Archive for the ‘பக்தி’ Category

எங்கே இருக்கிறான் இறைவன்?-100-வது சிறப்புப் பதிவு

ஜூன் 4, 2007

04-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“உனக்கு அறிவு இருக்கிறதா.. இல்லையா..?” என்ற கேள்விக்குக்கூட தமிழகத்து இளைஞர்கள் கோபப்படமாட்டார்கள். ஆனால், “உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா..? இல்லையா..? என்று கேட்டால்தான் கோபம் என்ற உணர்வே இளைஞர்களுக்கு பொங்கி வருகிறது. காரணம், இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், எவர் ஒருவர் நேரில் வந்து அவர்களுக்கு ‘சிவாஜி’ படத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மட்டும்தான் அவரை ‘கடவுள்’ என்று நம்புவோம் என்ற மனச்சூழலில் இருக்கிறார்கள்.

இறைவன் அவர்கள் எதிர்பார்ப்பதைப் போன்ற மனிதத் தோற்றத்தில் நேரில் வந்து பேச வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களிடம் தினமும் பேசுகின்ற, அவர்களைத் தினமும் சந்திக்கின்ற இறைவனை அவர்கள் உணர்வதே இல்லை.

தாய், தந்தையர் காட்டும் அன்பு, பாசம், சகோதர, சகோதரிகள் காட்டும் நேசம், பிற நண்பர்கள், மனிதர்கள் காட்டும் சிநேகம் இவற்றுக்கெல்லாம் எப்படி உருவம் இல்லையோ.. அது போலத்தான் இறைவன் என்பவனும் உருவமற்றவன் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

‘அன்பே சிவம்’ என்பது இதைத்தான் உணர்த்துகிறது. ஆனால் இந்த வாதம், ‘தர்க்கம் செய்து உண்மையை அறிய முயல்வதே இளைஞரின் சுபாவம்’ என்ற உண்மைக்குள் மாட்டிக் கொண்டு முழிக்கிறது.

இந்த உண்மைத்தமிழனும் ஒரு காலத்தில், இப்படிப்பட்ட போலித்தனமான ஒரு கடவுள் எதிர்ப்புக் கொள்கையில் மாட்டிக் கொண்டு முழித்தவன்தான். இந்தக் கொள்கையில் இருந்தபோதுதான் அவனது எதிர்கால வாழ்க்கை என்னவாகப் போகிறது என்ற நோக்கமே அவனுக்குள் இல்லாமல் இருந்தது. எதை எடுத்தாலும் அது என்ன? அது எதற்கு? ஏன்? எப்படி? என்று தன்னை நேசித்தவர்களிடமும், தன் மீது அக்கறை கொண்டு விசாரித்தவர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்டு அவர்களிடமிருந்து தன்னைத் தள்ளிக் கொண்டே சென்று விட்டான்.

ஒரு கட்டத்தில் ‘சோதனைகள்தான் தினமும் நான் பார்க்கும் நிகழ்வுகள்’ என்று வந்தபோதுதான், ஒரு புத்தகம் எனது அறிவுக் கண்ணைத் திறந்தது. அது கவியரசர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’. அதனைப் படித்த பிறகுதான் இறைவன் என்பவன் எங்கேயிருக்கிறான்? எப்படி இருக்கிறான்? தனது பக்தர்களிடம் எவ்வாறு தன்னைக் காண்பிப்பான் என்ற ‘பகுத்தறிவு’ பிறந்தது.

இப்போது நான் எனது கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கின்ற போது எத்தனை முறை இறைவன் எனது வாழ்க்கையில் விளையாடியிருக்கிறான்? எத்தனை முறை காப்பாற்றியிருக்கிறான்? எத்தனை முறை துணையாய் இருந்திருக்கிறான்? என்பதெல்லாம் எனக்குப் புரிந்தது..

