Archive for the ‘ஜெயமோகன்’ Category

குமுதம் – இதழ் உருமாற்றத்தின் பின்னணியில் அடியேன்..!

மார்ச் 16, 2009

16-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ‘குமுதம்’ பத்திரிகையுடன் நெருங்கிய நட்பு உண்டு. எனது சிறு வயதில் சாண்டில்யன் கதை வராத குமுதம் இதழே கிடையாது என்றிருந்தது. சாண்டில்யனுக்காகவே ‘குமுதத்தை’ நான் அதிகம் நேசித்திருந்தேன். ‘யவனராணி’யும், ‘கடல்புறா’வும்தான் ‘குமுதத்தில்’ நான் அதிகம் வாசித்தவைகள்.. குமுதத்தின் ‘அரசு பதில்’களை எனது தந்தை மிக ஆர்வத்துடன் படிப்பார். அதில் இருக்கும் மெல்லிய குத்தூசி பதில்களை எனக்கும், எனது சகோதரிகளுக்கும் படித்துக் காண்பிப்பார்.

அவ்வப்போது வெளி வந்த சுஜாதாவின் சிறுகதைகளும், சினிமா சம்பந்தமான செய்திகளும்தான், ‘குமுதத்தை’ பிற்காலத்தில் என்னிலிருந்து பிரிக்க முடியாததாக மாற்றியது.

ஒரு முறை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஒன்றை ஏலம் விட்டு அதையும் ஒருவர் வாங்கியதை செய்தியாக வெளியிட்டுவிட்டு, இனி என்னென்ன ஏலமாக வரப் போகிறது என்று சொல்லி ஒரு காமெடியாக கார்ட்டூன் ஒன்றை போட்டிருந்தார்கள். அரசியல்வாதிகளின் உருவப்பட்ட வேட்டி, கவர்ச்சி நடிகைகளின் உள்ளாடை, பழனி பஞ்சாமிர்த டப்பா என்று சிலவற்றை வைத்து காமெடி திருவிழாவே செய்திருந்தார்கள்.

‘குமுதத்தின்’ சினிமா பாணி செய்திகள் பெரும்பாலும் வம்பிழுப்பதாகவே அமைந்திருக்கும். ஏதோ ஒரு சமயத்தில் நடிகைகள் வடிவுக்கரசிக்கும், சரிதாவுக்கும் இடையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சின்ன பிரச்சினை. ‘குமுதம்’ நிருபர் அதை விசாரிப்பதாகப் போய் பிரச்சினையை நிஜமாகவே பெரிதாக்கிவிட்டு, அதையும் செய்தியாக வெளியிட்டுவிட்டார்கள். பின்பு அடுத்த வாரம் இருவரையும் பேட்டி கண்டு ஒன்றாக நிற்பதைப் போல் புகைப்படமெடுத்து, இருவரும் ராசியாகிவிட்டதாகவும் எழுதியிருந்தார்கள். இப்படி பரபரப்பு செய்திகளையே ஆயுதமாகப் பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்தி வருகிறது ‘குமுதம்’.

இன்றைக்கும் பல பத்திரிகைகள் நம் கண் முன்னே வைக்கப்பட்டாலும் அதில் ‘குமுதம்’ இருந்தால், ‘குமுத’த்தைத்தான் பலரும் முதலில் கையில் எடுப்பார்கள். இது அனிச்சை செயல் மாதிரிதான்.. செய்தித்தாள்களில் ‘தினத்தந்தி’யைப் போல.. டிவிக்களில் ‘சன் டிவி’யைப் போல.. நமக்கு முதன்முதலில் எது பிடித்தமானதாக ஆனதோ.. அதையே கடைசிவரையிலும் நாம் பின்பற்றுகிறோம்.

காலம் மாற மாற, காட்சிகளும் மாறும் என்பதைப் போல மூன்றாண்டுகளுக்கு முன்னால் ‘விகடன்’ தனது உள்ளடக்கத்தையும், வடிவமைப்பையும் முற்றிலும் புத்தம், புதிதாக மாற்றிக் கொண்டு பளபளாவென்று வெளி வரத் துவங்கிய நேரம். ‘குமுதமோ’ அப்படியே வழமைபோலத்தான் இருந்தது.

