04-11-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பதிவர்கள் மேல் அளவற்ற அன்பும், பாசமும், நேசமும் வைத்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகம், சென்ற ஆண்டை போலவே இந்தாண்டும் பதிவர்களின் சிறந்த படைப்புகளுக்கான போட்டியை அறிவித்திருக்கிறது.
சென்ற ஆண்டுதான் இது மாதிரியான போட்டியை தமிழ்மணம் முதல் முறையாக நடத்தியது. அதில் அடியேனும் இரண்டு பிரிவுகளில் வென்று சில புத்தகங்களை பரிசாகப் பெற்றிருந்தேன்.
சென்ற ஆண்டைப் போலவே இந்தாண்டு நடக்கும்போட்டி அவ்வளவு சுலபமாக இருந்துவிடாது என்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் இந்தாண்டு ‘சொல்வீச்சு’, ‘வாள்வீச்சு’, ‘கைவீச்சு’, ‘கத்திவீச்சு’ என்றெல்லாம் பல்வேறு வகைகளில் பல புத்தம் புதிய பதிவர்கள் பதிவுலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் உள்ளே நுழைந்த வேகத்திலேயே தங்களது திறமையை அள்ளி வீசியிருக்கிறார்கள். 16 பக்கங்களில் நான் எழுதியிருந்த ‘ஒப்பாரி’யை, வெறும் பத்தே வரிகளில் ‘காவிய’மாக்கிய பதிவர்களைக் கண்டு பயந்துதான் போயிருக்கிறேன்.
அரசியல், கலை, சினிமா, நுண்கலை, வியாபாரம், பொது அறிவு என்று ஒன்று பாக்கியில்லாமல் அத்தனையிலும் கை தேர்ந்த வல்லுநர் பெருமக்கள் பதிவர்களாக உட்புகுந்து கிண்டி விளையாடியிருப்பதால் இந்த முறை தமிழ்மணம் போட்டியில் பங்கேற்கும் பதிவர்களின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது. அதேபோல் பதிவுகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்ற ஆண்டை போலவேதான் இந்த முறையும் வாக்களிக்கும் முறை இருக்கும் என்பதால் பதிவர்களிடையே குழு ஒற்றுமை மீண்டும் வலுப்பெறும் என்கிற ஒரு சிறிய சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இது தவிர்க்க முடியாதது.
தன்னுடைய பதிவுகளைத் தவிர மற்ற பதிவர்கள் எழுதியதில் பிடித்தமானவற்றுக்கு பதிவர்கள் வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் ஆனதால் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகும் என்றே நினைக்கிறேன்.
ரகசியமான தேர்தல் என்பதால் தமிழ்மணம் தப்பித்திருக்கிறது. இந்தாண்டும் அந்த ரகசியத்தைக் காப்பாற்றியே தீர வேண்டும். இல்லாவிடில் “ஓட்டுப் போடச் சொல்லி போண்டாவும், காபியும் வாங்கிக் கொடுத்தனே.. போடாம ஏமாத்திட்டியேடா பாவி..!” என்று அழுவாச்சி காவியங்கள் எல்லாம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுவிடும். ஓட்டெடுப்பு ரகசியமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
தோழர் வினவு அவர்களும் தமிழ்மணத்தின் பரிசுப் போட்டியை வரவேற்று பதிவு எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில பரிந்துரைகளை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள்
4. அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள்
9. ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்
10. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
11. நகைச்சுவை, கார்ட்டூன்
12. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்.
இந்த 12 பிரிவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
கதை, கவிதை, திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம், அரசியல், சமூகம், தமிழ் கணினி தொழில் நுட்பம், தமிழ் மொழி-கலாச்சாரம், வரலாறு, பகுத்தறிவு, ஆன்மீகம் என்று பரிசுக்குரிய போட்டி பிரிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து எண்ணிக்கையை கூட்டினால் பரிசு பெறும் பதிவர்களின் எண்ணிக்கை கூடும்..
சென்ற ஆண்டு “அதிகபட்சம் ஒரு பதிவர் மூன்று பிரிவுகளில் மட்டுமே போட்டியிட முடியும்” என்று ‘தடா’ சட்டத்தை போட்டிருந்தார்கள். தோழர் வினவு “அதனை ஒரு பிரிவாக குறைக்க முடியுமா?” என்று ‘தடா’வில் ஒரு ‘பொடா’வை சேர்த்திருக்கிறார்.
