Archive for the ‘நான் கடவுள்’ Category

ரஜினியை அவமானப்படுத்தியது யார்? கேபிள் சங்கரா..? ரசிகர்களா..?

பிப்ரவரி 17, 2009

18-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தியேட்டர், தியேட்டராக படையெடுத்துச் சென்று புதிய, புதிய திரைப்படங்களைப் பார்த்தவுடன் சுடச்சுட விமர்சனம் எழுதி மிகக் குறுகியக் காலத்தில் வலைப்பதிவுகளில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துவிட்ட அன்புச் சகோதரர், வருங்கால திரைப்பட இயக்குநர் திருவாளர் கேபிள் சங்கர் அவர்களுக்கு சமீபத்தில் இடம் பெயர்ந்த குரு பெயர்ச்சி அமோகமாக தனது வேலையைக் காட்டியிருக்கிறது.

ஏதோ ஒரு இணைய தளமாம்.. யாரோ சில ரசிகர்களாம்.. எதையோ சொன்னார்களாம் என்ற அளவில் நமத்துப் போன உப்புமாவாக இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி அதில் தானே சொந்தமாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி மிக அழகாக ஒரு பதிவைப் போட்டு தனக்குத் தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார்.

பிரச்சினை என்ன..?

“ரஜினி ‘நான் கடவுள்’ படத்தைப் பார்த்துவிட்டு பாலாவையும், ஆர்யாவையும் பாராட்டியுள்ளார். அவர் பாலாவுக்கு எழுதிய கடிதத்தை வைத்து ‘நான் கடவுள்’ படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள். இதன் மூலம் இன்னும் அதிகமான வசூலை அந்தத் திரைப்படம் அள்ளுகிறது..”

இதுதான் அந்த இணையச் செய்தி.

“இன்று பட்டப்பகலில் பட்டுக்கோட்டை பஜாரில் ஒரு படுகொலை நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நகரில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது..” என்று தொலைக்காட்சிகளில் வாசிக்கப்படும் செய்திக்கும், மேற்குறிப்பிட்ட இணையச் செய்திக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.

வழக்கமான செய்திகளைப் போலத்தான் இதுவும். ஆனால் இந்தச் செய்தியைப் படித்ததும் திருவாளர் கேபிள் அவர்களுக்கு விளக்கெண்ணெய் குடித்தது போலாகிவிட்டதாம். ஆற, அமர, தீர யோசிக்காமல், விளங்கிக் கொள்ளாமல், யாரிடமும் விசாரிக்கவும் இல்லாமல் அவசரத்தனமாக ஒரு பதிவை இட்டுள்ளார்.

“பாலா என்கிற பெரிய இயக்குநரை மட்டம் தட்டும் முயற்சி இது. அவருடைய பெருமையைச் சீர்குலைக்கும் செய்தி இது..” என்று சீறிப் பாய்கிறார் கேபிள்..

முதலில் ஒரு செய்தியை செய்தியாய் பார்க்க வேண்டும். இது அரசியல் செய்தி அல்ல; அதன் பின்னணியைத் தோண்டித் துருவுவதற்கு. இணையத்தில் பலரும் பந்திக்கு முந்தி என்றுதான் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். காரணம் கிடைக்கப் போகும் கவன ஈர்ப்பு, அதன் மூலம் வரவிருக்கும் பார்வையாளர்கள், கடைசியில் வரவிருக்கும் விளம்பரப் பணம். இதுதான் மூல காரணம். இதற்காக அவர்கள் எழுதியது, அல்லது எழுதுகின்ற அனைத்துமே உண்மை என்றாகிவிடாது.

மிஸஸ் ஒபாமா ஒரு பொது நிகழ்ச்சியில் தனது அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்ததைப் பார்த்து ஒரு இணைய தளம் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தியை எழுதியது. அவர் வாந்தியெடுத்ததை பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல அனைத்து இந்திய இணையத் தளங்களும் இதனை மறு வாந்தியெடுத்தன. யாராவது இது உண்மையாக இருக்குமா? அல்லது பொய்யான செய்தியா..? என்று யோசித்திருப்பார்களா..? அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு செய்தி. அவ்வளவுதான். அது உண்மையாகவும் இருக்கலாம்.. அல்லது பொய்யாகவும் இருக்கலாம். உண்மை இல்லை என்று செய்தி வந்தால் மறுபடியும் ஒரு செய்தியைப் போட்டு அது பொய் என்று சொல்லிவிடலாம். மேட்டர் குளோஸ். இதுதான் பத்திரிகா தர்மம்.

மறுபடியும் இங்கே வருவோம். இந்த இணையத் தளத்தின் செய்தியிலும், ரஜினி ரசிகர்கள் சிலர் தெரிவி்த்ததாக வெளிவந்த செய்தியினாலும் பாலாவின் பெருமை எங்கே குறைந்துவிடப் போகிறது..? இதுவொன்றும் ரஜினி சொல்லவில்லையே.. “தன்னால்தான்.. தன்னுடைய கடிதத்தால்தான் ‘நான் கடவுள்’ வசூல் அள்ளுகிறது” என்று.. பின்பு எப்படி அவர் இதற்கு முழுப் பொறுப்பாக முடியும்..?

ரசிகன் ஆயிரம் சொல்லுவான்.. அப்படிச் சொல்பவன்தான் ரசிகன். அவன் சொல்வதையெல்லாம் அவன் தலைவன் சொன்னதாகவே எடுத்துக் கொள்வது முட்டாள்தனம். அதிலும் நமது கேபிள் ஸார் செய்திருப்பது மகா முட்டாள்தனம்.

