Archive for the ‘நித்தியானந்தம்’ Category

நித்தியானந்தம் தவிர நாமெல்லாரும் யோக்கியமானவர்கள்தானா..?

மார்ச் 3, 2010

04-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த இரண்டாம் தேதி இரவு எட்டரை மணிமுதல் கோடம்பாக்கத்தில் யாருக்கும் உறக்கமில்லை. எப்படி இப்படி நடந்தது என்று இரவு முழுவதும் போன் போட்டு அழுதவர்கள், இப்போதுவரையிலும் அதையேதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திரையுலகம் மட்டும்தான் என்று நினைத்தேன். வலையுலகத்தில் நான் எதிர்பார்த்தது போலவே இதைத் தவிர முக்கியம் வேறில்லை என்பதைப் போல் ஒரே சமயத்தில் ஒரே சம்பவத்தை வைத்து பதினைந்து பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பில் நின்றது என்றால் அது நிச்சயம் இந்தப் பிரச்சினைக்காகத்தான்.


எப்போதடா சமயம் கிட்டும் என்று காத்துக் கொண்டிருந்தவர்கள் பக்தியின் மீது, கடவுள் மீதும், அந்த நம்பிக்கை மீதும், சாமியார்கள் மீதும், அவர்களது பிரதான பக்தர்களின் மீதும், கடைநிலை பக்தர்கள் மீதும் பாய்ந்து குதறியெடுத்துவிட்டதை நினைத்து இனிமேல் இந்தப் பிரச்சினையில் எழுதுவதற்கு எதுவுமே இல்லை என்றாகிவிட்டது.

ஆனாலும் இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் பின்னாளில் நாட்டுப் பிரச்சினைகள் எதையும் பொதுவில் வைத்து வாதாடும்போது உனக்கென்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழ வாய்ப்பு உண்டு என்கிற காரணத்தினால் விருப்பமே இல்லாமல் இந்தப் பதிவு.

காமம் மனிதர்களைக் கொல்லத்தான் செய்கிறது. எவ்வளவு செல்வாக்கு படைத்த மனிதர்களும் இதை வெல்ல முடியாமல் கடைசியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். இதைத்தான் கடவுளர் வரலாறுகளும், தேசங்களின் வரலாறுகளும், ஒரு சமான்யனின் வரலாறுகளும் வருடக்கணக்காக சொல்லி வருகின்றன. ஆனாலும் சாதாரண மக்களுக்கு தங்களிடம் அதன் மீதிருக்கும் ஒரு மரியாதை கலந்த பயத்தையும், விருப்பம் கலந்த வெறுப்பையும் நீக்க முடியவில்லை.

நித்தியானந்தம் என்கிற தனி நபரும், ரஞ்சிதா என்கிற பெண்மணியும் கலந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு இது என்கிற பட்சத்தில் இது இருந்திருந்தால், தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் லட்சணக்கணக்கான அந்தரங்க வீடியோக்களில் ஒன்றாக இதுவும் போய்விட்டிருக்கும்.

மாறாக தன்னையொரு அவதாரப் புருஷனாகவும், மக்களுக்கே அறிவுரை சொல்லும் மகானாகவும், ரட்சிக்க வந்த புனிதராகவும் காட்டிக் கொண்டதால்தான் நித்தியானந்தம் இன்றைக்கு தலைகாட்ட முடியாமல் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டியிருக்கிறது.

அவரால் முடிந்தது.. போய்விட்டார். ஆனால் அவரைத் தொழுதவர்கள் அன்றைய இரவு முதல் பட்டபாட்டை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க மாட்டார். கவுதம புத்தர் தோரணையில் நித்தியானந்தம் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பலரது வீடுகளின் வரவேற்பறையில் பார்த்திருக்கிறேன். இப்போது போனால் நிச்சயமாக அது குப்பைக் கூடைக்குள்தான் இருக்கும்.

