29-08-1009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டது என்றாலும், இளவரசர்களுக்குள் அனைத்துவகை போட்டிகள் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் மதுரை இளவரசரின் இளவல், சென்னை இளவரசரின் இளவலுக்குப் போட்டியாகவோ, அல்லது துணையாகவோ திரைப்படத் துறையில் கால் பதித்துவிட்டார்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கிற பேச்செல்லாம் மேடையோடு சரி.. வீட்டுக்குள்ளேயெல்லாம் கொண்டு வரக்கூடாது என்று இரண்டு சமஸ்தான குட்டி இளவரசர்களும் சொல்லிவிட்டதால் கம்பெனி பெயரும் வித்தியாசமாகத்தான் உள்ளது. CLOUD NINE MOVIES. மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிதான் தயாரிப்பாளர். படத்தின் பெயரே “தமிழ்ப் படம்” என்பதுதான்.
தமிழ்ச் சினிமாவின் இலக்கணங்களான
“தாலி சென்டிமெண்ட்..
தாயிற் சிறந்த கோவிலுமில்லை..
அக்கா, தங்கை பாசம்..
சிக்ஸ் பேக் உடற்கட்டு..
பறந்து பறந்து அடிப்பது..
பிச்சைக்காரன் கோலத்தில் இருந்தாலும் கோடீஸ்வரியை லவ்வுவது..
இடையிடையே பாட்டுக்காக வெளிநாட்டுக்கு ஓடுவது..
போலி அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொதிப்பது. அது மாமனாராகவே இருந்தாலும் நியாயத்திற்காக அவரை எதிர்ப்பது..
சூப்பர் பிகராக இருந்தால் டாவடிப்பது.. அட்டு பிகராக இருந்தால் தங்கச்சி..”
என்று பாசத்தைக் கொட்டுவது..
– இப்படி தற்போதைய தமிழ்ச் சினிமாவின் சூத்திரங்களையெல்லாம் நக்கலோ நக்கல் செய்கிறார்களாம் இந்தப் படத்தில். நகைச்சுவைதான் பிரதானமாம். பார்ப்போம்.. மதுரை இளவரசின் வருகை தமிழ்த் திரையுலகை என்னவாக மாற்றப் போகிறது என்று பார்ப்போம்..
இதில் இன்னொரு விசேஷம்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்தார்கள்.
அதாவது அச்சங்கத்தில் உறுப்பினர்களாக அல்லாதவர்கள் திரைப்படங்களை இயக்கினால் பெப்ஸியில் புகார் கொடுத்து அவர்களது திரைப்பட ஷூட்டிங்கை நிறுத்துவது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதனைக் கடுமையாக செயல்படுத்தியும் வந்தார்கள்.
இந்தத் “தமிழ்ப் படம்” என்கிற தமிழ்த் திரைப்படத்தின் இயக்குநர் அமுதன் இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர் இல்லையாம். “அப்ளிகேஷன் வாங்கிட்டுப் போனவர்தான் இன்னமும் பணத்தோடு திரும்பி வரவில்லை” என்கிறார்கள். ஆனால் ஷூட்டிங் மட்டும் ஜெகஜோதியாக நடந்து வருகிறது.
பெப்ஸியாவது..? சங்கமாவது..? சட்டத்திட்டமாவது..?
“அப்ப நாங்கதான் இளிச்சவாயனுகளா..?” என்று முதல் படத்துக்கு சம்பளமாக வாங்கிய ஐம்பதாயிரத்தையும் அப்படியே சங்கத்தில் செலுத்தி உறுப்பினர்களாக ஆன, புதிய இயக்குநர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.