Archive for the ‘தீக்குளிப்பு’ Category

ஈழப் பிரச்சினை-மூன்றாவது தீக்குளிப்பு – தொடர்கிறது வேதனை..!

பிப்ரவரி 7, 2009

08-02-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

சிங்கள இனவாத அரசு ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றுகுவித்து வரும் நேரத்தில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தம்பி முத்துக்குமாரும், மதுரையில் ரவி என்பவரும் தீக்குளித்து இறந்து போயினர்.

இப்போது மூன்றாவது நபராக நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன், இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைப்பதாக கூறி இன்று காலையில் தீக்குளித்துள்ளார்.

சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு என்னும் ஊரில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடி வந்தவர், “இலங்கையில் போரை நிறுத்து…. தமிழ் வாழ்க..” என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு கொளுத்திக் கொண்டுவிட்டார்.

உடனே ரவிச்சந்திரனின் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் அவரது உடல் நிலை மோசமடைந்ததால், தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை மூன்றே முக்கால் மணியளவில் ரவிச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ்காரர்தான். மகளிர் காங்கிரஸ் உறுப்பினராக உள்ளார்.

ரவிச்சந்திரன் உடலுக்கு இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினரும், பெரும் திரளான தமிழ் உணர்வாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக ரவிச்சந்திரன் தீக்குளித்த தகவல் பரவியதும், காங்கிரஸ் நிர்வாகிகள், பெரும் திரளான தொண்டர்கள் மயிலாடுதுறை மருத்துவமனை முன்பு திரண்டனர்.

அதேபோல, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும் திரண்டு வந்தனர்.

காங்கிரஸாரைப் பார்த்த அவர்கள், ரவிச்சந்திரனைப் பார்க்கக் கூடாது என்று கூறி தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட போலீஸார் இரு தரப்பினரையும் விலக்கி அமைதிப்படுத்தினர். இந்த மோதலில் டி.எஸ்.பி. ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனால் சீ்ர்காழி, மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

முன்னதாக மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் ரவிச்சந்திரன் கொடுத்த மரண வாக்குமூலத்தில்,

“ஈழத் தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் (காங்கிரஸ்) முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இந்தியா இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் அமைதி வேண்டும்.. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னையில் தி.மு.க. கட்சியினரோடு காங்கிரஸாரும் சேர்ந்து அமைதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் பேராசிரியர் அன்பழகனோடு, தங்கபாலு, வாசன் ஆகியோரும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் சீர்காழியில் நடந்துள்ள இந்த துயரச் சம்பவம் காங்கிரஸ் கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.. தீக்குளிப்பு வேண்டவே வேண்டாம்..” என்று பல தலைவர்கள் சொல்லியும், கெஞ்சியும் இந்தக் கொடூரம் தொடர்வது வருத்தமளிக்கிறது.

வயதான அவரது தாயாரின் கதறலை பத்திரிகைகளில் பார்த்து, இரவு சாப்பாடு உள்ளேயே இறங்கவில்லை. வேதனையாக இருக்கிறது.

இந்த தீக்குளிப்பு என்னும் கொடூரம் இத்தோடு முற்றுப் பெற வேண்டும் என்றே விரும்புகிறேன்..

ரவிச்சந்திரனின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி : தேட்ஸ்தமிழ்.காம்