என் இனிய வலைத்தமிழ் மக்களே..
இலங்கை தமிழர் பிரச்சினையில் தான் தமிழர்களுக்கு ரொம்ப நல்லவனாக்கும் என்கிற ரீதியில் சிங்கள இனவாத பேரரசின் அதிபர் ராஜபக்ஷே சமீபகாலமாக, “புலிகளை ஒழித்துக் கட்டிய பின்பு 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவேன்.. தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் நிலைமை விரைவில் உருவாகும்..” என்றெல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.
“அதென்ன 13-வது அரசியல் சட்டத் திருத்தம்..?” என்று தேடிப் பார்த்து, பிடித்து, படித்துக் கொண்டிருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் நல்ல விஷயமாக என் இனிய நண்பர் திரு.எம்.காசிநாதன் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் இந்த ‘13-வது அரசியல் சட்டத் திருத்தம்’ பற்றி ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதனை இங்கே உங்களது பார்வைக்கு வைக்கிறேன்.
இனி எழுதுவது திரு.எம்.காசிநாதன்
“பாகிஸ்தான், இஸ்ரேல், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ராணுவ அதிகாரிகளும், உளவு அமைப்பைச் சேர்ந்தவர்களும் இலங்கையில் முகாமடித்து இருப்பதைத் தடுக்க வேண்டும்..”
“வெளியுறவு மற்றும் ராணுவ ரீதியான உறவுகளில் அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் மிகவும் ஈடுபாட்டுடன் இலங்கை நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்..”
“இலங்கையில் உள்ள கப்பல் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் வெளிநாடுகள் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் பாதையை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருப்பதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்..”
“வாய்ஸ் ஆப் அமெரிக்கா போன்ற ஒலிபரப்பு நிலையங்கள் இலங்கை மண்ணிலிருந்து மிலிட்டரி காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது..”
– இது மாதிரியான உத்தரவாதங்களை அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிடமிருந்து பெற்றுக் கொண்டே அன்று தமிழர்களுக்காக இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் உருவானது என்று இலங்கையில் இந்தியாவின் தூதுவராக இருந்த ஜே.என்.தீட்சித் தன் “Assignment in Colombo” என்ற சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.
1987-ல் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நம் நாட்டு பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவேவும் இணைந்து கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தமே இன்றும் அரசியல் தீர்வுக்கு வழிவிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தீர்க்கமாக நம்புகிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவும், “இந்த ஒப்பந்த அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க நானே முன்னின்று செயல்படுவேன்..” என்று சமீபத்தில் அறிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை எம்.பிக்களோ, “இலங்கையில் ஒற்றை ஆட்சி முறைக்கான அரசியல் சட்டம் நீடிக்கும்வரை இது சாத்தியமில்லை..” என்று இன்னொரு புறம் அடித்துச் சொல்கிறார்கள்.
குறிப்பாக இந்த ஒப்பந்தப்படி உருவான 13-வது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியாது என்றே ஆணித்தரமாக வாதாடுகிறார்கள்.
இலங்கை அரசு கொண்டு வந்துள்ள 13-வது அரசியல் சட்டத் திருத்தம் மாகாண கவுன்சில் சட்டம் ஆகியவை என்னதான் சொல்கின்றன? தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அதில் ஷரத்துக்கள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கான பதில்தான் இக்கட்டுரை.
இலங்கை தமிழர்களுக்கு தனியாக மாகாணம்(Provincial Council) அமைப்பதே இந்த 13-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். இது ஏறக்குறைய இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்குள்ள அதிகாரம்போல் இருக்கும் என்பதே எதிர்பார்ப்பு.
தமிழர்கள் அதிகம் வாழும் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை ஒரே மாநிலமாகக் கருத வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்கள் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டது. இதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, “கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒரே யூனிட்டாகச் செயல்படும்..” என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழித்து, “கிழக்கு மாகாணம் தொடர்ந்து வடக்கு மாகாணத்துடன் இருக்க வேண்டுமா? அல்லது தனி நிர்வாக மாகாணமாகச் செல்ல வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றும் முடிவு செய்யப்பட்டது.