அந்த நேரத்தில் ‘குமுதத்தில்’ எனக்கு நெருக்கமான அண்ணன் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசும்போதெல்லாம் “என்னதான் பண்றீங்க நீங்க..? ‘விகடன்’ கலக்குது பாருங்க..” என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

திடீரென்று அந்த அண்ணன் ஒரு நாள் எனக்கு போன் செய்து, “நீ என்னமோ வாராவாரம் போன்ல திட்டிக்கிட்டே இருந்தியே.. ‘குமுதத்துல அது சரியில்ல!. இது சரியில்லன்னு..!’ அதையெல்லாம் சொல்றதுக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு.. எங்க ஆபீஸுக்கு நாளைக்கு மதியம் 1 மணிக்கு வா.. மீட்டிங் இருக்கு.. ஜவஹர் ஸார் வர்றாரு.. நீ அவர்கிட்ட நேர்லயே கொட்டித் தீர்த்திரு..” என்று அன்போடு அழைத்தார்.

‘விகடன்’ தன்னை உருமாற்றிக் கொண்டதால், கொஞ்சம் லேட்டாக கண்ணு முழித்த ‘குமுதமும்’ ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நினைப்பில் இருந்தது. அந்த நேரத்தில்தான் ‘குமுதம்’ பத்திரிகையில் அடுத்து என்ன விதத்தில், என்ன மாதிரியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் ‘குமுதம்’ வாசகர்களிடம் கருத்துக் கேட்கும் படலம்தான் அன்றைக்கு நடந்தது.

‘குமுதம்’ பத்திரிகையில் பணியாற்றிய நிருபர்கள் அனைவரிடமும், தலைக்கு 2 பேரை அழைத்து வர வேண்டும் என்று டார்கெட் சொல்லியிருந்தார்களாம். அந்தக் கோட்டாவில்தான் நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

மதியம் 2 மணிக்கு ‘குமுதம்’ அலுவலகம் சென்றேன். 2வது மாடியில் இருந்த ஒரு மீட்டிங் ஹாலில் கூடியிருந்தோம். என்னையும் சேர்த்து 12 பேர் வந்திருந்தார்கள். வந்தவர்களில் சிலர் வெளியூர்களிலிருந்தும் வந்திருந்தார்கள். குமுதத்தின் நீண்ட நாள் வாசகர்கள் என்பதை அவர்களது பேச்சிலேயே அறிய முடிந்தது.

ஆசிரியர் ராவ், ப்ரியா கல்யாணராமன், மணிகண்டன், கிருஷ்ணா டாவின்ஸி என்ற அப்போதைய ஆசிரியர் குழுமத்துடன் உள்ளே நுழைந்தார் ஜவஹர் பழனியப்பன்.

முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது ஆசிரியர் குழுவினரையும் அறிமுகப்படுத்தினார் ஜவஹர். பின்பு, “குமுதம் இதழை மேலும் புதிய வடிவமைப்பில், புதிய உள்ளடக்கத்தில் மாத்தலாம்னு ஒரு எண்ணம் எங்களுக்கு இருக்கு. நீங்கள்லாம் நீண்ட நாள் ‘குமுதம்’ வாசகர்கள் என்பதால் உங்ககிட்ட கேட்டாத்தான் நல்லாயிருக்கும்கிறது எங்களோட அபிப்ராயம், ஏன்னா எங்களுக்கு வாசகர்கள்தான் முக்கியம்.. அவங்களுக்கு எது பிடிக்குமோ, என்ன வேணுமோ அதைத்தான் கொடுக்கணும்னு நாங்க நினைச்சு செயல்பட்டுக்கிட்டிருக்கோம்.. எடிட்டர் ஸார் அதைத்தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திட்டுப் போயிருக்காரு.. இப்ப ‘குமுதத்துல’ என்னென்ன புதிதாக மாற்றம் செய்யலாம்.. எப்படி மாத்தலாம்னு கொஞ்சம் உங்களோட கருத்தைச் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்…” என்று சென்டிமெண்ட்டலாக அட்டாக் செய்தார் ஜவஹர்.

பின்பு வரிசையாக ஒவ்வொருவரையும் அழைத்து ‘அவருடைய பெயர், ஊர், வயது, எத்தனை வருஷமா குமுதம் படிக்கிறீங்க..? வீட்ல எத்தனை பேர் இருக்காங்க.. குடும்பம் மொத்தமும் குமுதம் படிப்பாங்களா?’ என்ற விவரங்களையெல்லாம் கேட்டு அதனைக் குறித்துக் கொண்டார்கள் உதவி ஆசிரியர்கள். பேசியவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஜவஹரே குறித்துக் கொண்டே வந்தார். அவ்வப்போது இடைமறித்து கேள்விகள் கேட்டதோடு, அது பற்றிய தனது கருத்தை அங்கேயே ஆசிரியர் ராவிடம் தெரிவித்தபடியே இருந்தார்.