திரையுலகில் கோவைசரளாவும், நடிகர் விவேக்கும் இவரது பிரதான சீடர்கள். தயாரிப்பாளர் ‘சத்யஜோதி’ தியாகராஜன் இவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். பல பிரபலங்களுக்கு மத்தியில் இப்படி குருவாக இருந்தவர் தனக்குத்தானே குழியைத் தேடிக் கொண்டார் என்றால், அதற்குக் காரணம் அவரது வயதுதான். இளம் வயதில் பெயரும், புகழும், பணமும், அளவற்ற செல்வாக்கும் கிடைத்தால் எது நடக்குமோ அதுதான் இவருக்கும் நடந்திருக்கிறது.

ஏதோ நம்மைத்தான் இந்தப் பிரச்சினை தாக்கியிருக்கிறது என்றில்லை. தமிழ்நாடு முழுக்கவே நிலைமை இதுதான். டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு. அடுத்தவர்களின் அந்தரங்கம் உலகத்தில் அத்தனை பேருக்குமே எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பாருங்கள்..?

நித்தியானந்தம் ஒரு சாமியார் என்கிற ரீதியிலேயே கவனிக்கப்பட்டுவிட்டாலும் அவருக்குள் இருந்த இயற்கையான, இயல்பான மனித குணம் இல்லாமல் போயிருக்காது. ஆனால் அதற்காக அவர் அதனைப் பயன்படுத்தியவிதமான அந்த காவி உடையை அணிந்து அந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்பதும் ஒரு புறும் இருக்கட்டும்.. இந்தச் செயல் எதற்காக, எப்படி வெளிப்பட்டது என்பதையும் ஒருபுறம் பாருங்கள்..

பல்வேறு மீடியாக்களுக்கும் குறிப்பாக குமுதம் பத்திரிகைக்கும் இந்தச் செய்தி டிவிடியுடன் ஒரு கோரிக்கை கடிதத்துடன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் வாசகங்களைப் படிக்கின்றபோது இந்தச் செயலில் பங்கு கொண்ட மூன்றாமவரும் நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அதனை வாசிக்க வாய்ப்புக் கிடைத்த பத்திரிகையாளர்கள்.

நீண்ட வருடங்களாக தனக்கும், நித்தியானந்தத்திற்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்பை உடைத்தெறிந்துவிட்டு புதிய நட்பை உருவாக்கிக் கொண்ட ரஞ்சிதாவின் மேல் கோபம் கொண்டுதான் அந்த பெண் அவர்கள் இருவருக்குமே தெரியாமல் இதனை ரிக்கார்டு செய்து மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் என்பது பலரது அனுமானம். அந்தப் பெண்ணை கிட்டத்தட்ட ஸ்மெல் செய்துவிட்ட பத்திரிகையாளர்கள் விரைவில் அந்தப் பெண்ணின் பெயர் போட்டு கவர்ஸ்டோரி எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

போடலாமா வேண்டாமா என்றெல்லாம் பலரும் தங்களது அலுவலகத்தில் யோசித்துக் கொண்டிருக்க பல்வேறு டிவிக்களின் செய்தி ஆசிரியர்களும் இரவு 9 மணியோடு கடைசி புல்லட்டின்னை முடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள் என்பதை யூகித்து இரவு நேரத்திலேயே சப்தமில்லாமல் வெளியிட்டுள்ளார்கள் சேனல்காரர்கள்.

அதுவும் துணை முதல்வர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவின் நேரடி ஒளிபரப்பு கலைஞர் டிவியில் முடிகின்றவரையில் காத்திருந்து அதன் பின்புதான் ஸ்கிரால் நியூஸே ஓடத் துவங்கியது. அப்போதிலிருந்தே சேனல்காரர்கள் நினைத்ததுபோல தமிழ்நாடே பரபரக்கத் துவங்கியது.

ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே நித்தியானந்தத்தை தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்கப்பட்டு அவர் அதனை மறுத்து அது தன்னுடையதல்ல என்று சொன்ன பின்புதான் ஒளிபரப்பியுள்ளார்கள். இதனால்தான் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தம் தரப்பினர் ஒளிபரப்புக்கு தடைகோரியபோது ஸ்டே ஆர்டரை கொடுக்க நீதிபதியும் மறுத்துவிட்டாராம்.

