03-10-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இட்லி
நான் எழுதியிருந்த கேவலமாகிப் போன தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பதிவில் இடம் பெற்ற திரைப்படங்களைப் பற்றிய அலசலில் புதிய விஷயம் ஒன்றும் தாமதமாகக் கிடைத்தது.
அதாகப்பட்டது என்னவெனில் பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித திரைப்படங்களின் டிவி ரைட்ஸ்கள் கலைஞர் டிவியிடம்தான் உள்ளனவாம். திரைப்படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதால் அவர்களுக்கு பரிவு காட்டும் பொருட்டு இந்த ஏற்பாடு என்கிறது சேம்பர் வட்டாரம்.
‘பூ’ பார்வதியையும், ‘பொம்மலாட்டம்’ ருக்மணியையும் தாண்டி த்ரிஷாவுக்கு கொடுத்ததன் மர்மம் என்ன என்று விசாரித்தால், திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் வந்தால்தான் மார்க்கெட்டிங் செய்ய முடியும் என்று நிகழ்ச்சியை ஒளிபரப்ப காத்திருக்கும் கலைஞர் டிவியின் மார்க்கெட்டிங் டீமின் புலம்பலும் ஒரு காரணம் என்கிறார்கள்.
யாருக்காக யாரால் ஆட்சி செய்யப்படுகிறது என்பதே புரியவில்லை.
தோசை
ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஒரே நாளில் அரை மணி நேர வித்தியாசத்தில் ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தை ஒளிபரப்பியதில் இருக்கும் மர்மங்களும் இதைப் போலவே பல கதைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
முதல் முறையாக ஜீ தமிழ்த் தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் கொட்டத் துவங்கியது ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்திற்குத்தான்.. முதலிலேயே விளம்பரங்களை அவர்களிடம்விட்டால் பின்பு நமக்கு கொஞ்சமாவது துண்டு விழுகுமே என்று யோசித்த சன் தரப்புதான் மிகுந்த திட்டமிட்டு, தங்களது வியாபாரத்தை முன் நிறுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டது.
தங்களுடைய சன் நெட்வொர்க் டிஜிட்டல் ஒளிபரப்பில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியை ஒளிபரப்பும் வசதியைத் தருவதாகச் சொல்லி ஆசை காட்டியும், “இல்லைன்னா அன்னிக்கு மட்டும் உங்க கனெக்ஷனுக்கு டெக்னிக்கல் பிராப்ளம் வந்தாலும் வரலாம்” என்று செல்லமான மிரட்டலும் வந்தபடியால்தான் ஜீ தரப்பு இணங்கி வந்திருக்கிறது.
அவர்களுக்கும் வேலையாகணும்ல்ல.. வெறும் கேபிளில் வருவதைவிட சன் நெட்வொர்க்கில் வருவதால் கூடுதல் பார்வையாளர்களும், அதனால் எதிர்காலத்தில் கூடுதல் விளம்பர வருவாயும் கிடைக்குமே என்கிற வியாபாரத்தினால் ஜீ பெரிய மனதுடன் விட்டுக் கொடுத்திருக்கிறது.
சுமார் 85 லட்சத்துக்கு வாங்கியிருந்த ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தை ஒரு கோடி லாபம் வைத்து சன் தரப்புக்கு விற்றுவிட்டது ஜீ. கூடுதலாக ஏற்கெனவே செய்து வந்த விளம்பரத்தினால், அன்றைக்கு மட்டும் சும்மா ஓட்டிக் கொள்ள பெர்மிஷனும் வாங்கி ஓட்டியாகி விட்டது. அன்றைக்கு நிஜமாகவே வர வேண்டிய விளம்பர கல்லாவில் சுமார் 20 லட்சம் மட்டுமே குறைவாம்.. மற்றபடி ஜீ தமிழுக்கும் காசுதான்..
இன்னொரு விஷயமும் சேனல்கள் வட்டாரத்தில் உலா வருகிறது.. சமீபத்தில் வந்து தமிழகத்தைக் கலக்கிய ‘நாடோடிகள்’ திரைப்படமும் சன் தரப்பிடம் போய்விட்டதாம். அதுவும் ஜீ சேனலால் 2-க்கு வாங்கப்பட்டு கூடுதலாக 1 பெரிய நோட்டு லாபம் வைத்து சன்னின் கைக்கு போயே போய்விட்டது என்கிறார்கள்.