நான் ஆறு மாதக் கைக்குழந்தையாக இருந்தபோதே எனக்கு சுவாசிப்பதில் நிறைய பிரச்சினைகள் இருந்ததாம். தொட்டிலில் போடப்பட்டிருந்தால், அப்படியே ஆடாமல், அசையாமல் கண் விழிகள் சொருகிப் போய் கிடப்பேனாம்.. அப்படியொரு முறை நடு ராத்திரியில் நான் பேச்சு, மூச்சில்லாமல் கிடந்தபோது, என் தாய் என்னைத் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் ஓடியிருக்கிறார்.

அந்த மருத்துவமனை திண்டுக்கல் டவுன் மார்க்கெட் தெருவில் உள்ளது. மருத்துவரின் பெயர் டாக்டர் வீரமணி. அவருடைய உதவி டாக்டர் திரு.ஜெய்சங்கர். எனது வீடு திண்டுக்கல்லில் ஒய்.எம்.ஆர்.பட்டியில் குமாரசாமி கோனார் சந்தில் இருந்த மோசஸ் நாடார் குடியிருப்பில்.. அங்கிருந்து மருத்துவனை 6 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

எனது அம்மா டாக்டரின் வீட்டிற்குச் சென்ற அந்த இரவில், டாக்டர் வெளியூர் போய்விட்டதாக வீட்டில் உள்ளவர்கள் சொல்ல.. வேறு டாக்டரைத் தேடியிருக்கிறார். நேரமாகிவிட்டதால் அனைத்து கிளினிக்குகளும் பூட்டியிருக்க..

அழுது கொண்டே பெரியாஸ்பத்திரி என்றழைக்கப்படும் அரசு மருத்துவனைக்கு திரும்பியிருக்கிறார் எனது தாய். அங்கே அன்றைக்கு பார்த்து இரவு நேர மருத்துவர் வரவில்லையாம். நர்ஸ்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவர்களும் சொன்ன பதில்.. “உடனேயே மதுரைக்கு கொண்டு போயிருங்க..” என்று.

வெளியே வந்த எனது அம்மா திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட்டை நோக்கி ஓட.. தற்செயலாக எதிரிலே வந்திருக்கிறார் டாக்டர் வீரமணி. எனது அம்மா அங்கேயே என்னை அவருடைய கையில் போட்டுவிட்டு கதறி அழுதிருக்கிறார். ஒரு சைக்கிள் ரிக்ஷாவைப் பிடித்து அதில் என்னையும், எனது அம்மாவையும் ஏற்றி தனது கிளினீக்கிற்கு அழைத்து வந்து எனக்கு சிகிச்சையளித்தாராம் டாக்டர் வீரமணி.

“நீ கையையும், காலையும் இழுத்துக்கிட்டு இப்பவா, அப்பவான்னு இருக்குறப்போ இந்த மவராசன்தான் தெய்வம் மாதிரி வந்து காப்பாத்தினாருடா…” என்று அதற்குப் பின் பல முறை டாக்டர் வீரமணி முன்பாகவே என்னிடம் சொல்லி அழுதிருக்கிறார் எனது தாய்.

இப்போது என் பார்வையில் டாக்டர் வீரமணி யார்..?

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்ற முத்து என்கின்ற நண்பன், “நான்தான் முதல்ல குதிப்பேன்..” என்று சொல்லி குதிக்க.. அந்த இடத்தில் ஏதோ ஒரு பாறைக்கல் எமனாக இருக்க.. அதில் அவன் தலை மோதி ரத்தச் சகதியில் பிணமாகத்தான் வெளியே எடுக்கப்பட்டான்.

இப்போது அந்த நண்பன் முத்து எனக்கு யார்?

திண்டுக்கல் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்றபோது அங்கே கல், மண்களுக்கிடையில் இருந்த ஒரு வஸ்துவை விளையாட்டாக நான் எடுத்து கையில் வைத்திருக்க, “அதை என்கிட்ட கொடுடா.. நான் பார்த்திட்டுத் தர்றேன்..” என்று வாங்கிய என் தெருப்பையன்.. அதை நசுக்கிப் பார்க்க.. அது கணப்பொழுதில் வெடித்துச் சிதற அவனுடைய கண்கள் பாதிக்கப்பட்டு, அந்தக் குடும்பம் ஊரை விட்டே போனது..

