Archive for the ‘தமிழ்ஸ்டூடியோ’ Category

தமிழ் ஸ்டூடியோ.காம் வழங்கிய விருதும், சில குறும்படங்களும்..!

மார்ச் 17, 2009

17-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘வலைப்பதிவுகள் எழுதுவதால் என்ன புண்ணியம்..? பைசா, காசுக்கு பிரயோசனமில்லையே..?’ என்ற புலம்பல் என் மனதிலும் நீண்ட நாட்களாக ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.

என்னிடம் கேட்பவர்களுக்கு நான் சொன்ன சமாதானம், ‘எனது எழுத்து நிற்காமல் ஓடுகிறதே.. எழுத்து மேலும், மேலும் வருகிறதே.. வளர்கிறதே..!’ என்பதுதான். இதைத் தாண்டி என்ன பயன் என்ற கேள்விக்கு விடை கொடுக்க சில சமயங்களில் எனது நாவு முன் வந்தும், அடக்க உணர்வில் அடங்கிப் போகிறேன்.. ஆனாலும் பல சமயங்களில் மனதில் ஏற்படும் வெறுப்புணர்வு அடங்கிப் போகுமளவுக்கு, பின்னூட்டங்களில் ஆறுதல்களும், பாராட்டுக்களும் வந்து குவிகின்றன.

இப்போது அதனையும் தாண்டி சில அங்கீகாரங்கள் கிடைக்கின்றபோது இன்னும் நிறைய எழுத வேண்டும்.. எழுதியே ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

முதல் நிகழ்ச்சியாக இந்த மாதத் துவக்கத்தில் ‘முருகப் பெருமான்’ நேரில் வந்து ‘நலம்’ விசாரித்தான். அசந்து போனேன், இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குமா என்று..!? இந்தச் சம்பவம் பற்றி பகிரங்கமாக இப்போது எதையும் வெளியில் சொல்ல முடியவில்லை. பின்பு வாய்ப்புக் கிடைத்தால், வந்த ‘முருகன்’ அனுமதித்தால் சொல்கிறேன்..

இரண்டாவது நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையன்று நடந்தது. ‘தமிழ்ஸ்டூடியோ.காம்’ என்கிற இணைய தளத்தினர் நடத்திய குறும்பட வட்ட மாதாந்திர நிகழ்ச்சியில், ‘இந்த மாதத்திய சிறந்த பதிவர்’ என்று சொல்லி விருது கொடுத்து, பணப் பரிசும் அளித்தார்கள். 400 ரூபாய் பரிசுத் தொகை. எல்லாம் முருகன் செயல்..!


மாதா மாதம் ஒரு பதிவரை தேர்வு செய்து அவருக்கு விருது கொடுக்கவிருப்பதாக அந்த இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திரு.அருண் தெரிவித்தார். சென்ற மாதம் தோழர் வினவு சிறந்த பதிவர் விருதினை வாங்கியிருந்தார். இந்த மாதம் நான்..

நிகழ்ச்சிக்கு பதிவர்கள் லிவிங்ஸ்மைல் வித்யா, தண்டோரா, வண்ணத்துப்பூச்சியார் வந்திருந்தார்கள். மேலும் பல குறும்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஆர்வலர்கள், ரசிகர்கள் என்று திரண்டிருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னை எழும்பூர் மியூஸியத்தின் எதிரில் அமைந்திருக்கும் இஸாக் அரங்கில் நடைபெற்றது.பரிசினைப் பெற்றுக் கொண்டு வலைத்தளம் ஆரம்பித்தல், அதனைப் பயன்படுத்துதல், படித்துப் பயன் பெறுதல் பற்றி சில நிமிடங்கள் மட்டுமே நான் பேசினேன்.. வந்திருந்தோரையும் வலைத்தளம் ஆரம்பித்து எழுத வரும்படியும் அழைத்தேன்.


அந்த நிகழ்வுக்கு முன்னும், பின்னும் ஆவணப் படங்களும், சில குறும்படங்களும், திரையிடப்பட்டன.

நான் சென்ற மதியப் பொழுதில் கானா தேசத்தில் கை, கால் இழந்த உடல் ஊனமுற்றோர்களுக்காக ஒரு சுய தொழில் வழங்கும் திட்டத்தைத் துவக்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வரும் இம்மானுவேல் என்கிற இளைஞன் பற்றிய ஆவணப் படம் திரையிடப்பட்டது.

