என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
1988-ம் வருடத்தில் ஒரு நாள் ‘சித்ரம்’ என்ற மலையாளப் படத்தை மதுரை மினிப்பிரியா தியேட்டரில் பார்த்துவிட்டு, தியேட்டரில் இருந்து வெளியே வருவதற்குள்ளேயே மோகன்லாலின் தீவிர ரசிகனாக மாறிப் போனேன்.
அந்த அற்புதமான மகா கலைஞனின் உண்மையான நடிப்பை இதன் பின்பு அடையாளம் கண்டு, அதன் பின்னான லால் சேட்டனின் நல்ல மலையாளப் படங்களின் தமிழக வருகையின்போது தவறாமல் பார்த்துவிடுவது எனது வழக்கம்.
அப்படித்தான் ஒரு நாள் மதிய வேளையில் மதுரை மினிப்பிரியா தியேட்டரில் நான் பார்த்து வயிறு வலிக்கும் அளவுக்கு சிரித்துத் தொலைத்த படம் ‘Vellanakalude Nadu’. வெளங்காலுடு நாடு.. உச்சரிப்பு சரியா..? அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. ‘வெளங்காத நாடு’ என்றா..? யாருக்குத் தெரியும்..?
கொட்டாக்காரா சீனிவாசனின் கதையில் பிரியதர்ஷனின் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, லிசி நடித்திருந்திருந்தார்கள். மலையாள மண்ணின் மணத்தோடு கொஞ்சமும் நாடகத்தனம் இல்லாமல் மிக யதார்த்தமாக லஞ்ச ஊழலில் சிக்கித் தவிக்கும் நமது அரசு இயந்திரங்களின் நிலைமையை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார் பிரியதர்ஷன்.
இந்தப் படத்தைத்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது ஹிந்தியில் ‘கட்டா மீத்தா’வாக ரீமேக் செய்திருக்கிறார் பிரியதர்ஷன்.
மோகன்லால் வேடத்தில் அக்சய் குமார். ஷோபனா இடத்தில் த்ரிஷா.
இந்த பணிக்காக முனிசிபல் அலுவலகத்தில் யாருக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நிற்பதால் இவருக்கு வர வேண்டிய பாக்கித் தொகைகள் எல்லாம் அப்படியே முனிசிபல் ஆபீஸ் பைலில் தூங்கிக் கொண்டிருக்கின்றன..
தொழிலில்தான் பிரச்சினை என்றால் வீட்டில் அதைவிட..! அவரது அக்காக்களின் கணவர்மார்கள், அண்ணன், அப்பா, அம்மா என்று யாருமே அக்சயை புரிந்து கொள்ளாதவர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அக்சய் ஒரு உருப்படாதவர்.. பொழைக்கத் தெரியாதவர் என்பதுதான்..!
இந்த இரண்டு மாமாக்களும், அரசியல் வியாதிகளுடன் இணைந்து கட்டிய ஒரு மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலர் இறந்து போகிறார்கள். இந்தப் பழியில் இருந்து தப்பிக்க தங்களது வீட்டில் பல வருடங்களாக வேலை செய்து வரும் கார் டிரைவரை(டினு ஆனந்த்) பாலத்தை குண்டு வைத்தது தகர்த்ததாக பொய் சொல்ல வைத்து போலீஸில் சரணடைய வைக்கிறார்கள். பின்பு அவரை கொலையும் செய்து விடுகிறார்கள்.
அக்சயின் பொறியாளர் மாமா, த்ரிஷாவுடன் ஸ்பாட்டுக்கு வந்து ரோட்டை தோண்டியெடுத்து வெறும் மணலை கொட்டித்தான் அக்சய் ரோடு போட்டிருப்பதாகவும், இதனால் அவனுக்கு பணத்தை செட்டில் செய்யக் கூடாது என்றும் சொல்ல அக்சய் டென்ஷனாகிறார்.
த்ரிஷா அசிங்கப்பட்ட மனநிலையில் தற்கொலைக்கு முயல.. இதன் பின்பு அக்சய் மருத்துவமனைக்கு ஓடோடி போய் தன் நிலையை விளக்க.. த்ரிஷா இப்போது அதனையும், அவனையும் ஏற்றுக் கொள்கிறார்.
அக்சயின் தங்கையை மாமாக்களின் அரசியல் தோஸ்த்து ஒருவன் கல்யாணம் செய்து கொள்கிறான். அக்சய் இதனை கடுமையாக எதிர்த்தும் பலனில்லாமல் போகிறது..
மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தனது குடும்பத்தையே இழந்த ஆஸாத் என்பவர் இவர்களை பாலோ செய்து ரகசியமாக படமெடுத்து அதனை த்ரிஷாவிடம் கொண்டு வந்து கொடுக்க அது இப்போது அக்சயின் பார்வைக்குப் போகிறது..!
சில நாட்களில் அக்சயின் தங்கை திடீரென்று தற்கொலை செய்து கொள்ள.. இதன் காரணம் அக்சயுக்கு முதலில் தெரியவில்லை. பின்புதான் தெரிகிறது..!
அந்த மேம்பால வழக்கு சம்பந்தமான பைலை அரசியல்வியாதியின் வீட்டில் இருந்து ஆஸாத் சுட்டு வந்தது அரசியல்வியாதிக்குத் தெரிய வர.. ஆஸாத்தை போட்டுத் தள்ள ஆள் அனுப்புகிறான்.
ஆஸாத் தப்பித்தாரா..? அக்சய் தங்கையின் சாவுக்குக் காரணம் என்ன..? மாமாக்களின் கதி என்ன என்பதுதான் மிச்சக் கதை..!
