Archive for the ‘நினைத்தேன் எழுதுகிறேன்’ Category

இன்றைய அரசியல் செய்திகள்..!

நவம்பர் 9, 2009

09-11-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அடாவடி போலீஸில் ஆணென்ன.. பெண்ணெண்ண..?

‘மனிதருக்குள்ளே ஒரு மிருகம்’ இருப்பது காக்கி யூனிபார்ம் போட்டுவிட்டால் தானாக வந்துவிடும் போலிருக்கிறது.. ‘இதில் ஆணென்ன.. பெண்ணென்ன..?’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.. பெண்களுக்கு ஆண் போலீஸாரால் கொடுமைகள் இழைக்கப்படுகின்றது என்று சொல்லி ‘புரட்சித்தலைவி’யின் ஆட்சியில் ஆரம்பித்த பெண் போலீஸாரின் ஆக்கிரமிப்பு, இப்போது சி.எம். பாதுகாப்புக்காக அவரது வீடு இருக்கும் தெருவில் நாள் முழுக்க பெண் போலீஸார் நிற்கின்றவரையில் வந்து தேய்ந்திருக்கிறது.

போகட்டும். ஆனால் நிஜமாகவே பெண்களுக்கு பெண் போலீஸால் பாதுகாப்பா கிடைத்திருக்கிறது..? இப்போது வருகின்ற செய்திகளையெல்லாம் பார்த்தால் ஆண் போலீஸாரே பரவாயில்லை என்று சொல்கின்ற அளவுக்கு பெண் போலீஸாரும் ‘கல்லா’ கட்டவும், ‘பொளந்து’ கட்டவும் செய்கிறார்கள்.

கடந்த வாரம் மதுரையில் ஒரு கல்லூரியின் மாணவ, மாணவிகள் நடத்திய ஊர்வலத்தில் லத்தி சார்ஜ் செய்து மாணவிகளை ‘பதம்’ பார்க்க வைத்ததோடு, அந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்திய அகராதி என்கிற சட்டக் கல்லூரி மாணவியை மதுரை மாநகர துணை கமிஷனரான ஜெயஸ்ரீ என்னும் பெண் அதிகாரி நட்ட நடுரோட்டில் பிடித்து வைத்து அடித்து உதைத்திருக்கிறார்.


சென்ற வார ‘நக்கீரனில்’ இதைப் புகைப்படத்துடன் பார்த்தபோது. “என்ன அதிகாரிகள் இவர்கள்.. ஐ.பி.எஸ். படித்தவர்கள்போல் நடந்து கொள்ள மாட்டார்களா..?” என்று வெறுப்பாகத்தான் இருக்கிறது.. நக்கீரனில் புகைப்படத்தோடு செய்தி வந்திருக்க.. நிருபர் கேட்டதற்கு “நான் அந்த ஸ்பாட்டிலேயே இல்லையே..?” என்று பொய்யையும் கூசாமல் சொல்லியிருக்கிறார். எவ்வளவு பொறுப்பான அதிகாரி பாருங்கள்..?

அகராதி என்னும் அந்த மாணவியின் தூண்டுதலால் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் போராட்டம் நடத்தியிருப்பதால்தான் அவருக்கு இந்த ‘ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்டாம்..’ என்ன கொடுமை இது..?

இவர்தான் அடிக்கிறார் என்றால் லத்தியை எடுத்துக் கொடுப்பவர்களும் பெண் கான்ஸ்டபிள்கள். அடிப்பதற்கு தோதாக அந்த மாணவியை பிடித்து நிறுத்தியவர்களும் பெண் கான்ஸ்டபிள்கள்தான். என்னங்கய்யா இது பெண்ணியம்..? பெண்ணுரிமைன்னுட்டு..? ‘பெண்ணுக்கு பெண்ணே எதிரி’ங்கிறதுக்கு இதைவிட வேற உதாரணம் காட்ட முடியுமா என்ன..?

மதுரை மண்டல உணவுப் பொருள் தடுப்பு எஸ்.பி.யாக இந்த ஜெயஸ்ரீ இருந்தபோது, இவருக்காக லஞ்சம் வாங்கியதாக ஒரு ஏட்டு கையில் லட்சக்கணக்கான பணத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது இவர் மீது ஒரு துரும்புகூட படாமல் காப்பாற்றியவர் மதுரை தளபதிதானாம். அவருடைய கருணையால்தான் ஜெயஸ்ரீ அந்த லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்படாமல் மதுரையிலேயே டெபுடி கமிஷனராக போஸ்ட்டிங் வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று மதுரைக்கார ரிப்போர்ட்டர்கள் சொல்கிறார்கள்.