முதலில் அவருடைய பதிவின் நோக்கமே.. ரஜினி எழுதிய கடிதத்தால் ‘நான் கடவுள்’ படத்தின் வசூல் கூடவில்லை. இப்படிச் சொல்வது இயக்குநர் பாலாவுக்கு அசிங்கம் என்பதைத்தான்.. இதை அவர் ரஜினி ரசிகர்களை மையமாக வைத்து, அந்த இணையதளத்தை மட்டுமே குற்றம்சாட்டி சொல்லியிருக்க வேண்டும்.

நான் கடைசி வரையிலும் 7, 8 முறை படித்துவிட்டேன். அந்த இணையதளத்தின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. எந்த ஊர் ரசிகர்கள் தெரிவித்தார்கள் என்பதையும் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள் என்று புகார் சொல்லியுள்ளார்.

//சமீபத்தில் ரஜினி பாலாவின் ‘நான் கடவுள்’ படம் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறார். அதை பார்த்து அவரது ஆதரவாளர்கள், ரஜினியின் பாராட்டுக்கு பிறகு பாலாவின் படம் கோடி, கோடியாய் வசூலிக்கிறது என்று இணையதளம் மூலம் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.//

இதில் என்ன கீழ்த்தரம் இருக்கிறது..?

ரஜினி ரசிகர்கள் வேறு என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறார் நம்ம கேபிளு..?

ரசிகர்கள் என்பவர்களே தலைவனை ரசிப்பவர்கள்தான். அவர்களுக்கு இது ஒரு செய்தி. அந்தச் செய்திக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது சகஜம்தானே.. இதில் என்ன தவறு இருக்க முடியும்..?

ரஜினி கருத்து சொல்லியிருக்கிறார் என்றால் அதனைப் படிப்பவர்களில் 5-ல் ஒரு பொதுஜனம் படம் பார்க்க வருவார்.. அல்லது அவருடைய ரசிகர்களில் 3-ல் ஒருவர் நிச்சயம் படம் பார்க்க வருவார் என்பது உறுதி. அதுதான் ரஜினியின் தாக்கம். இல்லாவிடில் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை. அவர் சூப்பர் ஸ்டாராக இல்லையென்றால் கேபிளுக்கு இந்தப் பதிவே தேவையிருந்திருக்காது.

படத்தைப் பார்த்துவிட்டு வெறுமனே போய்விட ரஜினி என்ன வெறும் ரசிகரா..? திரையுலகின் முதன்மையானவர். அவருக்குப் பிடித்திருக்கிறது. “நல்லா இருக்கு.. பாராட்டுக்கள்..” என்று சொல்லி கடிதம் கொடுத்திருக்கிறார். ஏன் கடிதம் கொடுத்தார்?

படம் பார்த்துவிட்டு அரங்கில் இருந்து வெளியில் வந்தவுடன் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் நடித்தவர்களைப் போலவோ, ‘தசவாதாரம்’ படத்தின் கதாநாயகன் கமலைப் போலவோ அந்த இடத்தில் படத்தின் இயக்குநர் பாலோவோ, அகோரி ஆர்யாவோ இல்லை. தயாரிப்பாளர் மட்டுமே இருந்திருக்கிறார். அவரிடம் “படம் நல்லா இருக்கு. டைரக்டர்கிட்ட பெஸ்ட்டுன்னு சொன்னேன்னு சொல்லுங்க..” என்றவர் வீட்டுக்குப் போனவுடன் பாலாவுக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை எழுதி தனது பி.ஆர்.ஓ. நிகில் முருகனிடம் கொடுத்தனுப்பியுள்ளார். இது அவர் படத்தில் வெகுவாக ஈர்க்கப்பட்டதால் செய்திருக்கிறார். இதில் இருப்பது அடிப்படை நாகரிகம்.. திரைப்படத் துறையின் வளர்ச்சியே இந்த ஒரு சுழற்சியான செயலில்தான் அடங்கியிருக்கிறது.

“அந்தக் கடிதத்தை வெளியிடுங்கள்..” என்று ரஜினியா சொன்னார்? தயாரிப்பாளர்தானே இந்த வேலையைச் செய்திருக்கிறார்.

பாலாவும், ஆர்யாவும் ரஜினியை சந்திக்கப் போகும்போது புகைப்படக்காரரை அழைத்து வந்து நிறுத்தியது ரஜினிதான் என்று கேபிளார் சொல்வார் போலிருக்கிறது. பாவம் அவருக்கு வேற வேலையே இல்ல பாருங்க..!

தயாரிப்பாளரே தனது படத்தின் விளம்பரத்திற்கு ரஜினியின் பாராட்டுக் கடிதம் தேவை என்று நினைத்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும்போது, ரஜினியையோ, ரஜினி ரசிகர்களையோ குற்றம் சொல்லி எழுதுவும், பேசுவும் மகா முட்டாள்தனம்..

உண்மையாகவே கேபிளார் பாலாவின் தீவிர ரசிகராக இருந்தால், இந்நேரம் பாலாவுக்கு ஒரு கடிதம் எழுதியோ அல்லது போன் செய்தோ இதனைச் சொல்லி அந்த விளம்பரத்தை தடை செய்யச் சொல்லலாம். சொல்லிவிட்டால்தான் பாலா செய்வாரா..? ரஜினியைச் சந்திக்க ஆர்வத்துடன் போயிருப்பவரே பாலாதான்.