அந்தப் பெயர் கூடத் தெரியாத நண்பன், எனக்கு என்ன வேண்டும்?

மதுரையில் குடியிருந்தபோது அரசரடி, பொன்மேனிப்புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அதில் அன்றைக்கு மதுரை நகரின் மிகச் சிறந்த பாட்டுக் கச்சேரி குழுவான சுந்தர்-ஜெகன் கச்சேரி.. அதைப் பார்ப்பதற்காக வீட்டில் சண்டை போட்டு அனுமதி வாங்கிச் சென்ற நான்.. தெரு நண்பர்களுடன் ரோட்டை சிறுபிள்ளைத்தனமாக வேகமாக கிராஸ் செய்ய.. எதிரில் வந்த ஒரு லாரி சடன் பிரேக் போட்டு நிற்க.. அது சுமந்து வந்த விறகுக் கட்டைகளைக் கட்டியிருந்த கயிறு அறுந்து விழ.. அத்தனை விறகுக் கட்டைகளும் ரோட்டில் சிதறி விழுந்தது அந்தச் சாலையில் போக்குவரத்தே நின்று போனது. லாரியின் டிரைவர் கீழே இறங்கி அத்தனை கோபத்திலும் என்னிடம், “இனிமே இப்படி குறுக்க ஓடி வராத தம்பி..” என்று சொல்லிவிட்டுப் போனதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை.

இப்போது இந்த டிரைவர், எனக்கு என்ன வேண்டும்?

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் கடைசி நாளான வரலாறு தேர்வின்போது, பின்பக்கம் அமர்ந்திருந்த ஒரு அவசரக்குடுக்கை மாணவன் எனது பேப்பரையே உருவி காப்பியடிக்க ஆரம்பிக்க, எனக்கு வியர்த்து ஊத்தி விட்டது. ரவுண்ட்ஸ் வந்த ஆசிரியர் எனது முழிப்பைப் பார்த்து தவறைக் கண்டுபிடித்தவர், ஒரு வார்த்தை கூட பேசாமல் எனது பேப்பரை அவனிடமிருந்து வாங்கி, எனது கைக்குள் திணித்து விட்டுப் போனார். கண்காணிப்பாளராக வந்த இந்த ஆசிரியர், ஏன் அப்படிச் செய்தார் என்று இன்றைக்கும் எனக்கு குழப்பம் உண்டு.

அப்படியானால் இவர் யார்?

திண்டுக்கல் ஐடிஐயில் டீசல் மெக்கானிக் படித்துக் கொண்டிருந்தபோது NVGB தியேட்டரில் ‘பாவம் கொடூரன்’ மலையாளப் படம் பார்க்கும் அவசரத்தில் கிளாஸை கட் அடித்துவிட்டு ஒரே சைக்கிளில் மூவராக டிரிபுள்ஸ் சென்று கொண்டிருந்தோம். ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பான இறக்கத்தில் வரும்போது, சைக்கிளின் முன் பக்க கேரியரே கையோடு வர.. முன்னால் அமர்ந்திருந்த நான் தூக்கி வீசப்பட்டு ஒரு வேனின் முன்புறத்தில் மோதி.. அப்படியே கீழே விழ.. சைடாக வந்த மோட்டார் சைக்கிள்காரர் என் தலை மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக பைக்கை திருப்பி அவர் கீழே விழுந்து மண்டை உடைந்து ரத்தம் சிந்தி மயக்கத்தில் கிடந்தார்.. அன்று எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யார் அவரைத் தூக்கிச் சென்றது? அவர் என்ன ஆனார் என்பதெல்லாம் எனக்கு இன்றுவரையிலும் தெரியாது..

ஆனால் அவர் யார்?