இம்மானுவேல் என்ற அந்த இளைஞர் தனது வலது காலை இழந்தவர். செயற்கைக் கால் பொருத்தியிருப்பவர். இந்த நிலைமையிலேயே சைக்கிளிங் போட்டியில் கானா தேசத்தில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். உலக அளவில் நடைபெறும் சைக்கிளிங் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார்.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகைகளையும் வைத்து தன்னுடைய ஊரில் உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ஊனமுற்றோருக்கு சுயதொழில் செய்யும் வாய்ப்பு, படிப்பு, தொழிலுக்கான உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கி அவர்களது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியிருக்கிறார் இந்த இம்மானுவேல்.

அந்த இளைஞர் எங்கெல்லாம் சென்றாரோ, செல்கிறாரோ அங்கெல்லாம் கேமிராவுடன் சென்று அவருடைய வாழ்க்கைப் பயணத்தை படமாக்கியிருக்கிறார்கள். இம்மானுவேல் அமெரிக்கா சென்று போட்டியில் ஜெயிப்பது.. ஹாலிவுட் நடிகர் ராபின்ஸ் வில்லியம்ஸிடம் பரிசு வாங்குவது. நியூயார்க்கில் அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளரை சந்திப்பது என்று அவருடைய வாழ்க்கையோட்டமும் பதிவாகியிருக்கிறது.

வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பும் அவரை கானா தேசத்து மன்னர் தனது அரண்மனைக்கு அழைத்து பாராட்டுகிறார். அவருடன் இம்மானுவேல் நிறுவனத்தின் உதவிகளால் சிறு தொழில்களைக் கற்று அதன் மூலம் தொழில் செய்து வரும் உடல் ஊனமுற்றவர்களையும் பாராட்டி பரிசளிக்கிறார். இவர்களால் கானா தேசத்துக்கே பெருமை என்கிறார் மன்னர்.

தொடர்ந்து இம்மானுவேலின் திருமணம், முதல் குழந்தை பிறப்பு வரையிலும் ஆவணப் படமாக்குதல் தொடர்ந்திருக்கிறது.

இது போன்ற விழிப்புணர்வுமிக்கப் படங்கள் உலகம் முழுவதிலும் உடல் ஊனமுற்றவர்கள் மத்தியில் திரையிடப்பட வேண்டும்.. மிக, மிக சிரத்தையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப் படம்..

குறும்படங்கள்

மாலை நேர குறும்படத் திரையிடலின்போது மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன. முதல் படம் கண்டு கேட்டு..!

ராஜ் டிவியில் தற்போது பணியாற்றி வரும் டென்சிங் என்பவர் இக்குறும்படத்தினை இயக்கியிருக்கிறார்.


ரேடியோவில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன் மீது ஒரு வாசகிக்குக் காதல். எத்தனை நாட்கள் காதலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது. நேரில் சந்தித்து காதலைச் சொல்லிவிடலாம் என்று நினைத்து அவனைச் சந்திக்க ரேடியா அலுவலகத்துக்கு நேரில் செல்கிறாள். அங்கே அவள் அந்த காதலனான ரேடியோ ஜாக்கியைச் சந்திக்கக் காத்திருக்கும் தருணத்தில், அவள் காதில் மாட்டியிருந்த காது கேட்கும் கருவியின் பேட்டரி செயலிழக்கிறது. அந்தத் தவிப்பில் அவள் இருக்கும்போது கண் பார்வையற்றவனான அந்த ரேடியோ ஜாக்கி வெளியே வருகிறான்.

பேட்டரி வாங்க வெளியே வரும் அந்தப் பெண், கடைகள் ஏதும் பக்கத்தில் இல்லாததால் என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே மீண்டும் உள்ளே வருகிறாள். அங்கே கண் பார்வையற்ற ஜாக்கியும் யாரும் இல்லாமல் குழம்பிப் போய் அமர்ந்திருக்கிறான்.

தான் சந்திக்க வந்த ஜாக்கி நிச்சயம் இவனாக இருக்க முடியாது என்பது அவளுடைய எண்ணம். தன்னைச் சந்திக்க வந்தவளாக இருந்திருந்தால் இந்நேரம் தன்னிடம் பேசியிருப்பாளே என்ற ஆதங்கத்தில் அந்த ஜாக்கியும் இருக்க.. நிமிடங்கள் கரைகின்றன. இருவருமே ஏதோ ஒரு ஏமாற்றத்தில் அவரவர் வந்த வழியே பிரிந்து செல்ல..