நான் அந்த வீடியோவை பார்த்தபோது ஒரு 32 வயது வாலிபனும், அவன் மீது தாளாத காதல் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்குமான உணர்ச்சிக் குவியலைத்தான் பார்க்க முடிந்தது. எனது பக்கத்துவீட்டுப் பெண்கள் “புருஷனுக்குக்கூட எந்த பொம்பளையும் இவ்வளவு மரியாதையா கால் பிடிச்சுவிட மாட்டாங்க..” என்று கிண்டல் அடித்தார்கள். அவர்களுடைய பார்வை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்..

நடந்ததெல்லாம் ஒரு நிகழ்வு என்று சொல்லிவிட்டுப் போக இங்கே யாருக்கும் மனமில்லை. காரணம் அவர் ஒரு சாமியார்.. சாமியார் பெண்ணுடன் சம்போகிக்கலாமா என்கிறார்கள். அதனால் நித்தியின் உடலை இரண்டாகப் பிளந்ததுபோல் அத்தனை பேரின் கோபச் சொல்லாடல்கள் அவரைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இதற்கெல்லாம் தகுதிகள் யாருக்கு உண்டு..? அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய அந்தத் தொலைக்காட்சி சேனலுக்கு முதலில் இருக்கிறதா..? இந்தக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஃபிரேமுக்குக் கீழேதான் தீராத விளையாட்டு பிள்ளை என்கிற நடிகைகளின் திவ்ய தரிசனத்தை முழுமையாகக் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் விளம்பரம் ஓடியது.

அதே தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்ற காட்சிகள் எதுவும் நித்தியும், ரஞ்சிதாவும் இருந்த காட்சிகளுக்குக் குறைந்ததல்ல.. வெறுமனே கட்டில் அறை காட்சிகள் மட்டும்தான் ஆபாசமா..?

பத்தாண்டுகளுக்கு முன்பாக ‘மெட்ரோ பிரியா’ என்றொரு தொகுப்பாளினி பற்றிய ஒரு விளம்பரம் அதே தொலைக்காட்சியில் ஓடியது.. பாலங்கள், சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள் அனைத்தையும் கடந்து ஓடி வருகிறார்கள் இரண்டு பெரியவர்கள். அரக்கப் பறக்க ஓடி வரும் அவர்கள் ப்ரியாவின் எதிரில் வந்தமர்ந்தவுடன் அதில் ஒருவரின் வாயில் இருந்து உமிழ்நீர் அப்படியே கொட்டிக் கொண்டேயிருக்கும். கேட்டால் இது அந்த ப்ரியா என்றொரு பெண்ணிற்காக தமிழ்நாடே காத்துக் கொண்டிருப்பதை உணர்த்துவது போன்ற கான்செப்டாம்..

அடுத்து திடீரென்று ஒரு ஜட்டி கம்பெனி லம்பமாக ஒரு தொகையைக் கொடுத்து அனைத்து நிகழ்ச்சிகளின் இடையிலேயும் தங்களது உலகப் புகழ் பெற்ற ஜட்டியைக் காட்டச் சொன்னது.. காட்டினார்கள்.. எப்படி..? ஒரு ஆண் கட்டிலில் படுத்திருப்பார்.. கான்செப்ட்டின் டயலாக்குகள் முடிந்தவுடன் சடாரென்று தனது ஜிப்பைத் திறந்து பேண்ட்டை முட்டி வரையிலும் கீழிறக்கி ஜட்டியைக் காண்பிப்பார். அப்படியே ஜட்டி மீது லோகோ வந்து நிற்க.. விளம்பரம் முடியும்.. இப்படிப்பட்ட அற்புதமான காட்சிகளையும் அள்ளித் தெளித்ததுதான் இந்த சேனல்.

