுக்குக் குறைவில்லாமல் விடுமுறை கிடைக்குமளவுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்து கெடுத்து வைத்திருப்பவை அரசுகள்தான்.. இதில் இதுபோல் திடீர் விடுமுறைகளை வழங்கி அவர்களை வளைப்பது ஓட்டு வங்கியை வளைக்கின்ற நோக்கம் மட்டும்தானே..

அதிலும் இந்த முறை கூடுதல் கவன ஈர்ப்பாக அக்டோபர் 1-ம் தேதியன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் வருகிறது.

அன்றைக்கு அவருடைய ரசிகர்கள் ஊர்வலமாகச் சென்று கடற்கரையில் இருக்கும் அவரது சிலைக்கு மாலையணிவித்து நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டார்கள். இப்போது இந்த ரசிகர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

“உன் தலைவனை அடுத்த நாள் கும்பிட்டுக் கொள்..” என்றா..?

அப்படியென்றால் அனைத்துத் தலைவர்களின் விசேஷ நாட்களிலும் இப்படி ஆளுக்கொருவர் பந்த் அறிவித்தால் நம்மை வளர்த்த சான்றோர்களின் மீது நமக்கிருக்கும் அக்கறைதான் என்ன..?

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் பந்த் எனில் தொழில் துறையில் மட்டுமே சுமாராக 2000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமாகும்..

இந்த நஷ்டம் வெளியில் தெரியாமல், இதனால் நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல் இருப்பதினாலும்தான் இந்த பந்த் கூத்து அனைத்து அரசுகளாலும், அனைத்து அரசியல் கட்சிகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பந்த் நடத்தித்தான் மக்களின் கவனத்தைக் கவர முடியுமா?

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுதத வேண்டும் என்பது கோரிக்கை.

அந்தத் துறை யாருடையது மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையுடையது. அந்தத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பாலு. தி.மு.க.வின் மேல் மட்டத் தலைவர். அவர் தலைமையில் இருக்கின்ற அமைச்சகமே சரிவர வேலை செய்யவில்லை எனில் அவரைத்தானே கேள்வி கேட்க வேண்டும்.. அவரையும் மீறி நடக்கிறது எனில் அவர் ராஜினாமா செய்துவிட்டு தன்னை மீறி தன் துறையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன என்று உண்மையை மக்களிடம் சொல்லாமே..?

மத்தியில் ஆளும் கூட்டணி அரசிற்கும், தமிழக முதல்வர்தான் தலைவர். புத்தக வெளியீட்டு விழாவுக்கும், அரசியல் நிகழ்ச்சிகளுக்கும், தனிப்பட்ட நிகழ்வுகளுக்கும் நொடியில் போனில் பேசுகின்ற அளவுக்கு செல்வாக்கும் இருக்கின்றபோது அதன் வழியாக இந்தப் பிரச்சினையை விரைந்து செயல்படுத்துபடி பேசுவதை விட்டுவிட்டு அப்பாவி மக்களின் அடிமடியில் கை வைப்பது எந்த வகையில் சிறந்த அரசியல்..?

மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த ஆவணத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அதை வெளியில் சொல்லி எங்கள் கருத்தை ஏற்காத இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று சொல்லி கூட்டணியிலிருந்து வெளியேறலாமே..? மக்கள் மனமுவந்து ஏற்பார்களே..

இதைச் செய்யாமல் ஏதோ ரிக்ஷா ஓட்டுபவனும், கை வண்டி இழுப்பவனும்தான் இந்த விஷயத்தில் குற்றவாளி என்பதைப் போல், அவனது ஒரு நாள் பொழைப்பைக் கெடுப்பது சிறந்த நிர்வாகமா?

கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மத்தியில் ஆளும் நிர்வாகத்தினர். அவர்களுடைய நிர்வாகத்தில் இங்கே இருப்பவர்களும் பங்கு கொண்டுள்ளார்கள். அப்படியிருக்க தமிழகத்தில் பந்த் எதற்கு? பேசாமல் இங்கேயுள்ள ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டெல்லி சென்று பிரதமர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடலாமே..?

‘மத்திய அரசின் கவன ஈர்ப்புத்தானே’ இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கம். அதை டெல்லியிலேயே போய்ச் செய்யலாமே..? உடனடி கவனம் பெறுமே..?

இப்போது அனைவருக்குள்ளும் எழுகின்ற கேள்வி யாதெனில், மக்களுக்கு உண்டாகப் போகின்ற கெடுதிகளை வருமுன் காக்கின்ற கடமையைச் செய்ய வேண்டியவை அரசுக்கு இருக்கிறதா? இல்லையா..?

விஷயம் கோர்ட்டின் பரிசீலனையில் உள்ளது என்பதனை மறைத்துவிட்டு, ‘இதனால் நமக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. நாம் எப்போதும் நல்லவர்களாகத்தான் மக்களின் கண்களுக்குக் காட்சி தர வேண்டும்.. எப்போதும் நம்மை எதிர்ப்பவர்களே கெட்டவர்கள்.. நம்மை எப்போதும் ஆதரிப்பவர்களே நமது தோழர்கள்’ என்கிற ஆளும்கட்சிகளின் அரசியல் சூத்திரத்தில் சிக்கித் தவிக்கும் ஓட்டுப் போட்ட மக்கள்தான், இவை இரண்டையும் பார்த்துக் கொண்டு எப்போதும் அமைதியாக இருப்பவர்கள்..

இவர்களின் அமைதி என்றைக்கு முடிகிறதோ, அன்றைக்குத்தான் இது மாதிரியான முட்டாள்தனங்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.