ரஜினியை படம் பார்க்க வைத்தது தயாரிப்பாளர். அழைப்பு வரும் என்று சொல்லிவைத்து, பின்பு காக்க வைத்து, கடைசியாக சந்திப்புக்கு நேரம் வாங்கி அனுப்பி வைத்தது தயாரிப்பாளர். ரஜினி விளம்பரம் எனக்குத் தேவையில்லை என்று பாலா நினைத்திருந்தால் எதற்காக போனாராம்? புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாராம்..? பதில் சொல்வாரா கேபிளார்?

இந்த விளம்பரமும் பாலாவின் பார்வைக்குப் போய் அந்தக் கடிதத்தை எந்த positition-ல் விளம்பரத்தில் வைக்க வேண்டும் என்பதையும் அவரேதான் டிஸைன் செய்து கிராபிக்ஸ்க்கு அனுப்பியிருக்கிறார். கேபிளாருக்கு சந்தேகம் இருந்தால் பாலாவிடமே கேட்டுக் கொள்ளலாம்.

இப்போது கேவலம் பாலாவுக்கா..? அல்லது ரஜினிக்கா..? அல்லது பரபரப்புக்கு பதிவெழுதிய கேபிளாருக்கா..?

//இதைவிட கீழ்தரமாய் இந்திய இயக்குனர்களில் சிறந்த ஒருவரான பாலாவை கேவலபடுத்த முடியாது.//

ஏதோ பாலாவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல் கேபிளார் மேற்கண்ட வரிகளில் சொல்லியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த வரிகளே தவறு என்கின்றபோது கேபிளார் எழுதியிருக்கும் அந்தப் பதிவே அர்த்தமற்றது என்றாகிறது.

அவருடைய விளம்பரத்தினால் படத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணி்ககை கூடும். அதனால் வசூலும் கூடு்ம் என்பதை எதிர்பார்த்துதான் விளம்பரமே வெளியிட்டுள்ளார்கள். அந்த வசூல் ஆயிரத்தில் இருந்தால் என்ன..? லட்சத்தில் இருந்தால் என்ன? கோடியில் இருந்தால் என்ன? அர்த்தம் ஒன்றுதானே..?

ஏதோ இயக்குனர் பாலாவுக்குத் தான்தான் அத்தாரிட்டி என்பதைப் போல் கேபிளார் எழுதியிருப்பது நகைப்புக்குரியது.

இதைவிட நகைச்சுவை திருவாளர் கேபிளார் இந்தப் பிரச்சினையை அணுகியிருக்கும் விதம்.

கடிதம் கொடுத்ததையும், அதனால் மட்டுமே ‘நான் கடவுள்’ திரைப்படம் ஓடாது என்பதை மட்டுமே சொல்ல வேண்டியவர், ரஜினியின் கடந்த கால கலை, அரசியல் வாழ்க்கையையே தேவையில்லாமல் இழுத்துள்ளார். இது முட்டாள்தனமானது.

ரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் நடந்த பிரச்சினை இப்போது எதற்கு? அவருடைய அரசியல் வாய்ஸ்களை வைத்துத்தானா தயாரிப்பாளர் அவரை படம் பார்க்க அழைத்தார்..? ரஜினியின் அரசியல் செல்வாக்கினால்தான் பாலா அவரை பார்க்க விழுந்தடித்து ஓடினாரா..? என்னே கண்டுபிடிப்பு..?

கேபிளு.. எங்கிட்டோ உமக்கு சுளுக்கிருச்சுன்னு நினைக்குறேன்..

சரி.. இவ்ளோ தூரம் நீர் எழுதிட்டதால அது பத்தின எனது கருத்தையும் சொல்லிக்குறேன்..

ரஜினி ஜெயலலிதா பத்தி கமெண்ட் அடிச்சப்போ தமிழ்நாடு இருந்த நிலைமை என்ன..?

எதிரணி அரசியல்வாதிகளே ஜெயலலிதாவை எதிர்த்து கோஷம் போடுவதற்கு தயங்கிக் கொண்டிருந்த காலம்.. எங்காவது அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் மட்டுமே முழங்கிக் கொண்டிருந்தார்கள்.

எந்த அரசியல்வாதியைப் பிடித்தாலும் போலீஸ் ஸ்டேஷனில் இரவு முழுவதும் ஜட்டியோடு நிற்க வைத்து அவமானப்படுத்தி மகிழ்ந்த பாஸிஸ ஆட்சியாக இருந்த காலம் அது.. மத்தியில் நரசிம்மராவ் என்றொரு வாய் பேச முடிந்த பொம்மை ஆட்சியில் இருக்கிறேன் என்று சொல்லி கையையும், காலையும் ஆட்டிக் கொண்டிருந்த காலம்..

தமிழகத்தில் உண்மையான முதலமைச்சர் யார் என்பதே தெரியாத அளவுக்கு ஒரு கொடூரமான காலகட்டம்.. அரசியல்வாதிகளைத் தவிர வேறு யார் வாய்ஸ் கொடுப்பது..? யாராவது முன் வந்திருக்க வேண்டுமே..?

ஹிந்து ராமும், நடிகை ரேவதியும், எழுத்தாளர் சிவசங்கரியும் இணைந்து ஹார்மோனி என்றொரு அமைப்பை உருவாக்கினார்கள்.. கூட்டம் நடத்தினார்கள். கமலஹாசன் வந்திருந்தார். திடீரென்று அ.தி.மு.க.வின் மகளிரணியைச் சேர்ந்த சில பெண்கள் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு திடீர் போராட்டம் நடத்தினார்கள். “எங்க அம்மாவைப் பத்தி தப்பா பேசாதே..” என்று கோஷம் போட்டார்கள். “புரட்சித் தலைவி வாழ்க..” என்றார்கள். கமல்ஹாசன் அமைதியாக நின்றார். அரங்கத்தின் உள்ளேயிருந்த போலீஸார் இதைப் பார்த்த உடனேயே சப்தமில்லாமல் வெளியேறினார்கள்.