மதுரை ஒத்தக்கடையைத் தாண்டியிருக்கும் டிராக்டர் ஒர்க்ஷாப்பில் டீசல் மெக்கானிக் அப்ரண்டீஸ் பயிற்சியில் இருக்கும்போது, திண்டுக்கல்லில் இருந்து தினமும் டிரெயினில் மதுரை சென்று வருவேன். அப்படியொரு நாள் ஓடிக் கொண்டிருந்த டிரெயினில் வாலிப முறுக்கில் தொற்ற முற்பட்டபோது, கால் ஸ்லிப்பாகி கீழே விழப் போன என்னை கிட்டத்தட்ட பிச்சைக்காரன் கோலத்தில் வித்தவுட் டிக்கெட்டில் வந்த ஒரு பரதேசி, பேயாய் உள்ளே இழுத்து விட்டுக் கதவைச் சாத்தியதை என்னால் எப்படி மறக்க முடியும்?

எவ்வளவோ கேட்டும் மேலேயும், கீழேயுமாக பார்த்து தனது பத்து வருட நீண்ட தாடியை வருடிக் கொண்டு எங்கயோ பார்த்தபடியிருந்து, விளாங்குடியில் இறங்கி திரும்பிப் பார்க்காமல் சென்ற அந்த பரதேசியோ, பிச்சைக்காரரோ,

அவர் யார்? அவர் எனக்கு என்னவாக வேண்டும்?

1995-ஜனவரி-1 அன்று காலை முதல் முறையாக சென்னையில் கால் பதித்தேன். கிண்டி சிப்பெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சென்று கொண்டிருந்தபோது, பஸ்ஸின் ஒரு பக்க கண்ணாடியை விலக்கிவிட்டு தலையை வெளியே நீட்டிய ஒருவர் “ஸார்.. ஸார்..” என்று என்னை அழைத்து, “என்ன ‘பேக்’-ஐ மறந்து வைச்சிட்டீங்க…?” என்று சொல்லி எனது சர்டிபிகேட்ஸ் அடங்கிய ‘பேக்’-ஐ சிரித்தபடியே என்னை நோக்கித் தூக்கிப் போட்டதை இப்போது நான் நினைத்தாலும் ஒரு கணம் என்னைத் தூக்கி வாரிப் போடுகிறது. அன்று மட்டும் அது பஸ்ஸோடு பஸ்ஸாக போயிருந்தால்..

அந்த நபருக்கு ஏன் அப்படியொரு உதவும் எண்ணம்? அவர் யார்?

சென்னையில் அயர்ன் செய்த பேண்ட், சட்டை போட்டுக் கொண்டு டீஸண்ட்டாக தெருத்தெருவாகச் சென்று பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது, வேலை கேட்டு போய் நின்ற ஆபீஸில், தற்செயலாக மேசையில் கிடந்த ஒரு பேப்பரைப் படித்து, “அதில் உள்ள தமிழ் கட்டுரையில் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன..” என்று யாரோ ஒருவரிடம் சொன்னதை ஒட்டுக் கேட்ட அந்த பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்னை தனியே அழைத்து, “இங்க ப்ரூப் ரீடர் வேலை இருக்கு.. பண்றீங்களா?” என்று கேட்டு நான் கேட்காமலேயே அதற்கு முன்பிருந்த பணியில் நான் வாங்கியிருந்த பிச்சைக்காசு சம்பளத்தைப் போல் இரு மடங்கு சம்பளத்தையும் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அங்கே துவங்கியதுதான் எனது எழுத்துப் பணி.. இவர் ஏன் அதை ஒட்டுக் கேட்க வேண்டும்? என்னை அழைத்து வேலை கொடுக்க வேண்டும்?

அப்படியானால் இவர் யார்?

கொடுக்கின்ற பேப்பரில் இருக்கின்றவற்றை டைப் செய்வதுதான் எனது வேலை.. அதற்குத்தான் சம்பளம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு வேலை பார்த்த இடத்தில், “இது இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே.. அப்படியிருந்தால் நன்றாக இருக்குமே..” என்று ஆர்வக் கோளாறில் அலுவலக நண்பர்களிடம் சொல்லப் போய் அதை அவர்கள் கனகச்சிதமாகப் முதலாளியிடம் சென்று ‘போட்டுக்’ கொடுக்க அது அவரிடம் வேறுவிதமான எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டது.

