Archive for the ‘திண்டுக்கல் சர்தார்’ Category

அனுராதா அம்மா அவர்களுக்கு முதலாமாண்டு அஞ்சலி..!

ஓகஸ்ட் 28, 2009

28-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ப் பதிவுலகில் தனக்கென்று ஒரு தனியிடத்தை பதித்துவிட்டு சென்றிருக்கும் “அனுராதா அம்மாவின்” முதல் நினைவு நாளான இன்றைக்கு அவரை ஒருகணம் நினைத்துப் பார்க்கிறேன்.

வெறும் சினிமாவும், வெற்று அரசியலும், சிரிக்க முடியாத நகைச்சுவைகளும், முதுகு சொரியலும், நட்புக்கு சோப்பு போட்டு கும்மியடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பதிவுலகில் இப்படியும் இதனை ஒரு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதை தைரியமாகச் செய்து காட்டிய அனுராதாம்மாவின் தொண்டு மகத்தானது.

நோய் தந்த துயரையும், சித்ரவதையையும் அவரது உடல் எப்படித்தான் தாங்கியதோ தெரியவில்லை.. ஆனால் அதைப் படிக்கின்றபோதெல்லாம் அதே போன்ற உணர்வு எனக்குள்ளும் எழுந்தது.

இப்போதும் எனக்குத் தெரிந்த, உரிமையுள்ள பெண்குலத்தாரிடம் இந்த வலைப்பதிவை அறிமுகப்படுத்தி வைத்தபடியேதான் உள்ளேன். இதனைப் படித்து ஒருவராவது தற்காப்பு முயற்சிகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றாரென்றால் அதுவே அனுராதாம்மாவின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

இந்த நேரத்தில் தானும் அந்த நோயைத் தாங்கிய ஒரு மனப்பான்மையில் சுழன்று, உழன்று எல்லாவகையிலும் அம்மாவுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை கடமையாகச் செய்த அவருடைய அன்புக் கணவர் திண்டுக்கல் சர்தார் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

அம்மாவின் எழுத்தை இந்த வலையுலகம் முடிந்தவரை தங்களது இல்லத்துப் பெண்களுக்கு அறிமுகம் செய்து அவர்களுக்குள்ளும் இந்த நோய் குறித்த ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவிக்க வேண்டுமாய் அனுராதா அம்மாவின் இந்த நினைவு நாளில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..