Archive for the ‘தினமணி’ Category

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-4

ஜூலை 4, 2007

04-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே…

திரு.அருண்செளரி ‘தினமணி’யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் நான்காம் பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

ஒரு கொலை, அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை!

பிரதிபா முகத்திரையை விலக்கினால்-4

மகளிருக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜலகாமில் தொடங்கப்பட்ட கூட்டுறவு வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி மூடப்பட்டது.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ரூ.20 கோடியை விழுங்கி ஏப்பம் விட்டதால், சர்க்கரை ஆலை நலிவடைந்து மூடப்பட்டது.

அடுத்த குடியரசுத் தலைவராக வரவிருக்கும் பிரதிபா பாட்டீல் தனது தங்கக் கரங்களில் தொட்டது எல்லாவற்றுக்கும் இதே கதிதான்.

அடுத்து நாம் காணவிருப்பது நாட்டு நலனில், அக்கறை கொண்டு அவர் தொடங்கிய ‘ஷ்ரம் சாதனா டிரஸ்ட்’ என்பதைப் பற்றியது. இது எதற்காக என்கிறீர்களா? கிராமப்புற இளைஞர்கள் பொறியியல் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா? அதற்காகத்தான்..

இதன் சிறப்புகள் என்னவென்று பார்ப்போம்.

மாணவர்கள் நலனுக்காக ஒரு மருத்துவக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் போடப்பட்ட தொகை ஒரு டாக்டருக்குச் சென்றது. இதுவரையில் சரி.. அந்த டாக்டர் யார் தெரியுமா? பிரதிபாவின் சகோதரர் ஜி.என்.பாட்டீல்தான். அந்தக் கணக்கை பிரதிபாவே கையாண்டிருக்கிறார்.

அந்தப் பொறியியல் கல்லூரியின் ஊழியர்கள், அறக்கட்டளையின் இயக்குநர்களுடைய வீடுகளில் வேலை செய்தனர். ஒருவர் மும்பையில் பிரதிபாவின் வீட்டில் வேலை செய்தார்.

கல்லூரிக்காக ஒரு விருந்தினர் இல்லம் கட்டப்பட்டது. பல்கலைக்கழக பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் வந்து தங்குவதற்காக அல்ல. பிரதிபா பாட்டீலின் உறவினர்கள் வந்தால் தங்கி ஓய்வெடுப்பதற்காகத்தான்.

மாணவர்களிடமிருந்து வசூலித்த பணம் விரைவிலேயே மூழ்கப் போகும் சர்க்கரை ஆலைக்குப் போனது.

ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடிக்கப்பட்டத் தொகை மூடப்படவிருக்கும் கூட்டுறவு வங்கியில் டெபாசிட்டாகப் போடப்பட்டது. இந்த டெபாஸிட்டுகளைக் கொண்டு பங்கு முதலீட்டாளர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் பிரதிபா குடும்பத்தினரே திரும்பத் திரும்ப நிர்வாகிகளாக இயக்குநர்கள் தேர்தலில் வெற்றி பெற உதவியாகச் செயல்பட்டனர். ஒன்றை வைத்து ஒன்று.. ஒன்றிலிருந்து மற்றொன்று. அற்புதமான ‘சிருஷ்டி ரகசியம்’ பிரதிபா குடும்பத்தாருடையது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி எனது கட்டுரைகளால் நிலைகுலைந்து போயிருக்கிறார். “பிரதிபாவின் புகழைக் கெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக்” குற்றம் சாட்டியிருக்கிறார். “எல்லா அரசியல்வாதிகளுக்குமே உறவினர்களால் இப்படி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன..” என்று உதாரணங்களையும் அடுக்கியிருக்கிறார். “தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டும் யோக்கியமா..?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். அதற்காக குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமா? “எல்லோர் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்றுதானே கேட்கிறோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் விட்டுவைக்காதீர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே..”

இப்போது ஒரு கொலை தொடர்பான சில பெயர்களையும் தேதிகளையும் பார்ப்போம்.

விஷ்ராம் ஜி.பாட்டீல்

வடக்கு மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஜலகாம் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர். 30 ஆண்டுகளாக காங்கிரஸ்காரர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு முறை அல்ல.. மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005 செப்டம்பர் 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

ரஜினி பாட்டீல்

அதே கல்லூரியில் மராட்டி மொழி பேராசிரியராகப் பணி புரிகிறார். விஷ்ராம் பாட்டீலின் மனைவி. ஜி.என்.பாட்டீல், உல்லாஸ் பாட்டீல் ஆகியோர்தான் தனது கணவர் கொலையில் சதிகாரர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

ஜி.என்.பாட்டீல்

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரதிபா பாட்டீலின் அண்ணன். விஷ்ராம் பாட்டீலை எதிர்த்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றவர்.

உல்லாஸ் பாட்டீல்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஜி.என்.பாட்டீலின் நெருங்கிய சகா. விஷ்ராம் பாட்டீலை போட்டியாளராகக் கருதுகிறவர். சுற்று வட்டாரத்தில் ‘நன்கு பிரபலமான’ பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ராஜு மாலி, ராஜு சோனேவானே

விஷ்ராம் பாட்டீல் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள். “உண்மையான சதிகாரர்கள் வேறு நபர்கள்..” என்று ஆஜ்தக் தொலைக்காட்சி நிருபரிடம் கேமராவுக்கு முன்னால் சாட்சியம் கூறியவர்கள். “அவர்கள் யார்..?” என்று கேட்டபோது, “ரஜினி யாரைக் குற்றம் சாட்டுகிறாரோ, அவர்கள்தான்..” என்கின்றனர்.

