05-06-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதால், இப்போதெல்லாம் எல்லாப் படங்களுக்கும் தமிழிலேயே பெயர்கள் சூட்டப்படுகின்றன என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்.
முன்பு வரிவிலக்கிற்காக வந்த சில திரைப்படங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்தானா என்ற சந்தேகத்தையும் கிளப்பியிருந்தது. அதனால் ஆட்சேபணைக்குள்ளாகும் திரைப்படங்களின் பெயர்கள் அதிரடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வரியை வசூல் செய்து கொண்டு சென்றன.
கூடவே அப்போது ரஜினியின் ‘சிவாஜி’ என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்கிற சர்ச்சையும் எழுந்திருந்தது. ‘சிவாஜி’ தமிழ்ச் சொல் அல்ல என்பதால் அதற்கு கேளிக்கை வரி அனுமதிக்கப்படுமா என்றெல்லாம் சந்தேகங்கள் தற்சமயம்வரை கிளப்பி விடப்பட்டுக் கொண்டிருந்தன.
இதற்கிடையே படத்தின் தணிக்கை முடிந்ததும், ஏவி.எம். நிறுவனம் இது சம்பந்தமாக வணிகவரித்துறை ஆணையரிடம் விண்ணப்பித்தது. ‘சிவாஜி’ என்பது தமிழில் வழக்கத்தில் உள்ள பெயர்ச் சொல் என்பதால், அதற்கு வரிவிலக்கு அளிப்பதில் பிரச்சினையில்லை என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ‘சிவாஜி’ முழுமையான வரிவிலக்கைப் பெற்று தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கொள்ளை லாபம் தரப் போகிறது.
அதே போல் இயக்குநர் மனோஜ்குமார் தயாரித்திருக்கும் மாதவன்-பாவனா நடித்த ‘ஆர்யா’ படத்திற்கும், ‘தமிழில் வலம் வரும் பெயர்ச் சொல்’ என்ற அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
முதலில் தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு முழு வரிவிலக்கு என்று அரசு உத்தரவிட்டபோது ‘தமிழில் இப்போது புழுங்கிக் கொண்டிருக்கும் வடமொழி எழுத்துக்களைக் கொண்ட சொற்களும் தமிழ்ச் சொற்கள் என்றே கருதப்படும்’ என்று சொன்னார்களா என்பது தெரியவில்லை.
எது எப்படியோ தங்களது டிவிக்கு படத்தைக் கொடுத்த கடனுக்கு ‘உதவி’ செய்தாகிவிட்டது. கூடவே, எதிர்க்கட்சி வாயைத் திறக்கக்கூடாது என்பதற்காக அக்கட்சியின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவரும், கலையுலகப் பொறுப்பாளருமான இயக்குநர் திரு.மனோஜ்குமார் தயாரித்திருக்கும் படத்திற்கும் வரிவிலக்கு கொடுத்தாகிவிட்டது.
எனவே இனி எதிர்ப்புகள் ஏதும் வராது என்றே நம்பலாம்.
ஆனால், ‘பாட்டாளி’களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தாலும் வரும்.. வரட்டுமே..
மதுரை கொலைச் சம்பவத்தை இன்னும் கொஞ்சம் ஊறப் போட ஒரு வாய்ப்பாவது கிடைக்கும்..
‘பஞ்சதந்திரத்தில்’ சாணக்யன்லாம் நம்ம திராவிடத் தலைவர்களிடம் வந்து பிச்சையெடுக்க வேண்டும்..