மிக விரைவில் சன் தொலைக்காட்சியில் ‘சம்போ சிவசம்போ’வை காணலாம்.
பொங்கல்
உலக நாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவன், ஆஸ்கார் நாயகன், காதல் இளவரசன், கலைஞானி, அண்ணன் கமலஹாசனின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கைக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்..
அண்ணனின் திரையுலக வாழ்க்கையை ஒட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது என்றாலும் என்னைப் போன்ற அவரது ஆரம்பக் காலத் தோழர்களுக்கு ஒரு விஷயம் குறையாகவே பட்டது.
அண்ணனுடன் ஜோடி போட்ட நடிகைகள் பலரும் மேடைக்கு வந்து அண்ணன் பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.
மீனா, ரேவதி, லிசி, நிரோஷா, ஊர்வசி, ராதிகா, கவுதமி, ஜெயசித்ரா, ரோகிணி, சரண்யா, ஷோபனா, தபு என்று பட்டியல் நீண்டாலும் என்னைப் போன்ற அவருடைய ஆதிகாலத்துப் படத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிலர் வராதது ஆச்சரியத்தை அளித்தது.
“ராதா, அம்பிகா சகோதரிகள் ஏன் வரவில்லை?” என்று கேட்டதற்கு “அழைப்பிதழ் கொடுத்தாச்சு.. கூப்பிட்டாச்சு.. சொல்லியாச்சு.. வரலை..” என்கிறது மீடியா வட்டாரம். மனோரமா ஆச்சிக்கு காலில் அடிபட்டிருப்பதால் வீட்டிலேயே பெட்ரெஸ்ட்டில் இருக்கிறார். ஸோ, அவரும் இல்லை.
இவர்களும் இல்லாமல் இன்னும் இரண்டு பேரை கமலஹாசனின் ரசிகர்கள் கூட்டம் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடைந்தது. அண்ணன் கமலஹாசனுடன் அதிகமாக ஜோடி போட்டு நடித்தவர்கள் வராமல் ஆப்சென்ட்டான அந்த இரண்டு பேர்தான். ஒருவர் ஸ்ரீப்ரியா, இன்னொருவர் ஸ்ரீதேவி.
ஸ்ரீப்ரியாவைப் பொறுத்தமட்டில் கமல் மீது மட்டுமில்லாமல் ரஜினி மீதும் காண்டுவில்தான் இருக்கிறார் என்கிறார்கள். எவ்வளவோ நெருங்கிய நண்பர்கள்போல் பழகியும் இரண்டு பெரிசுகளும் 16 வருடங்களுக்கு முன்பாக தனது திருமணத்திற்கே வராமல் ஏமாற்றிய கோபம் இன்னமும் ஆறாமல் அப்படியேதான் இருக்கிறார் ஸ்ரீப்ரியா.
அடுத்தது நம்ம ஸ்ரீதேவி அக்கா. ஸ்ரீப்ரியாவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈகோ பார்க்கக் கூடியவர். ராணி எலிசபெத் அம்மையார் தலைமையில் நடந்த ‘மருதநாயகம்’ துவக்க விழாவில் தன்னை அழைத்து வெளியில் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்த கோபத்தில், அப்போதே எழுந்து வெளியேற முயன்றார். பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று சொல்ல வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்துவிட்டு கிளம்பியவர்தான். சமீபத்தில் விஜயகுமார் வீட்டுக் கல்யாணத்தில் கமலஹாசனை தூரத்தில் பார்த்தவுடனேயே நழுவிக் கொண்டாராம் ஸ்ரீதேவி.
இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து, பத்திரிகை அனுப்பி, போனில் செய்தி சொல்லி.. வருவதை உறுதிப்படுத்த பல முறை முயன்றும் ம்ஹும்.. “நோ ரெஸ்பான்ஸ்” என்கிறார்கள் பத்திரிகையுலக நண்பர்கள்.
