Archive for the ‘திரைப்பட விருதுகள்’ Category

கேவலமாகிப் போன தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..!

செப்ரெம்பர் 29, 2009

29-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘கோபப்படக் கூடாது..’ ‘ஆத்திரப்படக் கூடாது..’ ‘டென்ஷன்படக் கூடாது’ என்று எத்தனையோ ‘படக் கூடாது’களை ‘பட்ட’ பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.

‘சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது’ என்பதைப் போல பதிவுகளை போட்டே தீர வேண்டும் என்கிற அவசியத்தையும் என் அப்பன் முருகன் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்.

நேற்று பாருங்கள்.. நேரு உள் விளையாட்டரங்கில் ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவன்’ தனது கலையுலகத்தின் 50-வது வருட பொன்விழாவை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க.. அவருக்கு இன்னுமொரு சிறப்பு சேர்க்கும்விதமாக ‘தசாவதாரம்’ படத்தில் பத்து வேடங்களில் வந்து கலக்கியதற்காக ‘சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது’ கிடைத்திருக்கிறது.

இந்தத் ‘தேர்வுப் பட்டியல்’ பத்து நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டாலும், நேற்றுதான்.. அதிலும் அண்ணன் கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடக்கும் தினத்தன்றுதான் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்கிற ‘கோபாலபுரத்தாரின்’ ஆசையை அரசு அதிகாரிகள் இன்றைக்கு நிறைவேற்றியிருக்கிறார்கள்.


இதற்கான நன்றிக் கடனை கடந்த சில நாட்களுக்கு முன்பேயே கமலஹாசன் கோபாலபுரத்தின் படியேறிச் சென்று செலுத்திவிட்டு வந்துவிட்டார். இவர் 2008-ம் ஆண்டுக்கு..

2007-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ள அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு விருது கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு கிளைமாக்ஸ் காட்சிக்காக காத்திருந்த ‘எந்திரன்’ டீமிற்கே கடுக்கான் கொடுத்துவிட்டு, கோபாலபுரத்தாரின் கவிதை பாடல் நிகழ்ச்சிக்கு சென்று மூன்றரை மணி நேரம் முக்காலிட்டு உட்கார்ந்திருந்து தனது ‘நன்றிக் கடனை’ செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

தேர்வு செய்வது தேர்வுக் கமிட்டி. அந்தத் தேர்வுக் கமிட்டியை நியமித்தது தமிழக அரசு. தேர்வு செய்தால் கமிட்டி அதனை அரசிடம் சமர்ப்பிக்கும். அரசு அதனை நாள், நேரம், நட்சத்திரம் பார்த்து வெளியிடும். அதற்கிடையில் அந்த நடிகர்களுக்கே இந்த விஷயம் போய்ச் சேர்ந்தது ஏன் என்றெல்லாம் சின்னப்புள்ளைத்தனமா கொஸ்டீன் கேக்கக் கூடாது..? இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்..

இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை.

பரிசுக்காகத் தேர்வு செய்திருக்கும் திரைப்படங்களையும், தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களையும் பார்க்கும்போதுதான் பி.பி. தாறுமாறாக எகிறுகிறது. சில தேர்வுகள் பேலன்ஸ் செய்வதற்காக செய்யப்பட்டிருக்க.. பல தேர்வுகள் பல நல்ல கலைஞர்களை புறக்கணித்து, ஓரம்தள்ளிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கொடுமையாக உள்ளது.

முதலில் 2007-ம் ஆண்டை பார்ப்போம். வெற்றி பெற்ற பட்டியலைப் பாருங்கள்.