யார் சொல்லியும் கேட்கவில்லை. ஹிந்து ராமும், கமல்ஹாசனும் பலவாறு அந்தப் பெண்களிடம் பேசி, போராட்டம் நடத்தித்தான் ஒரு வழியாக மேடையிலிருந்து கீழே இறக்கினார்கள். நினைவிருக்கிறதா..? அப்போது நான் நினைத்தது கமல்ஹாசன்தான் முதலில் இந்த அட்டூழிய ஆட்சிக்கு குரல் கொடுக்கப் போகிறார் என்று.. ஆனால் வாயே திறக்கவில்லை அவர்.. கேட்டால், “அரசியல் தெரியாது” என்பார் அவர். (நான் தீவிர கமல் ரசிகன்.. ரஜினி ரசிகன் அல்ல.. சந்தேகம் வேண்டாம்.) அப்போதும் அதனைத்தான் சொன்னார். ‘தேவி’ பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, “இவங்களுக்கு அவங்க பரவாயில்லை.. அவங்களுக்கு இவங்க பரவாயில்லை.. என்றுதான் இப்போதைய அரசியல் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது..” என்றார் கமல். இப்படி மொட்டையாகச் சொல்லிவிட்டால் போதுமா..?

ஆனால் முதல் குரலாக, கலகக் குரலாக ஒலித்தது ரஜினியின் குரல்தான். இப்போதுதான்.. இந்த ஒரே காரணத்திற்காகத்தான் எனக்கு ரஜினியைப் பிடித்துப் போனது.(முன்பு பிடிக்காமல் இருந்ததற்கு ஒரே காரணம், அவருடைய சிகரெட் பிடிக்கும் பழக்கம்.) அவர் குரல் கொடுத்த பின்புதான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு உத்வேகம் பிறந்து அம்மாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கினார்கள். இது அரசியல் வரலாற்று உண்மை.

அந்த வகையில் தமிழகம் என்றென்றைக்கும் ரஜினிக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அந்தச் சூழலில் அவர் மட்டும் ஒற்றுமையை கிளப்பியிருக்காவிட்டால் தமிழகம் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரஜினியின் சினிமா சாதனையைவிடவும், மிகப் பெரிய சாதனை இதுதான்..

“மன்னன்” திரைப்படத்தில் விஜயசாந்தியை திருத்துவதைப் போல் ஜெயலலிதாவுக்கு ஒரு பாடத்தை உணர்த்தி, அம்மையாருக்கு இன்றளவுக்காச்சும் மக்கள் மீது கொஞ்சுண்டு பயம் வந்தது இதனால்தான்.. ரஜினியினால்தான்.. இதனை உரக்கச் சொல்லுவேன்..

அப்போதுகூட அவர் நாட்டு நலனுக்காகத்தான் அதனைச் சொன்னாரே தவிர, ஏதோ தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.. தனது ரசிகர் மன்றத்தினரை வைத்து தனக்கு நாலு சீட் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தல்ல.. இது நிச்சயமாக தன்னலமில்லாத நற்செயல்.

இதுதான் அவருடைய குணம். அந்த நேரத்தில் என்ன நினைப்பாரோ, என்ன நினைத்தாரோ அதைச் சொல்லிவிடுவது. அது பலருக்கும் குழப்பமாகவும், குழப்பவாதியாகவும் காட்சியளிக்கிறது என்றால் தயவு செய்து நாம் கண்ணாடியில் நமது முகத்தை ஒரு முறை பார்த்துக் கொள்வது நலம். சந்தர்ப்பச் சூழலுக்காக நமது கொள்கைகளை, நமது எதிர்பார்ப்புகளை எத்தனை முறை நாம் மாற்றிக் கொண்டதில்லை..? யோசிக்கணும்ப்பூ..!

முதல் நாள் “நாயகன்” திரைப்படத்தைப் பார்த்து அசந்துபோய் கமலிடம் உருகி உருகி பேசிவிட்டு, மறுநாள் ஏவிஎம் ப்ரிவியூ தியேட்டரில் “மனிதன்” படத்தை பார்த்துவிட்டு “ ”நேத்து கமல் ‘நாயகன்’ படம் போட்டுக் காட்டினாரு.. பென்ட்டாஸ்டிக்.. பிச்சிருக்காரு கமலு.. ‘மனிதனும்’ நல்லாத்தான் இருக்கு.. நாமளும் நல்லாத்தான் பண்ணிருக்கோம்.. வெரிகுட் ஸார்..” என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் சொல்லியிருக்கும் ரஜினியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது. இதுதான் ரஜினி.

‘நாயகன்’ எங்கே..? ‘மனிதன்’ எங்கே..? ஆனால் ரஜினி ஏன் இரண்டையும் பேலன்ஸ் செய்கிறார்..? அவர் கலையுலகில் இருக்கிறார். இரண்டு படங்களுமே ஓட வேண்டும். அது அவரது தொழில். அந்தவிடயத்தில் அதனை அவர் கைவிட முடியாது.. அவருக்கென்று பொறுப்புக்களும், கடமைகளும் இருக்கின்றன. இதை எப்போதுமே ரஜினி மிகச் சரியாகவே கணித்து வருகிறார். அதை தவறு என்று எவருமே சொல்ல முடியாது..