ம்ஹும்.. டிபார்ட்மெண்ட்டில் இருக்கக் கூடாதவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நல்லாட்சி நடக்கிறது மாமதுரையில்..

அரசியல்வியாதிகளை வியக்க வைத்த மதுகோடா

இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல்வியாதிகளும் மூக்கில் விரல் வைத்துவிட்டார்கள். “இத்தனை வருஷமா நம்மளால முடியாததை இத்துணூண்டு குட்டி மாநிலத்துல இவ்ளோ சின்ன வயசுல ஒருத்தன் செஞ்சுட்டானே..!”ன்னு ஆச்சரியத்தில் வாய் பிளந்து போயிருக்கிறார்கள்.

ஜார்க்கெண்ட் என்று மிகச் சமீபமாக பீகாரை இரண்டாக உடைத்து உருவாக்கப்பட்ட மாநிலத்தின் முதல்வராக இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்த மதுகோடா என்னும் ஒரு நல்லவர், தனது ஆட்சிக் காலத்தில் இருந்து இதுவரையில் 4000 கோடி ரூபாய்வரை சுருட்டியிருப்பதாக சி.பி.ஐ. சொல்கிறது.


அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட நம்மூர் அரசியல்வியாதிகள், தங்களால் முடியாததை இந்த சின்னப் பையன் முடித்திருக்கிறானே என்று டெல்லியில் ஆச்சரியத்தோடுதான் பார்க்கிறார்களாம். நானும்தான்..

மதுகோடா முதல்வரானபோது என்னவொரு எதிர்பார்ப்பு மனிதருக்கு..? ‘ரொம்பச் சின்ன வயசு.. அதுனால நல்லது செய்வார்’ என்று ஜன்பத் ரோட்டம்மா தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து சுயேட்சையாக இருந்த அவரை தனது கட்சியில் இணைத்து முதலமைச்சர் பொறுப்பைத் தூக்கிக் கொடுத்தார்.

மதுகோடா முதல்வராகப் பதவியேற்றபோது அவரது மனைவி அவரைவிட்டுப் பிரிந்திருந்தார். ஒரு முதல்வர் கல்யாணம் செய்தும் குடும்பம் நடத்த முடியாமல் தவிப்பதைக் கண்டு வருத்தமடைந்த வடநாட்டு டிவி சேனல்கள், அவரது மனைவியின் வீட்டு முன்னால் நின்று கொண்டு, ‘இதுதான் முதல்வர் மனைவியின் வீடு..’ ‘இதுதான் அவர் துணி துவைக்கும் கல்..’ ‘இதுதான் அவர் வளர்க்கும் நாய்..’ ‘இவர் முதல்வருடன் சேர்வாரா என்பது தெரியவில்லை..?’ என்றெல்லாம் லைவ் டெலிகாஸ்ட் செய்து பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்றியதெல்லாம் ஒரு கதை.

முதல்வர் தம்பதிகள் ஒன்று சேர மாநிலமே விழுந்தடித்துக் கொண்டு கோவில், கோவிலாக ஏறி இறங்கி.. தீபத் திருவிழாவெல்லாம் நடத்தினார்கள். பின்பு யார், யாரோ பேச்சுவார்த்தை நடத்தி தம்பதிகளை இணைத்துவைத்து சேனல்களுக்கு விருந்தளித்தார்கள்.

இன்றைக்கு அதே மனைவியைத்தான் அத்தனை பேரும் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் வருகின்றவரையில் மது நிதானமாகத்தான் இருந்தார். மனைவி வந்த பின்புதான் ‘மது’ ஆடத் துவங்கி இன்றைக்கு படுத்தேவிட்டது என்கிறார்கள்.

மனைவியும் சும்மா இல்லை. கணவர் மாட்டிக் கொள்ளப் போகிறார் என்பது தெரிந்ததும் கோவிலுக்குச் சென்று 11 ஆடுகளை பலி கொடுத்து கடவுளுக்கு ‘அப்ளிகேஷன்’ போட்டிருக்கிறார் மனைவி. மனைவியின் வேண்டுதல் தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்றா.. அல்லது கணவர் மாட்டிக் கொள்ளக் கூடாதா என்பதுதான் தெரியவில்லை.