சிறந்த படம் – முதல் பரிசு – சிவாஜி

சிறந்த படம் – இரண்டாம் பரிசு – மொழி

சிறந்த படம் – மூன்றாம் பரிசு – பள்ளிக்கூடம்

சிறந்த படம் – சிறப்பு பரிசு – பெரியார்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் – மிருகம்

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் – முதல் பரிசு – தூவானம்

சிறந்த நடிகர் – ரஜினிகாந்த் (சிவாஜி)

சிறந்த நடிகை – ஜோதிகா (மொழி)

சிறந்த நடிகர் – சிறப்புப் பரிசு – சத்யராஜ் (பெரியார்)

சிறந்த நடிகை – சிறப்புப் பரிசு – பத்மப்பிரியா (மிருகம்)

சிறந்த வில்லன் நடிகர் – சுமன் (சிவாஜி)

சிறந்த நகைச்சுவை நடிகர் – விவேக் (சிவாஜி)

சிறந்த குணசித்திர நடிகர் – எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)

சிறந்த குணசித்திர நடிகை – அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)

சிறந்த இயக்குநர் – தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)

சிறந்த கதை ஆசிரியர் – வசந்த் (சத்தம் போடாதே)

சிறந்த உரையாடல் ஆசிரியர் – பாலாஜி சக்திவேல் (கல்லூரி)

சிறந்த இசையமைப்பாளர் – வித்யாசாகர் (மொழி)

சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்)

சிறந்த பின்னணிப் பாடகர் – ஸ்ரீனிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)

சிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி (சிவாஜி)

சிறந்த ஒளிப்பதிவாளர் – நீரவ்ஷா (பில்லா)

சிறந்த ஒலிப்பதிவாளர் – யு.கே.அய்யப்பன் (பில்லா)

சிறந்த எடிட்டர் – சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே)

சிறந்த கலை இயக்குநர் – தோட்டாதரணி (சிவாஜி)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)

சிறந்த நடன ஆசிரியர் – பிருந்தா (தீபாவளி)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ராஜேந்திரன் (பெரியார்)

சிறந்த தையல் கலைஞர் – அனுவர்த்தன் (பில்லா)

சிறந்த பின்னணி குரல்(ஆண்) – கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய)

சிறந்த பின்னணி குரல்(பெண்) – மகாலட்சுமி (மிருகம்)

2007-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களின் பட்டியலில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது விருதுகளை வழங்கலாம் என்று கருதக்கூடிய திரைப்படங்களின் பட்டியல் இது.

சிவாஜி, பருத்தி வீரன், மொழி, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், மிருகம், சென்னை 600028, அம்முவாகிய நான்

இதில் ‘பருத்தி வீரன்’ திரைப்படம் 2006-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கி 2007-ம் ஆண்டில் வெளியானதால் 2006-ம் ஆண்டிற்கான விருதுகளை பெற்றுக் கொண்டு லிஸ்ட்டில் இருந்து வெளியேறிவிட்டது.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்திருக்கின்ற ஒரே காரணத்திற்காக ‘பெரியார்’ திரைப்படத்திற்கு சிறப்பு பரிசு வழங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் ‘மிருகம்’ பெண்களை மிக உயர்வாகக் காட்டிய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பட்டியலில் தனி இடம் பெற்று விட்டது.

சிறந்த திரைப்படமாக ‘சிவாஜி’யை தேர்வு செய்திருக்கிறார்கள் நமது கலை வல்லுநர்கள். என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும்.. ஆனால் அது சிறந்த திரைப்படத்திற்கு தகுதியான திரைப்படம்தானா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

‘சிவாஜி’ திரைப்படத்துடன் சிறந்த படத்திற்காக போட்டியிட்ட படங்கள் லிஸ்ட்டை பாருங்கள்.. மொழி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், அம்முவாகிய நான்..