தொடர்ந்து இந்த உண்மைத்தமிழனின் பெயரை ‘எழுத்து’ என்ற பெயரின் கீழ் வரவழைத்துப் பெருமைப்படுத்தியது, நானே எதிர்பாராதது. இவருக்கு ஏன் இந்தக் கவலை? “நீ எழுதுடா.. உனக்கு அது நல்லா வருது.. தயவு செஞ்சு எழுத்தை மட்டும் விட்ராத.. எழுதிக்கிட்டே இரு..” என்று இன்றைக்கும் எனக்கு ஆக்ஸிஞன் ஊட்டிக் கொண்டிருக்கும்…

அவரை நான் யாரென்று சொல்வது?

சிறிது காலம் பெரியமேட்டில் இருக்கும் ரயில்வே குவார்ட்டர்ஸில் இருந்து மயிலாப்பூர் ஆபிஸிற்கு வந்து கொண்டிருந்த நான், ரயில்வே கிராஸிங்கை கடக்கும்போது காதில் மெஷின் மாட்டாமல் வந்ததால் ரயில் பின்னால் வருவதைக் கவனிக்காமல் வந்து.. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் கொய்யாப்பழம் விற்ற ஒரு பெண்மணி தனது மார்பில் அடித்தபடி வந்து என்னை இழுத்துவிட்டதை நான் எந்தக் காலத்தில் மறப்பது?

இந்தப் பெண்மணிக்கு என் மேல் என்ன அக்கறை..?

நான் மேலே குறிப்பிட்ட இவைகளையும் தாண்டி அவ்வப்போது திடீர், திடீரென்று உதவி செய்கிறேன் என்று அவதாரம் எடுத்து என்னை அணுகிய நண்பர்களை “அது எப்படிய்யா.. இப்படி திடீர் திடீர்னு வந்து உதவி பண்றீங்க..?” என்று என்னை அறியாமல் கேட்கிறேன்..

ஆனால் அனைத்திற்குமான விடை எனக்குள்ளேயே இருக்கிறது..

அது, நிச்சயமாக இவர்கள் எனது இறைவன்கள்தான்.. கடவுள்கள்தான்.. எனக்குச் சந்தேகமில்லை.

இவர்களில் ஒருவர் ‘பிழை’ செய்திருந்தாலும் இந்த உண்மைத்தமிழன் இப்போது இருக்கும் வலைத்தள சூழலுக்கு வந்திருக்கவே முடியாது.. என் ‘கதை’ எப்போதோ முடிந்து போயிருக்கும்.. அல்லது திசை திரும்பி எப்படியோ போயிருக்கும்.

ஆனால் நான்கு பேர் பார்க்கும்விதமாக, பேசும் விதமாக, படிக்கும் விதமாக எனது வாழ்க்கையைத் திசை திருப்பிய அந்த இறைவன், ஒவ்வொரு முறையும் பல ரூபத்தில் என்னை அனுபவ ரீதியாக அணுகும்போதுதான் எனக்கு இறைவனின் ஆசி கிடைத்த அனுபவம் கிடைக்கிறது.

இதைத்தான் கண்ணதாசன் தனது கவிதைத் தொகுப்பில் சொல்லியிருக்கிறான். கண்ணதாசனை நான் தேடித் தேடிப் படித்தபோது இந்தக் கவிதை சிக்கியது.. எனது வாழ்க்கை மட்டுமல்ல. நம் அனைவரது வாழ்க்கையின் உண்மையையும் இந்த ஒரு கவிதையில் செதுக்கியிருக்கிறான் கவியரசன் கண்ணதாசன்.

நான் படித்து, அனுபவித்து, உணர்ந்த அந்தக் கவிதையை வலைத்தமிழர்களுக்காக இங்கே வைக்கிறேன். இதோ நீங்களும் சுவைத்துப் பாருங்கள்..

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

புரிந்து கொள்ளுங்கள் வலைத்தமிழர்களே..

இறைவனே அனுபவம்.. அனுபவமே இறைவன்.. அவன் எங்கேயும் போகவில்லை. நம்மில்தான் இருக்கிறான். நம்முடனேயே எப்போதும் இருக்கிறான். உணர்வோம்.. ஒன்றுபடுவோம்..

வாழ்க வளமுடன்..