மரியாதை இருக்குமெனில் கமலேதான் தங்களை அழைக்க வேண்டும் என்று இருவருமே எதிர்பார்த்தார்களாம். நம்ம அண்ணன்தான் இந்த விஷயத்துல அவங்களுக்கே அண்ணனாச்சே. “எல்லாரையும்போல கூப்பிடுங்க.. போதும்.. வந்தா வரட்டும்..” என்று சொல்லிவிட்டாராம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் இந்த இரண்டு முக்கிய ஹீரோயின்களும் வராமல் போக.. எனக்கென்னவோ இளையராஜாவின் இனிமையான இசை, டான்ஸ், பைட் இல்லாத கமலஹாசனின் அந்தக் காலத்துப் படத்தைப் பார்த்ததுபோல் சப்பென்று இருந்தது.
வடை
மீண்டும், மீண்டும் முயற்சிக்கும் விக்கிரமாதித்தனை போல பல முறை வலை விரித்து கடைசியில் புவனேஸ்வரியை பிடித்து உள்ளே வைத்துவிட்டது காவல்துறை.
அவர் விபச்சாரம்தான் செய்கிறார் என்றாலும், அதற்கு அழைப்பு கொடுத்தது போலீஸ் நண்பர்தான். அந்த நண்பர் அழைக்காவிட்டால் அவர் பேசாமல் இருக்கப் போகிறார். காவல்துறைக்கு என்ன வந்தது..?
புவனேஸ்வரி குற்றவாளி என்றால், அவரை விருந்துக்கு அழைத்த அந்த போலீஸ் நண்பரும் குற்றவாளிதான்.. ஏற்பாடு செய்த போலீஸும்தான் குற்றவாளி.
இதென்ன பெரிய பயங்கரவாத குற்றமா? பொறி வைத்துப் பிடிப்பதற்கு..? ஏற்கெனவே ஒரு முறை பிடித்து அவரது சினிமா வாழ்க்கையை குதறிப் போட்டது போலீஸ். அப்போதும் இதே பாணியில் யாரோ ஒருவரை பயன்படுத்தித்தான் கைது செய்தது. அந்த ஆளே போர்ஜரி.. இருவரும் படுத்திருந்ததற்கு ஆதாரம் இல்லையென்று கோர்ட் விடுவித்தது.
இப்போது என்னடான்னா போலீஸ் ஒரு கடைல காண்டம் வாங்கிக் கொடுத்துச்சாம். அதை செல்போன்ல படம் எடுத்திருக்காங்களாம். அதே காண்டத்தைத்தான் புவனேஸ்வரி வீட்டு பெட்ரூம்ல எடுத்திருக்காங்களாம். அதை பயன்படுத்த வாங்கினவரே சொல்றாராம்.. நான் படுக்கக் கூப்பிட்டேன். அவர் வர்றேன்னாருன்னு.. இது கோர்ட்டுல செல்லுமாம்..
படுக்க வர்றேன்னு சொன்னவரைவிடவும், கூப்பிட்டவுனுக்கு என்ன தண்டனையான்னு கேட்டா… அது சும்மா ஒரு ஏற்பாடாம்..
அட போங்கய்யா.. நீங்களும் உங்க இ.பி.கோ.வும்..!
பாவம் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. ரஞ்சிதா கோவிச்சுக்கிட்டு போனதால “யாரை வேண்ணாலும் அந்த வேஷத்துக்கு போடுவேன்”னு சொல்லி புவனேஸ்வரியை கொண்டாந்தார்.. அதுவும் கலைஞர் டிவிக்கு. இப்ப நிலைமை இப்படி ஆயிருச்சு..
இனி ‘தெக்கத்திப் பொண்ணு’ கதை என்னாகுமாம்..?
சட்னி
உள்ளூர்ல குத்துப் பாட்டு ஆடினது போதும். ஹாயா வெளிநாட்டுல போய் நடுரோட்டுல ஒரு ஆட்டம் போடலாம் வாங்க..
நம்ம ஊர் பத்மலஷ்மி முதல் முறையா கர்ப்பமா இருக்கிறதுதான் இப்போதைய லேட்டஸ்ட் சூப்பர்ஹிட் கிசுகிசு. இதுல என்ன கிக் இருக்குங்கிறீங்களா?