தமிழர்களுக்கான இந்த மாகாணத்தில் ஒரு கவர்னர் இருப்பார். அவரை இலங்கை அதிபர் 5 வருட காலத்திற்கு நியமனம் செய்திருப்பார். இந்த கவர்னர் மாகாண முதல்வர் ஆலோசனைப்படி நடப்பார். கவர்னருக்கான அதிகாரம் ஏறக்குறைய இந்தியாவில் உள்ள மாநில கவர்னருக்கு உள்ள அதிகாரங்கள் போலவே இருந்தது.
மாகாணத்தின் ஆயுட்காலம் இந்திய மாநிலங்களில் இருப்பது போல் ஐந்து வருடங்கள். ஒரு முதலமைச்சர் இருப்பார். அவரது அமைச்சரவையில் நான்கு பேருக்கு மிகாத எண்ணிக்கை கொண்ட அமைச்சர்கள் இருப்பார்கள். யாரை முதல்வராக கவர்னர் நியமிக்க வேண்டும் என்பதும் அந்தத் திருத்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டது. அதாவது, “அந்த மாகாணத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியின் தலைவர் 50 சதவிகித எம்.எல்.ஏ.க்கள் உள்ளவராக இருக்கிறாரோ, அவரை கவர்னர் முதல்வராக நியமிக்க வேண்டும்” என்று அறுதியிட்டுச் சொல்லப்பட்டது. இந்த கவுன்சிலுக்கு சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு.
தமிழர் மாகாணத்தின் அதிகாரம் என்ன..?
நம்மூரில் மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்றும் வகையில் மூன்று லிஸ்டுகள் இருக்கின்றன. மத்திய அரசுக்கு சென்டிரல் லிஸ்ட், மாநில அரசுக்கு ஸ்டேட் லிஸ்ட், மத்திய-மாநில அரசுகளுக்கு இணைந்ததுபோல் நடவடிக்கை எடுக்க கன்கரன்ட் லிஸ்ட். இதே முறை இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கை மத்திய அரசுக்கு ரிஸர்வ்டு லிஸ்டு. இதன் கீழ் உள்ள ராணுவம், தேசியப் பாதுகாப்பு, வெளியுறவு, தபால் தந்தி மற்றும் தகவல் ஒளிபரப்பு போன்ற முக்கியத் துறைகள் மத்திய அரசிடமே இருக்கும். மாகாண அரசைப் பொறுத்தமட்டில் திட்டமிடல், கல்வி, உள்ளாட்சி, வீட்டு வசதி வாரியம், சாலைகள்(தேசிய நெடுஞ்சாலை தவிர) சமூக சேவை, சுகாதாரம், கூட்டுறவு, நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் அதிகாரம் செலுத்தும் வகையில் மாகாண அரசு லிஸ்ட் வரையறுக்கப்பட்டிருந்தது. முக்கியமாக சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் போலீஸ் அதிகாரம், ப்ராவின்ஷியல் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டது.
நிலம் என்ற விஷயத்தைப் பொறுத்தமட்டில் மாகாண அரசின் கட்டப்பாட்டில் வந்தது என்றாலும், அரசு நிலத்தை எந்தப் பிரஜைக்கோ அல்லது அமைப்பிற்கோ கொடுக்க வேண்டும் என்றாலோ அல்லது ஏற்கெனவே நீக்க வேண்டும் என்றாலோ அதற்கான உத்தரவை இலங்கை அதிபர்தான் போட முடியும். ஆனால் இப்படியொரு உத்தரவை போடுவதற்கான அறிவுரையை மாகாண சபை அதிபருக்கு வழங்கலாம்.
