Archive for the ‘ஜாதகம்’ Category

சுப்பையா வாத்தியாரின் சாதனை..! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!

நவம்பர் 24, 2009

24-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவுலகிற்குள் மாதந்தோறும் 20 பேர் வருவதும், அதில் பாதி பேர் சில காலங்களில் சத்தம் இல்லாமல் மறைவதும் சகஜமாக போய்க் கொண்டிருக்கிறது. எழுத்து என்பது அனைவருக்குள்ளும் இருக்கிறது. வரும்.. வருகிறது. ஆனால் அனைவருக்கும் பிடித்தமாக எழுதுவது என்பது சிலரால் மட்டுமே முடிகிறது. அது இறைவனின் கொடை..

அந்த வரிசையில் நமது வாத்தியார் திரு.சுப்பையா அவர்களின் எழுத்துக்கள் வலையுலகத்தில் அத்தனை பிரிவினரையும் கவர்ந்திழுத்திருக்கிறது.

ஆன்மிகம், ஜோதிடம், ஜாதகம் என்று எழுதினாலும் அதில் நம்பிக்கை இல்லாதவர்களைக்கூட அதன் மீது ஈர்க்கக் கூடிய அளவுக்கு அவருடைய எழுத்து வன்மை அதில் தெரிகிறது.

அந்த நம்பிக்கையில்லாமல் எதிர்க் கேள்விகளை அடுக்கி வைப்பவர்களுக்குக்கூட மிக நாகரிகமாக பதில்களைச் சொல்லும் ஐயாவின் சகிப்புத்தன்மையும், பெரிய மனதும் ஊரறிந்தது.

அவருடைய வகுப்பறை என்னும் தளம் எத்தனையோ வலைப்பதிவர்களுக்கும், படிக்கக் கூடிய ஆர்வலர்களுக்கும் பிரமிப்பை ஊட்டியிருக்கிறது.. எதிர்காலம் பற்றிய ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவருடைய சிறுகதைத் தொகுப்புகள் மூன்றுமே ரத்தினச் சுருக்கமான வாழ்க்கை வழிகாட்டிகள். அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு நீதியினைச் சுட்டிக் காட்டி வாழ்க்கை என்பது என்ன என்பதை நமக்குத் தெளிவாக்கியிருக்கிறார்.

இத்தகைய வித்தகர் நமது வலையுலகில் பவனி வருவது நிச்சயம் நமக்குப் பெருமைதான். நான் சற்றும் கிஞ்சித்தும் அவரை உயர்த்திப் பேசவில்லை. அவருக்குத் தற்போது கிடைத்துள்ள பாலோயர்ஸ் எண்ணிக்கையை சற்று பாருங்கள்..

வலையுலகில் முதல் முறையாக ஒரு தமிழ் பதிவருக்கு ஆயிரம் பாலோயர்களைத் தாண்டியது என்றால் அது நமது வாத்தியாருக்குத்தான்.. இப்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 1032-ல் நிற்கிறது. வாத்தியாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

நானும் மூன்றாண்டுகளாக இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்.. இப்போதுதான் 300-ஐ தாண்டியிருக்கிறேன். ஆனால் ஐயா அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அவருடைய எழுத்தின் வலிமை தெரிகிறது.. புரிகிறது..

அவருடைய கொள்கையில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள்கூட என்ன சொல்லப் போகிறார்..? எப்படிச் சொல்லப் போகிறார்..? என்கிற ஆர்வத்தில் ஐயாவின் எழுத்தில் கிறங்கிப் போயிருக்கிறார்கள் என்பது என் தெளிவு.

ஐயாவின் இந்த சாதனையை ஊர் அறிய, உலகறிய பாராட்டும் கடமை அவருடைய வகுப்பறை மானிட்டர் என்கிற முறையில் எனக்குக் கிட்டியிருப்பது எனக்குப் பெருமைதான்..

வகுப்பறையின் பெருமையும், ஐயாவின் சீரிய எழுத்தும் மென்மேலும் வளர்ந்து வலையுலகை ஆட்கொள்ள வேண்டுமாய் என் அப்பன் முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன்.

வகுப்பறை வாழ்க..! சுப்பையா வாத்தியார் வாழ்க..!