Archive for the ‘நித்தியானந்தம்’ Category

மக்கள் நித்தியானந்தன்களைத் தேடி ஏன் ஓட வேண்டும்..?

மார்ச் 23, 2010

24-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த மூன்று வாரங்களாக கோடி ரூபாய்கள் செலவிட்டிருந்தால்கூட நித்தியானந்தத்திற்கு இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது.. அவ்வளவை அள்ளியிருக்கிறார் நித்தி. சில பரபரப்பு ஊடகங்கள் தங்களது தார்மீகத்தை துறந்து சிற்றின்பத்தைத் தூண்டிவிடும் விளையாட்டை பொதுமக்கள் மத்தியில் விளையாடி அதற்கும் ஒரு கட்டணத்தை சுளையாக சம்பாதித்துக் கொண்டு தங்களுக்கும் நித்தியானந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பறைசாற்றிவிட்டார்கள்.

நித்தியானந்தம் தினம்தோறும் ஒரு அறிக்கையையும், வீடியோவில் தோன்றி தான் இன்னமும் இளமைப் பொலிவுடன்தான் இருக்கிறேன் என்பதையும் காட்டிக் கொண்டார்.. ரஞ்சிதா போன இடமும், மறைவில் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவருடைய சீடர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி தலைமறைவாகிவிட்டார்கள். நித்தம், நித்தம் நித்தி புராணங்களை பாடிய, ஓதியவர்களெல்லாம் இன்றைக்கு அதே வாயால் அவரை வைந்து.. கூடவே நித்தியிடம்விட்ட காசை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நித்தி இன்னமும் இறைவன்தான் என்று நம்புகிறவர்களில் சிலர் மட்டுமே அவரது ஆசிரமத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல்.

இந்தக் களேபரத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தமிழக மக்களை மறக்கடிக்க செய்துவிட்டது.. வழக்கம்போல எருமை மாட்டின் மீது மழை விழுந்த கதையாக இதையும் ஜீரணித்துவிட்டு அடுத்த சாமியாரின் வீடியோவுக்காக காத்திருக்கிறது தமிழகம்.

அன்றைய இரவு எட்டு மணிக்கு முன்புவரையில் மகானாக கருதப்பட்ட நித்தி அடுத்த நொடியில் இருந்து கிரிமினலாக உருவகப்படுத்தப்பட்டார். அவரை தெய்வமாக கருதியவர்கள்தான் இன்றைக்கு துப்புகிறவர்கள் வரிசையில் முதலில் இருக்கிறார்கள். ஏன் இவர்களுக்கு இது முன்பே தெரியவில்லை.. நித்தியும் ஒரு சக மனிதர்தான் என்று..

நித்தியானந்தத்தின் வயது 32. இந்த வயதிற்குள் உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தாகிவிட்டது. நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு இருக்காது என்றாலும் நிச்சயம் கோடிகளில்தான் சொத்துக்கள் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

எப்படி சேர்ந்தது இது..? யார் கொடுத்தது இது..?

தெருவோர காளியாத்தா, மாரியாத்தா கோவில்களின் உண்டியல்களில் போடப்படும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய்களா அங்கே கோடிகளாக உருவெடுத்தன.. இல்லையே..?

பல ஆயிரங்கள்.. பல லட்சங்கள்.. சில கோடிகள் என்று ஒரே செக்கில் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்களே பணக்கார பெருமக்கள்.. அவர்களெல்லாம் யார்..? அவர்களுக்கெல்லாம் கல்வியறிவு இல்லையா..? மனிதனுக்கும், கடவுளுக்கும் பாகுபாடு பார்க்கத் தெரியாத முட்டாள்களா அவர்கள்..? அப்படியெனில் இவ்வளவு பணம் அவர்களிடம் எப்படி சேர்ந்தது..? சொல்ல முடியுமா..?