எப்படியோ..? இப்போது மதுகோடாவுக்கு அங்கே செல்வாக்கு போச்சு என்பதால் காங்கிரஸுக்கு ஒருவகையில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆட்சியில் இருந்து விலகி காங்கிரஸுக்கு மூக்குடைத்த அவரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய சந்தோஷம் அவர்களுக்கு..

எல்லாஞ்சரி.. களவு போன பணம் 4000 கோடி திரும்ப வருமா..?

அமைச்சர் துரைமுருகனும் வீட்டு வசதி வாரிய வீடுகளும்..!

போனவாரம் புலனாய்வு பத்திரிகைகள் முழுவதிலும் ஒரு விஷயம் ஒற்றுமையாக வெளியிடப்பட்டிருக்கிறது. அது என்னவெனில், தமிழக வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்களை தமிழக அமைச்சர்கள் சிலரும், செல்வாக்குமிக்க பலரும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதுதான்.

இந்த விஷயத்தில் சட்ட அமைச்சர் துரைமுருகனின் பெயர் ஏகத்திற்கும் அடிபடுகிறது. தனது குடும்பத்தினர் பெயரில் வீட்டு வசதி வாரியத்தின் நிலங்களை அவர் வாங்கியிருக்கிறாராம். விஷயம் முதல்வருக்குத் தெரிந்து நிலத்தை மரியாதையாக திருப்பிக் கொடுத்துவிட்டு தன்னை வந்து சந்திக்கும்படி சொல்ல.. துரைமுருகனும் திருட்டுப் பொருளை திருப்பிக் கொடுத்து நல்ல பிள்ளையாகிவிட்டாராம்.


ஆனாலும் அமைச்சர் துரைமுருகன் தன் சொந்தங்களின் பெயரில் வாங்கிய நிலம் மட்டுமே திரும்ப வந்திருக்கிறது. பினாமி பெயரில் வாங்கியது வரவில்லை என்று வாரியத்திடமிருந்து முதல்வருக்கு செய்தி வர.. கோபத்தில் எகிறியிருக்கிறார் முதல்வர். அமைச்சரோ வழக்கம்போல கண்ணீர்காவியம் எழுதிருக்கிறார்.

துரைமுருகன் மட்டுமல்ல.. அமைச்சர்கள் பலருமே வீட்டு வசதி வாரியத்தின் நிலங்களை சுருட்டியிருக்கிறார்கள். அடுத்து ஆட்சி மாறினால்தான் முழு விபரம் தெரியும். இல்லையெனில் ஆட்டைய போட்டது போட்டதுதான்..

ஆனால் இது திருட்டு அல்ல.. அவர்களும் திருடர்கள் அல்ல. திருட்டைக் கண்டுபிடித்து திருப்பிக் கொடுக்கும்படி சொல்லி அந்தத் திருடர்களை நல்லவர்களாக ‘ஞானஸ்நானம்’ செய்திருக்கும் இந்த உத்தம முதல்வரைப் பெற நாம் கோடானுகோடி தவம் செய்திருக்க வேண்டும்.. பொறுத்துக் கொள்வோம்..

ஈரோட்டு ராஜாவின் தில்லாலங்கடி..!

அடுத்த கொடுமை ஈரோட்டில் நடந்தேறியுள்ளது.. குற்றஞ்சாட்டப்பட்டவர் கைக்குச் சிக்கவில்லையெனில் அவருடைய குடும்பத்தையே ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து சித்ரவதை செய்யும் தமிழக போலீஸாரின் வழமையான போக்கு, இந்த ராஜாவிடம் மட்டும் பலிக்கவில்லை. காரணம், அவரது தந்தைதான் தற்போது ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர். கை வைச்சிருவாங்களா அவங்க..?

உடல் முழுக்க வரி, வரியான கோடுகளுடன் சிவபாலன் என்ற அந்த பாதிக்கப்பட்ட நபரின் புகைப்படத்தையும், வாக்குமூலத்தையும் படித்துவிட்டு முன்னாள் அமைச்சரான தன் உடன்பிறப்பை கட்சியில் இருந்து நீக்கியபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. என்னடா இது நம்ம சி.எம். அதுக்குள்ள நல்லவராயிட்டாரா என்று..