ஆனால் எனக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இங்கே எழுத்துக்குத்தான் பரிசே ஒழிய.. பதிவர்களுக்காக அல்ல.. எனவே ஒருவரே அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடலாம் என்று அறிவிக்க வேண்டும். அதுதான் நேர்மையாக இருக்கும். அவர் எழுத்து, அனைத்து பிரிவுகளிலும் சிறந்தது என்றால் எத்தனை பரிசுகளை வேண்டுமானாலும் வெல்லட்டுமே..? பரிசு அவருடைய எழுத்திற்குத்தான். அவருடைய சிறந்த படைப்பிற்குத்தான். அவருடைய முகத்திற்காக அல்ல..
அத்தனை துறைகளிலும் அவர் வல்லவராகத் திகழ்கிறார் என்றால் அது பரிசை வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் பெருமைதானே.. ஒருவேளை பரிசை பெறுபவரைவிட இன்னொருவர் நன்கு எழுதியிருந்தாலும், விதிமுறை காரணமாக போட்டியிட முடியவில்லையெனில் அது நேர்மையான போட்டியாக இருக்க முடியாது.. அந்த வகையில் தமிழ்மணம் இந்த விதிமுறையை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
சென்ற ஆண்டு வெற்றி பெற்ற படைப்புகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
சில சமயங்களில் நமது தமிழ்மணம் நிர்வாகம் நமது மத்திய, மாநில அரசுகளைவிட மிக மோசமாக கும்பகர்ணத் தூக்கம் தூங்கிவிடும். கேள்விகேட்டால் ரெடிமேடாக பதில் ஒன்றை வைத்திருப்பார்கள். “நாங்களும் மனிதர்கள்தான்.. ஆள் ஆளுக்கு குடும்பம், குழந்தை, குட்டி எல்லாம் இருக்கு. எங்க பொழைப்பையும் நாங்க பார்க்க வேண்டாமா?” என்பார்கள். ஆனால் அவர்கள் நிஜமாகவே குடும்பஸ்தர்கள்தானா என்பது மில்லியன் டாலர் கேள்வி..! எனக்குத் தெரிஞ்சு ஒருத்தரைத் தவிர மிச்சப் பேரெல்லாம் ‘பேச்சுலர்’ன்னுதான் அங்க சொல்லிட்டுத் திரியறதா யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
ஆனால் இதையே அரசியல்வியாதிகள் சொல்லிவிட்டால் போதும், தமிழ்மணத்தில் இருந்தே ரெண்டு பேர் குட்டிக்கரணம் போட்டு எழுந்து வந்து பதிவு போட்டுத் தாக்குவார்கள். ம்.. என்ன செய்யறது? பாவம் அரசியல்வியாதிகள்.. அவர்களுக்கு சப்போர்ட் செய்ய பதிவர்களே இல்லையே.. இந்தாண்டாவது அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு வெற்றி பெற்ற கட்டுரைகளைத் தனித் தொகுப்பாக, புத்தகமாக தமிழ்மணம் வெளியிட்டால் அது பரிசை வென்றவர்களுக்கும், தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பெருமையாக இருக்கும்.
மிக முக்கியமாக ஒன்று.. போட்டி அறிவிப்பில் சொன்னதுபோல முடிவுகளும் அதே நாளில் வெளியிடப்பட வேண்டும் என்பதில் தமிழ்மணம் நிர்வாகம் உறுதியாக இருக்க வேண்டும்.
சென்ற ஆண்டு டிசம்பரில் போட்டிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொங்கல் தினத்தின்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் இடையில் திடீரென்று எழுந்த ஈழப் போரின் பின்னணியினாலும், தம்பி முத்துக்குமாரின் அகால மரணத்தினால் எழுந்த கொந்தளிப்புகளினாலும் தமிழ்மணத்தின் நிர்வாகிகளும் கொந்தளித்துப் போய் பதிவர்களோடு பதிவராக பதிவகளாகப் போட்டுத் தாளித்ததால், பரிசுப் போட்டி முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டு மிகத் தாமதமாக வெளியிடப்பட்டது.
ஆனாலும் இந்த நேரத்தில் ஒரு உண்மையை வெளிப்படுத்தியே தீர வேண்டும். சென்ற ஆண்டு போட்டி முடிவுகளை எதிர்பார்த்தோ, லேட்டாயிருச்சே என்று கவலைப்பட்டுக் கொண்டோ பதிவர்கள் இருக்கவில்லை. அப்போது அனைவரின் கவனமும் ஈழத்தின்பால் திரும்பியிருந்தது ஒரு ஆச்சரியம்தான்..
