Archive for the ‘தா.பாண்டியன்’ Category

ஈழப் போராட்டம் – சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுக்காதீர்! தா.பாண்டியனிடம் ஒரு பகிரங்க வேண்டுகோள்!!

நவம்பர் 11, 2008

12-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நான், எழுதிய அண்ணன் வைகோ அவர்களுக்கான கடிதமும், அண்ணன் தொல்.திருமாவளவனின் உளறல் பேச்சு பற்றிய பதிவும் தற்செயலாக அடுத்தடுத்து வெளிவருவதுபோல் அமைந்துவிட்டன.

அண்ணன் தொல்.திருமாவளவனின் உளறல் பேச்சு பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டம் ஒன்று மிக சுவாரசியமாக இருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் திரு.தா.பாண்டியன் அவர்களைக் கேள்வி கேட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேனீ இணைய தளத்தில் எழுதியிருந்ததன் பிரதிதான் அது.

இருந்தாலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை பற்றி வேறொரு கோணத்தில் பார்க்கப்பட்டிருப்பதால், பதிவர்களின் பார்வையில் இப்பிரதி விழவேண்டு்ம் என்பதற்காக இங்கு தனிப்பதிவாக இடுகிறேன்.


ஈழப் போராட்டம் – சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுக்காதீர்! தா.பாண்டியனிடம் ஒரு பகிரங்க வேண்டுகோள்!!

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ் மாநிலக் கிளையும், அதன் செயலாளர் தா.பாண்டியன் அவர்களும் இலங்கை தமிழர் பிரச்சினை சம்பந்தமாக திடீர், திடீரென எடுத்துவரும் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளால் இலங்கை தமிழ் இடதுசாரி மற்றும் முற்போக்கு தமிழ் ஜனநாயக சக்திகள் பெரும் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளன.

தற்போது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் தா.பாண்டியனும் அவரது கட்சியினரும், இலங்கை விடயங்களில் எடுத்த சில நிலைப்பாடுகள், ஈழத்து தமிழ் இடதுசாரி –ஜனநாயக சக்திகளை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியதை இந்தச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது அவசியமானது.

முதலாவது விடயம், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1983 ஆண்டு முதல் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்றுவரை, தமிழ்நாட்டின் தீவிரவாத தமிழ் தேசியவாத சக்திகள் ஈழத்தமிழர் பிரச்சினையை முதன்மைப்படுத்தி வந்துள்ளன.

அந்த நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ன நிலையில் இருந்தது?

அப்பொழுது சோவியத் யூனியனுக்கும், இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்துக்குமிடையில் மிக நெருங்கிய நட்புறவு இருந்ததால், சோவியத் சார்பாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தமிழரின் இனப் பிரச்சினை விவகாரத்தில் சொந்தக்கொள்கை எதுவுமின்றி, காங்கிரஸ் அரசாங்கத்தின் பின் இழுபட்டுச் சென்றது.

அதுமட்டுமன்றி, தா.பாண்டியன் தனது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவின் வேகம் போதாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, தனிக்கட்சி ஒன்று அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மிக நெருக்கமாகச் செயல்பட்டார்.

இந்தக் காலக்கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) யைப் பொறுத்தவரையில், இலங்கை தமிழர் பிரச்சினையில் ஓரளவு சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

1990ல் சோவியத் யூனியன் தகர்ந்துபோன பின்னர், அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாரி வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நின்றுபோனதுடன், காங்கிரஸ் கட்சியின் கவனிப்பும் இல்லாமல் போனது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரதூரமாக நலிவடைந்துபோனது.

இரண்டாவது விடயம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பருத்தித்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையா அவர்களின் நினைவு தினக் கூட்டமொன்றினை, 2003ம் ஆண்டில் அவரது நினைவுக்குழு கொழும்பு – பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஒழுங்கு செய்தது. அக்கூட்டத்திற்கு தா.பாண்டியன் பிரதம பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு பேசிய பாண்டியன், நினைவு தினக் கூட்டமொன்றில் பேசுவதற்காக தான் இலங்கைக்கு செல்லப்போவதாக தனது மனைவியிடம் சொன்னதும் தனது மனைவி, ‘இலங்கை தமிழர்களை நம்பியா, அங்கு செல்கிறீர்கள்?’ என வினவியதாக குறிப்பிட்டார். தனது மனைவி அவ்வாறு கேட்டதற்கு காரணம், தமிழர்கள் தமக்கு உதவி செய்த ராஜீவ் காந்தியை எவ்வித நன்றிக்கடனும் இல்லாமல் மனித வெடிகுண்டு மூலம் கொலைசெய்துவிட்டார்கள் (ராஜீவ் காந்தியை கொலைசெய்தது தமிழர்கள் அல்ல, புலிகள்) என்பதுதான் என பாண்டியன் விளக்கம் அளித்தார்.