நேற்றுதான் தெரிந்தது எவ்ளோ பெரிய கில்லாடி என்று.. அவராவது திருந்திறதாவது..? “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகுற மாதிரி அழு..” என்று சொல்லி தன் குடும்பத்துப் பிள்ளையை அழுகுணி ஆட்டம் ஆடி காப்பாற்றியிருக்கிறார்.

சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோர்ட் அவருக்கு முன் ஜாமீன் வழங்கிவிட்டது. இந்த வழக்கில் ராஜாவுக்காக வாதாடிய வக்கீலும் தி.மு.க. தலைமையால் அனுப்பி வைக்கப்பட்ட புரட்சித்தலைவியின் முன்னாள் வக்கீலும், இந்நாள் தி.மு.க. உறுப்பினருமான ஜோதிதான் ராஜாவுக்காக வாதாடியிருக்கிறார். ஆட்சேபிக்க வேண்டிய போலீஸ் தரப்பு மெளனமாகிவிட்டதால் தானாகவே அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.. ஐயோ பாவம்.. அப்பாவி தமிழர்கள்..

தெரியாத்தனமாக ஈழத்தமிழ் பேசும் ஒருவனுக்கு பிஸ்கட்டும், பேட்டரியும் வாங்கிக் கொடுத்ததற்காக வருடக்கணக்கில் பல தமிழர்கள் ஜெயிலிலும், முகாமிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வெளியில்விட்டால் சமூகத்திற்கு கேடு என்று சொல்லி வரும் இந்த அதிகாரவர்க்கம், தனக்கு வேண்டியவர்கள் எப்பேர்ப்பட்ட கயவர்களாக இருந்தாலும் பட்டுக்குஞ்சம் வைத்து அழகு பார்ப்பது கேவலமான அரசியல்..

ஜாமீன் கிடைத்த அரைமணி நேரத்தில் பவான ஆற்றங்கரையோரம் ஒரு சக்கரை ஆலையின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் பவானி ஊருக்குள் வந்து கட்சிக்காரர்கள் மாலை, சால்வை, மரியாதைகளை வாங்கிக் கொண்டு ராமநாதபுரத்திற்கு விரைந்திருக்கிறார் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற..

இத்தனை நாட்கள் அவரை வலைவீசி தேடிய சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு பவானி என்ற ஊரும், அவர் அங்கு தங்கியிருந்ததும் தெரியவில்லையாம்.. பாவம்.. இதில் ‘ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு சமமானவர்கள் தமிழக போலீஸ்’ என்று கதை வேறு விடுகிறார்கள்.. அட போங்கப்பா..

மராத்தியா-ஹிந்தியா? வெடித்துக் கிளம்பிய மொழி வெறி..!

‘தாயினும் மேலானது மொழி’ என்றும், ‘தாய்மொழிக்கு இன்னல் எனில் உயிரையும் கொடுப்பேன்’ என்ற அரசியல்வியாதிகளின் உளறல் சபதத்திற்கு மகாராஷ்டிராவில் ஜால்ரா சப்தம் இன்றைக்குக் கேட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் புதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா இன்று நடந்துள்ளது. அதில் பேரவை உறுப்பினராக பதவியேற்ற சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் திரு.அபு ஆஸிம் ஹிந்தி மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

அவர் பதிவியேற்கும் உறுதிமொழியை வாசித்துக் கொண்டிருக்கும்போதே ஓடோடி வந்த ராஜ்தாக்கரேவின் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மைக் இருந்த மேடையைக் கீழே சாய்த்து அவர் ஹிந்தியில் படிக்கக் கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்து ரகளை செய்துள்ளார்.

ஆனால் அபு ஆஸிம் தொடர்ந்து மைக் இல்லாமல் ஹிந்தியிலேயே தனது பதவிப் பிரமாணத்தை எடுத்துவிட அவருக்கு ஆதரவாக ஒரு குழுவும், எதிர்ப்பாக ஒரு குழு என பிரிந்து சட்டப் பேரவையின் முதல் நாளிலேயே பெரும் ரகளையை செய்திருக்கிறார்கள்.

கீழே இறங்கி வந்த அபு ஆஸிமை நெருங்கிய எதிர்த்தரப்பு அணி அவரது கன்னத்தில் அறைந்து, சராமரியாகத் தாக்கியும் தங்களது மொழிப் பற்றைக் காண்பித்திருக்கிறார்கள்.

