Archive for the ‘சனி பகவான்’ Category

விரயச் சனியின் முடிவும், ஜென்மச் சனியின் துவக்கமும்..!

செப்ரெம்பர் 26, 2009

26-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் போலத்தான் சென்ற வியாழக்கிழமையும் இருந்தது. காலையில் இருந்து செய்ய வேண்டிய வேலைகளும், வர வேண்டிய வரவுகளும் வழக்கம்போல தட்டிக் கழித்துப் போனபடியே இருக்க.. முருகன் கூடத்தான் இருக்கான் என்கிற அதே எண்ணத்தில்தான் இருந்தேன்.

மாலை ஆறு மணி இருக்கும். நடிகர் சிவக்குமார் எழுதிய ‘டைரி குறிப்புகள்’ என்னும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தவன் தலையில் கிர்ரென்று ஏதோ சத்தம். தொடர்ந்து புத்தகத்தில் இருந்த எழுத்துக்கள் கோணல், மாணலாகத் தெரியத் துவங்கின.

தலை சுற்றுவது புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்குவதில் இருந்து தெரிந்தது. ‘என்னடா இது சோதனை..? நல்லாத்தான இருந்தோம்.. எல்லாம் நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு’ என்று நினைத்தபடியே எழுந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டு திரும்பியவன் ஒரு கதவில் மோதி இன்னொரு கதவின் மீது விழுந்து திரும்பி நின்றபோது ஆஹா.. முருகன் விளையாட்டை ஆரம்பிச்சிட்டானே என்று தோன்றியது.

அவ்வளவுதான். அதற்கு மேல் முருகனைப் பற்றி யோசிக்கவெல்லாம் நேரமில்லை. வயிறு கலங்கியது. தலை கனத்தது. தலை சுற்றியது. அந்த அரைத் தள்ளாட்டத்துடன் டாய்லெட் சென்று அமர்ந்துவிட்டு கதவை உடைத்துவிட்டு வெளியே வந்தவன் வீட்டுச் சுற்றுச் சுவரில் மோதிதான் நின்றேன்.

உடலெங்கும் தெப்பமாக தண்ணீர் கொட்டியது. மூன்று வாளி தண்ணீரை ஊற்றியதுபோல் இருந்தது எனக்கு. வீட்டுக்குள் போக முடியாமல் வாசலிலேயே படுத்துவிட்டேன். பக்கத்து வீட்டுக்காரம்மா.. மேல் வீட்டுக்காரம்மாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஓடி வந்தார்.

“இருங்க.. இருங்க.. எலுமிச்சம்பழம் கொண்டாரேன்..” என்று சொல்லிவிட்டு ஓடினார். அதற்குள்ளாக மதியம் சாப்பிட்டது மேலே வந்தே தீருவேன் என்று அடம்பிடிக்க சாக்கடையின் முன்பாக வாயைத் திறந்தேன்.. வாந்தியோ வாந்தி.. எடுத்து எவ்ளோ நாளாச்சு..? அப்படியே வாசலில் சுருண்டு விழுந்தேன்.

பக்கத்து வீட்டம்மாவின் எலுமிச்சம் பழச் சாறு கலந்த தண்ணீரைக் குடித்தும் போதை தெளியவில்லை. “யார் நீங்க..?” என்று கேட்க வேண்டும்போல் இருந்தது.

அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர் கைப்பிடித்துத் தூக்கிவிட ஆட்டோவில் அமர்த்தப்பட்டேன். வண்டி நெசப்பாக்கம் ஆரோக்யா மருத்துவமனையில் வந்து நின்றது. குடிகாரனைப் போல் சட்டை பட்டனைக்கூட போடாமல் தள்ளாடி தள்ளாடி வந்து நின்றவனை மருத்துவமனை அதிசயமாகப் பார்த்தது.

அவசரமாக ஒரு வெள்ளுடை தேவதை அருகில் வந்து “ஸார் வாங்க” என்று கையை நீட்ட நானும் வேகமாக அந்தக் கையைப் பற்றிக் கொண்டு உடன் ஓடினேன். என் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து அந்தத் தேவதையும் உடன் ஓடி வந்து ஒரு பெட்டை காட்ட.. அவ்வளவுதான் அப்படியே சுருண்டு படுத்தேன்.

