Archive for the ‘சண்டைக்கோழி’ Category

ஒரு நிமிடம்தான்..! ஆனால் என்ன விலை..?!

மார்ச் 5, 2009

05-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேஷனல் ஜியாகிரபிக் சேனலும், டிஸ்கவரி சேனலும்தான் சீரியல் நேரங்களில் நம்மைக் காப்பாற்றும் தெய்வங்கள். இவர்கள் இல்லாவிடில் இரவு நேரங்களில் வீட்டில் இருக்கவே முடியாது..

அன்றைக்கு நேஷனல் ஜியாகிரபிக்கில் தென் தமிழ்நாட்டில் நடைபெறும் சேவல் சண்டையைப் பற்றிக் காட்டினார்கள்.


அந்தச் சேவலை வளர்ப்பது எப்படி? எவ்வளவு தீனி போட வேண்டும்? என்ன மாதிரியான தீனி போட வேண்டும்? என்பதையெல்லாம் கோழியின் உரிமையாளர்கள் விலாவாரியாக விளக்கிச் சொன்னார்கள்.

அந்தக் கோழியை எப்பவும் சீண்டிக் கொண்டேயிருக்க வேண்டுமாம். அப்போதுதான் அந்தக் கோழி சண்டைக் கோழியாக இருக்குமாம்.. சாதாரண கோழிக்குத்தான் முதலில் தீனி போடுவார்களாம். அதன் பின்புதான் சண்டைக் கோழிக்காம்.. அப்போதுதான் அதற்குள் கோபம் ஏற்பட்டு சாதா கோழியை விரட்டிவிட்டு சாப்பிடுமாம்.. அந்த விரட்டல், மிரட்டல் குணத்தை இப்படித்தான் உருவாக்குகிறார்களாம்..

இதைப் பார்த்த பின்னாடி, கடவுள் எல்லாத்தையும் நல்லாத்தான், ஒரே மாதிரிதான் படைச்சான். நம்ம பயபுள்ளைகதான் அவனவன் வசதிக்காகவும், வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும் ஒண்ணொண்ணையும் அடிமைப்படுத்த ஆரம்பிச்சான். அதான் தண்டனையையும் சேர்த்து அனுபவிக்கிறான்னு எனக்குத் தோணுது..

இதில் ஒரு இடத்தில் சாதா கோழியைக் காட்டியபோது ஒரு சம்பவம்..

தாய்க்கோழி ஒன்று, தனது சிறிய குஞ்சுகளுடன் குப்பை மேட்டைக் கிளறிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு நாய் திடீரென்று ஒரு குட்டியை வாயில் கவ்வ.. தாய்க்கோழி ஆக்ரோஷத்துடன் தனது சிறகை விரித்து அந்த நாயின் மேல் விழுந்து கொத்தத் துவங்கியது.. ஆனாலும் நாய் குஞ்சை விடாமல் தூக்கிக் கொண்டு ஓட.. தாய்க்கோழியும் விடாமல் துரத்திச் சென்று கொத்த.. ஒரு சில வினாடிகளில் குஞ்சை கீழே போட்டுவிட்டு நாய் ஓடிவிட்டது. கோழிக்குஞ்சு இறந்து கிடந்தது. கோழி தனது குஞ்சை காலால் எத்திப் பார்த்தது. குஞ்சு காலி என்பதை உணர்ந்ததும் மெல்ல விலகி மறுபடியும் குப்பையைக் கிளறப் போய்விட்டது.

எதிர்ப்பு ஒரு நிமிடமாகவே இருக்கட்டும்.. ஆனால் அந்த உணர்விற்கு என்ன விலை..? எப்படி மதிப்பிடுவது..?

தாய்ப்பாசம் தாய்ப்பாசம்தான்..!

என்ன சொல்றீங்க..!?