மாநிலத்தின் வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்துள்ளது. இக்குறையைப் போக்கும் பொருட்டு இலங்கையின் நிதி கமிஷன் நியமிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதில் இலங்கை மத்திய வங்கியின் கவர்னர், கருவூல செகரட்டரி ஆகியோர் தவிர மூன்று உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அந்த மூன்று பேரும் இலங்கையில் மெஜாரிட்டியாக உள்ள மூன்று மேஜர் கம்யூனிட்டிகளில் இருந்து தலா ஒருவராக நியமிக்கப்படுவார்கள். இதன்படி இலங்கையில் உள்ள நிதிக் கமிஷனில் தமிழரும், முஸ்லீமும் இடம் பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இந்த நிதிக் கமிஷன் மாகாணத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைச் செய்யும் என்றும், நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளும் சமமான வளர்ச்சி பெறும் வகையில் நிதிக் கொள்கையை இந்த நிதிக் கமிஷன் வகுக்கும் என்றும் வரையறுக்கப்பட்டது.
இந்த மாகாணத்தின் ஆட்சிக் கலைப்பு அதிகாரங்களும்(நம்மூரில் உள்ள 356-வது அரசியல் சட்டப் பிரிவு போல்) வெளிநாட்டுப் படையெடுப்பு, உள்நாட்டு ஆயுதப் போராட்டம் போன்றவற்றால் அத்தியாவசியப் பொருட்கள் போகாமல் தடுக்கப்பட்டாலோ, இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அந்த மாகாண அரசு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லை என்று அதிபர் முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்படியொரு காரணத்தைச் சொல்லி மாநில அரசைக் கலைத்தால் 60 தினங்களுக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இலங்கையில் இதுவே 14 நாட்கள் என்று குறைக்கப்பட்டது. இந்தியாவில் அதிபர் ஆட்சி ஆறு மாதங்கள் இருக்கலாம். அதிகப்பட்சமாக(நெருக்கடி நிலை அமலில் உள்ள மாநிலங்கள் தவிர) ஒரு வருடம் இருக்கலாம். ஆனால் இலங்கையில் இந்தக் காலவரையறை இரண்டு மாதம் என்று முடிவு செய்யப்பட்டது. அதிகப்பட்சமாக ஒரு வருடம் என்றுதான் அங்கும் முன்பு இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அதிபர் ஆட்சி கலைக்கப்பட்ட விஷயங்கள் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியை இலங்கை அதிபர் நியமிக்கலாம். அந்த நீதிபதி கொடுக்கின்ற அறிக்கையை வைத்து ஆட்சிக் கலைப்பை அதிபர் திரும்பப் பெறலாம் என்றும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நீதித் துறையைப் பொறுத்தமட்டில் மாகாணத்திற்கு என்று தனியாக ஹைகோர்ட் இருக்கும். இலங்கை ஹைகோர்ட் நீதிபதிகளில் இருந்து தலைமை நீதிபதி தேர்வு செய்து ஒவ்வொரு ஹைகோர்ட்டிற்கும் நீதிபதிகளை நியமிப்பார். அதேபோல் மாகாணத்திற்கு தலைமைச் செயலாளர் ஒருவர் இருப்பார். இந்தியாவில் அவரை மாநில அரசுகளே நியமித்துக் கொள்கின்றன. ஆனால் இலங்கையில் மாகாண தலைமைச் செயலாளர்களை சம்பந்தப்பட்ட மாகாண முதல்வரின் ஒப்புதலுடன் இலங்கை அதிபரே நியமிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இவற்றிற்கெல்லாம் மேலாக இலங்கையில் தமிழும் ஆட்சி மொழியாக இருக்கும் என்றும், ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என்றும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் சிறப்பான ஓர் அம்சம் வரையறுக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடையும் முன்பு சிங்களமும், தமிழும்தான் ஆட்சி மொழியாக இருந்தன. அந்த நிலை 1987-க்குப் பிறகு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் மீண்டும் வந்தது.
13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் சுருக்கம் மேற்சொன்ன விஷயங்கள்தான்.