எனக்கு முன்பாக 6 பேர் பேசினார்கள். “கதைகள், கவிதைகளை இப்போதெல்லாம் அதிகமாக யாரும் ரசிக்கலை.. அந்த வாரம் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் பத்தியும் கொஞ்சம் எதிர்பார்க்குறாங்க.. நீங்க கதையையும், கவிதையையும் கட் பண்ணிட்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்க” என்றார் ஒருவர். இன்னொருவர், “புத்தகத்தை சீக்கிரமா கிராமப்புறங்களில் கிடைக்குறாப்புல பண்ணுங்க.. ஒருவேளை ‘விகடன்’ முதல் நாளே ரிலீஸ் ஆயிட்டா, நம்ம செய்தி லேட்டாயிரும்.. அப்புறம் படிக்கிறவன் மனசுல ‘எப்பவுமே குமுதம் லேட்டு’ன்னு பதிய ஆரம்பிச்சிரும்..” என்றார்.

என் முறையும் வந்தது.. நான் பேசியதில் என்னுடைய நினைவில் இருப்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

“குமுதம்’ என்றவுடனேயே முதலில் நினைவுக்கு வருவது அதனுடைய குறும்பு. மிக சின்னத்தனமான விஷயங்களைக்கூட கிண்டலாக வெளியிட்டு அதற்கு பப்ளிஸிட்டி தந்து செய்தியாக்கும், குமுதத்தின் வழக்கமான குறும்புகள் இப்போதெல்லாம் தென்படுவதில்லை.

உதாரணமாக ஒரு முறை அட்டையைத் திறந்தவுடன் முதல் பக்கத்தில் ஒரு பிட்டு நியூஸாக, ‘ஆசியக் கண்டமே போற்றிப் புகழும் அசோக்பில்லர் தொடையழகி ரம்பா, சென்ற வாரம் இரண்டு நாய்க்குட்டிகளை வாங்கியிருக்கிறார்..’ அப்படீன்னு போட்டிருந்துச்சு. ‘நாட்டுக்கு ரொம்ப அவசியமான நியூஸா இது?’ என்று எனக்கும் சிரிப்பு வந்தது. இது மாதிரியான செய்திகள் வாசகர்களுக்குத் தேவையில்லாததுதான் என்றாலும், எழுதிய விதத்தில் அதுவும் ஒரு செய்தியாகிவிட்டது. இது மாதிரி புத்தகத்தோட பிணைப்பு ஏற்படுத்துற மாதிரி எதுவும் இப்பல்லாம், ‘குமுதத்துல’ எந்தப் பக்கத்துலேயும் வர்றதில்ல..” என்றேன்.

ஜவஹர் வாய் விட்டுச் சிரித்தார். பின்பு உடனேயே மணிகண்டன் பக்கம் திரும்பி “இதை நோட் பண்ணிக்குங்க..” என்றார். தொடர்ந்தேன் நான்..

“முன்னாடி ‘அரசு பதில்’கள்ல ஒரு கேள்வியிலாவது ஏதாவது ஒரு விஷயத்தையோ, அல்லது புத்தகத்தையோ, இல்லாட்டி கிசுகிசுவையோ ஜாடைமாடையா எழுதி, அது என்னன்னு யோசிக்க வைப்பீங்க..! இப்ப அது மாதிரி ஒண்ணுமே வர்றதில்ல.. இப்பல்லாம் அரசு பதில்கள் ஏதோ ஒப்பேத்துற மாதிரிதான் இருக்கு..” என்றேன்..

மேலும் தொடர்ந்து, “சினிமா பக்கங்கள்ல ஒரே பேட்டியாத்தான் இருக்கு. துணுக்குச் செய்திகளே காணோம்.. ஒரு பேட்டியே 3 பக்கம்னு போகுது.. இதுக்குப் பதிலா 3 பக்கத்துல 3 பேரோட பேட்டியை வாங்கிப் போடலாமே..” என்றேன்..

