Archive for the ‘பதிவர் சந்திப்பு’ Category

வலைப்பதிவர்கள் கலந்துரையாடல் கூட்டம் – மறக்காம வந்திருங்க..!

மார்ச் 25, 2010

25-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!!!

சனிக்கிழமை. கிரகந்தான்.. ஆனா அதைவிட பெரிய கெரகம் நாமதான். நமக்கே தெரியும்.. ‘சனி போனால் திரும்பி வராது’ம்பாங்க.. அதுனால நாம விடக்கூடாது.. அன்னிக்கே நாம நம்மளோட சதி வேலையை, ஸாரி!! ‘சனி’ வேலையை ஆரம்பிச்சாகணும்..

ச்சும்மா எத்தனை நாளைக்குத்தான் ‘அவர் ஏற்பாடு’.. ‘இவர் ஏற்பாடு’ன்னு பெயரைச் சொல்லிக்கிட்டே இருக்குறது.. ‘நம்ம சங்க ஏற்பாடு’. ‘நம்ம அமைப்போட ஏற்பாடு’.. ‘நம்ம பேமிலி செட்டப்பு’ அப்படீன்னு சொல்றதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு..

அதுக்குத்தான் வசதியா வர்ற சனிக்கிழமை (27-03-2010) வலைப்பதிவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கே.கே.நகரில் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி புக் ஸ்டால்ல நடக்கப் போகுது..

உண்மையாக இனிமேல் வலைப்பதிவர்கள் சமூகம் என்ன செய்ய வேண்டும்..?

எப்படிச் செயல்பட வேண்டும்..?

குழுமமாகவா..? அல்லது ஒரு தொழிலாளர் சங்கத்தைப் போன்றா..? அல்லது ஒரு கட்சியைப் போன்றா..?

குழுமம் என்றால் அதன் நடைமுறைகள் என்னென்ன..? யார், யார் அதில் பொறுப்பேற்பது..? என்னென்ன பொறுப்புக்களை அமைப்பது..? எப்படி அதன் செயல்பாடுகளை வடிவமைப்பது..?

அந்தக் குழுமத்தின் நோக்கம் என்ன..? அதன் செயல்பாடுகள் என்ன..? எப்படியெல்லாம் செயல்பட வைக்க வேண்டும்..? அதன் நடைமுறைகளை அமல்படுத்துவது எப்படி..?

குழுமத்தை நேரடியாக நிர்வகிப்பது எப்படி.? யார் கவனித்துக் கொள்வது.? நிர்வாகச் செலவுகளை யார் ஏற்பது..? குழுமத்தின் செலவுகளுக்காக பணம் வசூலிப்பது எப்படி..? அதனை பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது யார்..?

இப்படி நமக்குள் ஒளித்து வைத்திருக்கும் அல்லது எழுந்திருக்கும் பலதரப்பட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில்கள் உடனுக்குடன் அனைவராலும் வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும்.

இங்கே யாரும் இப்போது வெட்டி ஆபீஸராக இல்லை என்பது நமக்கே நன்கு தெரியும்.. ஒரு முறை கூடி பேசுகின்றபோதே ஏதாவது ஒரு முடிவை நாம் எடுத்தாக வேண்டும். கட்சிக் கூட்டம் போல அடுத்தக் கூட்டத்தில் பேசித் தீர்ப்போம் என்று காலத்தைக் கடத்துவதில் அர்த்தம் இல்லை.

பதிவர்கள் வருகின்றபோதே மேலே சொன்னதுபோலோ அல்லது மேலே சொன்னதில் இல்லாமல் உங்களுக்குத் தோன்றியவற்றிற்கும் தயாரான பதில்களையோ அல்லது இது பற்றிய உங்களது மேலான கருத்துக்களையோ தயார் செய்து கொண்டு வந்துவிட்டால் நமது வேலை சுலபமாகிவிடும்.

இந்தக் கூட்டம் “கலந்துரையாடல் மட்டுமே” என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்துப் பதிவர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்து அந்தக் கருத்துக்கள் பெருவாரியான பதிவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது அங்கேயே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நிறைவு பெற வேண்டும்.

இது எனது அவா..!

மற்றபடி தோழர் லக்கி தனது பதிவில் எழுதியிருப்பதைப் போல் ‘எழுத்தாளர்’ என்கிற வார்த்தை நமக்குத் தேவையில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

அதேபோல் வெறுமனே ‘தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்’ என்று வைப்பதற்குப் பதிலாக ‘சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்’ என்று ஆரம்பிக்கலாம்.

ஏனெனில் இதேபோல் பல்வேறு ஊர்களில் இருக்கின்ற வலைப்பதிவர்களும் ஊர்ப் பெயரில்லாமல் ‘தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்’ என்று வைத்தால் குழப்பம் வருமே..?

இதற்கு மாறாக அவரவர் ஊர்களின் பெயர்களில் வலைப்பதிவர் குழுமங்களை ஆரம்பித்தால் அழைப்பதற்கும், குழப்பங்கள் வராமல் இருப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

‘தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்’ என்று சங்கங்களின் சட்டத்தின் அடிப்படையில் ஒரு இடத்தில்தான் பதிவு செய்ய முடியும் என்பதையும் நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.

ஆகவே ‘சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்’ அல்லது ‘சங்கம்’ என்று ஆரம்பிப்பது சாலச் சிறந்தது என்கிறேன்.

மேற்கொண்டு ஒரு விஷயம் சொல்ல வேண்டுமெனில் கூட்ட அரங்கம் சிறியது என்பதால் அங்கே மெட்டல் டிடெக்டர் கருவியெல்லாம் வைத்து பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது.

ஆகவே வீசுவதற்கேற்ற முட்டைகள், அரிவாள், கத்திகள், சுத்தியல்கள், கம்புகள் மற்ற இத்யாதி.. இத்யாதிகள்.. அரங்கத்தின் உள்ளே பாதுகாப்பு கருதி அனுமதிக்கப்படாது.

ஆனால் பதிவர்கள் அவரவர் வாகனங்களில் கொண்டு வந்து வாகனத்திலேயே வைத்திருக்கலாம்.. அது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை.

எப்படியும் நிகழ்ச்சி முடிந்தவுடன் தாகசாந்திக்காக எந்தப் பக்கம் செல்வது என்கிற சர்ச்சையில் சிலர் இறங்கக்கூடும். அதை சாக்காக வைத்து ஆசையோடு காத்திருக்கும் நண்பர்கள் தாங்கள் கொண்டு வரும் ‘பூஜை பொருட்களை’ முடிந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வருகின்ற பதிவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் டீ, பிஸ்கட் செலவுக்கான தொகையை மட்டும்(பீடி, சிகரெட், கஞ்சா, பிரவுன்சுகர், தாகசாந்தி அயிட்டங்களுக்கு அல்ல) நான் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்பதை எனது அண்ணாச்சிகளுக்கு தெரிவித்துவிட்டு தற்காலிகமாக உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

நன்றி

வணக்கம்.

நிகழ்ச்சி நிரல்

தேதி : 27.03.10/சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை முதல் மாடி,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்,
சென்னை –78