22-09-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
போகின்ற போக்கைப் பார்த்தால் அயோத்தி ராமனைவிடவும் சேது ராமன் அகில உலகப் புகழ் பெற்று விடுவார் போலிருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டம் பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்து, திட்டமிடப்பட்டு, கடைசியாக சமீபத்தில் உருவாக்கப்பட்டபோதே ராமர் பாலத்தின் கதி என்னாவது என்று கண்ணீர் விட்டது பா.ஜ.க.
திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்போது 60 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து உடைக்கப்பட இருப்பது ராமர் பாலம்தான் என்றவுடன் மறுபடியும் ஒரு ராமர்-ராவணன் மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
போதாக்குறைக்கு கலைஞர் வேறு “ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்..?” என்று குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு எரிகிற தீயில் எண்ணெய்யை வார்த்துள்ளார்.
ராமர் பாலத்தை இடிக்காமல் தனுஷ்கோடி வழியாக மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்கிற கருத்துக்கு ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு கலைஞரைத் தவிர ஆளும் மத்திய அரசுக் கூட்டணியின் மற்றத் தலைவர்களும் ஒத்துக் கொள்ளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.
நானும் ஒரு பக்தன்தான். கடவுள் பக்தி உள்ளவன்தான். ராமாயணம் நடந்த கதைதான் என்பதில் உறுதியாக இருப்பவன்தான். அதே சமயம் மக்களுக்காகத்தான் கடவுளே தவிர.. கடவுளுக்காக மக்கள் இல்லை என்ற கருத்திலும் இருப்பவன்.
புராதன சின்னங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் அரசியல் ஆத்திகவாதிகள் நாடு முழுவதிலும் உள்ள கோயில்களின் நிலைமைகளை பார்த்து, அதைச் சரியாகப் பின்பற்றி வருகிறோமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள்.. அங்கேயுள்ள ஆயிரங்கால் மண்டபத்தைச் சுற்றிலும் 108 கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் அனைத்துமே கோவிலின் உள்பிரகாரத்துக்குள்தான்..
கோவிலே புராதானச் சின்னம் என்றிருக்க.. அந்த புகழ் பெற்ற கோவிலை பிளாட் போட்டு விற்பதைப் போல் எட்டுக்கு எட்டு என்ற அளவில் தங்களுக்குள்ளேயே பாகப்பிரிவினை செய்து கோவிலையும், அந்தப் புராதனச் சின்னங்களையும் அசுத்தமாக்கியிருக்கும் இந்த அரசியல் ஆத்திக வியாதிகளை என்னவென்று சொல்வது?
இவர்களை யார் முதலில் தட்டிக் கேட்பது..
அதே மதுரையிலேயே புதுமண்டபம் என்னும் தொன்மையான மண்டபமும் உண்டு. அந்த மண்டபம் முழுக்கவே இப்போது கடைகள்தான். கேட்டால் வாடகை கிடைக்க வேண்டுமாம்.. அதை வைத்துத்தான் இந்து சமய அற நிலையத் துறைக்கு வருடச் செலவுகளைச் சமாளிக்க வேண்டுமாம்.. கோவிலுக்கு ஆகும் செலவிற்கும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
மதுரை என்றில்லை சிதம்பரம், தஞ்சை, ராமேஸ்வரம் என்ற புகழ் பெற்ற கோவில்கள் அனைத்திலுமே அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் கோவில் இடங்கள் அனைத்தும் குப்பை மேடாக இருக்கிறது.
கண் முன்னே இருக்கின்ற ஒரு அசிங்கத்தைப் பார்த்து நிவாரணம் செய்ய அரசியல் வியாதிகளுக்கு நேரமில்லை.. விருப்பமும் இல்லை..
இப்போது இங்கே வாடகையாக கிடைக்கின்ற சொற்ப பணத்திலேயே இருக்கின்ற புராதானச் சின்னங்களை பராமரிக்க முடியாமல் திணறுகின்ற இந்த அரசுகளைத் தட்டிக் கேட்க முடியாதவர்கள் பூமிக்குள் அமிழ்ந்து கிடக்கும் பாலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.
இத்தனைக்கும் இன்றுவரையிலும் அந்தப் பாலத்தின் மீது நடந்து சென்றவர் யார்..?
அந்தப் பாலம் எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை. நாசாவின் புகைப்படத்தை வைத்துத்தான் சுப்பிரமணியம் சாமியிலிருந்து அத்வானி வரையிலும் அனைவரும் ராமனுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.
அந்த ஒரு பாலத்தை உடைத்து வழி ஏற்படுத்தினால் நாளைய எதிர்கால சந்ததியினருக்கு வேலை வாய்ப்புகளும், மாநிலத்திற்கு வருவாய் வாய்ப்புகளும் கிடைக்கின்ற வாய்ப்பு இருக்கின்றபோது அதை செய்வதுதான் நாட்டிற்கு நல்லது.