இந்த கோடீஸ்வரர்கள் எதற்கு நித்தியைத் தேடி ஓடினார்கள்.. நிம்மதி வேண்டி.. எதற்கு நிம்மதி வேண்டி இவரிடம் ஓட வேண்டும்..? அதுதான் போதுமென்கிற அளவுக்கு பணம் இருக்கிறதே.. அதனை வைத்து அந்த நிம்மதியைத் தேடிக் கொள்ளலாமே.. ஏன் இவர்கள் செய்யவில்லை.. பணம்தான் அளவற்று இருக்கிறதே.. அது இருந்தால் எதையும் செய்யலாமே..?

தீராத நோய் என்கிறார்கள். பணம் இருந்தால் சுவிட்சர்லாந்துவரையிலும் சென்று வைத்தியம் பார்க்கலாமே..? எதற்காக காவி உடையிடம் வந்து மருத்துவம் பார்க்கச் சொல்கிறீர்கள்..?

குடும்பத்தில் குழப்பம் என்கிறார்கள். பணத்தை விட்டொழித்துவிட்டு குழப்பத்தை நீக்கிவிட்டு சந்தோஷத்தைக் கொண்டாடலாமே.. ஏன் செய்யவில்லை..?

இந்தப் பணக்காரர்களுக்கு அப்படி என்னதான் கவலை..? பணம்.. பணம்.. பணம்.. வேறொன்றுமில்லை..

பணத்தை பத்திரப்படுத்த நினைக்கிறார்கள். இன்னமும் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.. தங்களது உடல் நலனில் தனி கவனம் செலுத்துகிறார்கள்.. தாங்கள் எப்படியும் நூறு வருடங்களைத் தாண்டி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணக்காரர்கள்.. கோடீஸ்வரர்கள்.. அவர்கள் இப்போது அனுபவிக்கும் இன்பமயமான வாழ்க்கையை இப்படியே தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது எல்லாவற்றிற்குமான அடிப்படை காரணம் என்ன..?

பதில் ஒரே வார்த்தைதான்.. ஆசை..

வேறொன்றுமில்லை. இவர்களுடைய ஆசைக்காகத்தான் நித்தி முதற்கொண்டு அத்தனை மனிதர்களையும் தெய்வங்களாக்கி புனிதப் பசுவாக்குகிறார்கள்.

இதில் சிலர் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதினாலும், மற்றவர்களின் சொல் வார்த்தையில் நம்பிக்கை வைத்து இவர்களை சேவிக்கிறார்கள். ஆனால் தொழிலிலும் கடுமையாக உழைக்கிறார்கள். அந்த உழைப்பு அவர்களுக்கு செல்வத்தை மென்மேலும் ஈட்டித் தருகிறது. ஆனால் அந்த மனிதரை சந்தித்துவிட்டு வந்த பின்புதான் தனக்கு செல்வம் கொட்டுகிறது என்று நினைத்து தன்னுடைய கடுமையான உழைப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த மனிதரை முன்னுக்குத் தள்ளுகிறார்கள் இந்த பணக்காரர்கள்.

இதை பிரபலமான ஒருவர் செய்தால் என்னவாகும்..? அது கொசுவின் வளர்ச்சியைப் போல் பிரபலங்கள் வட்டாரத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்.. இந்த பிரபலங்கள் கொட்டாவி விடுவதைக்கூட ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்தக் கட்ட நிலையில் இருக்கும் மிடில் கிளாஸ் மாதவன்களுக்கும், மிடில் கிளாஸ் காமன்மேன்களுக்கும் அந்த மனிதனே இன்னொரு தெய்வமாகிறான்.

அடுத்த படை கிளம்புகிறது. இப்போது மிடில் கிளாஸ்காரர்கள். கையில் பணம் இல்லாமல் இருந்தாலும் கடன் வாங்கியாவது கொண்டு போய் பணத்தைக் கொட்டிவிட்டு வருகிறார்கள். இவர்களில் நூறில் ஒருவருக்கு ஒரு நல்லது நடந்தால்கூட அது மிச்சமிருக்கும் 99 பேருக்குள்ளும் சந்தேகத்தை கிளம்பி.. நாம்தான் சரியா விழுந்து கும்பிடாமல் வந்துவிட்டோமோ என்றெண்ணி மறுபடியும் கிளம்பி ஓடுகிறார்கள்.