இந்தப் பட்டியலில் சந்தேகமேயில்லாமல் ‘மொழி’ திரைப்படம்தான் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான எல்லாத் தகுதியும் அத்திரைப்படத்திற்கு உண்டு. சினிமா மொழியின் அடிப்படையில் பார்த்தால் ‘சிவாஜி’யைவிட பல மடங்கு தரமான திரைப்படம் மொழி. மற்ற திரைப்படங்களும் வலுவான போட்டியைக் கொடுத்தாலும் கதை, நேர்த்தி, நடிகர்களின் நடிப்புத் திறன், திரைக்கதை ஆக்கம் என்று அனைத்திலும் மொழிதான் சிறப்பு வாய்ந்தது என்பது எனது கருத்து.

ஆனால் இவர்கள் ‘சிவாஜி’யைத் தலையில் தூக்கி வைத்து ஆடியிருக்கிறார்கள். ரஜினியைக் காக்கா பிடிப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா..?

இரண்டாவது சிறந்த படமாக ‘மொழி’யையும், மூன்றாவது சிறந்த படமாக ‘பள்ளிக்கூடத்தையும்’ தேர்வு செய்து பேலன்ஸ் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். கூடவே இன்னொரு கூத்தாக ரெடிமேட் தாக்குதலாக அறிக்கைவிடத் தயாராகக் காத்திருந்த தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி அவருக்கு ‘சிறந்த இயக்குநருக்கான பரிசைக்’ கொடுத்து சமாளித்துவிட்டார்கள். உண்மையில் இந்த விருதைப் பெற ராதாமோகனே தகுதியானவர் என்பது எனது தாழ்மையான கருத்து.

‘பள்ளிக்கூடமும்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’வும் சிறந்த படைப்புகள்தான் என்றாலும் மதிப்பெண் விகிதத்தில் ‘மொழி’ திரைப்படத்திற்குப் பின்னால்தான் வரிசை கட்டி நிற்கின்றன. அதிலும் ‘மொழி’யில் நடிகர்களின் நடிப்புத் திறன் வெளிப்பட்டிருப்பதில் இயக்குநரின் பங்குதான் அதிகம். ஆனால் ராதாமோகனுக்கு இங்கே பப்பே சொல்லிவிட்டு 2008-ம் ஆண்டு ‘அபியும் நானும்’ படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதைக் கொடுத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.

‘மொழி’யில் இருந்த திரைக்கலை உணர்வும், படமாக்கிய திறனும் ‘அபியும், நானும்’ திரைப்படத்தில் பாதிதான் இருந்தது. ஆனால் எதற்காக அத்திரைப்படத்திற்கு என்று புரியவில்லை.

‘சத்தம் போடாதே’ படத்தின் கதையைவிட மாயக்கண்ணாடியின் கதை எவ்வளவோ பெஸ்ட்.. ஆனால் பேலன்ஸ் செய்யும் நோக்கில் வசந்திற்கு தரப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

கற்றது தமிழ், இராமேஸ்வரம், பச்சைக்கிளி முத்துச்சரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன் ஆகிய திரைப்படங்களில் ஏதாவது ஒரு பிரிவில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. ஒரு பிரிவில்கூட இத்திரைப்படங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது அவர்களுடைய துரதிருஷ்டம்தான்.

அடுத்து 2008-ம் ஆண்டினை பார்ப்போம்..

முதலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை பார்ப்போம்..

சிறந்த படம் – முதல் பரிசு – தசாவதாரம்

சிறந்த படம் – இரண்டாம் பரிசு – அபியும் நானும்

சிறந்த படம் – மூன்றாம் பரிசு – சந்தோஷ் சுப்ரமண்யம்

சிறந்த படம் – சிறப்பு பரிசு – மெய்ப்பொருள்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் – பூ

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் – முதல் பரிசு – வல்லமை தாராயோ

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் – இரண்டாம் பரிசு – வண்ணத்துப்பூச்சி

சிறந்த நடிகர் – கமலஹாசன் (தசாவதாரம்)

சிறந்த நடிகை – சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)

சிறந்த நடிகர் – சிறப்புப் பரிசு – சூர்யா (வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை – சிறப்புப் பரிசு – த்ரிஷா (அபியும் நானும்)

