Archive for the ‘தசாவதாரம்’ Category

நினைத்தேன் எழுதுகிறேன்!-18-06-2008

ஜூன் 18, 2008

18-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில நாட்களுக்கு முன் தற்செயலாக ‘கலைஞர் டிவி’ பார்த்தேன். திரைப்பட காமெடி காட்சிகளின் தொகுப்பு.

நான் பார்த்தபோது கவுண்டமணி, தனது சகா செந்திலிடம் தனது மனைவி அனுஜாவை அப்போதைக்கு மறந்து தொலைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஷர்மிளியின் அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார். செந்திலின் வழக்கமான சதியால் அனுஜாவின் கையில் சிக்கி விளக்கமாத்தால் அடியும் வாங்குகிறார்.

இந்தக் காட்சி அனைத்து கல்யாணமான தமிழக ஆண்களுக்கும் ரொம்பவே பிடித்தமான பொழுது போக்கு. மனைவியிருக்க இன்னொரு பெண்ணை ரசிப்பது போல் ரசித்து மனைவியை வெறுப்பேற்றுவதாக வெளியில் சொல்லி மகிழ்வது பரம்பரை பழக்கமாகிவிட்டது.

அதே சமயம் திருமணமான பெண் வேறொரு ஆணை இதேபோல் ஜொள்ளுவிட்டு கணவனிடம் மாட்டிக் கொள்வதைப் போல் சினிமா காட்சிகளை நான் பார்க்கவில்லை.

ஒருவேளை கதை, வசனம் எழுதுபவர்கள் அனைவரும் ஆண்கள் என்பதாலேயே இந்தக் கூத்து தொடர்கிறதோ..?

நிற்க..

தொடர்ந்த விளம்பரத்திற்குப் பிறகு வந்த காட்சி ‘பசுபதி மே/பா ராசாக்காபாளையம்’ என்கிற திரைப்படத்தில் இருந்து ஒளிபரப்பானது. விவேக் இன்ஸ்பெக்டராக வந்து ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியனை காப்பியடித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று வெறும் ஜாக்கெட்டும், பாவாடையும் மட்டுமே அணிந்திருந்த ஒரு பெண் கையில் காபியுடன் வந்து தரிசனம் தந்தார். விவேக்கின் பொறுப்பான பேச்சு அப்புறம் இளிப்பான பேச்சாகிப் போனது..

இந்தப் பெண் வருகின்ற காட்சிகளிலெல்லாம் சேலை அணியாமல்தான் காட்சி தந்தார். ஒருவேளை தயாரிப்பாளருக்கு பண முடையாகி, சேலை வாங்கக்கூட காசில்லாமல் போயிருக்குமோ என்னவோ.

சினிமாவில் பெண்களை அசிங்கமாகக் காட்டுகிறார்கள் என்று பலரும் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் நிஜமாகவே போராட வேண்டுமெனில், முதலில் இது மாதிரி ‘துணிந்து’ நடிக்க வருகின்ற பெண்களுக்கு எதிராகத்தான் போராட வேண்டும்.

“எவ்ளோ காசு கொடுத்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு முடியாது.. நான் மாட்டேன். மொதல்ல உன் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி இவுங்களை கூட்டிட்டு வந்து இதே மாதிரி நடிக்க வை.. பாக்குறேன்.. அப்புறமா நான் நடிக்கிறேன்..” என்று எந்த துணை நடிகையாவது சொல்வார்களா என்று தெரியவில்லை. சொன்னால்தான் ஒருத்தராவது திருந்துவார்கள்.

உடன் நடித்த சின்ன கலைவாணர் விவேக்கிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. செலக்டிவ் அம்னீஷியாவோ..?

—————————————————————

மிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பது என் போன்ற வறுமைக்கோட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு தெரிகிறது.

மிகவும் கஷ்டப்பட்டு போராடி எனது கம்ப்யூட்டரை மீட்டுக் கொண்டு வந்தேன். ஆனால் பிரயோசனமில்லை. எப்போதும் அலுவலகம் முடிந்து இரவு வீடு திரும்பிதான் வலையுலகத்திற்குத் தேவையானதை டைப் செய்வேன்.

கடந்த 1 மாதமாகவே வீட்டில் பவர் வோல்ட்டேஜ் கம்மி.. எனது வீடு single phaseதான். வீட்டு ஓனர் தன்னுடைய வீட்டு கனெக்ஷனுக்கு மட்டும் ஜாக்கிரதையாக three phase போட்டு இரண்டு ஏஸி மெஷின்களை மாட்டியிருக்கிறார். தெருவில் வீட்டுக்கு வீடு டிவி போல், ஏஸி மெஷின்களும் அலங்கரிப்பதால் மின் சப்ளை குறைவு என் போன்ற single phase வீடுகளில் தலைவிரித்தாடுகிறது.