படம் 2 மணி 40 நிமிடங்கள் என்கிறார்கள். எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. இத்தனைக்கும் எனக்கும் ஹிந்திக்கும் ஸ்நானப் பிராப்தம்கூட இல்லை.. குச் நஹிதான்.. இருந்தாலும் ரசிக்க முடிந்தது..!
தெரிந்த கதைதானே என்பதாலும், நகைச்சுவை திரைப்படம் என்பதால் நடிப்பே போதுமே என்றெண்ணிதான் படத்திற்குப் போயிருந்தேன். என்னை ஏமாற்றவில்லை பிரியதர்ஷன்..!
அக்சய்யுக்கு நகைச்சுவை கை வந்த கலை என்பதை இதற்கு முந்தைய பல திரைப்படங்களில் காண்பித்துவிட்டார். ஓவர் ஆக்ட்டிங் இல்லாத நடிப்பு..! குடையை பின் சட்டையில் மாட்டிக் கொண்டு கழுத்தை இறுக்கிப் பிடித்த சட்டையுடனும், கண்ணில் சன் கிளாஸூமாக அறிமுகமாகும் காட்சியில் இருந்து இறுதிச் சண்டைக் காட்சிக்கு முன்பு வரையில் அவரிடம் பாலிவுட் ஹீரோவின் சாயல் இல்லை என்றே சொல்லலாம்..!
கையில் காசில்லாமல் ஆட்டோவில் பந்தாவாக வந்திறங்கி டீ வாங்க காசு கேட்பவனிடம் தனது வாட்ச்சை கழட்டி கொடுத்துவிட்டு போவது முதல்.. இது மாதிரி எத்தனை, எத்தனை நாள் நாம வேலை பார்த்திருப்போம் என்பது போல் பணத்திற்காக தனது தொழிலாளர்களை தாஜா செய்கின்ற வேலையில் ரொம்பவே உழைத்திருக்கிறார்.
நகைச்சுவை என்பதை வெறும் வசனத்தில் மட்டுமல்ல.. காட்சியமைப்பிலும் அசத்தியிருக்கிறார் பிரியதர்ஷன்.. ரோடு ரோலர் த்ரிஷாவின் வீட்டை இடித்துவிட்டு உள்ளே போகும் காட்சியில் சிரிக்காதவர்கள் நிச்சயம் மன நோயாளிகள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு காட்சி தத்ரூபம்.. டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருக்க… ஒரே நொடியில் ரோடு ரோலர் நடு வீட்டில் வந்து நிற்கும் காட்சியை த்ரிஷாவின் அப்பா ஓரக்கண்ணில் பார்க்கும் காட்சி மறக்க முடியாதது..!
முனிசிபல் ஆபீஸ் காம்பவுண்ட்டில் ரோடு ரோலர் பழுது பார்க்கும்போது நடக்கும் கூத்தும் சிரிப்பை அள்ளிக் கொட்டியது..!
ஜானி லீவர், அருணா இராணி, நீரஜ் வோரா, ராஜ்பால் யாதவ் என்று சில முகங்கள் பார்த்தவைகளாக இருந்தன.. மணிகண்டனின் ஒளிப்பதிவிற்கு அதிகம் வேலையில்லை.. பாடல் காட்சிகளில் மட்டுமே தெரிகிறார்.. ஆனால் கலை இயக்குநர் சாபு சிரிலுக்கு வேலை பெண்டை கழட்டியிருக்கும் என்பது போட்டிருக்கும் செட்டுகளை பார்த்தாலே தெரிகிறது..!
நகைச்சுவை என்று வந்த பின்பு எதற்கு லாஜிக் என்பதால் பாடல் காட்சிகளையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..! த்ரிஷாவை பார்த்தவுடனேயே டூயட்டுக்கு ஓடும் அக்சய்க்குப் பின்னால் பிளாஷ்பேக் கதை இருந்தாலும் அது ஒட்டாமல் போய்விட்டது..!
ஒரே ஒரு காட்சியில் யானையை வைத்து புல்டோஸரை இழுத்து வருகிறார்கள். இந்த ஒரு காட்சிக்காக கடைசி நிமிடத்தில் இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடா உத்தரவு போட்டது விலங்குகள் வாரியம்.. கடைசியில் கோர்ட்வரைக்கும் சென்றுதான் தடையை உடைத்து படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்..!
வெறும் 30 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் இப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே 18 கோடி லாபத்தைச் சம்பாதித்துவிட்டது என்கின்றன மும்பை பத்திரிகைகள்..!
முதல் மூன்று நாட்களில் மட்டுமே 30 கோடி ரூபாயை உலகம் முழுவதும் அள்ளிவிட்டதாம் இப்படம். இது உண்மையெனில் இனி வருவதெல்லாம் கொழுத்த லாபம்தான்..!
இந்த உண்மையான வெற்றிக்கு மூல காரணம் கொட்டாக்காரா சீனிவாசன்தான்.. மனிதர் எத்தனை எத்தனை வெற்றிப் படங்களுக்கான கதைகளை தாரை வார்த்திருக்கிறார்..? ஈகோ பார்க்காமல் இவரிடம் கதை வாங்கி இயக்கிய இயக்குநர்கள்தான் மலையாளப் படவுலகில் அதிகம்..!
மலையாளத் திரையுலகின் ஆரோக்கியத்திற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்..! நாம..!? கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இப்படி நான்கையும் நாமளே போட்டுக்கிட்டால்தான் நம்ம படம்.. இப்படித்தான் நமது தமிழ் இயக்குநர்களின் மனநிலை இருக்கிறது..!
ம்.. என்னவோ போங்க..! இந்த மாதிரி படத்தையெல்லாம் தமிழ்ல ரீமேக் செஞ்சிருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும்..!?
கட்டா மீத்தா – அவசியம் பார்த்து சிரிக்க வேண்டிய திரைப்படம்..!