“குமுதம்’ உள்ள இருக்குற பேப்பரெல்லாம் இன்னும் கொஞ்சம் நல்ல பளபளா பேப்பரா இருந்தா நல்லாயிருக்கும்.. கொஞ்சம் சாணி பேப்பர் மாதிரி தெரியுது..” என்றேன்.. உடனேயே குறுக்கிட்ட ஜவஹர், “இல்ல.. அதையெல்லாம்தான் மாத்தப் போறோம்..” என்றார்.

“கிண்டல் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. அதையும் எத்தனை வருஷத்துக்குத்தான் இலை, மறைவு காயா பண்ணுவீங்க.. இப்பல்லாம் நாங்க டைரக்ட்டா சொல்றதைத்தான் விரும்புறோம்.. இது மாதிரி பிரபலங்களை கிண்டல் பண்றதை நேர்லயே, அவங்ககிட்ட சொல்லி அந்த பதிலை வாங்கி எழுதினா இன்னும் நல்லாயிருக்கும்..” என்றேன்.. குறித்துக் கொண்டார் ஜவஹர்..

“முன்னாடியெல்லாம் அஞ்சாங்கிளாஸ் படிச்சவங்களுக்குக்கூட ‘குமுதத்தை’ படிக்கிறது ரொம்ப ஈஸியா இருக்கும். ஆனா இப்பல்லாம் ‘குமுதத்துல’ வர்ற எழுத்துக்கள் கொஞ்சம் கடினமா இருக்கு. சில கட்டுரைகள்ல ‘இந்தியா டுடே’ ஸ்டைல் எழுத்தை புகுத்துறீங்க.. எனக்கு ஒண்ணுமில்ல.. எனக்குப் புரியுது.. ஆனா பல கிராமப்புற வாசகர்களுக்கு நிச்சயம் இது புரியாது. இத்தனை நாளா படிச்சவங்களுக்கு திடீர்ன்னு புரியலைன்னா, அவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம்.. எழுத்து ஸ்டைலை கொஞ்சம் எளிமையாக்குங்க..” என்றேன்..

“உதாரணம் சொல்ல முடியுமா?” என்றார் ஜவஹர்.

“இப்ப ஒரு 3 வாரமா ஜெயமோகன் ஒரு கட்டுரைத் தொடரை(பி்ன்னர் பொழுதே தூரம்) 4 பக்கத்துக்கு எழுதிக்கிட்டிருக்காரு.. அந்தக் கட்டுரைல என்ன எழுதுறாரு.. என்ன சொல்ல வர்றாருன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்றேன்.. “ஏன்.. நல்லாயில்லையா..?” என்றார் ஜவஹர்.. “அவர் எழுதறது புரிஞ்சது.. படிக்க முடியுதுன்னு இங்க இருக்கறவங்க யாரையாவது சொல்லச் சொல்லுங்க.. பார்க்கலாம்..!” என்றேன். பேச வந்திருந்த மற்றவர்களும் கோரஸாக எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். “அப்படியா..?” என்று ஆச்சரியப்பட்ட ஜவஹர் ஆசிரியர் ராவிடம் “குறிச்சுக்குங்க ஸார்.. பின்னாடி பேசுவோம்..” என்றார். உடனேயே ராவ், “அவர் பெரிய இலக்கிய ரைட்டர்.. இப்பத்தான் ஆரம்பிச்சிருக்காரு.. போகப் போக உங்களுக்குப் பழகிரும்..” என்றார். “அப்ப குமுதம் என்ன இலக்கியப் பத்திரிகையா..? எங்களுக்கு குமுதத்துல இலக்கியம் வேண்டாமே..?” என்றேன்.. ராவ் அமைதியானார்.

ஜவஹர் “ஓகே ஸார்.. வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க..?” என்றார்.

“இப்ப ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ல பா.ராகவன் ‘மாயவலை’ கட்டுரை எழுதறாரு.. ‘குமுதம் ரிப்போர்ட்டரை’ வாங்கினவுடனேயே மொதல்ல படிக்கிறது அதைத்தான். அதுக்கப்புறம்தான் மத்தது.. அது மாதிரி குமுதத்துலேயும் ஏதாவது ஒரு அரசியல் தொடர் கட்டுரை.. ‘கண்டிப்பா படிச்சே தீரணும்’ அப்படீங்கற மாதிரி ஒண்ண எழுதச் சொல்லுங்க.. நிச்சயம் கிளிக்காகும்..” என்றேன்.