அந்தப் பாலம் ராமர் கட்டியதாகவே இருக்கட்டும். கடவுளை வணங்குதல் என்பதே நம்முடைய நலனுக்காகத்தானே.. அப்படிப்பட்ட கடவுள் பக்தர்களுக்காக தன்னுடையதை விட்டுத் தர மாட்டாரா? என்ன செய்துவிடப் போகிறார்..?
ஆத்திகம் என்பதற்காக அதைத் தொட்டுக் கும்பிட வேண்டும் எனில் எத்தனையோ ஊர்களில் நட்ட நடு ரோட்டில் இருந்த கோவில்களையெல்லாம் சாலை அமைப்பிற்காக நாம்தானே இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.
அவையெல்லாம் இப்போது கட்டிய கோவில்கள்.. புராதனச் சின்னங்கள் இல்லை என்று வாதமிட்டால், தமிழ்நாட்டின் புராதனச் சின்னங்களான கோவில்களின் இன்றைய நிலைமைக்கு என்ன சொல்லப் போகிறார்கள் இவர்கள்.
சென்ற வருடம்தான் இன்னொரு கொடுமையும் மதுரையில் நடந்தது.
மதுரை திருமலை நாயக்கர் மஹாலை புனரமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலும் ஒரு திரைப்படத்தின் ஷ¥ட்டிங்கிற்கு அதை வாடகைக்கு விட்டார்கள். வாடகைக்கு எடுத்தவர்கள் லைட்டிங்ஸ் செய்வதற்காக மஹாலின் தரைத் தளத்தில் ஆங்காங்கே தோண்டி மணலை அள்ளி வெளியே கொட்டிவிட்டார்கள். இதையும் அரசு அதிகாரிகள்தான் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இதை எந்த ராமனிடம் போய் சொல்லி அழுவது?
ஒரு காலத்தில் தனுஷ்கோடி துறைமுகமாக இருந்த நகரம்தான். ஆனால் அது இன்று அழிந்து போய் கண்டு கொள்ளப்படாமலேயே சிதைந்து போய் நிற்கிறது.
புராதனச் சின்னம் என்று வாய்க்கூச்சல் போடுகிறவர்களுக்கு அதைப் பற்றிக் கண்டு கொள்ள நேரமில்லை. ஏனெனில் தனுஷ்கோடியில் இப்போது இருப்பது இவர்களுக்கு எதற்கும் பயன்படாத மீனவ குடும்பங்கள்.
ஆனால் ராமர் அப்படியல்ல..
தீயாய் பற்றிக் கொள்பவர். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரையிலும் நித்தம் நித்தம் தெய்வத்தைத் தொழுவதைத் தவிர வேறு வேலையில்லாமல் உழலுபவர்களின் மூளையை மழுங்கடிக்கும் சக்தி வாய்ந்தவர். அவர்களின் எதிர்வினை ஓட்டுச் சீட்டுக்களில் பதிந்து விடாதோ என்ற எண்ணம்தான்..
முதல் நாள் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த வாக்குமூலத்தை மறுநாள் வாபஸ் பெறுகிறது மத்திய அரசு. இரண்டு அரசு அதிகாரிகள் மேல் பழியைத் தூக்கிப் போட்டு பலிகடாவாக்கிவிட்டு தான் நல்ல பெயர் பெற்றுவிட்டது.
போதாக்குறைக்கு மந்திரிகளுக்குள் மோதல் என்றும் சூட்டைக் கிளப்பி மத்திய அரசின் கையாலாகதனம் என்ற பெயரையே மறைத்து அப்போதைக்கு தப்பித்துவிட்டது.
நல்லவேளை.. அதை வாபஸ் பெறவில்லையெனில் இத்தனை நாள்கள் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுதத இராமாயணக் கதையின் நோக்கமே மாறியிருக்கும்.
“ஒரு பொய்யான விஷயத்தை.. நடக்கவே நடக்காத அர்த்தமில்லாத ஒன்றை ‘பாடம்’ என்று சொல்லி ஏன் வைத்திருந்தீர்கள்?” என்று யாராவது ‘அறிவிப்பூர்வமாக’ கேள்விகளை கேட்டுவிட்டால் யார், என்ன பதில் சொல்வது என்று அர்த்தராத்திரியில் யாரோ ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். தப்பித்துக் கொண்டார்கள்.
அது நடக்கவே நடக்காத கதைதான் என்று சொல்பவர்கள் இத்தனை நாட்கள் எனக்கு, என் தந்தைக்கு, என் தாத்தாவுக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் வாய் திறக்காமல் அமைதி காத்தது ஏனோ..?
ஒரு பொய்யுரையை பள்ளிக்கூடத்தில் பாடமாக வைக்கலாமா..? என்று கேள்வி எழுப்பி அதை நிறுத்தியிருக்க வேண்டுமே? செய்தார்களா?
அவ்வப்போது அவர்களுக்கு பேசுவதற்கு ஏதும் விஷயமில்லாத போது சொல்ல வேண்டியது இது போன்ற விஷயங்களைத்தான்..
ஏனெனில் ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும்தான் இங்கே நேரடி வாரிசுகள் இல்லையே என்ற அர்த்தமுள்ள தந்திரம்தான்..