இதுதான் இந்த ஆன்மீக உலகத்தில் அப்பாவி மக்களின் செயல்பாடுகளால் தெய்வங்களாக்கப்பட்ட மனிதர்கள் வளர்ந்த கதை..

கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் இடம் பெற்றிருக்கும் புகழ் பெற்ற பாடல் இது.

“ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற
தள்ளவொணா விருந்து வர.. சர்ப்பந் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே..”

வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது..!

ஊரில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது..

அந்த மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது.

வீட்டில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

வீட்டு வேலைக்காரி இரண்டு நாட்களுக்கு முன் இறந்துபோயிருக்கிறாள்.

மழை கொட்டியதால் வயலில் ஈரம் இருக்கின்ற இந்த நேரத்திலேயே விதையை நட்டு வைத்துவிடலாம் என்றெண்ணி விதைகளை எடுத்துக் கொண்டு வயற்காட்டை நோக்கி ஓடுகிறான் அவன்.

அந்த விதைகள் வாங்க கடன் கொடுத்தவன் எதிரில் வந்து இவனது இடுப்பு வேட்டியை பிடித்திழுத்து முதலில் தனது கடனுக்கு பதில் சொல்லிவிட்டுப் போ என்கிறான்.

அவனிடம் ஒருவாறு வாய்தா வாங்கிவிட்டு மீண்டும் ஓடுகிறான் வயலுக்கு.

பக்கத்து ஊரில் இருந்து அவனது பங்காளியின் சாவு செய்தியை ஒருவன் எதிரில் வந்து சொல்கிறான்.

செய்தியை வாங்கி ஜீரணித்துவிட்டு மீண்டும் வயற்காட்டை நோக்கி ஓடுகிறான்..

அதே நேரம் அவனது வீட்டிற்கு அவனது சம்பந்தி விட்டார் மனைவியைப் பார்க்க வருகிறார்கள்.

இங்கே பங்காளியின் மரணத்தைப் பற்றி சிந்தித்தபடியே சென்றவன் வயலில் இருந்த பாம்பை மிதித்துவிட அது அவனைக் கொத்திவிடுகிறது.

அணிந்திருந்த வேஷ்டியை கிழித்து பாம்பு விஷத்தை உடலில் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டு எப்படியும் விதையை நட்டுவிட்டுத்தான் மறுவேலை என்பதைப் போல் தனது வயற்காட்டில் கால் வைக்கிறான்.

அங்கே அவனுக்கு முன்பாகவே அரசு அதிகாரிகள் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். விவசாய வரியை இதுவரையிலும் கட்டவில்லை.. எப்ப கட்டப் போறீங்க..? பதில் சொல்லுங்க என்று அவனை மறித்து நிற்கிறார்கள்.

அதே நேரம் ஊருக்கு பொதுவான கோவிலின் கொடையை அன்றைய தேதிக்கு அவர்களது குடும்பம்தான் தரவேண்டும் என்பதால் படி அரிசி கேட்டு வாசலில் வந்து நிற்கிறார் கோவில் குருக்கள்.

இவ்வளவு கஷ்டமும் ஒரு மனுஷனுக்கு, ஒரே நாள்ல அடுத்தடுத்து வந்தா அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாயிர மாட்டான்..? ஆனால் இதுவெல்லாம் வராது என்று நினைக்காதீர்கள். வரும்.. நிச்சயமாக வரும். இதுதான் மனித வாழ்க்கை..

கஷ்டங்களெல்லாம் சொல்லி வைத்தாற்போல் சேர்ந்துதான் வரும். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்தக் கஷ்டங்கள் வருகிறது..? மனிதன் எதையோ செய்கிறான். ஏன் செய்கிறான்? அவனுக்கு அவன் செய்த செயல் தொடர்பாக ஒரு ஆசை. அந்த ஆசையினால் அந்தச் செயலை செய்யப் போய் சிக்கலில் மாட்டுகிறான். ஆக எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த ஆசைதான்.

