09-03-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டி ஜெயலலிதா அறிவித்த உண்ணாவிரதம் நடந்து கொண்டிருக்கிறது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் அருகேதான் மேடை போட்டிருக்கிறார்கள். மேடையில் அவருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், வரதராசன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், பஷீர் அகமது, ஷேக் தாவூத் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். வைகோ இன்னும் வரவில்லை.
கூட்டம் அமோகமாக கூடியுள்ளது. மேடையின் கீழே பெரிய உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு அதில் நிதியுதவி பெறப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கு மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் எப்படி என்றுதான் நமக்குத் தெரியவில்லை. நமக்குத்தான் பொருளாதார தட்டுப்பாடு போலிருக்கிறது. அம்மாவுக்கு இல்லை போலும்.. கத்தை, கத்தையாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 5 லட்சம் ரூபாயை உண்டியலில் போட்டு முதல் போணியை ஆரம்பித்துவைத்தார்.
ஜெயலலிதா தனது பேச்சில் முட்டாள்தனமாக சீமானை ஒரு பிடிபிடித்தார். சீமானின் பேச்சு முழுவதும் கலைஞரின் முழு ஒப்புதலோடும், அவருடைய வழிகாட்டுதலின்படியும்தான் நடந்தது, நடக்கிறது என்று விஷயத்தை கலைஞரின் மேல் திருப்பினார். இது ஒரு அபத்தம் என்றால் இன்னொன்றை தா.பாண்டியன் வெளியிட்டார்.
வாழ்த்திப் பேச வந்த தா.பாண்டியன் சொன்ன ஒரு விஷயம் கலைஞர் பற்றிய பல பரிணாமங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறது.
தா.பாண்டியன் பேசியதில் இருந்து சிலவைகள்..
“ஈழத்தில் போரை முற்றிலுமாக நிறுத்தியாக வேண்டும்’ என்றோம். ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுவோம்’ என்றார். போனோம். பேசினோம்.. ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியவைகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம்’ என்றார். பல நாட்கள் ஆனது.. ஈழத்தில் தினமும் 1000 மக்கள் கொல்லப்பட்டார்கள். கடிதம் வந்ததா என்று இதன் பின்னர் கேட்டோம். ‘வரவில்லை’ என்றார். இப்போதும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் ‘என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்றோம். ‘மனிதச் சங்கிலி’ என்றார். ‘சரி..’ என்ற ஒத்துக் கொண்டோம்.. கொட்டுகின்ற மழையில் சங்கிலியில் கைகோர்த்து நின்றோம்.. அவரும் காரில் வலம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனார். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அவருடைய வயது அப்படி. உடல்நலமில்லை. அது வேறுவிஷயம்.. சங்கிலியும் முடிந்தது. அங்கே ஈழத்தில் படுகொலைகள் நின்றபாடில்லை. இதையும் போய் சொன்னோம்.. ‘வேறு என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்றோம்.. ‘என்ன செய்யலாம்’ என்றார். ‘சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்..’ என்றோம். ‘அ.தி.மு.க. இதனை எதிர்த்தால் என்ன செய்வது..?’ என்றார். ‘அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.. நிச்சயம் ஆதரிப்பார்கள்..’ என்றோம். அதே போல் இந்தச் சட்டப் பேரவையில் முதன்முதலாக ஒரு தீர்மானம் அனைத்துக் கட்சித் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது என்றால் அது ஈழத்தில் போரை நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம்தான்..” என்றார் தா.பாண்டியன்.
பிழைக்க வழியற்று உயிருக்குப் பிழைத்து காடுகளுக்குள் தப்பியோடிக் கொண்டிருக்கும் சக மக்களுக்காக எதைச் செய்தாவது போரை நிறுத்தச் சொல்லி அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னால், நம்மால் முடிந்ததைத்தான் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு தீர்வைச் சொல்லும்போதுகூட உள்ளூர் அரசியலை நினைத்து மறுதலிக்கும் கேவலமான அரசியலைத்தான் இது அப்பட்டமாகக் காட்டுகிறது.
அ.இ.அ.தி.முக. ஆதரித்தால் என்ன..? ஆதரிக்காமல் போனால் என்ன..? உங்களுடைய கடமையை நீங்க செய்ய வேண்டியதுதான..? அ.தி.மு.க. ஆதரிக்காவிட்டால் என்ன செய்ய என்று கேட்பது செய்ய மனசில்லாமல் நடிக்கின்ற ஒப்பனைக்கார மனதைத்தான் காட்டுகிறது.
அப்படியென்றால் அனைத்து அரசு முடிவுகளிலும் அ.தி.மு.க.வின் ஆதரவைக் கேட்டுப் பெற்று, அவர்களுடைய ஆலோசனையின்படிதான் தி.மு.க. அரசு நடந்து கொள்கிறதா..? அவர்கள் வேண்டாம் என்றால் இவர்கள் விட்டுவிடுகிறார்களா..? அல்லது அவர்கள் வேண்டும் என்றால்தான் செய்து கொண்டும், கொடுத்துக் கொண்டுமிருக்கிறார்களா..? என்னே கலைஞரின் நகைச்சுவை..
இதற்குப் பதிலாக, “எனக்கு எதுவும் செய்ய மனமில்லை..” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போய் விடலாமே..
எதற்கு இந்த நடிப்பு..?