நம்ம பரபரப்பு எழுத்தாளர் சாலமன்ருஷ்டியுடனான மூணு வருஷ குடும்ப வாழ்க்கையில் இருந்து அம்மணி இப்பத்தான்.. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் டைவர்ஸாகி வெளில வந்தாங்க. இப்பத்தான் நிம்மதியா இருக்காங்களாம்.
வயது 39 ஆச்சுன்னாலும், ஏதோ இப்பவாவது குழந்தை பெத்துக்குறாங்களே.. விட்டுட்டுப் போவியான்னு கேக்குறீங்களா? அதுவும் கரெக்ட்டுதான்.. ஆனா பாருங்க.. தன்னுடைய இந்த கர்ப்பத்துக்குக் காரணமான அந்த ஆண்மகன் யாருன்னு பத்மா சொல்ல மாட்டேங்குறாங்க. அதான் பரபரப்புக்குக் காரணம்.
அநேகமா அது அவரோட நெருங்கிய உறவினரான ஒரு வக்கீலாத்தான் இருக்கணும் என்கிறது இணையதளச் செய்திகள்.
இந்த டைப் வாழ்க்கை நல்லாயிருக்கே..
சாம்பார்
முன்னொரு காலத்துல நம்ம பக்கத்து ஸ்டேட்ல ஒரு பெரிய நடிகரோட வீட்ல நள்ளிரவு நேரத்துல துப்பாக்கி வெடிச்சது.
நடிகரோட சேர்ந்து தண்ணியடிச்சிட்டிருந்த ஒரு தயாரிப்பாளருக்கு தொடைல, இடுப்புல எல்லாம் துப்பாக்கி கண்டு பாய்ஞ்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காப்பாத்தினாங்க. கேட்டாக்கா தன்னோட படம் ஓடாத கோபத்துல நடிகர்தான் சுட்டாருன்னு போலீஸ் சொல்லுச்சு.
நடிகரும் சமர்த்துப் பிள்ளையை மனநிலை பாதிப்பாயிருச்சுன்னு ஆஸ்பத்திரில போய் அட்மிட் ஆகித் தப்பிச்சாரு. கூடவே மூணே மாசத்துல ஆதாரம் இல்லைன்னு கோர்ட்ல கேஸ் படுத்திருச்சு. இது நம்ம நாட்டுல.. ஆனா மத்த நாட்டுல எல்லாம் இப்படியா?
ரோமன் போலன்ஸ்க்கி. திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத ‘தி பியானியஸ்ட்’ திரைப்படத்தின் இயக்குநர். இந்தப் படத்திற்காக 2002-ம் ஆண்டின் ஆஸ்கார் விருதையும் வாங்கியவர் இவர்.
அமெரிக்க லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் 977-ம் வருஷம் ஒரு 13 வயசுப் பொண்ணோட உறவு வைச்சுக்கிட்டதா குற்றம்சாட்டப்பட்டு அப்பவே கைதாகி 42 நாட்கள் சிறையில் இருந்தார். வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அங்கேயிருந்து தப்பிச்சவர் போலந்து, பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று இத்தனை வருஷமா இங்கிட்டும், அங்கிட்டுமா பொழப்பை ஓட்டிட்டாரு.
பாருங்க. இந்த வயசான காலத்துல எப்பவோ செஞ்ச தப்பு விடாம துரத்திப் பிடிச்சிருக்கு.
சமீபத்துல சுவிட்சர்லாந்து வந்த அவரை அமெரிக்க அரசோட வேண்டுகோளை ஏற்று அந்த நாட்டு போலீஸ் கபால்ன்னு புடிச்சு ஜெயில்ல வைச்சிருக்கு.. மனுஷன் 76-வது வயசுல ஜெயில்ல கிடக்குறாராம்.. இன்னும் அமெரிக்காவுக்கு கொண்டு போகலையாம்.
ஆனால் எப்பவோ நடந்த தப்புக்கு இப்ப கைது பண்றது நல்லாயில்லைன்னு ஹாலிவுட் பிரபலங்கள் மீட்டிங் வைச்சு பேட்டி கொடுத்திட்டிருந்தாலும், அமெரிக்க சட்டப்படி இந்த வழக்கில் இருந்து போலன்ஸ்கி தப்பிப்பது ரொம்ப கஷ்டமாம்..