தொடர்ந்து திரை இருட்டாக.. ஆண் குரல் ஒலிக்கிறது. “என்ன எப்பப் பார்த்தாலும் ரேடியோவே கேட்டுக்கிட்டிருக்க..?” என்று.. “இதனாலதான நான் உங்களை கல்யாணமே பண்ணினேன்..” என்கிறது பெண்ணின் குரல். இருவரும் எப்படியோ திருமணம் செய்துவிட்டதாகக் காட்ட குறும்படம் நிறைவடைகிறது.

அவர்கள் பிரிந்து செல்லும்போதே படத்தை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து..! ஆனாலும் எடுத்த விதமும், புதுமையான சிந்தனையும் பாராட்டுக்குரியது..!

படம் முடிந்த பின்பு கேள்விகளுக்குப் பதில் சொன்ன இயக்குநர் டென்சிங் “ராமன் தேடிய சீதை’ படத்திற்கு முன்பாகவே தான் இதனைச் சிந்தித்து கதை உருவாக்கம் செய்து வைத்திருந்ததாகவும், அதற்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..” என்றார். இந்த குறும்படத்தினை ராஜ் டிவியே தயாரித்திருக்கிறது.

இரண்டாவது குறும்படம் “சுயநலம்!”

நாம் அனைவரும் பார்க்கவே பயப்படும், அருவருப்பாக நினைக்கும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் விளிம்பு நிலை மாந்தர் ஒருவரின் கதையை அப்பட்டமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாட்சா.


தெருவில் கழிப்பிட சாக்கடைகள் அடைத்துக் கொண்டுவிட்டன. பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து முறையிடுகிறார்கள். சாக்கடையை சுத்தம் செய்யும் முனுசாமி அன்றைக்கு உடல் நலமில்லாமல் வீட்டில் இருக்கிறான். சாக்கடைத் தண்ணீரில் அவன் உடல் வளர்ந்து வந்ததால், வலிப்பு நோய் வந்து ஆபத்தில் இருக்கிறான் அவன். இனிமேல் குளிர்ந்த தண்ணீர் அவன் உடல் மேல் படக்கூடாது என்றிருக்கிறார் டாக்டர்.

மாநகராட்சி அதிகாரியோ முனுசாமியை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். அவனுடைய மனைவியின் எச்சரிக்கையையும் மீறி அங்கே வருகிறான் முனுசாமி. மாநகராட்சி அதிகாரி பொதுமக்களின் குறையை அவனிடத்தில் சொல்லி “ஜாக்கிரதையா ஏதாவது செஞ்சு முடிச்சிரு..” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பொதுமக்களுடன் அவர்கள் வசிக்கும் தெருவுக்கு வரும் முனுசாமி சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்கிறான். பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடைக்கப்பட்ட சாக்கடைக்கு வழி கிடைக்க, தேங்கி நின்ற தண்ணீர் தேக்கமில்லாமல் ஓடுகிறது..

கடமை முடிந்த திருப்தியோடு குழியில் இருந்து வெளியே வரும் முனுசாமி, தான் குளிப்பதற்காக கொஞ்சம் சுடுதண்ணீர் கேட்கிறான். இவ்வளவு நேரம் வருவானா..? மாட்டானா..? என்றெல்லாம் வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் இப்போது கதவடைக்கிறார்கள். சுடு தண்ணீர் தர மறுக்கிறார்கள். “சரி பரவாயில்லை.. நல்ல தண்ணியாவது குடுங்க.. குளிக்கணும்..” என்கிறான் முனுசாமி. அதற்கும் “முடியாது” என்கிறார்கள். “பைப்பாண்ட போய் நீயே அடிச்சுக் குளிச்சுக்க..” என்கிறார்கள்.

முனுசாமி சோர்வுடன் திரும்ப அவனுக்குள் இருந்த நோய் கண நேரத்தில் அவனைத் தாக்குகிறது. வலிப்பு வந்து கீழே விழுந்து துடியாய் துடிக்கிறான். நிமிடத்தில் இறந்தும் போகிறான். கூட்டம் இப்போதுதான் கூடி மோவாய்கட்டையில் கை வைத்து “என்னாங்கடி இது..?” என்கிறது..