நேற்று கம்ப்யூட்டரை ஆன் செய்ததிலிருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 40 முறை சிஸ்டம் தானாகவே ரீஸ்டார்ட் ஆனது.. “பதிவர் கூட்டத்தில் கசமுசா” என்று தலைப்பிட்டு ஒரு வரி எழுதியது மட்டும்தான் அந்த ஒரு மணி நேரத்தில் நான் செய்தது. எனக்கே வெறுப்பாகி ஹார்ட்டிஸ்க் கிராஷ் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் அப்படியே ஆ·ப் செய்துவிட்டேன்.

மின்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை என்கிறார். ஒரு வேளை அவர் வீட்டில் மட்டும் தங்குத் தடையின்றி கிடைப்பதால் மற்றவர்களையும் அப்படி நினைத்துவிட்டாரோ என்னவோ..? என்ன செய்வது 40 வருஷமா அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு மக்களின் நிலைமை பற்றி என்ன தெரியும்..?

—————————————————————

‘தசாவதார’த்தை கரும்பைப் பிழிந்து சாறு எடுத்த கதையாக பிழிந்து எடுத்துவிட்டார்கள் வலைப்பதிவர்கள். ‘சிவாஜி’க்கு கூட இந்த ‘கதி’ ஏற்படவில்லை.

தன்னுடைய இரண்டரை வருட உழைப்புக்கு நல்ல மரியாதை கிடைத்திருப்பதாக வலைப்பதிவுகளில் தனது படத்திற்குக் கிடைத்த ‘நல்ல’ – ‘நல்ல’ விமர்சனங்களைப் படித்த பிறகும், கமலஹாசன் அடக்கமாகப் பேசியிருக்கிறார். பாராட்டத்தான் வேண்டும்.

இடையில் நமது ‘தடாலடி’யாரும் உணர்ச்சிவசப்பட்டு இரண்டரை வருட உழைப்பை 3 மணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு வெறும் 5 நிமிடத்தில் திட்டுகிறார்களே என்று கோபப்பட்டு பொங்கிவிட்டார்.

இதில் ‘பைத்தியக்காரனின்’ பதிவு நான் எதிர்பார்த்தது போலவே படத்தின் அரசியலை ஆராய்ந்து சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ‘பைத்தியக்காரன்’ இதை எழுதாமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்.. அவரவர் பாடு அவரவருக்கு..

இனி அடுத்தது ‘குசேலன்’தான்.. பாராட்டையோ அல்லது திட்டுதலையோ கொஞ்சம் மட்டுறுத்தி வையுங்கள்.. அடுத்த மாதம் நிச்சயம் தேவைப்படும்.






—————————————————————

ஞ்சாயத்து பேசும் அளவுக்கு நான் ஒன்றும் பெரியவனல்ல. ஆனால் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. பேசுவதற்கு அல்ல. பார்வையாளனாக..

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகியிருந்த தம்பதிகளுக்குள் கருத்து-மோதல். தம்பதிகள் இருவரும் பிரிந்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி பஞ்சாயத்துவரை இழுத்து வந்துவிட்டார்கள். ஒருவேளை வார்த்தைகள் முற்றி அடிதடிவரை போனால் உடன் அடி வாங்க ஒரு ஆள் வேண்டுமே என்பதற்காகவோ எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வந்திருந்தது.. சும்மா போவோமே என்றுதான் போனேன்..

சினிமாவில் ஆலமரத்தடி பஞ்சாயத்தையே பாரத்து பார்த்து சலித்துப் போயிருந்த எனக்கு இந்த வீட்டுப் பஞ்சாயத்து புது அனுபவம். வீட்டுப் பெண்களெல்லாம் சமையல்கட்டிலும், நடுவீட்டிலும் ஒண்டி கொண்டு நிற்க.. கணவனும், மனைவியும் ஆளுக்கொரு ஜன்னல் அருகே நின்று ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

“இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை?” என்று பெரியவர் ஒருவர் கேட்க சீறித் தள்ளிவிட்டார் அந்தப் பெண். “இதுக்கா உங்களைக் கூப்பிட்டோம்..? முதல்ல அத்து விட்டுட்டு மறுவேலை பாருங்க..” என்றார். “என்ன காரணம்னு சொல்லும்மா.. பேசித் தீர்த்துக்கலாம்..” என்று அழுகாத குறையாகக் கேட்டார் பெண்ணின் அம்மா. “அதெல்லாம் சொல்ல முடியாது.. எனக்கு இவர் வேணாம்..” — இது பெண்ணின் தீர்மானமான முடிவு.

“பொம்பளைக்கே இவ்ளோ இருந்தா ஆம்பளை எனக்கு எவ்ளோ இருக்கும்? வேணாங்க.. அத்து விட்ருங்க.. பெரிய இவளா இவ..?” – இது மாப்பிள்ளை..
“என்ன இவ.. இந்த அவ, இவ பேச்செல்லாம் அன்னிக்கே முடிஞ்சு போச்சு.. மரியாதை கொடுக்கணும்..” சீறினார் பெண்.