நியாயமான ஆசைகளாக இருந்தாலும் அதற்காக நாம் கஷ்டப்படத்தான் வேண்டும். இங்கே கஷ்டம் என்பது பெற்றோர்களின் கடமை, பிள்ளைகளை வளர்ப்பது, பிள்ளைகள் பெற்றோரை காப்பது.. இதற்காக அவர்கள் சில தியாகங்களைச் செய்வது போன்றவற்றிற்குள் அடங்கும்.

ஆனால் நியாயமில்லாத ஆசைகளினால் துன்பங்களை அனுபவித்தால் யார் அதற்கு பொறுப்பாவது..?

சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.

ஒரு பையன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 50 சதவிகித மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறான். ஆனால் அவனது பக்கத்து வீட்டுப் பையன் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறான். இவனது அப்பா இவனை பொறியியல் படிக்க வைக்கிறார்.

இதேபோல் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த பையனையும் அவனது தந்தை பொறியியல் படிக்க வைக்க முயல்கிறார். அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில்தான் கிடைக்கிறது. ஆனால் இதற்கு பணம் நிறைய செலவாகும். ஆனால் வேறு வழியில்லை. தன் பையனை பக்கத்து வீட்டுப் பையனைப் போல பொறியாளனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார்.

மனைவியிடம் இருந்த நகைகளை விற்றுக் காசாக்கி பையனை தனியார் கல்லூரியில் நுழைத்துவிடுகிறார். பையனும் பெயருக்கு கல்லூரிக்குப் போகிறான். படிப்பதைப் போல் ஏதோ செய்கிறான். அப்பா அடுத்த செமஸ்டருக்கு பீஸ் கட்ட பணமில்லாமல் கடன் வாங்குகிறார். பின்பு இந்தக் கடனை அடைக்க வேறொருவரிடம் பெரிய அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறார்.

கடன் கழுத்தை நெரித்த வேளையில் தாங்க மாட்டாமல் இதனை அடைக்க வேண்டி தான் வேலை பார்க்கும் அரசு வேலையில் முறைகேடாக நடந்து கொள்ள முயல்கிறார். லஞ்சம் வாங்குகிறார். முதல் முயற்சி ஜெயிக்கிறது. தொடர்ந்து கொண்டே செல்கிறார். பையன் அரியர்ஸில் குளித்துக் கொண்டிருக்கும்போது இவர் லஞ்சத்தில் குளிக்கிறார்.

கடைசியாக ஒரு நாள் பிடிபடுகிறார். ஜெயிலுக்கு போகிறார். இப்போது இவரது மனம் சொல்கிறது நான் என் பையனுக்காகத்தான் செய்தேன் என்று.. பையன் சொல்கிறான் இது அப்பாவின் கடமைதானே என்று..

இது நியாயமில்லாத ஆசைதானே..? இந்தப் பையனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து, எடுத்திருக்கின்ற மதிப்பெண்களை வைத்து, அவனால் பொறியியல் படிப்பை படிக்க முடியுமா? முடியாதா? என்றல்லவா அந்தத் தகப்பன் சிந்தித்திருக்க வேண்டும்..?

பொறியியல் துறை இல்லையென்றால் பாலிடெக்னிக், கம்ப்யூட்டர், ஐ.டி.ஐ. என்று பல்வேறு பிரிவுகளில் திருப்பிவிடலாமே.. நிறைய வழிகள் இருக்கிறதே.. செய்யவில்லையே இந்தத் தந்தை..

அவரது இந்த அர்த்தமற்ற ஆசைக்கான விலையை அவர்தானே கொடுக்க வேண்டும். இத்தனையையும் வரிசையாக செய்துவிட்டு “எனக்கு ஏன் இப்படி சோதனையைக் கொடுக்கிறாய்..?” என்று முருகனின் கோவணத்தை இழுத்தால் என்ன நியாயம்..?