மாநகராட்சி அதிகாரி ஓடி வந்து பார்க்கிறார். பதைபதைக்கிறார். “சொல்லித்தான அனுப்புனேன்.. அவன் கேக்குறதை கொடுங்கன்னு சொன்னனே.. இப்ப பார்த்தீங்களா.. ஒரு உசிரே போச்சு.. கொஞ்சம் சுடு தண்ணி கொடுக்குறதுல என்ன குறைஞ்சு போச்சு..? உங்களுக்காகத்தானே வந்தான்..” என்று ஆத்திரப்படுகிறார். அவனுடைய மனைவி கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து கதறுகிறாள். “போகாத.. போகாதன்னு சொன்னனே என் கணவா.. இப்படி போயிட்டியே..!” என்று அழுகிறாள்.

கூடியிருந்த கூட்டம் தங்களுக்குள்ளேயே யார் மீது குற்றம் சுமத்திக் கொள்வது என்று ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

அவர்களுக்காக உழைக்க வந்த ஒரு மனிதனை அவர்களுடைய கொடூரத்தாலேயே கொன்றுவிட்டார்கள். பொதுமக்களின் சுயநலத்தினால் ஒரு பொதுநலத் தொண்டன் பலியாகிவிட்டான் என்கிற கருத்தோடு படம் நிறைவடைந்தது.

இந்தக் குறும்படம் மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஜெயா டிவி நடத்திய குறும்படப் போட்டிக்காக எடுக்கப்பட்டதாம். ஜெயா டிவியிலும் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது படத்தினை பார்த்த கமல்ஹாசன் பட யூனிட்டாரை பெரிதும் பாராட்டியுள்ளார்.

மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள் திரைப்படத்தை. இதில் முனுசாமியாக நடித்தவர் நிஜமாகவே இந்த வேலையை செய்பவர்தானாம்.. இயக்குநர் ஒரு முறை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது இதே நபர் இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாராம். “அந்த நேரத்தில் அந்த இடத்தில் தோன்றியதுதான் இந்தக் கதைக்கரு” என்றார் இயக்குநர் பாட்சா.

இந்தக் குறும்படத்தால் இன்னொரு பெரிய உதவியும் அந்த நபருக்குக் கிடைத்துள்ளது. முனுசாமியாக நடித்தவருக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனராம். இவர் சாக்கடையை சுத்தம் செய்யும் வேலையை விரும்பிச் செய்வதால், அவர் மனைவி அவருடன் சண்டையிட்டுவிட்டு குழந்தைகளுடன் தனியே சென்றுவிட்டாராம். இவர் மட்டு்ம்தான் நாள் முழுவதும் ‘தண்ணி’யிலேயே மிதந்து வந்திருக்கிறார்.

ஜெயா டிவியில் இந்தக் குறும்படம் ஒளிபரப்பான பின்பு இதனைப் பார்த்த அவரது பிள்ளைகள் அப்பாவை விரும்பி பார்க்க வர.. இப்போது குடும்பமே ஒன்று சேர்ந்துவிட்டதாம். இதனை இயக்குநர் சொன்னபோது எனக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. ஒரு குறும்படம் எத்தகைய செயலைச் செய்திருக்கிறது பாருங்கள்..!

படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.. அருமையான முயற்சி..!

மூன்றாவது குறும்படம் – கழுவேற்றம்!’


ராஜா என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் எழுத்தாளர் தமயந்தியின் சிறுகதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.

இளைய மகன் வீட்டில் தங்கியிருக்கும் தாய் அங்கே மருமகளின் நொச்சு தாங்க முடியாமல் தவிக்கிறாள். மனைவி கணவனிடம் அவனுடைய அம்மாவை எங்கேயாவது கொண்டு போய்விட்டுவிட்டு வரும்படி சொல்கிறாள். இல்லாவிட்டால் தான் தனது அம்மா வீட்டுக்குப் போய்விடுவேன் என்று மிரட்டுகிறாள்.

இளைய மகன் சென்னையிலிருந்து மதுரையில் இருக்கும் தனது அண்ணனின் வீட்டிற்கு அம்மாவை அழைத்து வருகிறான். அங்கே அண்ணனின் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றிருப்பதாகத் தெரிகிறது.

பக்கத்து வீட்டுப் பையன் உதவியால் அண்ணனுக்கு போன் செய்து பேசுகிறான் தம்பி.. “இங்க எதுக்கு ‘அதை’ கூட்டிட்டு வந்த..? நான் வைச்சுக்க முடியாது..? எங்கிட்டாச்சும் கொண்டு போ..?” என்று எரிந்து விழுகிறான் அண்ணன்.. ஆசையாகப் பேசும் அம்மாவிடமும் இதையே சொல்லி பதிலைக்கூட எதிர்பார்க்காமல் போனை கட் செய்கிறான் மூத்தப் பிள்ளை. தொடர்ந்து இவர்கள் முயல, போன் சுவிட்ச் ஆஃப்.