இது ஏற்கெனவே இலங்கை பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு சட்டமாகவும் நிறைவேறியாகிவிட்டது. ஆகவே, அதிகாரம் அளிக்க அனைத்துக் கட்சிக் குழு என்றெல்லாம் கால நேரத்தை இலங்கை அதிபர் வீணாக்கிக் கொண்டிருக்காமல் நேரடியாக 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு வழங்க நினைத்த அதிகாரங்களை இலங்கை அரசு வழங்குவதே சாலச் சிறந்தது.
அதிகாரப் பகிர்வு விஷயத்தில் இதுவரை பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் அரசே முன் நின்று முதல் மூவை செய்திருக்கிறது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் சரண்டர் ஆவதற்காகக் காத்திருக்காமல் இந்தியாவில் உள்ள மாநிலம் போன்றதொரு தமிழர் மாநிலத்தை இலங்கை தமிழர்களுக்கு உருவாக்கித் தர இலங்கை அரசு வேகமாகச் செயல்பட வேண்டும்.
இலங்கை அரசு தாமதிக்கும்பட்சத்தில் விடுதலைப்புலிகள் தாங்களாகவே ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, “இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உள்ள 13-வது அரசியல் சட்டத் திருத்தப்படி உள்ள அதிகாரங்களை ஏற்க பேச்சுவார்த்தை நடத்த ரெடி..” என்று அறிவிக்கலாம்.
“அதிகாரம் கொடுக்கும் ஏற்பாட்டினை நானே முன்னின்று நடத்துவேன்..” என்று ஏற்கெனவே அறிவித்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. எனவே இத்தகைய சூழ்நிலையில் புலிகளின் அறிவிப்பை முன்னெடுத்துச் செல்ல அதிபர் தயங்கினால், அவர் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முன்பு எக்ஸ்போஸ் ஆகி நிற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும்.
மேற்சொன்ன இரண்டு தீர்வுகளில் ஏதாவது ஒன்று நடந்தால் மட்டுமே இலங்கையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.
இனி நான்..
இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் இந்திய அரசியலமைப்பை அப்படியே நகலெடுத்து தனது தலைமைக்கு அனுப்பி வைத்திருப்பது இந்த ஒப்பந்த ஷரத்துக்களைப் படித்தாலே புரிகிறது.
கிட்டத்தட்ட இந்திய அரசியலுக்கு சமமாக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இது அன்றைக்கே நிறுவப்பட்டிருந்தால் இதில் இருக்கும், அல்லது இருந்த நிறை குறைகள் வெளிப்பட்டு சீர் செய்ய வழி பிறந்திருக்கும்.
ஈழத் தமிழர்களின் துரதிருஷ்டம். அதற்குள்ளாக இரண்டு யானைகளுக்கும் மதம் பிடித்து அவைகளின் காலடியில் மக்கள் மிதிபட்டுவிட்டார்கள்.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் வடகிழக்கு மாகாணம் என்பதனால் கவர்னரின் நியமனம், முதலமைச்சர் தேர்வு, ஆட்சிக் கலைப்பு அதிகாரம் போன்றவைகள் நியாயமானவைகளாகத்தான் உள்ளன.
ஆனால் இந்தியாவில் தற்போது உள்ளது போல் ஆட்சிக் கலைப்பை செல்லாது என்று அறிவிக்கத் தகுந்த அதிகாரம் இலங்கை உச்சநீதிமன்றத்திடம் உள்ளதா என்று தெரியவில்லை. இல்லாவிடில் இதுவும் சும்மா ஷோகேஸ் ஆட்சியாகத்தான் போய் முடியும்.
அதிலும் ஆட்சிக் கலைப்புக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் காலக்கட்டத்தை இந்தியாவின் 60 நாட்களாக காப்பியடிக்காமல் 14 நாட்கள் என்று குறைத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
அதிகாரப் பகிர்வு விஷயத்தில் இந்தியாவில் இருப்பதைப் போன்றே அரசியல் துறைகளை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக சட்டம் ஒழுங்கு மாகாண கவுன்சிலுக்கே வழங்கப்பட்டிருப்பது நல்லதுதான்.
