Archive for the ‘சவுக்கு’ Category

பதிவுலகத் தோழர் சவுக்கு கைது..! எனது கண்டனங்கள்..!

ஜூலை 22, 2010

22-07-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்று மாலைதான் அந்தக் கொடுமையான செய்தியைக் கேள்விப்பட்டேன்..

நானும் ஒரு எழுத்தாளன்.. நானும் ஒரு பத்திரிகையாளன்.. நானும் ஒரு படைப்பாளி என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்கும் உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவனின் ஆட்சியின் இன்னொரு லட்சணம் இன்றைக்கு அரங்கேறியிருக்கிறது.


http://savukku.net என்கிற தளத்தை நான் துவக்க நாளில் இருந்தே படித்து வருகிறேன். அதில் வருகின்ற, வந்திருக்கின்ற கட்டுரைகளையெல்லாம் வாசித்தபோது நிச்சயம் மிகப் பெரும் சோர்ஸ்ஸை வைத்துத்தான் இதனை எழுதுகிறார்கள். துறை சம்பந்தப்பட்ட நபர்கள், உண்மையான செய்தியைத்தான் நமக்கு விவரமாக அளிக்கிறார்கள் என்பது புரிந்தது..!

மிகப் பிரபலமான பத்திரிகைகளே எழுதத் தயங்கும் விஷயங்களையெல்லாம் மிகச் சாதாரணமாக எழுதித் தள்ளியதைக் கண்டு இன்னமும் எனக்கு ஆச்சரியம்தான்..!

மிகச் சமீபத்தில் நக்கீரன் இதழின் இணையாசிரியர் காமராஜை சம்பந்தப்படுத்தி சவுக்கு எழுதியிருந்த கட்டுரையும், அதனைத் தொடர்ந்து தான் எந்த நேரத்திலும் இதற்காகக் கைது செய்யப்படலாம் என்று எழுதியிருந்த கட்டுரையும் நக்கீரனில் இப்போது கோபாலண்ணே எழுதி வரும் வீரப்பன் வேட்டை கதைக்கு நிகரானதாக இருந்தது..

அப்போதும் நான் நினைக்கவில்லை. இப்படி கைது அளவுக்குச் செல்வார்கள் என்று..!

இப்போது இந்தக் கைதுக்குப் பின்புதான் மறுபடியும் சவுக்கிற்குள் நுழைந்து பார்த்தால் வெளி வந்திருக்கும் கட்டுரை நிச்சயம் போலீஸ் கிளப்பையே ஆட்டம் காண வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை..!

சக்தி வாய்ந்த போலீஸ் புள்ளிகளான சங்கர் ஜிவால், ஜாபர் சேட் இவர்களுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் இந்த மூவரைப் பற்றியுமான அந்தக் கட்டுரை மிக ஆச்சரியமும், அதிர்ச்சியமானதாகும்..!

நெருக்கடி நிலை காலத்தில்கூட பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அவர்களது கட்சித் தொண்டர்களைவிடவும் அதிகம் கை கொடுத்தவர்கள் இந்திய பத்திரிகையாளர்கள்தான். அதிலும் தமிழக பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் எந்த அளவுக்கு இந்திராவையும், நெருக்கடி நிலை கொடுமைகளையும் எதிர்த்து அஞ்சாமல் போராடின என்பது வரலாறு..

இப்போது அதுவெல்லாம் வெற்று பேப்பர்களாகிவிட்டது. பணம், புகழ், அந்தஸ்து இவற்றுக்காக பத்திரிகையாளர்களும், போலீஸும், அரசியல்வாதிகளும் மும்முனைக் கூட்டணி அமைத்து எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு சவுக்கின் அந்தக் கட்டுரையே சான்று..!

சில மாதங்களுக்கு முன்புதான் வீட்டு வசதி வாரிய வீடுகளை தனது சொந்தக்காரர்களுக்கு வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் சிக்கி பொதுப்பணித்துறையை இழந்தார் துரைமுருகன். அப்போதே வீட்டு வசதி வாரிய வீடுகளையும், நிலங்களையும் யார், யாருக்கெல்லாம் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் தோண்டித் துருவிக் கொண்டிருந்தன.

அவர்களுடைய பத்திரிகையில் வேலை செய்பவர்கள், சேனலில் வேலை செய்பவர்கள், சேனலில் நியூஸ் வாசிப்பவர்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து கலைஞருக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர்கள் என்று பலரும் சமூக சேவகர்கள் என்கிற போர்வையில் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை சகாய விலையில், கூடுதல் தவணையில் அள்ளிக் கொண்டதாக இதே நக்கீரன்தான் எழுதியிருந்தது.