இப்போது இளைய மகனும், அம்மாவும் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கிறார்கள். இரவாகிவிட்டது. பூச்சிகளின் சப்தம் மட்டுமே கேட்கிறது. அம்மா “பசிக்குதுப்பா” என்கிறாள் மகனிடம். “நான் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுச் செல்லும் இளைய மகன், அம்மாவை அப்படியே ‘அம்போ’ என்று விட்டுவிட்டு, பஸ் ஏறி சென்னை நோக்கி போகிறான்.

இங்கே அம்மா காத்திருக்கிறாள்.. காத்திருக்கிறாள்.. காத்திருக்கிறாள்.. நேரங்கள் கடக்க.. அவளுக்கு புரிந்துவிட்டது.. எழுந்து வாக்கிங் ஸ்டிக்கைப் பிடித்தபடியே நடக்கத் துவங்குகிறாள் என்பதோடு இந்தக் குறுங்காவியம் நிறைவடைந்தது.

இந்தப் படத்தில் அந்த அம்மா பல்வேறு கோணங்களில் அமர்ந்திருப்பதோடு படத்தினை நிறைவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்ராயம். ஆனாலும் பரவாயில்லை.. நிறைவாகவே செய்திருக்கிறார் இயக்குநர் ராஜா. பாராட்டுக்கள்..

ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரத்தில் சொல்லும் நீதியைவிட, வெறும் ஐந்தே நிமிடத்தில் நறுக்கென்று சொல்லி முடித்த இந்த குறும்படத்திற்கு பலமே இதனுடைய உயிரோட்டமான கதைதான்..! .

இது போன்ற குறும்படங்களை மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையன்று ‘குறும்பட வட்டம்’ என்கிற பெயரில் கூட்டம் நடத்தி திரையிட்டு வருகிறது ‘தமிழ்ஸ்டூடியோ.காம்’.

மாதம் 50 ரூபாய் கட்டணம் என்கிற சிறு தொகை அன்பளிப்புடன் இந்த நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள் இதன் இயக்குநர்கள். கூடவே இலக்கியக் கூட்டம் என்கிற தலைப்பிலும் மாதாமாதம் யாராவது ஒரு இலக்கிய ஆர்வலரை பேச வைக்கிறார்கள்.

இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக ‘ஈ’, ‘அஞ்சாதே’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘சிவா மனசுல சக்தி’, ‘நந்தலாலா’ போன்ற படங்களில் சவுண்ட் மிக்ஸிங் இன்ஜீனியராகப் பணியாற்றிய திரு.உதயகுமார் என்பவருடன் நேர்காணல் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.


திரு.உதயகுமார் திரைப்படங்களில் சவுண்ட் மிக்ஸிங் செய்வது பற்றிய பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மிகச் சிறப்பாக பதிலளித்தார்.

“வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்படத்தில் ஸ்பாட் ரெக்கார்டிங்தானாம்.. நல்ல முறையில் வந்திருக்கிறது..” என்றார். “அஞ்சாதே’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் தனக்குக் கொடுத்த சுதந்திரத்தினால்தான் சிறப்பான முறையில் செய்ய முடிந்தது..” என்றார். “வரவிருக்கும் ‘நந்தலாலா’ திரைப்படத்தில்கூட கிளைமாக்ஸ் காட்சியான கடைசி 45 நிமிடங்களில், பின்னணி இசையே இல்லாமல் படத்தில் பல உணர்ச்சிப் பூர்வமான சம்பவங்கள் நடப்பதுபோல் திரைப்படம் அமைந்திருக்கிறது” என்றார். ‘நந்தலாலா’ பற்றி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு தமிழ்ச் சினிமா உலகில் பரவியிருக்கிறது. பார்ப்போம்.

நானும் எனது ‘புனிதப்போர்’ குறும்படத்தினை இது மாதிரியான ஒரு நிகழ்வில் திரையிடப் போகிறேன். அது சமயம் நமது வலைப்பதிவர்கள் அனைவரும் அலைகடலாய் திரண்டு வந்து அந்த நிகழ்ச்சியை சிறப்பித்துத் தரும்படி மிகத் தாழ்மையாய், உரிமையாய், அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

நன்றி

வணக்கம்.!