21-06-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நேற்று மாலை அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது சட்டென ஒரு நிமிடம் எனக்குள் தூக்கிவாரிப் போட்டது, “ஏண்டா முருகா.. அவருக்கு ஏன் இந்தக் கொடுமை..?” என்று..
அவ்வளவுதான்.. அடுத்த நிமிடத்தில் நாட்டில் தினம்தோறும் நடக்கின்ற சாலை விபத்துக்களில் அதுவும் ஒன்றாகி மனம் தன்னைத்தானே சமாதானமாக்கிக் கொள்ள, மனமும் வேறு வேலைகளில் ஈடுபட்டாகிவிட்டது.
ஆனால் நேற்றைய இரவில் ஜெமினி தொலைக்காட்சியில் உடைந்து போய் சுக்குச் சுக்கலான நிலையில் இருந்த எனது அபிமானத்துக்குரிய அந்த மனிதரைப் பார்த்தவுடனேயே இடம் மாறிய எனது மனம் இந்த நிமிடம்வரையிலும் அந்த நிகழ்வில் இருந்து வெளியில் வர மறுக்கிறது..
கோட்டா சீனிவாசராவ் என்கிற பெயரை தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து போய்விட முடியாது.. கம்பீரமான தோற்றம்.. கள்ளச் சிரிப்பு.. நொடிக்கொரு முறை மாறும் முக பாவனை.. வில்லனா.. நல்லவனா என்பதே தெரியாத வகையிலான நடிப்பு.. வில்லத்தனத்திலேயே நகைச்சுவையை கலந்து கொடுக்கும் சாமர்த்தியம்.. இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே நடிகராக அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நரசிங்கி என்னும் இடத்திற்கு வரும்போது எமன் ஒரு லாரி உருவத்தில் வந்து பிரசாத்தின் பைக்கை தாக்கியிருக்கிறான். மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் புண்ணியமில்லை.. உயிரற்ற உடலாகத்தான் பிரசாத்தை வெளியில் கொண்டு வர முடிந்திருக்கிறது.
கோட்டா பிரசாத் தற்போதுதான் தனது தந்தை வழியில் நடிக்க வந்திருக்கிறார். சித்தம் என்கிற தெலுங்கு திரைப்படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ஜெகபதிபாபுவிற்கு வில்லனாக நடித்து தனது நடிப்பு கேரியரைத் துவக்கியிருக்கிறார். பின்பு தனது தந்தையுடனேயே ஒரு படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதுநாள் வரையிலும் திரையுலகத்திற்குள் கால் வைக்காமல் தான் உண்டு, தனது கிரானைட் பிஸினஸ் உண்டு என்று இருந்தவர், கோட்டா சீனிவாசராவ் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது திரையுலக லைம் லைட்டிற்கு வர வேண்டிய கட்டாயமாகிவிட்டது.
முதல் படத்திலேயே அடையாளம் காணும் அளவுக்கு நடித்திருக்கும் கோட்டா பிரசாத்திற்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர.. அத்தனையிலும் கையெழுத்திட்டுவிட்டு காத்திருந்தவரைத்தான் எமன் கொள்ளை கொண்டு போயிருக்கிறான்.
ஆனாலும் தந்தையர் தினத்தன்றே.. ஒரு தந்தைக்கு இந்தக் கொடுமை நடந்திருக்கக் கூடாதுதான்.. அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..