இப்போது இதன் இணை ஆசிரியரே இப்படியொரு கோல்மால் வேலையில் சிக்கியிருக்கிறார் என்பது அதிர்ச்சியானதுதான். ஆனால் இது அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்பதால் நீங்களும், நானும் கேள்வி கேட்காமல் பத்திரிகா தர்மத்தின் சார்பில் வாயை மூடிக் கொள்ள வேண்டுமா..!?

ஒரு கோடி ரூபாய் பணம் என்பது போலீஸ் அதிகாரிகளுக்குக்கூட பரவாயில்லை. ஏதோ ஒரு வகையில் வந்திருக்கும் என்று எண்ணலாம்.. ஆனால் ஒரு பத்திரிகையின் இணை ஆசிரியரே கோடீஸ்வரர் என்றால் எப்படி..?

இதோடு சவுக்கு தளத்துடன் தொடர்புடைய  http://padaipu.blogspot.com/ என்ற தளத்தில் இருக்கின்ற கட்டுரைகளையும் ஒரு சேர வாசிக்கின்றபோது இது நிச்சயம் காவல்துறையைச் சேர்ந்தவரால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.. அது இந்த சங்கராக இருக்குமென்று நான் நினைக்கவில்லை..!

சங்கர்,  தமிழகக் காவல்துறையில் மிகச் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றவாளி என்று இன்னமும் எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. கட்டற்ற சுதந்திரமான இணையவெளியில் தனக்கென ஒரு வலைத்தளத்தை நிர்மாணித்துக் கொண்டு மக்கள் நலப் பணியின் முதலிடமான காவல்துறையைப் பற்றிய தனது கருத்துக்களை முன் வைக்கிறார்.

இது தவறெனில் காவல்துறை அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம். யாரும் எதுவும் சொல்ல முடியாது..! வழக்குத் தொடரலாம்.. கைது செய்யலாம்.. ஆனால் கைதுக்கான காரணத்தை மிகச் சரியாகச் சொல்ல வேண்டும்..!

அவதூறு வழக்கு எனில் எவ்வாறு அவதூறு நேர்ந்தது? அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் உண்மையா? பொய்யா..? என்பதையெல்லாம் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் நடந்திருப்பது என்ன..? நேற்று காலையில் சங்கரின் வீடு இருக்கின்ற ஏரியாவான மதுரவாயலில் ஒரு வழிப்பறியில் ஈடுபட்டதாகச் சொல்லி இதற்காக ஜாமீனின் வெளிவர முடியாத பிரிவில் அவர் மீது வழக்கைப் பதிவு செய்து உடனடியாக பத்திரிகையாளர்களிடம்கூட காட்டாமல் அவரை ரிமாண்ட் செய்திருக்கிறது காவல்துறை.

இந்த போலியான குற்றச்சாட்டும், அவசரமான கைதுமே காவல்துறையின் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது..!

சங்கர் எழுதியதில் தவறு இருக்குமெனில் காவல்துறை சம்பந்தப்பட்ட மூவரிடம் இருந்தும் புகார்களை பெற்று அவதூறு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு அப்பாவிகளை அவ்வப்போது கைது செய்து கணக்குக் காண்பிப்பதைப் போல சங்கர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல்துறையினருக்கு சங்கரின் குற்றச்சாட்டை ஏற்பதில் என்ன தயக்கம்..? அந்த இடங்களை அவர்கள் நிஜமாகவே வாங்கியிருந்தால் வாங்கியதற்கான ஆதாரங்களையும், வாங்குவதற்காக தாங்கள் கொடுத்த பணம் வந்த வழியையும் காட்டினாலே போதுமே.. சங்கர் மீது அவதூறு வழக்கு உறுதியாகுமே..?

ஏன் செய்யவில்லை காவல்துறை..? இது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கிலும், இனி அவர்களைப் பற்றி சங்கர் எழுதவே கூடாது என்கிற பயமுறுத்தலாகவும்தான் எனக்குத் தெரிகிறது..!

எழுத்துரிமை, பேச்சுரிமை இந்த இரண்டையும் வைத்துத்தான் பத்திரிகையுலகமே இருக்கிறது..! இந்த இரண்டுக்குமே வாய்ப்பூட்டு போடும்வகையில் காவல்துறையினர் நடந்து கொண்டிருக்கும்விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

உடனேயே சந்திக்க முடிகிறது.. பேச முடிகிறது.. உடனுக்குடன் சலுகைகளை பெற முடிகிறது என்கிற ஒரே காரணத்துக்காக  பலம் வாய்ந்த பத்திரிகைகளும், புகழ் வாய்ந்த பத்திரிகையாளர்களும்  இன்றைய ஆட்சிக்கு கூஜா தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். இதுவே அவர்களுக்கு என்று வந்திருந்தால் உடனேயே ஐயையோ என்றிருப்பார்கள்.