நிலம் விஷயம்தான் எனக்குப் புரியவில்லை. சாதாரண ஒரு பிரஜைக்கு நிலம் கொடுப்பதற்கே இலங்கை அதிபரின் அனுமதி வேண்டும் என்பது என்ன விதிமுறை என்று எனக்குப் புரியவில்லை. முட்டாள்தனமாக உள்ளது.. வளர்ச்சியின் ஆதாரமே நிலம்தான். மக்களுக்கு குடியிருக்க நிலத்தையும், தொழில் துவங்க வழங்கப்படவுள்ள நிலத்திற்கான அனுமதியை ஒரு நாட்டின் அதிபரிடம் எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியமல்ல. சிங்களவர்களை தமிழர் பகுதிகளில் குடியேற்ற ஒரு வசதியாக அந்த அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இங்கே இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை என்னும் குடியரசில் அதன் மக்கள் எவ்விடத்தில் வேண்டுமானாலும் போய் வசிக்கத் தகுதி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் சிங்களவர்கள், தமிழர்கள் என்ற பேதம் பார்த்தல் கூடாது. சிங்களவர்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும், உரிமையும் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளாக தமிழர் பகுதிகளில்தான் சிங்களவர்கள் குடியேற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. சிங்களவர் பகுதிகளில் தமிழர்கள் குடியேறுவதை நான் கேள்விப்பட்டதே இல்லை.
கடைசியாக தமிழும், சிங்களமும் ஆட்சி மொழியாகக் கருதப்பட்டு ஆங்கிலம் இணைப்பு மொழியாகப் பயன்படுத்தப்படும் என்பது மிகச் சிறந்த தீர்மானம்தான். ஆனால் இதனை நடைமுறைப்படுத்தப் போவது எப்படி என்பதுதான் புரியவில்லை.
புலிகளை முற்றிலும் ஒழித்துக் கட்டிவிட்டு பின்புதான் இதனை அமல்படுத்துவேன் என்று சொல்வதிலிருந்து இலங்கை அரசுக்கு இப்போதைக்கு அமைதிப் பாதையில் விருப்பமில்லை என்பது புலனாகிறது. இப்போதே அதனை நடைமுறைப்படுத்தி புலிகளை தந்திரமாக ஜனநாயகப் பாதைக்குத் திருப்பும் வழியிருந்தும், இலங்கை அரசு அதனைச் செய்ய மறுப்பது அவர்கள் மேல் நம்பிக்கை வராமலிருக்கத்தான் உதவுகிறது.
புலிகளும் இதனை தங்களது ஒரு உத்தியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி வெளிநாடுகளின் மேற்பார்வையிலோ, அல்லது ஐநாவின் நேரடி பார்வையிலோ தேர்தல் நடந்தால் அதில் தாங்கள் கட்சி என்கிற அமைப்பின்கீழ் போட்டியிடப் போவதாக அறிவித்தால் சிங்கள அரசுக்கு புலிகளைத் தேடிப் பிடித்துக் கொல்லும் வெறிக்கு ஒரு தடைக்கல் உருவாக காரணமாக இருக்கும்.
ஜனநாயகப் பாதைக்கு வர நாங்கள் தயாராக இருந்தும் சிங்கள அரசுதான் வெறி கொண்டு அலைகிறது என்கின்ற பேச்சு, சிங்கள அரசுக்கு உலகப் பார்வையில் பல தடைகளைக் கொண்டு வந்து குவிக்கும். இதனை புலிகள் ஏன் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
புலிகளுக்குத் தாங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி வழிக்குத் திரும்பினாலும் இலங்கை அரசு தங்களை சும்மா விடாது என்ற எண்ணமும், புலிகளை எக்காலத்திலும் நம்பவே முடியாது என்ற எண்ணத்தில் இலங்கை அரசும் மாறி மாறி மோதிக் கொண்டிருக்கின்றன.
இந்த இருவரின் பயமும் போக வேண்டுமெனில் அது இவர்கள் இருவரின் நேரடி பேச்சுவார்த்தையால் மட்டுமே முடியும். துப்பாக்கியானாலும், ஷெல் வீச்சாலும் அல்ல.