சிறந்த வில்லன் நடிகர் – ராஜேந்திரன் (நான் கடவுள்)

சிறந்த நகைச்சுவை நடிகர் – வடிவேலு (காத்தவராயன்)

சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா (உளியின் ஓசை)

சிறந்த குணசித்திர நடிகர் – பிரகாஷ்ராஜ் (பல படங்கள்)

சிறந்த குணசித்திர நடிகை – பூஜா (நான் கடவுள்)

சிறந்த இயக்குநர் – ராதாமோகன் (அபியும் நானும்)

சிறந்த கதை ஆசிரியர் – சா.தமிழ்ச்செல்வன் (பூ)

சிறந்த உரையாடல் ஆசிரியர் – மு.கருணாநிதி (உளியின் ஓசை)

சிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா (அஜந்தா)

சிறந்த பாடலாசிரியர் – வாலி (தசாவதாரம்)

சிறந்த பின்னணிப் பாடகர் – பெள்ளிராஜ் (சுப்ரமண்யபுரம்)

சிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி (நெஞ்சத்தைக் கிள்ளாதே)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)

சிறந்த ஒலிப்பதிவாளர் – ரவி (வாரணம் ஆயிரம்)

சிறந்த எடிட்டர் – ப்ரவீன் காந்த் (சரோஜா)

சிறந்த கலை இயக்குநர் – ராஜீவன் (வாரணம் ஆயிரம்)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)

சிறந்த நடன ஆசிரியர் – சிவசங்கர் (உளியின் ஓசை)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் – மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)

சிறந்த தையல் கலைஞர் – ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – லட்சுமி (வண்ணத்துப்பூச்சி)

சிறந்த பின்னணி குரல்(ஆண்) – எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)

சிறந்த பின்னணி குரல்(பெண்) – சவிதா (பல படங்கள்)

2009-ம் ஆண்டு வெளியானாலும் 2008-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்டதால் ‘நான் கடவுள்’ திரைப்படம் 2008-ம் ஆண்டு படங்களுடன் போட்டியிட்டுள்ளது.

கமலஹாசன் சிறந்த நடிகர்தான். பெற வேண்டிய விருதுதான். சந்தேகமில்லை. வாழ்த்துவோம். ஆனால் ‘தசாவதாரம்’ சிறந்த படமா..?

2008-ம் ஆண்டில் அத்திரைப்படத்துடன் போட்டியிட்டிருக்கும் படங்களை பாருங்கள்.. நான் கடவுள், பிரிவோம் சந்திப்போம், அஞ்சாதே, சுப்ரமணியபுரம், வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, பொய் சொல்லப் போறோம், வாரணம் ஆயிரம், பூ, பொம்மலாட்டம், அபியும் நானும்.

இந்த லிஸ்ட்டில் கண்டிப்பாக ‘பூ’, ‘அஞ்சாதே’, ‘சுப்ரமணியபுரம்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் சிறந்த திரைப்படங்களுக்கான லிஸ்ட்டில் இருக்க வேண்டிய திரைப்படங்கள். ஆனால் இவற்றில் ‘பூ’ படத்திற்கு பெண்களை உயர்வாகக் காட்டுவதாகச் சொல்லி சிறப்புப் பரிசு கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள். என்னே தேர்வுக் கமிட்டியினரின் கலைத்திறமை…?

இதில் காமெடியாக ‘அபியும் நானும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என்னும் இரண்டு கமர்ஷியல் குடும்பக் கதைகள் விருதை பெற்றுள்ளன. இவைகளும் நல்ல திரைப்படங்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் சினிமா மொழி இவற்றில் இல்லையே.. இவைகள் சாதாரணமான மேடை நாடகங்கள் போன்ற திரைப்படங்கள்தானே.. திரைப்படத்தின் உடற்கூற்றுக்கான ஒரு அடையாளம்கூட இத்திரைப்படங்களில் இடம்பெறவில்லை.