“குமுதத்தின் விலையையும் அப்பப்போ ஏத்திக்கிட்டே போறீங்க..?” என்றதும் மற்றவர்களும் அதே கருத்தை சொல்லத் துவங்க.. ஜவஹர் இடைமறித்தார்.. “இல்ல.. இல்ல.. மற்ற பத்திரிகைகள் உயர்த்துறாங்களேன்றதுக்காக நாங்க விலையை ஏத்தலை.. எங்க கழுத்துக்கு கத்தி வர்றவரைக்கும் தாங்கிக்கிட்டு, அதுக்கப்புறம்தான் வேற வழியில்லாமத்தான் விலையை உயர்த்த வேண்டியதா இருக்கு.. வருஷா வருஷம் எல்லாச் செலவும் ஏறிக்கிட்டே போறதுனால இது தவிர்க்க முடியாதது..” என்று உறுதியுடன் அனைவரி்ன் கருத்தையும் ஏற்க மறுத்தார்.

எனக்குப் பின்னு்ம் சிலர் பேசினார்கள். அனைவரின் கருத்தையும் கேட்டு, குறித்துக் கொண்ட ஜவஹர் கடைசியாக, “குமுதம் நிச்சயம் அதன் வாசகர்களுக்காகவே நடத்தப்படும்.. எங்களுக்காக நடத்தப்படாது.. அதில் நாங்கள் என்றும் உறுதியுடன் இருக்கிறோம்.. இப்ப நீங்க சொன்ன அனைத்துக் கருத்துக்களையும் நாங்கள் பரிசீலித்து எங்களது ஆசிரியர் குழுவினருடன் கலந்தாலோசித்துவிட்டு நிச்சயம் மாற்றம் செய்வோம்..” என்று உறுதியளித்து அனைவரிடமும் கை குலுக்கி விடைகொடுத்தார்.

அவர் சொன்னது போலவே அடுத்த வார அரசு பதில்களில், “கலைஞர்..?” என்கிற கேள்விக்கு “நூ.வா..!” என்று மட்டும் பதில் போட்டிருந்தார்கள். இதற்கான பதில் முதலில் எனக்கும் புரியவில்லை. கடைசியாக மீண்டும் அந்த ‘குமுதம்’ அண்ணனுக்கே போன் செய்து கேட்டபோதுதான் தெரிந்தது.. கலைஞரே இதனை பெரியவர் பால்யூ மூலமாக விசாரித்துத் தெரிந்து கொண்டதாகவும் அந்த அண்ணன் சொன்னார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த இரண்டாவது வாரத்தில், ஜெயமோகனின் ‘பின்னர் பொழுதே தூரம்’ தொடர் கட்டுரை நிறுத்தப்பட்டது.

[இங்கே ஒரு விஷயம்.. ‘குமுதத்தில்’ வந்த ஜெயமோகனின் அந்த கட்டுரைத் தொடர்தான் எனக்குப் பிடிபடவில்லை. புரியவில்லை. ஆகவே பிடிக்கவில்லை. ஆனால் ஜெயமோகன் இப்போது தனது வலைத்தளத்தில் எழுதுவதில் பலவற்றை மீண்டும், மீண்டும் படிக்கிறேன். அருமையாக உள்ளது. வெறும் வரட்டு எதிர்ப்புக்காகவோ, தனி மனித விரோதத்துக்காகவோ நான் அதனைச் சொல்லவில்லை என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்]

அடுத்த வாரத்தில் இருந்து குமுதத்திலேயே அரசியல் கட்டுரைகள் தொடங்கின. முதல் கட்டுரைத் தொடர் காஷ்மீர் பிரச்சினை பற்றியது என்று நினைக்கிறேன்.. சரியாக ஞாபகமில்லை..

“இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி” என்று சொல்லி வந்தவர்கள் கைகளில் ஒரு கவரைத் திணித்தார்கள். கவரில் 300 ரூபாய் இருந்தது. அப்போது அடியேன் வெட்டி ஆபீஸராக வேலை தேடிக் கொண்டிருந்ததால், இந்தப் பணம் அந்த நேரத்தில் எனக்கு மிக, மிக பயனுள்ளதாக இருந்தது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்..

என்றைக்கும், எதனை மறந்தாலும் நன்றியை மட்டும் மறக்கக் கூடாதே..!

அதனால்தான் இந்தப் பதிவு..!