சட்டப் பேரவைக்குள் நடந்த இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை உருவாக்க அபு ஆஸிமின் சொந்தத் தொகுதியான பிகானிரில் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர்கள் கல்வீச்சு, பஸ் கண்ணாடி உடைப்பு என்று வழக்கமான ‘அரசியல் தொண்டை’ செய்து கொண்டிருக்கிறார்கள்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் தனது கட்சிக்காரர் ஹிந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது சரியானதுதான் என்கிறார். மராத்தி மராத்தியர்களுக்கே என்கிற குறுகிய மொழி வெறியை இத்தனை ஆண்டு காலமும் தூண்டிவிட்டே ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த சிவசேனா நல்லவேளையாக இப்போது ஆட்சியில் இல்லை என்பதால் அந்த எம்.எல்.ஏ. இதுவரையிலும் உயிரோடு இருக்கிறார் என்பதை குறிப்பிட்டே தீர வேண்டும்.

அபு ஆஸ்மியோ “நான் எந்த மொழியில் வேண்டுமானாலும் பதவியேற்பேன். அது எனது உரிமை.. ராஜ் தாக்கரேயோ மற்றவர்களோ அதனை எனக்குச் சொல்லித் தர வேண்டாம்” என்று அடிவாங்கிய பின்பும் தெம்பாக பேட்டியளித்திருக்கிறார்.

சட்டப் பேரவையின் முதல் நாளே நடந்த இந்த களேபரத்தால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் அம்மாநில அரசியல்வியாதிகள். அபு ஆஸ்மியைத் தாக்கிய ராஜ்தாக்கரே கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரை நான்கு வருடங்களுக்கு பேரவையில் இருந்து நீக்க தற்காலிக சபாநாயகர் பரிந்துரை செய்திருக்கிறாராம்.

மொழியில் என்ன இருக்கிறது..? பல்வேறு மொழி பேசும் இந்தியாவில், யார் எங்கு வேண்டுமானாலும் குடியிருக்கலாம் என்கிற பொது விதி இருக்கும் இந்தியாவில்.. மதச் சார்பற்ற கொள்கை கொண்ட இந்தியாவில் மொழி என்பது இந்தியர்களின் ஒற்றுமைக்கு இடையூறாக இருக்கக் கூடாது.. மொழிதான் முக்கியமெனில் முதலில் மொழி வாரி மாநிலங்களைத் தனித்தனி நாடுகளாக பிரிக்கும்படி கோரிக்கை வைத்துவிட்டு பின்பு மொழிக்காக உள்ளத்தை என்ன..? உயிரையே கொடுக்கலாம்..!

“தலைமை நீதிபதி தினகரனை நீக்கு..!” – கர்நாடகாவில் வக்கீல்கள் போராட்டம்

இவரா இப்படி செய்தார் என்று நீதித்துறை வட்டாரங்கள் திகைத்துப் போன சம்பவம் நமது சக தமிழரான நீதியரசர் தினகரன் சம்பந்தப்பட்ட செய்திகளைப் படித்துத்தான்.

லஞ்ச, ஊழலில் நீதிபதிகளும் சிக்குவது என்பது நமது ஜனநாயகத்தில் சகஜம்தான் என்றாலும், இந்த நீதிபதி சிக்கியது அனைவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டிய முதல் கட்ட பேனலில் நீதிபதி தினகரனின் பெயரும் இடம் பெற்றிருந்தது.


அவருக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சீட் உறுதி என்ற நிலையில் வெளியான அவரது சொத்துக் குவிப்பு விவகாரம் அந்த பேனலில் இருந்து அவரை வெளியேற்றியிருக்கிறது. அவரைத் தவிர மற்றவர்களின் பெயர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்காக அறிவிக்கப்பட்டுவிட்டது.

அவருடைய சொத்துக் குவிப்புகளை படித்துப் பார்த்தால் அரசியல்வாதிகளெல்லாம் பிச்சை வாங்கணும்போலத்தான் தோன்றுகிறது.. திருவள்ளூர் மாவட்டத்தில் காவேரிராஜபுரம் என்னும் கிராமத்தில் 440 ஏக்கர் அளவுல்ல நிலத்தை மடக்கிப் போட்டுள்ளார் தினகரன். இதில் அரசு பொறம்போக்கு நிலங்களும், அடுத்தவர்களின் நிலங்களும் அடக்கம்.