மருத்துவர் ஒருவர் ஓடி வந்தார். “என்ன ஸார் பண்ணுது? என்ன சூஸைட் அட்டெம்ட்டா..?” என்று கேட்டு குரல்வளையில் கை வைத்தார். “ஐயோ.. அதெல்லாம் இல்ல ஸார்.. தலை சுத்துச்சு.. உடம்பு வேர்த்திருச்சு.. இப்ப வாந்தி வருது..” என்று சொல்லி முடிப்பதற்குள் வாந்தி குமட்டிக் கொண்டு வர.. அங்கேயும் ஒரு அக்கப்போர். பட்டென்று டப்பாவை எடுத்து நீட்டி அந்த தேவதையின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.. நல்ல ஸ்பீடுதான் போங்க..

சலைன் ஏற்றினார்கள்.. மயக்கத்தில் இருந்தவனைத் தட்டித் தட்டி பேர், ஊர், பிறந்த தேதி கேட்டார்கள். மயக்கத்தில் உளறியவனிடம் திரும்பித் திரும்பிக் கேட்டது ஒரு தேவதை. வேறு யாராவது கேட்டிருந்தால், எரிந்து விழுந்திருப்பேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்..

இ.சி.ஜி. எடுத்தார்கள். சுகர் செக் செய்தார்கள். பிளட் செக் செய்தார்கள். சலைன் அசுர வேகத்தில் இறங்கியது.. மூன்று மணி நேரத்தில் நான்கு பாட்டில்களை காலி செய்தது எனது உடம்பு.

கொஞ்சம் கொஞ்சமாக தேவதைகளின் முகத்தினை அடையாளம்காணும் அளவுக்கு தெம்பு வந்த பின்பு மருத்துவர் வந்து சொன்னார் “உங்களுக்கு பிளட்ல சுகர் கம்மியாயிருச்சு ஸார். அதான் பிராப்ளம்..” என்றார்.

“எனக்கு இதுவரைக்கும் அப்படியொரு பிரச்சினை வந்ததே இல்லையே..” என்றேன். “சரி.. இப்ப வந்திருச்சு.. இனிமே பார்த்து நடந்துக்குங்க..” என்று சொல்லி “இன்னும் இரண்டு சலைன் ஏற்ற வேண்டும்” என்றார்.

அலுவலகத்தில் இருந்து அரக்கப் பரக்க ஓடி வந்த என் மாப்ளை “மாமா.. இப்பவே ஆயிரம் ரூபா அவுட்டு.. சலைன் ஏத்திட்டு வீட்டுக்குப் போலாம்” என்றான். நம்ம நினைப்புதான் அம்பானிக்கே ஆப்பு வைக்குறவன் மாதிரில்ல இருக்கு..

ஒரு மணி நேரம் கழித்து வந்து நலம் விசாரித்த பெரிய டாக்டரம்மாவிடம், “இன்னும் கொஞ்சம் தலை சுத்துற மாதிரியிருக்கு.. எந்திரிச்சு உக்கார முடியலை..” என்றேன்.. “அப்புறம் அதுக்குள்ள எதுக்கு வீட்டுக்கு? மேல பெட்ல சேருங்க.. ராத்திரி இன்னும் ஒரு பாட்டில் ஏத்திரலாம்..” என்று சொல்லிவிட்டு திருப்தியுடன் நடையைக் கட்ட.. மாப்ளை தூக்கிப் போட்டு மிதிப்பது மாதிரி முறைத்தான்.

இரவு பத்து மணிக்கு ஏற்றத் துவங்கிய சலைன் மிக மெதுவாக போய்க் கொண்டிருக்க பொறுமை இழந்து நானே அதன் ஸ்பீடை கூட்டி வைத்தேன். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்த ஒரு தேவதை “என்னாச்சு? இவ்ளோ ஸ்பீடா போகுது..? யார் வைச்சது..?” என்றார். “ஸ்பீடா..? அப்படீன்னா..?” என்று அப்பாவியாய் நான் கேட்டதும், “கையை இப்படி, அப்படி நகத்தாதீங்க.. ஒரே மாதிரி வைங்க.” என்று அட்வைஸை அள்ளிவீசிவிட்டு ஸ்பீடை குறைத்து என் நெஞ்சில் பாறாங்கல்லை புதைத்துவிட்டுப் போனது அந்தத் தேவதை.