“ஒரு காலத்துல துணைக்கு பொண்ணு இல்லாத ராத்திரியே கிடையாது.. அப்படியொரு மஜா வாழ்க்கை..” என்று வெளிப்படையாகத் தன்னைப் பற்றிச் சொ்ன்னவரும் அவர்தான்.. இது ஏதோ இமயமலைக்குப் போய் விரதமிருந்து, சாமியாரிடமிருந்து தீட்சை பெற்ற பின்பு வந்து சொன்ன வார்த்தைகள் அல்ல.. அவர் உச்சத்தில் இருந்தபோது 1980களில் ‘பொம்மை’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தது..

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மனிதரை எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம்.. அரசு சார்பான பியூன் வேலைக்கு எனது கட்சிக்காரனுக்கு சிபாரிசு செய்திருக்கிறேன் என்று எந்த அரசியல்வியாதியாவது இன்றைக்கு ஒத்துக் கொள்வானா..? ஆனால் இவர் எவ்வளவு பெரிய வார்த்தைகளை எவ்வளவு அனாயசமாக ஒத்துக் கொண்டிருக்கிறார்? யோசிங்க ஸார்.. யோசிங்க..

மூப்பனார் அப்போதும் ரஜினியை முன்னிறுத்தி தனி அணி அமைத்து போட்டியிடலாம் என்று பீட்டர் அல்போன்ஸ், சோ மூலமாகச் சொல்லியும் தேர்தலில் போட்டியிடவும், கட்சி அமைக்கவும் ரஜினி மறுத்துவிட்டதும் ஒரு உண்மை. அப்போதுதான் மூப்பனார் ரஜினிக்கு அணியில் தலைமைப் பொறுப்பு கொடுக்கவும் முன் வந்தார். அதையும் மறுத்தார். அவருடைய ரசிகர்களுக்கு சீட் கொடுக்க முன் வந்ததையும் ரஜினி திட்டவட்டமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவருடைய ஒரே லட்சியம் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டும் என்பதுதானே ஒழிய, தான் எப்படியாவது அரசியலில் நுழைய வேண்டும்.. ஆட்சியில் அமர வேண்டும் என்பதல்ல. அவர் நினைத்திருந்தால் அப்போதே அவர் செய்து பார்த்திருக்கலாம்.. ஜெயித்திருக்கலாம்.. தான் கலையுலகில் மட்டுமே முதல்வனாக இருக்க விரும்பினார் அவர். இன்றைக்கும் அதைத்தான் அவர் விரும்புகிறார்.

அடுத்து வந்த தேர்தல்களிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கைவிட்டு எதிரணிக்கு ஆதரவு தந்ததும் தனது கொள்கையினால்தான்.. அப்போதெல்லாம் ஆதரவை பைசா செல்வில்லாமல் வாங்கிக் கொண்டவர்களுக்கு இனித்தது. அடுத்து அமைந்த ஆட்சிக் காலத்தில்கூட தனக்கென்று எதையும் வாங்கிக் கொள்ளாமல் கை நிறைய புத்தகங்களை மட்டுமே கோபாலபுரத்தில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தார். (எடுத்துக் கையில் திணித்தால் அவர் பாவம் என்ன செய்வார்..?)

நெய்வேலி போராட்ட நேரத்தில் பாரதிராஜா-விஜயகாந்த் ஈகோ யுத்தத்தில் பலிகடா ஆக்கப்பட்டார் ரஜினி. “முடிந்தால் சென்னையில் வையுங்கள்.. இல்லையென்றாலும் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் வந்து போராடுகிறேன்..” என்று முதல் நாள் மாலை நடிகர் சங்கத்திற்கு நேரில் வந்து சொல்லிவிட்டு வந்த பின்பும், ரஜினியிடம் சொல்லாமலேயே நெய்வேலியில் போராட்டம் என்பதை அறிவித்துவிட்டு, வருபவர்கள் வரலாம் என்று அறிவிப்பு விட்டதும், ரஜினிக்கு இதில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்பதைப் போல் செய்தியை பரப்பியதனாலும்தான் ரஜினிக்கு கோபம் வந்தது. அதுதான் தனிப் போராட்டமாக சென்னையில் வெடித்தது.

அனைவருக்கும் தன்மானம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும். உரசிப் பார்த்தால் அந்த நேரத்தில் யாராக இருந்தாலும் அதற்கு பலியாகத்தானே செய்வார்கள்.

“யாரும் சொல்லவே வேண்டாம்.. நானே படித்துக் கொள்கிறேன்..” என்று வேண்டாத விருந்தாளியைப் போல தளத்தின் உரிமையாளர் சொல்லியும் கேளாமல் ஜெயமோகனின் பதிவில் ‘நான் கடவுள்’ விமர்சனங்களை சிலர் தொகுத்து வைத்தபோது, அதில் கேபிளாராகிய உங்களுடைய பதிவு இல்லையென்றவுடன் ‘தன்மானச் சிங்கமாக’ கிளர்ந்தெழுந்து “இதோ என்னுடைய பதிவு” என்று சொல்லி அங்கே ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வந்தீர்களே.. கேபிளாரே..

உங்களுக்கே இப்படியென்றால் பிரதமரோ, ஜனாதிபதியோ எவர் வந்தாலும், எங்கே வந்தாலும் உடன் சென்றால் முதல் மரியாதையைப் பெறவிருக்கும் ஒரு மனிதருக்கு எவ்வளவு தன்மானம் இருக்கும்..? சிந்தித்துப் பாருங்கள்.. இதில் என்ன தப்பு இருக்கு..? அவர் மனதுக்குப் பட்டதைச் சொல்கிறார்.. செய்கிறார்..