இந்தச் செய்தி இன்றைய நம் தினமதி என்கிற ஒரேயொரு செய்தித்தாளில் ம்டடுமே வெளி வந்திருக்கிறது என்பது மகா கொடுமை..

இதே நேரத்தில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விலை உயர்ந்த கிராணைட் கற்கள் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்டு வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று தினபூமி செய்தித்தாளில் செய்தி வெளியிட்டதற்காக கடந்த 20-ந் தேதி அன்று நள்ளிரவில் மதுரை போலீஸார் அந்த நாளிதழின் ஆசிரியர் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது எப்படி இருக்கு..? உண்மையைச் சொனனால் கைதாம்..! ஏன் இது போல மற்ற ஆசிரியர்களையும் கைது செய்து மொத்தமாக உள்ளே தள்ளிவிட்டு ஜாம், ஜாம்மென்று இருக்க வேண்டியதுதானே.. அதென்ன? இதில்கூட ஆள் பார்த்து, தராதரம் பார்த்து, செல்வாக்கை பார்த்து கைது செய்வது..?

வாரந்தோறும்தான் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், தமிழக அரசியலில் குற்றச்சாட்டுகளும் ஊழல் பிரச்சனைகளும் எழுப்பட்டு வருகிறது. போய் பிடிக்க வேண்டியதுதானே..? சென்னை என்று வந்தால் பிரச்சினை.. ஆங்கில சேனல்கள் இதனை அகில இந்திய அளவுக்கு கொண்டு போய் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிவிடுவார்கள் என்பதால் மதுரையில் மட்டும் கைது செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது..!

இந்தப் பத்திரிகையுலகமும் இப்போது இரண்டுபட்டுக் கிடக்கிறது. சினிமாவுலகம் மாதிரியே கொடுக்கின்ற சலுகைகளுக்காக கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்று சில பத்திரிகை சங்கங்கள் மவுனம் சாதிப்பது அரசின் இந்தச் செயலைவிட மிகக் கொடூரமானது..!

ஆக மொத்தத்தில்.. அரசியல் என்கிற ஐந்தெழுத்து வார்த்தையை அத்தனை நிர்வாகிகளும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை..! 

மிகச் சமீபத்தில் சீமானை கைது செய்தபோது நடந்த களேபரத்தில்  பத்திரிகையாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டார்கள். ஆனால் இந்தச் செய்தியை தமிழின் முதன்மையான சேனலான சன் டிவியும், கலைஞர் டிவியும் ஒளிபரப்பவே இல்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சன் டிவியின் நிருபரை கைது செய்த போது முதல்வரையே மறிக்கின்ற அளவுக்கு பத்திரிகையாளர்களை உசுப்பிவிட்டவர்கள் இவர்கள்தானே..! அடுத்த நாள் சன் டிவி ஊழியர்கள் தாக்கப்பட்டபோது என்னமாய் மேலேயும், கீழேயுமாய் குதித்தார்கள் இந்தப் பத்திரிகை பகலவன்கள்.. இப்போது..? எங்கே இருக்கிறது பத்திரிகை தர்மம்..? பத்திரிகா சுதந்திரம்..? இவர்கள் நிச்சயம் பத்திரிகையாளர்கள் அல்ல.. கார்ப்பரேட் முதலாளிகள்..!

இவர்களின் கையில் பத்திரிகையுலகமும், தொலைக்காட்சி ஊடகங்களும் போய்ச் சேர்ந்தது காலத்தின் கொடுமை.. இது இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை ஜனநாயகம் என்ற பெயரில் காட்டப் போகிறதே தெரியவில்லை..!

“பதிவுலகில் யாரோ ஒருவர்.. எதுக்கோ ஒண்ணுக்கு.. எதுக்கு அந்தாளுக்கு..? கொழுப்புதான..?” என்றெல்லாம் அரசியல் ரீதியாகக் கருதாமல் தயவு செய்து அனைத்துப் பதிவர்களும்  இதனை தங்களுக்கு வருங்காலத்தில் நேரப் போகும் அபாய எச்சரிக்கையாக உணர்ந்து ஒருமித்தக் குரலில் தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்..!

இணைப்பு பதிவுகள் : http://www.vinavu.com/2010/07/22/umashankar-savukku/



http://pongutamilar.blogspot.com/2010/07/blog-post.html


http://vennirairavugal.blogspot.com/2010/07/blog-post_23.html


http://tvpravi.blogspot.com/2010/07/blog-post_23.html

http://kuzhali.blogspot.com/2010/07/blog-post_23.html 

http://www.savukku.net/2010/07/blog-post_26.html#comment-form