அத்துடன் புலிகள் ராஜீவ் காந்தியை கொலைசெய்த சம்பவத்தின்போது, தானும் ராஜீவுடன் கூடச் சென்று, காயமடைந்ததால், தனது மனைவி அவ்வாறு கேட்டதற்கு இன்னொரு காரணம் எனவும் குறிப்பிட்டார். பொன்.கந்தையா அவர்களின் நினைவு தினக் கூட்டத்தில் தா.பாண்டியனின் இந்த விவேகமற்ற, தவறான பேச்சு உடனடியாகவே இலங்கையில் எதிர்ப்பலைகளை கிளப்பிவிட்டது.

புலிகளின் ஊடகங்கள் மட்டுமின்றி, புலிகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துவரும் தினக்குரல், வீரகேசரி, உதயன் போன்ற தினசரிகளும் பாண்டியனை மட்டுமின்றி, அக்கூட்டத்துக்கு அவரை அழைத்துவந்த இலங்கை கம்யூனிஸ்ட்டுகளையும் ~வாங்குவாங்கென்று வாங்கி| பல நாட்களாக கட்டுரைகள் எழுதித்தள்ளின. இதனால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி, பொதுவாக தமிழ் இடதுசாரி – ஜனநாயக சக்திகளும் பெரும் சங்கடத்துக்குள்ளாயினர். ஆனால் பாண்டியன் தனது பேச்சு பற்றி மேலதிக விளக்கங்கள் எதுவும் கொடுத்து, தனது இலங்கை சகாக்களை நெருக்கடியிலிருந்து மீட்க முனவரவில்லை.

மூன்றாவதாக, இவ்வருடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தேசிய மாநாடுகள் முறையே ஆந்திராவின் விஜயவாடா நகரிலும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரிலும் நடைபெற்றன.

வழக்கமாக தனது மாநாட்டுக்கு ஜே.வி.பியை அழைக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, ஜே.வி.பி தமிழ் மக்களின் பிரச்சினையில் தொடர்ச்சியாக எடுத்துவரும் தவறான நிலைப்பாடு காரணமாக, அக்கட்சியை இம்முறை தனது மாநாட்டுக்கு அழைக்கவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி பற்றி எவ்வித மதிப்பீடுமின்றி தனது மாநாட்டுக்கு அழைத்தது. அதுமாத்திரமின்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இன்றுவரை ஜே.வி.பியுடன் சகோதர உறவுகளைப் பேணியும் வருகிறது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தா.பாண்டியன் குழுவினர் இலங்கை தமிழர் பிரச்சினையில் தற்போதைய தீவிர தமிழ் தேசியவாத நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னர், தாம் நீண்டகாலமாக உறவு வைத்திருக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் எவ்வித கலந்துரையாடலையும்கூட நடாத்தவில்லை என்று தெரிய வருகிறது.

இலங்கை அரசு ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு, இந்திய மத்திய அரசு ஒத்தாசை புரிவதாக குற்றம்சாட்டி, தமது கட்சியின் தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட பாண்டியனின் கட்சி, இலங்கையில் அவர்களது சகோதர கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிடமும் அந்தக் கோரிக்கையை விடுத்திருக்க வேண்டும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.யூ. குணசேகர – இலங்கை அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருக்கிறார் – அவர்களை ஏன் பதவி விலகக்கோரவில்லை? தமிழகத்திற்கு ஒரு கொள்கை இலங்கைக்கு வேறொரு கொள்கையா?

ஈழத்தமிழருக்கான உண்ணாவிரதத்தை தமிழ்நாட்டில் முதலில் ஆரம்பித்து வைத்து, தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சிக்கு வழிவகுத்துக் கொடுத்த நீங்கள் உண்மையில் சாதித்தது என்ன? உங்கள் உண்ணாவிரத மேடையில், தமிழக அரசியலின் செல்லாக்காசுகளும் புலிப்பினாமிகளுமாகிய வை.கோபாலசாமி, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் போன்றோருக்கு களம் அமைத்துக்கொடுத்ததின் மூலம், மறைமுகமாக பாசிசப்புலிகளுக்கு உதவியதைத் தவிர வேறென்ன செய்தீர்கள்?

பி.பி.சிக்கு நீங்கள் அளித்த பேட்டியில் புலிகள் மற்றவர்களை கொலைசெய்வதை நிறுத்தவேண்டும் என பட்டும் படாமல் கூறினாலும், புலிகள் ஒருபோதும் அதை நிறுத்தப்போவதில்லை என்பதை அவர்களின் வரலாற்றிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

உலகில் எங்காவது அகிம்சாவாதிகளாக மாறி, புலால் உண்பதை நிறுத்திவிட்டு புல்லைத்தின்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது’என்பது சும்மா வந்த பழமொழியல்ல. பிரபாகரன் உருவாக்கி வைத்துள்ள புலிகளும் தமது நரமாமிச வேட்டையை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என்பதே வரலாறு கற்பிக்கும் உண்மை.