தான் தலைமகனாக இருக்கின்ற கலையுலகத்திலே நடக்கின்ற விழா அது.. கலைஞருக்கு நூறு மேடைகள் கண்டாகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு விரல் விட்டு எண்ணக் கூடியதுதான்.. பிடிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்ய? மக்கள் முதலமைச்சராகத் தேர்வு செய்திருக்கிறார்களே.. தலை வணங்கித்தான் ஆக வேண்டும்.. “தைரியலட்சுமி” என்று பாராட்டிவிட்டு கூடவே “நான் அப்படித்தான். என் மனசுல பட்டதை சொல்லிருவேன்..” என்று சொன்னதில் என்ன தவறு..? மக்களே மன்னித்திருக்கிறார்கள் என்றால் நாமும் மன்னிப்போம் என்பது அவரது கருத்து..

‘பாபா’ பட ரிலீஸீன் போது பா.ம.கட்சிக்காரர்கள் படச்சுருள் பெட்டியையே தூக்கிக் கொண்டு போன போது, கால நேரத்தால் மாட்டிக் கொண்டு முழித்தார். பெட்டியைக் கைப்பற்ற வேண்டியவர்கள் காவல்துறையினர். அவர்களுக்கு தலைவியோ அவர் எதிர்த்த அம்மையார்.. யார் அப்போது அவரது உதவிக்கு வந்தார்கள்? அத்தனைக் கட்சிக்காரர்களும் சமயம் பார்த்து கைவிட்டார்களே.. நடிகர் சங்கமே இறங்கி வரவில்லையே.. அவருக்கு எப்படி இருந்திருக்கும்..?

அடையாறு இல்லத்தின் மாடியிலிருந்து விறுவிறுவென்று இறங்கி வந்து “இங்க இருந்தா கர்நாடகாக்காரன்கிறாங்க.. கர்நாடகாவுக்கு போனா நான் மகாராஷ்டிரன். அங்க போங்கிறாங்க.. நான் எங்கதான் போறது..?” என்று ரஜினி தொலைக்காட்சியில் பேசிய அந்த வினாடியில் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு தொண்டையில் விசுக்கென்ற சப்தம்தான் எழுந்தது. என்னவொரு வார்த்தை அது..?

எத்தனை கோடி ரூபாயை தமிழகத்தில் புரட்டிக் கொடுத்திருப்பார்..? எத்தனை கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வரியாகக் கிடைக்கச் செய்திருப்பார்..? எத்தனை லட்சம் முறை சினிமா பற்றி நம்மை நினைக்க வைத்திருப்பார்..? எத்தனை பேரை லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக ஆக்கியிருப்பார்..? எத்தனை தொழிலாளர்களை தனது படத்தின் மூலம் வாழ வைத்திருப்பார்..? எத்தனை லட்சம் ரசிகர்களுக்கு திரையரங்கில் ஒரு மூன்று மணி நேரங்கள் மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்திருப்பார்..? கேபிள் சங்கர் போன்ற எத்தனை பேருக்கு சினிமா மேல் ஆர்வத்தை உண்டு செய்து அவர்களுக்கு ஒரு பெருமைமிக்க வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்..?

யோசிச்சுப் பாரு கேபிளு.. எழுதறதும், திட்டறதும் ரொம்ப, ரொம்ப சுலபம்.. ஆனா நாம எப்படி வந்தோம்ன்றதையும் கொஞ்சம் மனசுல வைச்சுக்கணும்..

அவர் இன்றுவரையிலும் சொல்லி வருகிறார் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லையென்று.. ஆனாலும் அவர் பேசிய பன்ச் டயலாக்குகள் ‘குசேலனில்’ சொல்லியதுபோல அவருடைய திரைப்படங்கள் மீதான ஆர்வத்திற்கு மிகவும் பயன்பட்டன. அதனை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு பத்திரிகைகள்தான் அதனை அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டி தங்களுடைய விற்பனையை அதிகரித்துக் கொண்டன.

ரசிகர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.. இருக்கத்தான் செய்யும். ஆனால் தலைவர் பிடிக்கவில்லை என்கிறாரே.. அவருக்குள் இப்போதும் ஒரு தயக்கம் இருக்கிறது. இவ்வளவு நாள் நாம் பார்த்து, பழகி, பேசியிருக்கும் ஒருவரை சட்டென எதிர்த்துப் பேச வேண்டுமா என்று அவர் யோசிக்கலாம்.. அல்லது இப்போது அரசியலில் நுழைந்தாலும் தன்னால் ஜெயிக்க முடியுமா? தோல்வியடைந்தால் அது தனக்கு எந்தவிதத்தில் பாதிப்பைத் தரும் என்று அவர் நிச்சயம் யோசித்திருப்பார்.

சாதாரணமாக சட்டை வாங்கப் போனால்கூட பிராண்ட் நேம் என்ன..? உழைக்குமா? எத்தனை காலம் என்று நாம் யோசிப்பதில்லையா..? அது போலத்தான்.. அதே சமயம் தனது கலையுலக வாழ்க்கைக்கு அந்த ரசிகர்களும் தேவை.. அவர்களையும் பயன்படுத்தியாக வேண்டும்.. சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அந்த பன்ச் டயலாக்குகள் அவருடைய ரசிகர்களைவிட பொதுவானவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இது ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கான வழி. அதைத்தான் அவர் செய்கிறார் என்று நினைக்கிறேன்.