நான் இன்றைக்கும் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டிருப்பதற்கும் நானேதான் காரணம். எனக்கே நன்கு தெரிகிறது. சினிமா துறையில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் இந்நேரம் நான் எத்தனை கஷ்டப்பட்டாலும் ஏதாவது ஒரு இயக்குநரிடம் ஒட்டியிருக்க வேண்டும். நான் செய்யவில்லை.

சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதுவேன் என்று நினைத்து முனைப்போடு போராட நினைத்திருந்தால் இந்த பிளாக்கையெல்லாம் இழுத்து மூடிவிட்டு அங்கே ஓடியிருக்க வேண்டும். அதையும் நான் செய்யவில்லை.

இங்கே பாதி கால்.. அங்கே பாதி கால் என்று வைத்து அலம்பிக் கொண்டிருப்பதினால்தான் எனது நிலைமை இப்போதுவரையிலும் திரிசங்கு சொர்க்கமாக இருக்கிறது. எனக்கே நன்கு தெரிகிறது.. தவறு என் மீதுதான் என்று.

“இது தொடர்பாக ஏதாவது ஒரு முயற்சியை நான் எடுக்கிறேன் முருகா.. அதற்கு ஏதேனும் ஒருவகையில் நீ எனக்குத் துணையிரு. அது போதும்.. வழியைக் காட்டு. நான் ஓடுகிறேன். ஆளைக் காட்டு. நான் பேசுகிறேன்..” என்று முருகனுடனான ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தில்தான் எனது நம்பிக்கையான வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எனது ஆசை சினிமா என்பதால் அதற்கு என்ன விலை கொடுத்தாக வேண்டுமோ அதனை நான் கொடுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

இந்நேரம் எனக்கு சாதாரணமாக ஐயாயிரம் ரூபாயில் டிடிபி வேலை கிடைத்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் செட்டிலானால் போதும் என்று நான் நினைத்திருந்தால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் எனக்கு வந்திருக்காதே.. ஆக.. இந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாவதே நமது ஆசைகளினால்தான்..

போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை.

நானும் இப்படித்தான் காத்திருக்கிறேன். இது சுயபச்சாபதமில்லை! நிஜமாகவே.. இன்றைக்கு.. இந்த நேரத்திற்கு.. இந்த நிமிடத்தில்.. இந்த நொடியில்கூட நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். முருகன்தான் கூப்பிட மறுக்கிறான்.

மனசு நிறைய கனவுகளோடு, நிறைய எதிர்பார்ப்புகளோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை திடீரென்று அழைத்துக் கொள்கிறானே என்பதை நினைக்கின்றபோது அவனை திட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

நான் இப்போதே இறக்கத் தயார் என்று சொல்வதாலேயே உடனேயே எனக்கு இறப்பு வந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் ஒரு கூடுதல் வசதி என்னவெனில், எதன் மீதும் அதிகம் நாட்டம் வராது.. இருப்பதே போதும் என்று ஆசையை அளவோடு வைத்துக் கொள்ளலாம்.

“நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். இறப்பை பற்றிக் கவலைப்படாமல் உழைப்போம். முருகன் எப்ப கூப்பிடுறானோ அப்போ போய்க்குவோம்… எதுக்கு அதைப் பத்தி நினைக்கணும்”னு சொல்கிறவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடம் போகவே மாட்டார்கள்.

வெற்றியும், தோல்வியும், இன்பமும், துன்பமும், லாபமும், நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம். அதற்காக துவண்டு போகக் கூடாது. அதைத் தூக்கிப் போட்டுட்டு மேலும், மேலும் உழைக்க வேண்டும்.. எல்லாமே கடந்து போகும் என்கிற மனநிலை நமக்குக் கிடைத்தால் நிச்சயம் இந்த மாதிரியான மனித போலிகளான சாமியார்களின் தயவு நமக்குத் தேவையிருக்காது.

நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..