இவர்கள் என்றில்லை.. இப்போது அனைத்து மீடியாக்களுமே சிற்றின்பத்தை மையமாக வைத்துதான் தங்களை வளர்த்துக் வருகின்றன. இந்த சிற்றின்பத்தில் அடுத்தக் கட்டமான ‘பெரிய’ இன்பத்தையும் இவர்கள் நட்ட நடு இரவில் சில வருடங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்..

‘சூர்யா’ டிவியில் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஷகிலா நடித்த மலையாளப் படங்களையும் காண்பித்தார்கள். தமிழக சட்டப்பேரவைவரையிலும் இந்த விஷயம் பேசப்பட்டு தாத்தா வழக்கம்போல பேரன்கள் பக்கமே பேச.. இனி போடுவதற்கு படங்கள் கிடைக்காததால் அது அப்படியே நின்று போனது. ஆனாலும் வசந்த் தொலைக்காட்சியில் இப்போது இந்த அரிய சேவையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எதைவிடக் குறைந்துபோய்விட்டது நித்தியின் இந்த உறவு..?

இந்த வெளியீட்டீன் மூலம் நித்தியானந்தத்தை குதறியெடுக்கும் பலரும் உடன் காட்சியளிக்கும் அந்தப் பெண் ரஞ்சிதாவை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை?

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ்.. திரைப்படங்களில் முன்புபோல் நடிக்க வாய்ப்பில்லை.. சின்னத்திரையிலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரிடமே மோதல் ஏற்பட்டு அங்கிருந்தும் விலக வேண்டிய நிர்ப்பந்தம்.

இப்படி எல்லா இடத்திலும் பிரச்சினைகள் என்று வந்த பிறகு ஒரு மன அமைதி வேண்டி அவர் சென்றடைந்த இடம் அது. அங்கே ஏற்கெனவே அமைதி வேண்டி வந்திருந்த மனிதர்களில் ஒருவரோடு ஒருவராக இருந்திருக்க வேண்டியவர், நித்தியுடன் ஒட்டிக் கொண்டதுதான் இப்போது இந்தளவுக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது.

இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் அது ஏதோ ஒருவித செட்டில்மெண்ட்டுக்காக நடத்தப்பட்டவிதமாக இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஞ்சிதா நித்தியை முழுமையாக நம்பியிருக்கிறார். ஆனால் இப்போது அவரது நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. இனி அவர் எப்படி வெளியுலகில் தயக்கமில்லாமல் நடமாட முடியும்..? எத்தனை கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியும்..? கேள்விகள் அனைத்தும் தார்மீக ரீதியாக வருமா..? ‘அந்தக்’ காட்சிகளை மையமாக வைத்துதானே கேள்விகள் பறந்து வரும். அதற்கு ஒரு பெண்ணால் எப்படி பதில் சொல்ல முடியும்..?

ரஞ்சிதாவின் பொருட்டாவது இந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. கண் மூடித்தனமான பக்தியும், காதலையும்தான் அந்தப் பெண் அந்த வீடியோவில் காண்பித்திருக்கிறார். ஒரு கணவருக்கும், மனைவிக்குமான உறவு போல இருந்த அவற்றை இப்படி பகிரங்கப்படுத்தியிருப்பதில் காணாமல் போயிருப்பது நமது நாகரிகமும் சேர்ந்துதான்.

நித்தியின் உடன் இருந்தவர்களின் பொறாமையும், பயமும் அந்தப் பெண்ணையும் இப்போது பலி வாங்கிவிட்டது. இது பல மாதங்கள் நீடித்திருக்கும் நட்புதான் என்று உறுதியாகச் சொல்கிறது ஆசிரம வட்டாரம்.