‘குசேலன்’ படம் ஓடும் என்று அவர் சொன்னது அவருடைய நம்பிக்கை. கல்யாணப் பத்திரிகை கொடுக்கும்போது “என் கல்யாணம் நிச்சயமா நடக்கும்” என்றுதான் மாப்பிள்ளைக்காரன் சொல்லுவான்.. “சந்தேகம்..” என்றா அவன் சொல்லுவான்.. அந்த படம் தோல்வி என்றால் அதற்கு அவரா காரணம்..?

கேபிளு.. எனக்கு கோபம், கோபமா வருது.. நல்லாத் தெரிஞ்ச நீரே இப்படி எழுதினா எப்படி?

ஒரு படம் ஜெயிச்சவுடனே ஹீரோவாலதான் ஜெயிக்குதுன்னு சொல்றது.. தோத்துட்டா ஐயோ போச்சேன்றது.. உலகத்துல எந்த சினிமா ஹீரோ தொடர்ந்து ஹிட்டையே கொடுத்திருக்கான்.. கூட்டிக் கழிச்சுப் பார்த்து சொல்லுங்க.. அது அப்படித்தான் நடக்கும்.. ஒரு தோல்வி.. சில வெற்றிகள்.. சில தோல்விகள். ஒரு வெற்றி.. இது உலக நியதி.. தெய்வ நம்பிக்கை இருக்குல்ல.. பிறகென்ன இப்படியொரு முட்டாள்தனமான கேள்வி..?

கர்நாடகாவில் குசேலன் பட ரிலீஸிற்காக அறிக்கை விடும்படி அவரைக் கேட்டுக் கொண்டது தயாரிப்பாளர் தரப்புதான். அவர் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது உங்களது வாதமென்றால் தாங்கள் சினிமாத் துறையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்று எனது தாழ்மையான கருத்து. உண்மையாகவே அவர் உதைக்க வேண்டும் என்று சொன்னதுகூட அன்றைக்குப் பிரச்சினை செய்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைத்தான்.. அதைத்தான் மறுபடியும் குறிப்பிட்டுச் சொன்னார்.. உடனேயே நமது பத்திரிகைகளுக்கு பரபரப்புக்கு செய்தி பற்றாக்குறை போலும். பொதுமக்கள் தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அந்த அறிக்கையை விட்டார். இதனை மன்னிப்பு என்கிற ரீதியில் சில பத்திரிகையாளர்கள்தான் கொண்டு சென்றார்கள். அதனால்தான் மறுபடியும் ‘குசேலன்’ நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தினார். இதில் உங்களுக்கு என்ன குழப்பம்..?

‘குசேலன்’ விநியாக விஷயம்.. எனக்கு படு பயங்கர கோபத்தைக் கிளறிருச்சு கேபிளு.. ஏதோ மூணாம் மனுஷன் எழுதினா பரவாயில்லை.. ரஜினியா இத்தனை கோடிக்கு வாங்கிக்குங்கன்னு சொன்னாரு.. பிளாங்க் செக்கை எழுதி வைச்சிட்டு வீடடுக்கும், ஆபீஸுக்குமா அலையச் சொன்னது ரஜினியா..? விற்பனை என்று சொல்லி அக்ரிமெண்ட் கையெழுத்தான பின்னாடிதான அவர் காதுல ஓதுனாங்க..

அப்பவே அவர் சொன்னாரே.. “இவ்ளோ வேண்டாம்.. திருப்பிக் கொடுத்திருங்க”ன்னு.. கொடுக்காதது யாரு..? இதுக்கெப்படி ரஜினி பொறுப்பாக முடியும்.. ‘பேராசை பெருநஷ்டம்’ங்கிறதுக்கு முழு முதற் உதாரணம் இத்திரைப்படத்தின் வியாபாரம்தான்.. படட்டும்.. பட்டாத்தானே புத்தி தெரியும்.. ஆனாலும் திருப்பிக் கொடுக்கணும்னு முறையோ, விதியோ இல்லாமலேயே ஒரு பங்குத் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறாரே.. வேறென்ன செய்யணும்..? இப்படி திருப்பிக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்ட பின்பும், அதைக் கேளாமல்தானே ரஜினி திருப்பிக் கொடுத்திருக்கிறார். இப்போது மறைமுகமான கெட்டவர்கள் யாராம்..? ரஜினியா? தயாரிப்பாளர்கள் சங்கமா..?

பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை என்பதைப் போல் ஒரு திரைப்படத்தின் வெற்றியும், தோல்வியும் ஹீரோக்களின் கையில் இல்லை என்பது ரஜினிக்கே நன்கு தெரியும். அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னார். கேட்கலை.. கடைசியா அனுபவிச்சங்க பழியை அவர் மேலேயே தூக்கிப் போட்டாங்க.. வழக்கம்போல ‘எத்தனையோ தாங்கியாச்சு.. இதையும் தாங்கிருவோம்’னுட்டு அதையும் தாங்கிக்கிட்டாரு.. அவ்ளோதான்..

கலையுலகம் ஒரு குடும்பம் மாதிரி.. அதிலும் நட்புகளும், உறவுகளும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன. தனது நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யார் அழைத்தாலும் வஞ்சகமில்லாமல் படம் பார்க்க வந்து கொண்டுதான் இருக்கிறார். விளம்பரத்திற்கு கடிதம் கேட்டால் அவரும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். தன்னால் கூடுதலாக ஒரு சதவிகிதம் விளம்பரம் கூடும் என்பது அவருக்குத் தெரியும்.. கடிதம் வாங்கியவர்களுக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்.. பின்பு ஏன் இப்படியொரு குதர்க்கமான பேச்சு உங்களிடமிருந்து..?