ஆனால் ‘அஞ்சாதே’யும், ‘சுப்ரமணியபுரமும்’ தமிழ்த் திரையுலகின் டிரெண்ட்டையே தற்போதைக்கு இடம் மாற்றி வைத்துவிட்டன. அந்தச் சாதனையை செய்த திரைப்படங்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை எனில் இந்த தேர்வுக் கமிட்டியினரை சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.

இன்னும் எனக்கு இந்த மூன்றில் எதை சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்வது என்கிற குழப்பமே உள்ளது. அந்த அளவுக்கு சிறந்த காவியப் படைப்புகளை கையில் வைத்துக் கொண்டு விருதுகளை இரண்டரை மணி நேர நாடகங்களுக்கு வழங்கியிருப்பது கொடுமையான விஷயம்.

அடுத்த கொடுமை சிறந்த இயக்குநருக்கான விருது. நிச்சயம் இதில் போட்டியிடுபவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், மிஷ்கினும், சசிகுமாரும், சசியும்தான். ராதாமோகன் லிஸ்ட்டில் இல்லவே இல்லை. ஆனாலும் ராதாமோகனுக்குத்தான் கிடைத்திருக்கிறது. காரணம் நான் முன்பே சொன்னதுபோல தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி ராதாமோகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு இது. முறைகேடான விஷயம் இது.

சசிகுமார் பாவம்.. தமிழக அரசின் விருதைத் தவிர மற்ற அத்தனை குறிப்பிடத்தக்க விருதுகளையும் ‘சுப்ரமணியபுரம்’ படத்திற்காக வாங்கிக் குவித்துவிட்டார். சரி.. அந்த அளவுக்கு தமிழக அரசின் விருதிற்கு மரியாதை இல்லை என்பதை இப்போதைக்கு புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.

இதில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, சினேகாவுக்குக் கிடைத்த சிறந்த நடிகைக்கான விருது. நல்ல திரைப்படம்தான். நல்ல கதைதான். ஆனால் அழுத்தமான திரைக்கதையும், சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லக்கூடிய விதமாகவும் இல்லாமல் போனதால் ‘பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படம் மக்கள் மனதில் இடம் பெறாமல் போய்விட்டது. ஆனால் அதில் சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.

சந்தேகம் இருப்பவர்கள் அதன் டிவிடியை வாங்கி பாருங்கள்.. எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.

இரண்டாவது சந்தோஷமான விஷயம், ‘பூ’ படத்திற்காக சிறந்த கதையாசிரியருக்கான விருதை நமது சக பதிவரும், எழுத்தாளரும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான திரு.சா.தமிழ்ச்செல்வன் பெற்றிருப்பதுதான்.

‘அஞ்சாதே’ நரேனும், ‘சுப்ரமணியபுரம்’ சசிகுமாரும், ‘பொம்மலாட்டம்’ நானே படேகரும் ‘வாரணம் ஆயிரம்’ சூர்யாவைவிட பல மடங்கு நடித்திருக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மை. ஆனால் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் கிடைக்கவில்லை.

சிறந்த வில்லன் நடிகருக்கான போட்டியில் சந்தேகமே இல்லாமல் ‘அஞ்சாதே’ பிரசன்னாதான் என் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால் இங்கே ‘நான் கடவுள்’ படத்திற்காக ராஜேந்திரனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பாரோ. ஆனால் ‘டக் அஃப் வார்’தான்.. சந்தேகமில்லை..! பிரசன்னா தனது உடல் மொழியால் நடித்திருக்கிறார். நிச்சயம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால் ராஜேந்திரன் கதை அப்படியில்லை. அவருடைய இயல்பான உடல் வாகுவும், பேச்சுத் திறனும் அப்படியே அமைந்துவிட்டதாலும், அவர் கவரப்பட்டார் என்று நினைக்கிறேன்..!

‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதியும், ‘பொம்மலாட்டம்’ நாயகி ருக்மணியும், ‘பூ’வில் பார்வதியும் நடித்த நடிப்பைவிடவா ‘அபியும் நானுமில்’ த்ரிஷா நடிப்பைக் கொட்டியிருக்கிறார்..? சிறப்புப் பரிசில்கூடவா இவர்களுக்கு இடமில்லை..!

இதில் இன்னுமொரு அபத்தம் ‘நான் கடவுள்’ படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு குணசித்திர நடிகைக்கான பரிசைக் கொடுத்து ஒதுக்கிவிட்டதுதான். இனிமேல் கதாநாயகி யார்? குணசித்திர நடிகை யார் என்பதையெல்லாம் தமிழக அரசிடம் கேட்டுவிட்டுத்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் போலும்..!

இதில் கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய ‘உளியின் ஓசை’க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்..

அவருடைய விளம்பர வெறியும், பதவி ஆசையும், கூச்ச நாச்சமில்லாத படுத்துக்கொண்டே பாராட்டை கேட்கும் மனோபாவமும் உலகமறிந்த விஷயம் என்றாலும், இவ்வளவு பக்குவப்பட்ட வயதிலும் இன்னமும் அப்படியே இருக்கிறாரே என்பதை நினைத்தால்தான் மனம் பகீரென்கிறது.

இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் எதையெல்லாம் தான் எடுத்துக் கொண்டு மிச்சத்தை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எச்சில் இலை போல் அள்ளி வீசப் போகிறாரோ தெரியவில்லை.

முதல்வராகப் பதவி வகிப்பவர் இது போன்ற அரசு விருதுகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் அந்தப் பதவிக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இங்கேதான் அந்தப் பெருமை சேர்ப்புகளையே குப்பைத் தொட்டிக்குக் கொண்டு போய் போட்டுவிட்டார்களே.. யார் கேட்பது..?

உண்மையில் ‘உளியின் ஓசை’ படைப்பு பரிசுக்குரியதா? சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் ‘நான் கடவுளும்’, ‘பொம்மலாட்டமும்’, ‘அஞ்சாதே’யும், ‘பூ’வும், ‘சுப்ரமண்யபுரமும்’ வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..

‘நான் கடவுளுக்கு’ நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்..

இந்த கேலிக்கூத்தான இரண்டு வருட பரிசு அறிவுப்புகளின் பின்னணிக்கு என்ன காரணம்? தான் ரிட்டையர்டுமெண்ட் பெற உள்ள இதே காலக்கட்டத்திலேயே கடைசியாக ஒரு முறை இரண்டு பெரும் நடிகர்களுக்கு நடுவில் அமர்ந்துவிடத் துடித்த ஒரு அல்பத்தனத்திற்கு அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகா கேவலமானது.

ஏன்? இப்படி? யாரும் யோசிக்க மாட்டார்களா? என்றெல்லாம் தேர்வுக் கமிட்டியினரிடம் விசாரித்ததில் அவர்களிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்த விஷயங்கள் ஒன்றுதானாம்..

“தலைவர் மனசு குளிர்ற மாதிரி செலக்ட் பண்ணுங்க. வீணா அவரை அப்செட்டாக்காதீங்க” என்று மட்டும் தேர்வுக் கமிட்டியினரின் காதில் ஓதப்பட்டதாம். அதன் விளைவினால்தான் ஐயா விருப்பப்படியே டாப் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம்.

ஐயாவின் மனம் குளிர வைக்க அடுத்த விழா ரெடி..

இதற்குப் பேசாமல் அவரும், அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து “வீட்ல வந்து பரிசை வாங்கிட்டு சமத்தா கால்ல விழுந்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு போய்ச் சேருங்க”ன்னு அறிக்கையே விட்ரலாம்.

எதையும் தாங்கும் தமிழன், நிச்சயம் இதையும் தாங்குவான்..!