உரிமையாக நித்தியின் படுக்கையறைக்குள் நுழையும் அளவுக்கு செல்வாக்கையும், தகுதியையும் உடைய ஒரு பெண் திடீரென்று வந்துசேர்ந்த ரஞ்சிதாவால், நித்தியை சந்திக்க முடியாத அளவுக்குப் போய் அந்தக் கோபத்தில்தான் வீடியோ கேமிராவை நித்திக்கும், ரஞ்சிதாவிற்குமே தெரியாத அளவுக்கு மறைத்து வைத்து படம் பிடித்திருக்கிறார் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

நித்தி இன்றைய செய்தியின்படி ஹரித்துவாருக்கு சென்றிருக்கிறார். உண்மையாக அவர் நாளை அலகாபாத்தில் நடக்கும் ஒரு கும்பமேளாவில் பல சாமியார்களுக்குத் தலைமை தாங்கி பூஜை நடத்த வேண்டுமாம். இருக்கின்ற குழப்பத்தில் அங்கே அவர் சென்றால், அவருக்கே பூஜை நடத்திவிடுவார்கள் என்பது உறுதி.

வீடியோவை வெளியிட்டவர்கள் சாமியாரின் சல்லாபம் என்றே குறிப்பிடுவதும் மிக நகைச்சுவையான ஒன்று.. இவர்களது சேனல்களில் நிமிடத்துக்கொருமுறை காட்டப்படுகின்ற சினிமா பாடல் காட்சிகளில் இருப்பது மட்டும் என்ன என்பதை இவர்கள் விளக்கிச் சொன்னால் தேவலை.

அதோடு அந்த வீடியோவின் காட்சிகளுக்கேற்ப ‘சிருங்கார ரசம்’ சொட்டும் சினிமாப் பாடல்களைச் சேர்த்து வெளியிட்டிருக்கும் அற்பபுத்திக்காரர்களை எதை வைத்து அடிப்பது..? யார் இவர்களைக் கண்டிப்பது..? எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை. நிச்சயமாக அது ஸ்பாட் ரிக்கார்டிங் அல்ல. எடிட்டிங் டேபிளில் இணைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புலனாகிறது.

மற்றபடி சேனல்காரர்கள் என்ன நினைத்தார்களோ அது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருக்கும் நித்தியின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவருடைய புகைப்பட போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. அவருடைய புகைப்படங்கள் எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் இருக்கும் தலைமை அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவுக்குப் பின்பும் “இது ஒரு கிராபிக்ஸ் வேலை.. நாங்கள் இதனை சட்டரீதியாக அணுகுவோம். நித்தி சாமி ஒரு தவறும் செய்யாதவர்..” என்று இன்னொரு சாமி பேட்டியளித்திருக்கிறார். உடன் போலீஸார் இருந்ததால் தப்பித்திருக்கிறார்.

நேற்று மட்டும் முகத்தை மார்பிங் செய்துவெளியிட்ட சேனல் இன்றைக்கு அப்படியே வெளியிட்டது. அதோடு அவர்கள் ரஞ்சிதாவின் புகைப்படத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ‘உதயா’ தொலைக்காட்சியில் ரஞ்சிதா நடித்த ஒரு நெருக்கமான காதல் காட்சியையும், அவரைக் கற்பழிக்க முனையும் காட்சியையும் போட்டுக் காண்பித்து இவர்தான் ரஞ்சிதா என்கிறார்கள். இதுவா ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் முறை..? இதற்கு நித்தி, காவி உடை அணிந்து காதலியுடன் ஒன்றாக இருந்ததில் ஒன்றும் தவறில்லையே..?

எந்தவிதத்திலும் இந்த விஷயத்தில் நித்தியானந்தத்தை கண்டிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு விரல் அவரைக் குற்றம் சுமத்தினால் மற்ற நான்கு விரல்களும் நம்மைத்தான் காட்டுகின்றன. அவர்கள் நடத்தியது சல்லாபம் என்றால் அடுத்தவர்களின் சல்லாபத்தை உச்சுக் கொட்டி பார்த்த நம்முடைய செயலை என்னவென்று சொல்வது..?