படம் ஓட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் கடிதமே கொடுக்கிறார். அப்படி ஓடாமலும் இருக்கலாம் என்பதும் அவருக்குத் தெரியும்.. தெரிந்துதான் தருகிறார். ஏனெனில் அவர்கள் ஒரே குடும்பத்தினர். இதில் ஒன்றும் தவறில்லையே. உங்களுக்கு கண்ணுல காமாலை ஜாஸ்தியாயிருச்சு போலிருக்கு..

எப்படி..? எப்படி..?

‘எந்திரனைத்’ தயாரிங்கோன்னு கேட்டு கலாநிதிமாறனைத் தேடி ரஜினி ஓடினாராமா..? எவன் சொன்னது..? கேபிளு.. என்ன நட்டு கழன்றுச்சா..? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்.. எவனோ தியேட்டர்ல பிட்டு எழுதிக் கொடுத்து இந்தப் பதிவ எழுதினீங்களா..?

ஷங்கரும், சரத்தும் பேசி முடிச்சுட்டுத்தான ரஜினிகிட்ட போயிருக்காங்க.. “தயாரிப்பாளரை ஒரு வாரமா போன்லேயே பிடிக்க முடியல.. இனியும் காத்திருக்க முடியாது.. இவங்க தயாரா இருக்கேன்றாங்க..” என்று சொல்லித்தானே ரஜினியிடம் அப்ரோச் செய்திருக்கிறார்கள். அவருக்கும் படம் வரணும்.. தனது ரசிகர்களுக்கு வேலை கொடு்க்கணும்.. நாம வேலை செய்யணும்ன்ற ஆசையில ஒத்துக்கிட்டாரு.. இதுல என்ன பிரச்சினை..? தயாரிப்பாளரே பின்னால ஓடி வந்து வேற ரெண்டு படத்தோட வெளிநாட்டு உரிமையை பதிலுக்கு வாங்கிட்டு, சப்தமில்லாம கையெழத்துப் போட்டு்ட்டுப் போயிட்டாரே.. பிறகென்ன..? இதுல ரஜினியின் பங்கு என்ன..?

அவர் நடிகர் ஸார்.. படத்துல நடிக்கிறாரு.. அவர் நடிக்குற படம் நிக்கக்கூடாது.. வெளிவரணும்.. ரசிகர்கள் பார்க்கணும்.. திருப்பித் திருப்பிப் பார்க்கணும்.. படம் ஜெயிக்கணும்.. இதுதான் ஒவ்வொரு நடிகனோட ஆசையும்.. இந்த ஆசைகூட தப்புன்னா உங்க சினிமா ஆசையை என்னன்னு சொல்றது..?

//“அவருக்கு ஆதரவளிக்கிறேன், அவரின் பெருமையை போற்றுகிறேன், புகழ் பரப்புகிறென் என்று இம்மாதிரியான் செய்திகளை வெளியிட்டு ரஜினியை இமேஜை உயர்த்துவதாய் நினைத்து, பாலா போன்ற் ஜீனியஸ்களை அவமான படுத்தாதீர்கள். ரஜினிக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமா போகும். நன்றி.”//

முடிவுரையாய் இப்படி சொல்லிவிட்டால் நாங்கள் விட்டுவிடுவோமா..? பாலாவை அவமானப்படுத்துதல் என்பதே தவறான செய்தி என்பதனால் இந்த பத்தியை உதைத்து வெளியேற்றிவிடலாம்.

//இது கண்டிப்பாய் ரஜினி எதிர்ப்பு பதிவல்ல.. அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்கிற ஆதங்கத்தோடு ரஜினியின் நடிப்பை விரும்புகிறவனின் அன்பான வேண்டுகோள். மீண்டும் நன்றி .. வணக்கம்.//

என்னே ஒரு பாசம்..? கமல்ஹாசன் செத்தார் போங்க.. கொன்னூட்டீங்க கேபிளு..

எப்படிங்கண்ணா.. இப்படி..?

நீங்க எழுதினதையெல்லாம் ஒரு தடவை படிச்சிட்டுத்தான இதை எழுதினீங்க.. அப்புறம் எப்படி இது..?

நான் நினைக்கிறேன்.. மொதல்லேயே இந்த டிஸ்கியை எழுதி வைச்சிட்டு அப்புறமா பதிவு எழுத உட்கார்ந்திருப்பீங்க.. எழுதும்போது ஏதோ மனசுக்குள்ள இருக்குற ‘உண்மைத்தனம்’ உங்களையறியாமல் வெளியே வந்து கொட்டிருச்சு.. கரீக்ட்டுங்களா..?

ரஜினி ஒரு மாயை.. அவர் பற்றிய அனைத்தும் மித் என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து சொல்லியிருக்கிறீர்கள். இருக்கட்டும்..

முந்தாநாள் வரைக்கும் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை உங்களை அலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்த எனக்கு, இந்தப் பதிவைப் படித்ததில் இருந்து போனை எடுத்து டயல் செய்யவே பிடிக்காமற்போய்விட்டது. ஏன் தெரியுமா..?

இதுதான் சரியான, முழுமையான காரணம் என்று குறிப்பிட்டு எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது.

அது மிஸ்டர் ரஜினிகாந்த்..!

கேபிளாரே… வாழ்க வளமுடன்!!!