“போர் நிறுத்தத்திற்கு தாங்கள் தயார்” என புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அறிவித்ததைத் தொடர்ந்து, நீங்கள் உடனடியாக துள்ளிக்குதித்து, இந்திய அரசு இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு நிர்ப்பந்திக்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளீர்கள். அதன் மூலம் நீங்கள் வெளிப்படையாகவே புலிகளை தற்போதைய அழிவிலிருந்து காப்பாற்றும் பணியில் இறங்கியுள்ளீர்கள். ஏனெனில் இலங்கைத் தமிழர்களான எமக்கு உங்களைவிட புலிகளைப்பற்றி நன்கு தெரியும். இலங்கைத் தமிழர்கள் புலிகள் விடயத்தில் ~பழமும் தின்று கொட்டையும் போட்டவர்கள்| என்பதை நீங்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது வன்னியில் அரசாங்கத்தால் நடாத்தப்பட்டு வரும் யுத்தம், 2005 ஆண்டில் புலிகளால் தொடங்கப்பட்ட வலிந்த தாக்குதலுக்கான பதிலடியே என்பதுடன், அது நிராயுதபாணிகளான பொதுமக்களுக்கு எதிரானதல்ல, முற்றுமுழுதாக ஆயதம் தரித்து நிற்கும் புலிகளுக்கு மட்டுமே எதிரானது.

அதனால்தான் புலிகள் தமது தமிழ்நாட்டு பினாமிகளை மட்டுமின்றி, தமது ஈழத்து பினாமிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் தமிழ்நாட்டுக்கு அனுப்பி, போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி வழமைபோல் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

அதற்காகவே தற்போது புலிகளின் பினாமியாக மாறிவிட்ட, உங்கள் முன்னாள் ‘கம்யூனிஸ்ட்’தோழர் கா.சிவத்தம்பி போன்றோரையும் அனுப்பி, உங்களையும் வளைத்துப் போட்டுள்ளார்கள். வழமையாக மேற்குலகின் மூலம் போர்நிறுத்தத்திற்கு முயற்சிக்கும் புலிகள், மேற்குலகம் புலிகளை கைவிட்டுவிட்டதால், சுலபமாக விலைபோகக்கூடிய தமிழக அரசியல்வாதிகளை அணுகியுள்ளனர்.

ஆனால் இலங்கையில் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு போர்நிறுத்தத்தையும், புலிகள் எவ்வாறு துச்சமாக மதித்து செயல்பட்டு வந்துள்ளார்கள் என்பதை ஈழத் தமிழ் மக்கள் மட்டுமின்றி சர்வதேசமும் நன்கு அறியும்.

தற்போது போர்நிறுத்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டால் அதனைப் பாவித்து தம்மைப் பலப்படுத்திக்கொண்டு, மீண்டும் புலிகள் இன்னுமொரு போருக்குத் திரும்புவதற்கே அது பயன்படும் என்பதை தமிழக அரசியல்வாதிகளைத் தவிர, உலகத்திலுள்ள மற்றெல்லோரும் நன்கறிவர்.

நீங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முக்கியமாக விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால், தமிழ் மக்களின் பிரச்சினை வேறு, புலிகளின் பிரச்சினை வேறு என்பதையேயாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பதற்குத்தான் புலிகள் போராடுகிறார்கள் என்றால், பல ஆயிரக்கணக்கான ஏனைய விடுதலை இயக்கப் போராளிகளையும், ஜனநாயகவாதிகளையும், இடதுசாரிகளையும், சிறீசபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா, மாத்தையா, நீலன் திருச்செல்வம் உட்பட பல தமிழ் தலைவர்களையும் ஏன் கொலை செய்தார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டின் புலிப் பினாமிகள், சினிமா நடிகர்கள் இதை விளங்கிக் கொள்ளாதது போல நடிக்கிறார்கள் என்றால், நீங்கள் எதற்காக அந்தக் கொயபல்ஸ் கூட்டத்துடன் சேர்ந்திருக்கிறீர்கள் என்பதுதான், எமக்கு விளங்கிக் கொள்ளமுடியாத புதிராக இருக்கின்றது.

இலங்கைத் தமிழருக்கான ஒரு நிம்மதியான, நீடித்த தீர்வு பின்வரும் முறையில்தான் அமைய முடியும் என்பதை நீங்கள் முதலில் விளங்கிக் கொள்வது அவசியம்.

அதாவது, இலங்கையில் முயற்சிக்கப்பட்ட எல்லாத் தீர்வு முயற்சிகளுக்கும் தடையாகவும், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைக்கு ஒரு அச்சுறுத்தலாகவும், விளங்குகின்ற புலிகளிடமிருந்து தமிழ்மக்கள் முதலில் விடுவிக்கப்பட வேண்டும்.

அந்த விடுதலையை இன்றுள்ள நிலையில் மாற்றுத் தமிழ் இயக்கங்களோ, இலங்கையிலுள்ள இடதுசாரிகளோ பெற்றுத்தரக்கூடிய நிலையில் இல்லை. இலங்கை அரசாங்கத்தால், அதாவது இலங்கை அரச படையால் மட்டுமே, புலிகளிடமிருந்து தமிழ்மக்களை விடுவித்தல் என்பது சாத்தியமாகும்.

இதனைத்தான் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசாங்கம் செய்தது. (இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் தமிழ்மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்று நீங்கள் கருதினால், கிழக்குமாகாணத்தில் இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டபோது, கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்காக குரலெழுப்பாமல் நீங்கள் எல்லாம் எங்கு ஒழிந்து கொண்டீர்களோ தெரியவில்லை. அதனால்தான் தறபோதைய உங்கள் ஈழத் தமிழர் ஆதரவுக்கு பின்னால், தமிழ் அல்லது மனிதாபிமான உணர்வைவிட, புலிகளின் பணப்பட்டுவாடா விடயம்முக்கிய பங்கு வகிக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எமக்கெல்லாம் ஏற்படுகிறது!) அதைத்தான் இப்போது வடக்கிலும் இலங்கை அரசாங்கம் இப்பொழுது செய்கிறது.

கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையின்போது புலிகளின் பிடியிலுள்ள தமிழ் மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டை நோக்கியே ஓடிவந்தார்கள். வடக்கு மாகாணத்திலும் (மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி) புலிகளின் பிடியிலுள்ள தமிழ்மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டை நோக்கியே ஓடிவருகின்றார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

புலிகளை அப்புறப்படுத்திய பின்னர், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காணவேண்டியது இலங்கை அரசின் தட்டிக் கழிக்க முடியாத கடமையாகும்.

புலிகளை அழித்த பின்னர், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினை இலங்கை அரசு முன்மொழியுமென யாராலும் அறுதியிட்டும் கூறமுடியாது. எனவே புலிகளைத் தோற்கடித்துவிட்டு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணும்படி இலங்கை அரசைக் கோருவதையே, தமிழக இடதுசாரி சக்திகள் செய்ய வேண்டும். அதுவே சர்வதேச இடதுசாரிகளின் சரியான நிலைப்பாடாக இருக்கமுடியும்.

அதைவிடுத்து, ஒவ்வொரு முறையும் புலிகள் அழிவை நெருங்கும்போது, ஏதாவதொருவெளிநாட்டு சக்தி புலிகளை பாதுகாத்து விடுவிப்பதின் மூலம், ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படாமல் இழுபட்டுச் செல்வதற்கு உதவுவதாகவே முடியும். இதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.

இலங்கையின் இடதுசாரிகளான நாங்கள் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் அல்லது ஏற்க மறுத்து, புலிகளை காப்பாற்றும் தவறான முயற்சியில் ஈடுபடுவீர்களாக இருந்தால், அது நீங்கள் புலிகளால் கொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் விடுதலைப் போராளிகள், பாராளுமன்ற அரசியல்வாதிகள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள் ஆகியோருக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல, ஈழத் தமிழருக்கு செய்யும் துரோகமுமாகும்.

அதுமட்டுமல்லாது, எதிர்காலத்தில் தமிழக மக்களும், ஏன் உங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் கூட, புலிகளின் உண்மையான தன்மையை விளங்கிக் கொள்ளும்போது, அவர்களின் விரல்கள் உங்களைக் குற்றம்சாட்டி நீள்வதைத் தடுக்க முடியாது போகும்.

இரண்டாம் உலகயுத்த காலத்தில், ஹிட்லர் தலைமையில் உலகை கபளீகரம் செய்ய முற்பட்ட பாசிச சக்திகளை, சோசலிச சோவியத் யூனியன் தலைமையில் எதிர்த்துப் போராடி தோற்கடித்து, உலக மக்களை அழிவிலிருந்து காப்பாற்றிய பெருமைமிக்க பாரம்பரியத்தில் வந்த, இந்திய – இலங்கை கம்யூனிஸ்ட்டுகளான நீங்களும் நாங்களும், இலங்கைத் தமிழ் மக்களை கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அழுத்திவரும் கொடிய புலிப் பாசிசத்தை அழிக்கத் தவறுவோமாக இருந்தால், வருங்கால வரலாறு எம்மை மன்னிக்காது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் உங்கள் தவறான அணுகுமுறையைத் திருத்துவதற்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை என்பதை, இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது எமது கடமையெனக் கருதுகிறோம்.

http://www.thenee.com/html/111008-4.html

அனுப்பியவர் : VATHA