முதல் முறையாக அந்தக் காட்சிகளைப் பார்த்தபோது ரஞ்சிதாவாக இருக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் ‘நக்கீரன்’ இணையத் தளத்தில் முழுமையாகப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த முறைகள் பாஸ்ட் பார்வேர்டும், ரிவர்ஸுமாக மாற்றி மாற்றிப் பார்த்ததில் பாதி நித்தியானந்தமாக நானே மாறிவிட்டேன். பின்பு எனக்கு எங்கே இருக்கிறது கண்டிக்கின்ற தகுதி..?

இல்லை. எங்களுக்கு இருக்கிறது என்றால், உங்களது வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒருவிதத்தில் ஒரு நோக்கில் நீங்களும் இந்தக் காமத்தை எதிர்கொண்டிருப்பீர்கள். அல்லது தெரிந்தும், தெரியாததுபோல் இருந்திருப்பீர்கள். யாரோ ஒரு நித்தியானந்தமோ அல்லது ரஞ்சிதாவோ உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அப்போது மெளனமாக இருந்த நீங்கள், இப்போது இவர்கள் என்றவுடன் வெளிப்படையாகக் கொட்டுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

வலையுலகில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் பற்றி பதிவர்கள் எழுதிய விமர்சனத்தில் அத்தனை பேரும் அட்சரப் பிசகாமல் சொன்ன ஒரு வாக்கியம் “ரீமாசென்னின் உடல் மொழி அசத்தல்” என்பது. ஆனால் படத்தைப் பார்த்தபோதுதான் அந்த உடல்மொழியை எப்படி பதிவர்கள் கண்டுகொண்டுள்ளார்கள் என்பது புரிந்தது. அடிப்படையே காமம்.. அத்தனை காமக்கண்ணோட்டத்தோடு ரீமாசென்னை அணு, அணுவாக ரசித்துத் துடித்த அந்த ரசனைதான், இன்றைக்கு இரு உடல்கள் இசைவோடு இணைந்திருப்பதை குற்றமாக பார்க்கிறது. விந்தையாக இல்லை..?

நித்தியானந்தம் செய்த ஒரே தவறு அவர் சாமியாராக இருப்பதுதான். தன்னை பின்பற்று என்று அவர் சொல்லியிருக்கும்பட்சத்தில் அதை தீர ஆராயாமல், யோசிக்காமல் பின்பற்றியிருக்கும் தொண்டர்களைத்தான் நாம் கண்டிக்க வேண்டும்.

ரஞ்சிதாவை இப்போது நினைத்துப் பார்த்து வருத்தமடையும் என் மனம் அந்த வீடியோவில் பார்க்கின்றபோது அவருடன் சேர்ந்து களியாட்டம் ஆடியதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பின்பு நான் எப்படி “இதுவொரு சாமியாரின் சல்லாபம்” என்று கண்டிக்க முடியும்..?

இணையத்தில் இன்றைய தேதிவரையில் இது போன்று நித்தியானந்தங்களும், ரஞ்சிதாக்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை அவ்வப்போது நாம் பார்த்து ரசிப்பதுண்டு.. ‘காஞ்சிபுரம் தேவநாதன்’ வீடியோக்களை தேடித் தேடிப் பார்த்த அனைவரும் அவன் மீது வழக்குப் போடவா பார்த்தார்கள்? இல்லையே.. என்ன நடந்தது என்பதற்காகத்தான் என்று மனசில் சல்ஜாப்பு சொல்லிக் கொண்டாலும் அதில் இருந்த காமத்தின் ஈர்ப்பை யாராலேயும் மறுக்கமுடியாது.

நித்தியானந்தம் துறவற வாழ்க்கைக்குத் தகுதியானவர் இல்லை என்று சொல்வதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை. அது மாதிரியான கணக்கிலடங்காத வீடியோக்களை திரையரங்கத்தின் இருட்டு மூலையிலும் கணிணியின் உதவியாலும் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருக்கும் என் மனது “நீயே ஒரு நித்தியானந்தம்தான். அவருக்கு வாய்ப்புக் கிடைத்து செய்திருக்கிறார். நீயும் அவர் நிலையில் இருந்தால் அதைத்தான் செய்வாய்.. இனி முடிவெடுக்க வேண்டியது நித்திதான். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டியது நீயல்ல..” என்று கூப்பாடு போடுகிறது.