பிறகு 2007, ஏப்ரல் 7-ல் போலீஸ் ‘காவலில்’ ராஜூமாலி இறந்து விடுகிறார். 2007 ஏப்ரல் 4-ல் ஜலகாமுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக அவர்கள் வந்தது இதுவே முதல் முறை. ஏப்ரல் 7-ம் தேதி ரஜனியிடம் விசாரிக்கின்றனர்.

லீலாதர் நர்கடே, தாமோதர் லோகாண்டோ

விஷ்ராம் பாட்டீல் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறவர்கள். கொலைக்கு முதல் நாள், கொலை நடந்த நாள், கொலைக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களிலும் இவர்களும் ஜி.என்.பாட்டீலும் தொலைபேசியில் பேசியதாக பதிவாகியிருக்கிறது. இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய முதல் தகவல் அறிக்கை(FIR) திரும்பப் பெறப்படுகிறது.

மோதல் ஏன்?

மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜி.என்.பாட்டீல் இருந்தபோது, சுனாமி நிவாரணமாக பொதுமக்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி திரட்டப்பட்டது. அந்தப் பணம் கட்சியிடமும் தரப்படவில்லை. மக்களுக்கும் சென்று சேரவில்லை.

ராஜஸ்தான் ஆளுநராக பிரதிபா பாட்டீல் நியமிக்கப்பட்டதும் அவருக்குப் பாராட்ட விழா நடத்த கட்சித் தொண்டர்கள் மீண்டும் நிதி திரட்டினர். இந்தப் பணமும் எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்குமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரபாராவுக்கு கட்சித் தொண்டர்கள் புகார் மனுக்களை அனுப்பினர். இந்தத் தொகைகள் குறித்து விசாரிக்குமாறு கோரினர்.

2005 ஆகஸ்ட் 15

மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த 9 பேர் பத்திரிகைகளுக்கு அறிக்கை தருகின்றனர். ஜி.என்.பாட்டீல் திரட்டிய நிதிக்கு கணக்கும் இல்லை. அது கட்சிக்கும் தரப்படவில்லை என்கின்றனர்.

இந்நிலையில் கட்சியின் மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷ்ராம் பாட்டீல் இந்த நிதி முறைகேடுகள் குறித்தும், உல்லாஸ் பட்டீலின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் விசாரணையைத் தொடங்குகிறார். இந்த இருவரின் முறைகேடுகள் குறித்து கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார்.

அப்போது அவருக்கு 3 மொட்டைக் கடிதங்கள் வருகின்றன. விஷ்ராமைக் கொல்ல சுபாரி(கூலிப்படை) ஏவப்பட்டிருப்பதாகவும் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் அவை எச்சரிக்கின்றன. ஆனால் விஷ்ராம் பாட்டீல் அதை லட்சியம் செய்யாமல் விசாரணையைத் தொடர்கிறார். பிறகு கொல்லப்படுகிறார். உடனே உள்ளூர் பத்திரிகைகளில் இந்தக் கொலைச் செய்தி குறித்து பக்கம் பக்கமாக அலசப்படுகின்றது. “மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் உள்ள கோஷ்டிப் பூசலே இதற்குக் காரணம்..” என்று எழுதப்படுகிறது.

திடீர் திருப்பம்

பிறகு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். “90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது. விரைவிலேயே சதிகாரர்களைப் பிடித்துவிடுவோம்” என்று ரஜினியிடமே போலீஸார் தெரிவிக்கின்றனர். திடீரென்று இதில் திருப்பம் நேரிடுகிறது. விஷ்ராம் பாட்டீலிடம் ராஜு மாலி ரூ.4.5 லட்சம் வாங்கியதாகவும், அதை விஷ்ராம் திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை ரஜினி பாட்டீல் வன்மையாக மறுக்கிறார். பத்திரிகைகளும் இதில் உள்ள முரண்களைச் சுட்டிக் காட்டுகின்றன. உடனே வழக்கு விசாரணை ஜலகாம் போலீஸிடமிருந்து மாநில சி.ஐ.டி. போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

2005 செப்டம்பர் 27

விசாரணை போகும் திசையைப் பார்த்து அதிர்ச்சியடையும் ரஜினி பாட்டீல் காங்கிஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதுகிறார். “எனது கணவரின் கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள், போலீஸ் விசாரணையை நடத்தவிடாமல் நெருக்குதல் தருகின்றனர்..” என்று தெரிவிக்கிறார்.

‘தேசத்தூது’, ‘தேசநாடி’ ஆகிய உள்ளூர் பத்திரிகைகளும் இந்தக் கொலை பற்றி விசாரித்து ஜி.என்.பாட்டீல் மீது சந்தேகம் தெரிவித்து சில புகைப்பட ஆதாரங்களுடன் எழுதின. பிறகு ரஜினி பாட்டீலும் பல்வேறு ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் ஆகியோருக்குக் கடிதங்கள் எழுதினார். ஆனால் எதற்கும் பலனில்லை.

கட்சிக்காரர் கொலை செய்யப்படுகிறார். அதில் சம்பந்தப்பட்டுள்ளவர் யார் என்று தெரிய வருகிறது. அந்த ஆதாரங்களைத் தீர விசாரித்து குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய போலீஸார் தயக்கம் காட்டி, வழக்கை மந்த கதியில் நடத்தி திசை திருப்புகின்றனர். இத்தோடு முடியவில்லை.

(இறுதிப் பகுதி விரைவில்)