என்ன செய்றது? விதி வலியது என்பது மறுக்க முடியாத உண்மை.
மிளகா சட்னி
ஆடுன காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.. அதைப் போல பல நடிகைகள் கல்யாணமாகிப் போன ஜோர்லேயே திரும்பி வந்து “நடிப்பு என்னை விட மாட்டேங்குது..” என்பார்கள். அந்த லிஸ்ட்டில் கூடிய சீக்கிரம் நம்ம மந்த்ராவும் வந்திருவார் என்கிறார்கள்.
அம்மணி தெலுங்கில் உதவி இயக்குநர் ஒருவரைக் கல்யாணம் செய்து குடும்பஸ்தியாக பிரமோஷனாகி, தனது கணவரான உதவி இயக்குநரை, தனது சொந்தக் காசையெல்லாம் போட்டு இயக்குநரா பிரமோஷன் பண்ணினாங்க. ஆனா அந்தப் படம் அட்டர்பிளாப்பாக.. மறுபடியும் வேலை தேடினாத்தான் பொழைப்பை ஓட்ட முடியும்ன்ற நிலைமையாம்.
இன்னொரு படம் ஆரம்பிக்கலாம்னு முயற்சிகள் செஞ்சப்பதான் அவரது கேரியரையே பகீராக்குற மாதிரி ஒரு வதந்தி போன மாசம் முழுக்க டோலிவுட்ல பரவி அவர் பேரு ஏகத்துக்கும் ரிப்பேராகிப் போய்க் கிடக்குதாம். “நான் அப்படி சொல்லலை.. சொல்லாததை ரிப்போர்ட்டர் தானா சொல்லிக்கிட்டிருக்காரு”ன்னு அம்மணி கிளிசரின் போடாம அழுது முடிச்சிருக்காங்க..
அழுது முடிச்சாலும் அரிதாரம் பூசிக்குற முடிவுல மாற்றமில்லையாம். அதுனால முதல் காரியமா பழைய மந்த்ராவா வர்றதுக்கான வேலைகளையெல்லாம் ஜிம்முல பழியா கிடந்து செஞ்சுக்கிட்டிருக்கிறதா கேள்வி.. வரட்டும்..
அக்கா, அண்ணி கேரக்டர்கூட கொடுத்து காப்பாத்த கோடம்பாக்கம் எப்பவுமே ரெடிதான்..
துவையல்
அக்கட தேசத்தில் நாயுடுகாருவுடன் டூ விட்டுக் கொண்டு இத்தாலிக்காரம்மா கட்சில சேர்றதுக்காக காத்துக்கிட்டிருக்கும் நமது முன்னாள் சிரிப்பழகி நடிகையோட வீட்ல கட்சி தாவுறது விஷயமா புயல் காத்து வீசுதாம்..
“கிட்டத்தட்ட ஒரு வருஷமா ஊர், ஊரா போயி ‘அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடாதீங்க’ன்னு தொண்டை கிழிய கத்தி என் பொழைப்பையே கெடுத்திட்டு வீட்ல உக்காந்திருக்கேன்.. நீ எப்படி அந்தக் கட்சில சேரலாம்..?”னு அம்மணியின் வூட்டுக்காரர் கத்துறாராம்..
ஆனாக்க.. அம்மணியோ ரொம்பவே கூலா “நான் என் பொழைப்பை பார்க்குறேன்.. நீ உன் பொழைப்பை பாரு”ன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்களாம்..
பாவம் வூட்டுக்காரரு.. மெல்லவும் முடியாம, துப்பவும் முடியாம தவிச்சுக்கிட்டிருக்காரு..
ஆப்பம்
பணியாரம்
தேன்குழல்
போதும்ப்பா.. ‘இட்லி-வடை’ போட்டு ரொம்ப நாளாச்சேன்னு எழுத ஆரம்பிச்சா, ஒரே சினிமாவா வந்து குவிஞ்சிருச்சு.. அதுனால இது ‘சினிமா ஸ்பெஷல்’ன்னு நினைச்சுக்குங்கோ..
அடுத்த வாரம் சந்திப்போம்..
நன்றி
வணக்கம்.