அவருடைய செயல் ஒரு கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பிறண்டதுதான். இந்தக் கட்டுப்பாட்டை மீறியை செயலை செய்யாதவன் எவனும் உலகத்தில் இருக்க முடியாது என்பதே எனது கருத்து. நான் ஒரு காலத்தில் கை நீட்டி சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்த்த இடத்தில் அந்த நிர்வாகத்தின் தயாரிப்பையும், அதன் பொருட்களையுமே பார்க்காதீர்கள்.. வாங்காதீர்கள்.. கண்டுகொள்ளாதீர்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். இது எவ்வளவு பெரிய தவறு..? ஆனால் தனியொரு மனிதனாக நான் செய்தது சரி.. இப்படிப்பட்ட குழப்பம்தான் நமக்குள் இப்போதும் இருந்துவருகிறது.

பல கட்சிக்காரர்களின் அனுதாபிகளும் வலையுலகில் இருப்பார்கள். அவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் கட்சியிலும் இப்படிப்பட்ட ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் கட்சிதான் முக்கியம் என்று நினைத்து கொள்கைகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நித்தி கட்சிக்காரர் இல்லையே.. கட்சியில் இருந்துகொண்டு கொள்ளையடிப்பவனைப் பற்றிக் கவலைப்படாத சிலர்தான், காவி உடையை மட்டும் தனி கவனம் கொண்டு பறந்து வருகிறார்கள். ஏனெனில் அவர்களும் கட்சிக்காரர்களே..

வலையுலகத்தில் நித்தியானந்தத்திற்கு அடுத்து அதிகமாக சாடப்பட்டுள்ளவர் சாருநிவேதிதா. அவர் செய்த தவறு அவரும் நித்தியை அதீதமாக நம்பியதுதான். மனிதர்களை கடவுளாக்கினால் என்ன நடக்கும் என்பதை இப்போது அவரும் உணர்ந்திருக்கிறார் போலும். ஆனால் அதனை வெளிப்படுத்த நினைத்து அவர் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்தபோது வேதனையாக இருந்தது.

தான் தமிழ் மொழியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளன். என்னை வறுமையால் வாட வைத்து வேடிக்கை பார்க்கிறது இச்சமூகம் என்றெல்லாம் பொங்கியெழும் சாரு இப்போதைய கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகளைப் பார்க்கின்றபோது நிச்சயமாக இவர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமான எழுத்தாளராகவோ, குருவாகவோ, வழிகாட்டியாகவோ இருக்க சிறிதும் தகுதியில்லாதவர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இப்படியொரு எழுத்தினை தமிழில் பதிவு செய்யப்படுவதற்கு எந்தவிதத்திலும் தமிழ் மொழி உதவாமலேயே இருந்து தொலைந்திருக்கலாம் என்கிற ஆதங்கம்தான் எனக்குள் தோன்றுகிறது.

இன்றைய வாரமே சாமியார்கள் வாரமோ என்று சொல்லக் கூடிய அளவுக்கு புலனாய்வு பத்திரிகைகள் அத்தனையிலும் சாமியார்களின் நடவடிக்கைகள் பற்றியச் செய்திகள்தான் பிரதானம். டெல்லியில் ஒரு சாமியார் விபச்சார விடுதியே நடத்தியிருக்கிறார். திருச்சி அருகே ஒரு சாமியார் கடவுளின் வரம் கிடைத்த வாழைப்பழத்தை பெண் பக்தர்களுக்கு வாயாலேயே டிரான்ஸ்பர் செய்கிறாராம்.. எங்கேயிருந்துதான் இப்படியெல்லாம் கிளம்புகிறார்கள் என்று தெரியவில்லை.