இந்தாண்டு சொன்னதுபோலவே மிகச் சரியாக குறித்த தேதியில் போட்டிகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டால் மிக்க மகிழ்ச்சிதான்.
இறுதியான கோரிக்கையாக தமிழ்மணம் தரவிருக்கும் பரிசுத் தொகையை கொஞ்சம் அதிகமாக்கிக் கொடுத்தால் என்னைப் போன்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.. 500 ரூபாய் என்பது மிகக் குறைவு.. ஒரு திரட்டி 500 ரூபாய் கொடுக்கலாமா என்று வெளியில் நாலு பேர் பேசுகின்ற ‘பேச்சை’ என்னைப் போன்ற தமிழ்மண ரசிகர்கள் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆகவே முதல் பரிசாக 5000 ரூபாய் என்று அறிவித்தீர்களேயானால் தமிழ்மணத்திற்கு பெருமை ஓஹோவென்று கூடும். என்னைப் போன்றவர்களும் தைரியமாக தமிழ்மணத்திற்கு கூடுதல் ரசிகர்களை சேர்க்க முயல்வோம்.. வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயை இனாமாக கொடுக்குற திரட்டி வேறு எங்கேயாவது இருக்கிறதா என்று நாங்களும் காலரை(எங்க) தூக்கிவிட்டுப் பேசவும் வாய்ப்பாக இருக்கும்..
போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் இப்பொழுதே சக பதிவர்களை காக்கா பிடித்து வைத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி பார்ட்டி வையுங்கள்.. வருகின்ற பதிவர்களைக் கவனித்து அனுப்புங்கள்.. ‘தீர்த்தவாரி’யில் திளைப்பவர்கள் திளைக்கலாம். ‘வாங்கி’யும் ‘ஊத்தலாம்’.. “நீ எனக்கு போடு.. நான் உனக்கு போடுறேன்” என்று ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்டை போட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு சிலர் குவார்ட்டருக்கும், ஆஃபுக்கும், புல்லுக்கும் கணக்குப் போட்டுக் கேட்பார்கள். அவர்களிடம் மட்டும் ஜாக்கிரதையாக இருங்கள். ஏனெனில், “அன்னிக்கு மப்புல ஏதோ சொல்லிட்டேன். அதையே இப்பவும் நினைச்சிட்டிருந்தா எப்படி?” என்று சக ‘தோளர்’ நினைத்து ஓட்டை மாற்றிக் குத்திவிட்டால் அதற்கு தமிழ்மணம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
கள்ள ஓட்டு போட்டு பரிசைத் தட்டிவிடலாம் என்று கனவு காண வேண்டாம். தமிழ்மணம் அதுக்குத்தான் என்னமோ ஒரு டிரிக் செய்து வைத்திருக்கிறார்கள். அதை அவர்கள் வெளியில் சொல்லாமலும் இருக்கிறார்கள். ஆகவே நல்ல ஓட்டுக்களை மட்டுமே போட்டு சக பதிவர்களை ஜெயிக்க வையுங்கள்.
ஆனால் பரிசு கிடைக்காமல் போகும்பட்சத்தில் “இவை அத்தனையும் கள்ள ஓட்டினால் கிடைத்த வெற்றி” என்று நமது எதிர்க்கட்சிகளைப்போல் பதிவுகளாகப் போட்டுத் தாக்கலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. நல்ல காலத்திலேயே தமிழ்மணம் நிர்வாகிகள் அவங்களைத் திட்டி எழுதற பதிவை படிக்க மாட்டாங்க. இதையா படிக்கப் போறாங்க..? தாராளமா நாம எழுதலாம்.. எதையும் தாங்கும் இதயம் படைத்த நல்லவர்கள் அவர்கள்..!
ஆனாலும் ஒண்ணு சொல்றேன் மக்களே.. பிற்பாடு என்றைக்காவது ஒருநாள் தமிழ்மண நிர்வாகிகளை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால், அப்போது இதுவரையில் சேர்த்து வைத்திருக்கும் கோபத்தையெல்லாம் காட்டி, கள்ள ஓட்டுக்களாக குத்திக் அத்தனை பேரையும் கவுத்துவிடலாம். அதுவரையில் பொறுத்தருளுக தோழர்களே..
போட்டியை நடத்த முன் வந்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்..
போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற எனதருமை சக பதிவர்களை வாழ்த்துகிறேன்..
வாழ்க வளமுடன்..!!!