இது மட்டுமில்லாமல் சென்னையில் அவர் வாங்கிக் குவித்திருக்கும் நிலங்கள், வீடுகளின் லிஸ்ட்டையும் பார்த்தால் கண் முழி பிதுங்குகிறது. முழு லிஸ்ட்டையும் பார்க்க விரும்புபவர்கள் இங்கே சென்று படித்துப் பார்க்கவும்.

சிறுதாவூர் நிலத்தை மீட்கப் போராட்டம் நடத்திய பொதுவுடமைத் தோழர்கள் நீதிபதியிடமிருந்து இந்த நிலத்தையும் மீட்டாக வேண்டும் என்று போராடி வருகிறார்கள். வழக்கம்போல ஒரு தமிழர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாவதை மேல்சாதி தடுக்கிறது என்று சாதிச் சாயம் பூசி ஊழலுக்கும், முறைகேட்டுக்கும், லஞ்ச லாவண்யத்திற்கும் சலாம் போடுகிறது திராவிடர் கழகம்.

இத்தனை நாட்கள் காத்திருந்துவிட்டு இன்றைக்குத்தான் பெங்களூரில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் தலைமை நீதிபதி பொறுப்பில் இருக்கும் தினகரனை நீதிபதி பதவியில் இருந்து நீக்கும்படி போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இது எங்கே போய் முடியப் போகிறதோ..?

நீதிபதிகள் என்பவர்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டாமா..? நீதிபதி தினகரனே தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆக்கிரமித்த நிலங்களை அரசிடமும், நில உரிமையாளர்களிடமும் ஒப்படைப்பதுதான் அவருடைய மரியாதைக்கு நல்லது.

அவர் செய்யாவிடில் அரசு அதனை செய்து அவரையும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டை வழங்க வேண்டும். நமக்கு ஆசை நிறைய இருக்கு.. அதிகார வர்க்கம் மனம் வைக்க வேண்டுமே..?

பாவமான முத்துலட்சுமி..!

சென்ற ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மேட்டூரில் கைது செய்யப்பட்டு மைசூர் சிறைச்சாலையில் இன்றுவரையிலும் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை கிட்டத்தட்ட அத்தனை அரசியல்வியாதிகளும் காலத்தின் கட்டாயத்தால் மறந்து தொலைத்துவிட்டார்கள்.

வீரப்பன் இருந்தவரையில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த முத்துலட்சுமியை, வீரப்பன் இறந்த பின்பும் நிம்மதியாக இருக்க விடாமல் வைத்திருக்கின்றன தமிழக, கர்நாடக மாநில அரசுகள்..


அவர் மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளில் ஆஜராகவில்லை என்ற காரணத்தைக் காட்டி கைது செய்து ஜாமீன் தராமல் வைத்திருக்கிறது கர்நாடக அரசு. முத்துலட்சுமியின் மகள்கள் இருவரும் முதல்வரை நேரில் சந்தித்து கதறியும் நமது தாத்தா மனமிரங்கவில்லை.. பார்ப்போம் என்று பட்டும் படாமல் சொல்லியனுப்பியிருக்கிறார்.

உடனேயே டெல்லியில் போய் டேரா போட்டு மேட்டரை முடிக்கவோ, போன் செய்து மிரட்டவோ முத்துலட்சுமி என்ன சொந்த பேத்தியா.. இல்லை மகளா..? ஒரு காலத்தில் தனது ஆட்சியை மிரட்டி ராமதாஸூடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதால் தாத்தாவுக்கு கோபம். தன்னை விட்டுவிட்டு கொளத்தூர் மணியுடன் களம் காணச் சென்றதால் ராமதாஸுக்கு கோபம்.. தங்களை விட்டுவிட்டு தானாகவே அரசு அதிகார வர்க்கத்துடன் தொடர்பு கொண்டதால் கொளத்தூர் மணி வகையறாக்களுக்கு முத்துலட்சுமி மீது கோபம்.

இப்படி ஆதரவு கொடுக்க வேண்டிய அனைவருமே ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவருக்கு ஆதரவுக் கரம் நீட்ட மறுக்க பாவம் அவர்.. வீரப்பன் என்கிற நபருக்கு வாழ்க்கைப்பட்ட சம்பவத்திற்காக இறக்கின்றவரையில் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது அவரது தலைவிதி போலும்..

பாவமாக இருக்கிறது.. வேறென்ன சொல்வது..?