கல்கி ஆசிரமத்தில் உருண்டை வடிவத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்ற புகார் நீண்ட வருடங்களாகவே இருந்துவருகிறது. திவாரியின் அக்கப்போர் லீலைகளை அம்பலப்படுத்தியே அதே டிவி சேனல், நேற்றைய முன்தினம் கல்கி ஆசிரமத்திற்குள் நடக்கும் ஓஷோ ஸ்டைல் விஷயங்களை வெளிப்படையாக்க.. அங்கேயும் பிரச்சினைகள்.. கலவரங்கள்..

இந்து மதம் வேரோன்றியிருக்கும் இந்திய நாட்டில் சாமியார்களுக்கும், கடவுள்களுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் பெரிது, பெரிதாக வளர்ந்து கொண்டேயிருப்பதும்தான் இதற்குக் காரணம்.

மூன்று வேளையும் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற கட்டாயமும், அப்படி சாப்பிட்டதையும் வெளியில் அனுப்பித்தான் தீர வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் உள்ள மனித உடலைத் தாங்கிய எவரும் இங்கே கடவுளர் இல்லை என்பதை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள். மொழி இந்த சாமியார்களது நாவில் அரசியல்வியாதிகளைவிடவும் அபாரமாக விளையாடுவதுதான் சாமான்யர்களை கவர்ந்திழுக்கக் காரணம்.

ஆறுதல் தேடி கோவிலுக்கு ஓடி வரும் மனிதர்கள் பாரத்தை அங்கே இறக்கி வைத்துவிட்டு அமைதியாக பெருமூச்சுடன் வீடு நோக்கிச் செல்லலாம், இதுவும் கடந்து போகும் என்ற நினைப்பில்.. என்னைப் போலவே..

ஆனால் ஒரு சிலர்தான் இப்படியொரு குறுக்குச் சந்தில் நிற்கும் ஒருவரிடம் உபதேசம் கேட்டு வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்ளலாம்.. மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து அங்கே போய் சிக்கிக் கொள்கிறார்கள். மீள்வது சுலபம்தான் என்றாலும் இங்காவது தனக்கு நல்லதொரு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கிறதே என்பதால்தான் அவர்கள் மீள்வதில்லை.

குடும்பங்களில் சோகங்களும், சோதனைகளும் ஏற்படத்தான் செய்யும். அத்தனைக்கும் நாம் வருத்தப்பட்டுக் கொண்டே அப்படியே அமர்ந்திருந்தால் வந்த நோய் வாசலைத் தாண்டிப் போகாது. வீட்டுக்குள்தான் இருக்கும். இருப்பதை விரட்டுவதற்கும் அவரவர்க்கு போதிய சக்தியைக் கொடுக்கத்தான் செய்திருக்கிறான் ஆண்டவன். நமக்குள்ளேயே நம்மிடையையே, நம்மின் அருகிலேயே தீர்வுக்கு வழி இருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இவருடைய தப்பினால் இவர்கள் மேற்கொண்ட கடவுள் பக்தி என்பது பொய்யாகிவிடாது. எவன் ஒருவன் அனுபவத்தால் இறைவனை உணர்ந்தானோ, அவனே உண்மையான பக்தன். வெறும் வார்த்தைகளாலும், கோஷங்களாலும், பஜனைகளாலும், பாடல்களாலும் இறைவனை நீங்கள் அணுகவே முடியாது. இது நன்கு படித்த மனிதர்களுக்கே புரியாமல் போகிறது.

பக்தி என்பது கடவுளிடம் பக்தன் காட்டுகின்ற தீவிரத்திற்கு மட்டுமல்ல.. கட்சியின் உண்மையான தொண்டனாக இருப்பவன் காட்டுவதும் பக்திதான். உழைக்கின்ற இடத்தில் முழுமையான அர்ப்பணிப்பு நோக்கத்துடன் உழைப்பவன் வெளிப்படுத்துவதும் பக்திதான். குருவின் பேச்சைத் தட்டாமல் செய்து முடிக்கும் சிஷ்யனிடம் உள்ளதும் பக்திதான். இந்த பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது எனது கருத்து.

நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?