Archive for the ‘நூலகத்துறை’ Category

யாருமே படிக்காத ‘காலச்சுவடு..!’

திசெம்பர் 10, 2008


10-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

‘தினசரி’,
‘தமிழ்ச்சுடர்’,
‘தின சூரியன்’,
‘நம் தினமதி’,
‘பிற்பகல்’

படித்து முடித்துவிட்டீர்களா..? குறுக்கெழுத்துப் போட்டிக்காக தயார் செய்யப்பட்டவை அல்ல இவை.. இவையெல்லாம் வெறும் தமிழ் வார்த்தைகளும் அல்ல. தமிழ்நாட்டில் வெளிவருகின்ற தினசரி பத்திரிகைகளின் பெயர்களாம். தமிழக அரசே சொல்கிறது. நம்புங்கள்.

அப்படியே கீழே உள்ளவைகளையும் ஏக் தம்மில் மூச்சு வாங்க படித்து முடித்து விடுங்கள்..

“தி ரெய்சிங் சன், கடலார், கனிமொழி, தாகூர் கல்விச் செய்தி, திரிகமுகம், தெலுங்கர் கீதம், அற்புத ஆலயமணி, எங்களுக்கு மகிழ்ச்சி, சிவ ஒளி, ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர், கவலைப்படாதே, நவசக்தி விஜயம், நல்வழி, நித்யானந்தம், ராமராஜ்யம், பாபாஜி சித்தர் ஆன்மிகம், கருதவேலி, ஞானவிஜயம், திராவிட ராணி, பண்ணாரி அம்மன் செய்திமலர், பாஞ்சஜன்யம், பென்சனர் கணினி, மலர்ந்த ஜீவிதம், மாத்ருவாணி, லேடிஸ் ஸ்பெஷல், வேதாந்த கேசரி, ஜங்கம இதழ், எங்கள் மக்கள் தலைவன்..”

முடிந்ததா..? இவைகளெல்லாம் தமிழ்நாட்டில் வெளிவருகின்ற வார மற்றும் மாத இதழ்களாம்..

இவைகளில் எத்தனை பத்திரிகைகளை நீங்கள் படித்திருக்கிறீர்கள். படிக்கவில்லையெனில் இனிமேற்கொண்டு படியுங்கள். ஆனால் ஒன்று. இவைகள் எந்தக் கடைகளிலும் கிடைக்காது.. படித்தே தீர வேண்டும் என்று நினைத்தீர்களானால், நீங்கள் அரசு பொது நூலகத்திற்குத்தான் செல்ல வேண்டும். நூலகத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சில பருவ இதழ்களும், நாளிதழ்களும் பிரிண்ட் செய்யப்படுகின்றனவாம்.

இதில் ஒரு விஷயம். கடந்த 2008 ஏப்ரல் மாதத்திலிருந்து ‘காலச்சுவடு’ பத்திரிகையை தமிழக பொது நூலகத் துறை, தனது நூலகங்களுக்காக வாங்குவதனை நிறுத்திக் கொண்டு விட்டது.

இது பற்றி காலச்சுவடு பத்திரிகையும், பல்வேறு இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் அரசுக்கு எழுதிச் சொல்லியும், பேசியும் இதுவரை எந்தவிதப் பயனுமில்லை.

இது பற்றிய செய்தி 24.08.08 தேதியிட்ட ஜீனியர்விகடன் இதழில் வெளியானது. அதில் இது குறித்து பேட்டியளித்திருந்த சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அளித்திருந்த பதில் இது..

“வாசகர்கள் அதிக அளவில் படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான், ‘காலச்சுவடு’ பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள். ‘காலச்சுவடு’ பத்திரிகை வாசகர்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிகைகளில் ஒன்றானால், இந்தப் பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்..”

எப்படி இருக்கிறது கதை..?

‘காலச்சுவடு’ பத்திரிகை அதிகம் வாசகர்களால் படிக்கப்படாத இதழாம். மேலே புதுப் புதுப் பெயர்களில் இன்றைக்குத்தான் நீங்களும், நானும் கேள்விப்பட்டிருக்கும் நாளிதழ்களும், பருவ இதழ்களும் மட்டுமே அதிகமான தமிழ் வாசகர்களால் படிக்கப்படக்கூடியவைகளாம்.

அமைச்சரின் கூற்று எப்பேர்ப்பட்ட பொய் என்பது அவருக்கே தெரிந்திருந்தும் ஏதோ ஒரு ‘அழுத்தம்’ காரணமாகவே அவருடைய செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது.

காலச்சுவடின் அரசியலை நான் பார்க்கவில்லை. அதன் இலக்கியத் தன்மையை நான் ஆராயவில்லை. அதனுடைய பத்திரிகை நேர்மையை நான் சல்லடை போடவில்லை. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வெகுஜனப் பத்திரிகை என்பதில் எனக்கு ஐயமில்லை.

இதற்கு முன்பு கனிமொழி காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் இருந்தவரையிலும் அதன் வாசகர்கள் அதிகம் பேர் இருந்திருக்கிறார்கள் என்பது அமைச்சரின் மறைமுகமான கருத்து. கனிமொழி காலச்சுவடில் இருந்து விலகிய பின்பு, கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு பற்றியும், மதுரை இளவரசரின் செயல்பாடுகள் பற்றியும் காலச்சுவடு விமர்சிக்கத் தொடங்கிய உடனேயே, அதனுடைய பார்வையாளர்களும், வாசகர்களும் மெதுவாகத் தேய்ந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் சுற்றி வளைத்துத் தெரிவிக்கிறார்.

இன்றைய முதல்வர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒரு பத்திரிகையாளன் என்று மைக் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இந்தப் பிரச்சினை வெளிவந்த பின்பு இன்றுவரையில் இதற்கு மட்டுமே பதில் சொல்லாமல் இருக்கிறார்.

கனிமொழியின் நெருங்கிய நண்பர் கார்த்தி சிதம்பரமே முதல் கையெழுத்திட்டு பல்வேறு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியகர்த்தாக்களின் கையொப்பத்துடன் ஆதரவுக் கடிதம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஆனாலும் இன்னமும் அரசு இறங்கி வரவில்லை.

ஆக.. “என்னை எதிர்த்தால், நீ தொழில் செய்ய முடியாது. என்னை அனுசரித்தால், உன் தொழில் நடக்கும்” என்கிற பாசிஸ்டு, சர்வாதிகார மனப்பான்மை இன்னமும் நமது அரசியல்வியாதிகளுக்குப் போகவில்லை என்பது இந்த ஒன்றிலிருந்தே நமக்குப் புலனாகிறது..

வாழ்க ஜனநாயகம்..!

வளர்க திராவிடம்..!