Archive for the ‘கே.பாலசந்தர்’ Category

அண்ணன் ஞாநியின் கோலம் – வாழ்த்துகிறேன்..!

ஓகஸ்ட் 15, 2009

15-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்களுக்கான திரைப்படங்கள் எது என்கிற சர்ச்சை தமிழகத்தின் தலையாய தொழிலான சினிமாத் துறையின் துவக்கத்தில் இருந்தே இருந்து வருகிறது.

திரைப்படம் தயாரிப்பது வியாபாரமாகப் போய், அதில் ஒளிந்திருந்த கலை என்கிற விஷயமே காணாமல் போய்விட்டது.. வருகின்ற அத்தனை திரைப்படங்களுமே வியாபாரத்தை முன் வைத்தே எடுக்கப்பட்டு வருவதால் ஒரே மாதிரியான கதை, ