29-08-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இசைஞானி இளையராஜாவின் தெய்வீகக் கானங்களில் ஒன்று ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் பாடலான ‘ஆகாய கங்கை’ பாடல். அந்தப் பாடலை தனிமையில் வெறும் பாடலாகக் கேட்கும்போதெல்லாம் மனதில் எதையோ செய்கிறது.
பாடலின் துவக்கத்தில் வரும் ஜானகியின் ஹம்மிங் வாய்ஸை கேட்டவுடன் அதற்குள் நம்மை ஈர்க்க வைக்கிறது. இவ்வளவு அருமையான பாடலை திரைப்படத்தில் பார்த்தபோது சப்பென்று இருந்தது.
ரேஸ்கோர்ஸ் மைதானத்திலேயே முழுக்க முழுக்க ஷூட் செய்யப்பட்டிருக்கும், இந்தப் பாடல் காட்சி பாடலின் தரத்தை வெகுவாகக் குறைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பாடல் பற்றிய எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் சொன்ன விஷயம் திரைப்படத் துறையில் இருக்கும் சங்கடங்கள், சில விட்டுக் கொடுத்தல்கள், பிரச்சினைகள் பற்றி எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தது.
இந்த ஒரு பாடலை மட்டும் விட்டுவிட்டு மற்ற போர்ஷன்கள் அனைத்தையும் முடித்துவிட்டாராம் சக்தி ஸார்.. இந்த ஒரு பாடலையும் முடித்துவிட்டால் போதும் என்கிற நிலை இருக்கும்போது ரஜினியும், ஸ்ரீதேவியும் மிக மிக பிஸியாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் டேட் கிடைத்தால் இன்னொருவரின் டேட் கிடைக்காமல் போகிறது. இப்படியே ஒரு மாதம் முழுக்க கண்ணாமூச்சி நடந்திருக்கிறது.
எப்படியோ இருவரிடமும் ப்ரீயான டேட்களைக் கேட்டபோது தொடர்ச்சியான இரண்டு, மூன்று நாட்கள் கிடைக்கவே இல்லையாம். சரி விட்டுவிட்டு எடுத்துவிடலாம் என்றெண்ணத்தில் பாடல் காட்சிகளை ஊட்டியில் எடுப்பதற்காக பிளான் செய்திருக்கிறார் சக்தி ஸார்..
ஆனால் அதற்குள்ளாக ஸ்ரீதேவிக்கு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் போது காலில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் மாஞ்சா கட்டுபோட்டு படுத்துவிட்டாராம். ரஜினியை அந்தத் தேதியில் விட்டுவிட்டால் மீண்டும் ஒரு மாதம் கழித்துத்தான் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட.. தயாரிப்பு தரப்பு சக்தி ஸாரை போட்டு நெருக்க.. என்ன செய்வது என்ற குழப்பமாகிவிட்டதாம்.
இதன் பின்புதான் ஷூட்டிங்கை ஒரே நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ரஜினியிடம் ஓகே வாங்கியிருக்கிறார். மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதேவியிடமும், அவரது அம்மாவிடமும் பேசி “வேறு வழியில்லை. வந்தே தீரணும்..” என்று கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்தார்களாம்.
ஸ்ரீதேவியின் காலில் போட்டிருந்த மாவுகட்டு வெளியே தெரியக் கூடாது என்பதால் சேலை அணிவித்தும், அவரை உட்கார வைத்தும், ரஜினியால் தூக்க வைத்தும், ஸ்ரீதேவியின் சிற்சில சிங்கிள் ஷாட்டுகளையும் வைத்தும் பாடல் காட்சியை முடித்துவிட்டாராம் சக்தி ஸார்.
முழுக் கதையையும் சொல்லி முடித்துவிட்டு, “எனக்கும் அந்தப் பாடலை இப்படி அவசரக்கதியாக படமாக்கியதில் திருப்தியில்லைதான் தம்பி.. ஆனா வேறென்னெ செய்றது..? படத்தை சொன்ன தேதில ரிலீஸ் செஞ்சாகணும்.. தயாரிப்பாளரையும் பார்க்கணும்ல..?” என்றார் சக்தி ஸார்.
காவியமாக படைத்திருக்க வேண்டியது.. வியாபாரச் சூழலால் இப்படி கற்பிழந்து போனது..!!!