17-05-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அரசியல் ஒரு சாக்கடை என்று திருக்குறளைப் போல் எழுதி வைத்துக் கொண்டு ஒப்பாரி மேல் ஒப்பாரி வைக்கும் ஒப்பற்ற தமிழர்களில் நானும் ஒருவன்.
புலம்புகிற நேரத்தில் அந்தச் சாக்கடைக்குள் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்யலாமே என்று எவராவது கேட்டுவிட்டால், பதில் சொல்ல நெஞ்சக்கூட்டில் மாஞ்சா இல்லை என்பதால் அப்போதைக்கு ஜூட் விடுவதுதான் இதுவரையில் தொடர்ந்து நடந்து வருகிறது.
அன்னைக்குச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும்போது இருப்பதையும் தொலைத்துவிட்டு பின்பு எதனை வைத்து வயிற்றை நிரப்புவது என்கின்ற பிரச்சினையால்தான் பெருவாரியான அரசியல் மீது அனுதாபமுள்ள இளைஞர்கள் அரசியலை பேசுவதோடு சரி.. உள்ளே இறங்காமல் தவிர்க்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.
அதோடு இன்றைய அரசியலில் கவுன்சிலர் தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்றால்கூட குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். போட்டதை அள்ள வேண்டும் என்று நினைத்தால் சாக்கடையைச் சுத்தம் செய்த வந்தவனாகத் தன்னைக் கருதக் கூடாது.. தன்னையும் ஒரு பன்றியாக நினைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இது இல்லாமல் நிஜமாகவே கவுன்சிலராகி மக்கள் சேவை செய்ய பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் முன் வரும் இந்தியர்கள் அல்லது தமிழர்களை தேடித்தான் பிடிக்க வேண்டும். இங்கு யாருக்கும் பணம் வீட்டில் முளைப்பதில்லை. வேறெங்கும் மரத்தில் காய்ப்பதில்லை. கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம்.
கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பதை மக்கள் பணியில் செலவழிக்கலாம். ஆனால் இங்கு இறக்கப்படும் பணம் முறைகேடாக பல்வேறு வழிகளில் அரசியல்வியாதிகளின் சின்னவீடு வரையிலும் சென்று சேர்வதால்தான் அந்த தயாள எண்ணம் கொண்டவர்கள்கூட இந்தச் சாக்கடையில் இறங்காமல் வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவியளித்து வருகிறார்கள்.
தேர்தல்களில் போட்டியிடுவது ஒரு பெயருக்காக அல்லது பிரபலத்துக்காக என்று வைத்துக் கொண்டாலும், தோற்கத்தான் போகிறோம் என்பது தெரிந்துதான் அனைத்து சுயேச்சைகளும் களத்தில் நிற்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் எதிர்ப்பது கட்சிகளை வைத்து அரசுப் பணத்தை சுரண்டி தங்களது மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டு அரசு மரியாதையோடு செத்துப் போக விரும்புகின்ற அரசியலில் செத்த தலைவர்களுக்கும், அவர்தம் கொள்ளைக்கூட்டக் கம்பெனிக்கும் எதிரானவை என்பதால் நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான்.
இதற்கெல்லாம் ஒரு தனி தைரியம் வேண்டும்தான்.. தோற்றால் பணமும் காலியாகும். மீண்டும் அந்தப் பணத்தை சம்பாதிக்க பெரும் கஷ்டப்படத்தான் வேண்டும் என்பதெல்லாம் தெரிந்தும், உண்மையான
அக்கறையோடும், சமூக நோக்கத்தோடும் இந்தத் தேர்தலில் நின்றிருக்கிறார் அருமைத் தம்பி சரத்பாபு.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தம்பி சரத்பாபு அத்தொகுதியில் போட்டியிட்ட அனைத்து சுயேச்சைகளிலும் அதிகப்படியான ஓட்டுக்களை வாங்கியுள்ளார்.
தேசியக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இல.கணேசன் பெற்ற ஓட்டுக்கள் 42,925.
பல வருடங்களாக மாநில அரசுகளையும், தொழிலதிபர்களையும், காவல்துறையினரையும் கலங்கடித்து வரம் டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் பெற்ற ஓட்டுக்கள் 1693.
ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே பிரபலமான நமது அன்புத் தம்பி சரத்பாபு பெற்றுள்ள ஓட்டுக்கள் 14101.
வலையுலகத்தில் தம்பி பற்றி வெளியான செய்திகளினாலும், பத்திரிகைகள் அவருக்குக் கொடுத்த விளம்பரத்தினாலும் இந்தத் தம்பி அனைத்து சுயேச்சைகளையும் முந்தியிருக்கிறார் என்பது புரிகிறது.
இந்த விளம்பரம் சும்மா கிடைக்கவில்லை. அதற்கான தகுதி அவருக்கு உண்டு. இப்படியொரு பொடியன் தேர்தலில் நிற்கிறானே என்கிற ஆச்சரியும், மகிழ்ச்சியும் 14101 பேரை திருப்தி செய்து அவருக்கு வாக்களிக்க வைத்துள்ளது.
வெற்றிக்கும், தோல்விக்குமான ஓட்டு வித்தியாசத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றியிருக்கும் இவரால்தான் திமுகவுக்கு தோல்வி என்பதில்லை. ஆனால் அவர்களையும் தாண்டி 14101 வாக்காளர்கள் இந்தத் தம்பியும் ஜெயித்து வந்தால் நல்லதுதான் என்றெண்ணி தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளார்களே. அந்த நம்பிக்கையைப் பெற்றதற்காகவாவது அந்தத் தம்பியை மனதார வாழ்த்துகிறேன்.
இந்த 14101 ஓட்டுக்களில் நான் செலுத்திய எனது ஓட்டு ஒன்றும் சேர்ந்துள்ளது என்பதால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம். ஆனால் அவருடைய தைரியமான மனத்திடத்தினால், பல ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.
இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் தேர்தல்களில் தொடரும்பட்சத்தில் ஏதேனும் ஒரு நாளில் ஒரு தொகுதியில் சக்தியுள்ள யாரேனும் ஒருவர் தேர்தலில் நிற்க முன் வரும் சாத்தியக் கூறுகள் உண்டு. அந்த ஒருவர் ஜெயித்தால்கூட அதற்கு சரத்பாபு மாதிரியான தம்பிகளே காரணமாக இருப்பார்கள் என்பதால் இவர் போன்றவர்களை மனதார வரவேற்போம். ஆதரிப்போம்..
வாழ்க சரத்பாபு..