விடுவேனா நான்.. மறுபடியும் ஸ்பீடை கூட்டி வைத்து முடியப்போகும் நேரத்தில் சற்றுக் குறைத்துவைத்து பெல் அடித்தேன். வந்து பார்த்த தேவதை, “எப்படி அதுக்குள்ள முடிஞ்சது..?” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே குழாயை உருவிவிட்டுப் போனது.

காலையில் முழித்தால் ஒரு தேவதையின் முகத்தில்தான் முழிக்க வேண்டும் என்று நினைத்தபடியே தூங்கிப் போனவன் காலையில் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டவுடன் கண்ணை இறுக்க மூடிக் கொண்டு வேண்டுமென்றே படுத்திருக்க.. “ஸார்..” என்ற இனிய குரலைக் கேட்டவுடன் சந்தோஷமாக கண்ணைத் திறக்க கையில் விளக்கமாற்றுடன் ஒரு கூட்டுகிற அம்மா நின்றிருந்தார். நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான்..

இன்று வீட்டுக்குச் சென்றே தீர வேண்டும் என்கிற ஒரு அம்சக் கோரிக்கையோடு இருந்ததால் “எல்லாம் நல்லாயிருக்கு..” என்ற பொய்யைச் சொல்லித் தப்பித்தோம், பிழைத்தோம் என்று வீடு வந்து சேர்ந்தேன்.

ஒரு நாள் மருத்துவனை செலவு மொத்தமாக சேர்த்து 2500 ரூபாய் என்றானது. கொடுமைதான்.. என்ன செய்வது..?

வேலையில்லாத இந்த நேரத்தில் என்னத்துக்கு மூணு வேளையும் மூக்குப் பிடிக்கக் கொட்டிக்கணும் என்று நினைத்து காலை சாப்பாட்டை தியாகம் செய்தது முதல் காரணம்..

இருக்கின்ற டென்ஷனில் அத்தனை பிரச்சினைகளையும் ஒரு சேர இழுத்துக் கொண்டு பி.பி.யை பதற வைத்தது இன்னொரு காரணம்..

எல்லாம் சேர்த்து கஷ்டகாலத்திலும் ஒரு கஷ்டமாக செலவை இழுத்துவிட்டது.. இப்போதும் உடல்நிலை அப்படியேதான் உள்ளது.. ஒரு டக்கீலாவை ராவாக அடித்ததுபோல் மப்பும், மந்தாரமுமாக இருக்கிறது. எப்போது தெளிவாகும் என்று தெரியவில்லை..

எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்து கை அரித்ததினால் கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து தமிழ்மணத்தை நோண்ட.. மிகச் சரியாகப் பாருங்கள்.. நமது சக பதிவர் தேவன்மாயம், சர்க்கரைக் குறைவு – என்ன செய்ய வேண்டும்? என்கிற தலைப்பில் பதிவு போட்டிருக்கிறார். இது எப்படி இருக்கு..? படித்துப் பாருங்கள் பதிவர்களே.. இந்தக் குறை உள்ளவர்கள் இனிமேலாச்சும் தேவன்மாயம் அண்ணன் சொல்ற மாதிரி சூதானமா நடந்துக்குங்க..

இதைத்தான் தெய்வச் செயல் என்பதா..?

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இன்னொன்று..

கடந்த இரண்டரை வருடங்களாக என்னை ஆட்டி வைத்தது ‘விரயச் சனி’யாம்.. நமக்குத்தான் செலவே இல்லையே என்று தெம்பாக இருந்தவனுக்கு ‘விரயச் சனி’ முடிய இருந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் வேலையைக் காட்டிவிட்டான் சனி பகவான்..

இந்த லட்சணத்தில் இன்று பிற்பகல் 3.18 மணிக்கு எனது ராசியான கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து, அடுத்த இரண்டரை ஆண்களுக்கு எனக்கு ‘ஏழரைச் சனி’யை வாரி வழங்கப் போகிறானாம் சனி பகவான்..

ஆக, அடுத்த மூன்றாண்டுகளில் பதிவர்களுக்கு என்னிடமிருந்து இது போன்ற நிறைய புலம்பல் பதிவுகள் வருவதற்குக் காத்திருக்கின்றன என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..

அடேய் மயிறு கோவணான்டி..!!!