இரு வீட்டுப் பெரிசுகளும் பிரச்சினை என்ன என்று தெரிந்தால் தீர்த்து வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். பிடியே கொடுக்கவில்லை இருவரும்.

“ச்சீ.. போ..”
“ச்சீ.. போ..”
“போன்னா போ..”
“எனக்கென்ன ஆயிரம் பேர் வருவாளுக..”
“போய் அவளையே கட்டிக்க..”
“அதுக்குத்தான போய்த் தொலைன்றேன்..”
“போறேன்.. உன்னை எவன் கட்டுவான்னு பாக்குறேன்..”
“அதை நான் பாத்துக்குறேன்.. முதல்ல நீ என் கண்ணு முன்னாடியே நிக்காத.. ஓடிப் போயிரு..”

இப்படியேதான் மாற்றி, மாற்றி பேசினார்களே ஒழிய, பிரச்சினை என்ன என்பதை சொல்லவேயில்லை..

இந்த சண்டை காரணமாக கடந்த ஒரு வருஷமாகவே இருவரும் அவரவர் பிறந்த வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள். பரஸ்பரம் இருவரும் இணைந்தே விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனால் வழக்கு ஈஸியாகிவிடும் என்ற வழக்கறிஞரின் ஆலோசனைப்படியே இந்த பஞ்சாயத்து கூட்டமாம்..

கூடவே, அந்தப் பெண் கொண்டு வந்த சீர், செனத்தியையெல்லாம் ஒன்றுவிடாமல் 40 பக்க நோட்டு ஒன்றில் எழுதி வைத்திருந்த மாப்பிள்ளை அதை படித்துக் காட்டி “அத்தனையையும் வீட்டில் தனியறையில் பூட்டி வைத்திருப்பதாகவும் வந்து பார்த்து அள்ளிக் கொள்ளலாம்” என்றார்.

காலையிலிருந்து மாலைவரை பேச்சுவார்த்தையை இழுத்தும் இரண்டு விஷயங்கள் மட்டும்தான் தம்பதிகளின் வாயில் இருந்து வெளியே வந்தது.

அந்தப் பெண் கருவுற்றிருந்தபோது சரியாகச் சாப்பிடாமல் போய் கரு கலைந்துவிட்டது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே அல்சர் நோய் இருந்ததால் சரியாகச் சாப்பிடும்படி ஆபீஸில் இருந்து தினமும் போன் மேல் போன் போட்டு சொல்வானாம் மாப்பிள்ளை. அப்படியிருந்தும் அந்தப் பெண் சாப்பிடாமல் போக கரு கலைந்துவிட்டதாம்.

தனது முதல் வாரிசை செத்துப் போகும்படி செய்தது தனது மனைவிதான் என்று கணவனுக்கு அடக்கமாட்டாத கோபம் போலிருக்கிறது.. மனைவியோ “நீ என்ன சொல்றது..? பிள்ளையை எப்படி பெத்துக்கறதுன்னு எனக்குத் தெரியாதா..? நீ யார்ரா?” என்றே கேட்டுவிட்டாள்.

முடிந்தது.. அத்துவிட்டார்கள்.. எதுக்கு கோர்ட், கேஸ்..? பத்து ரூபாய் பத்திரமொன்றில் இருவரும் ஒருமித்தக் கருத்துடன் பிரிவதாக நான்கு சாட்சிகள் கையெழுத்துடன் பத்திரத்தில் எழுதி இருவரும் கையொப்பமிட்டார்கள்.

மாப்பிள்ளை அதுதான் கடைசி முறை என்பதால் தனது மனைவியை மிக அருகில் போய் ஒரு முறை முறைத்துவிட்டு(நான்கூட அடிச்சுரப் போறானோ என்று பயந்திருந்தேன்) விருட்டென்று வெளியேறினான்..

பெண்ணோ மிக அலட்சியமாக பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்து சன் மியூஸிக் சேனலை பார்க்கத் துவங்கினார்.

கூட்டம் கலையத் தொடங்கி நான் வெளியே வந்தவுடன், அந்தப் பெண்ணின் தாயார் கண்ணீரோடு “கல்யாணத்துக்கே ஒண்ணே முக்கா லட்சம் ரூபா செலவாச்சு.. இருந்த வயக்காட்டையும் வித்துதான் செலவு செஞ்சேன்.. பாவி மக எதைப் பத்தியும் கவலைப்படாம ‘அத்து விடு’.. ‘அத்து விடு’ன்றாளே.. என்னத்த செய்றது..?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

ம்ஹ¥ம்.. நம்மிடையே எந்த அமைப்பில் தவறு என்று புரியவில்லை.

(தொடர்ந்தும் வருவேன்)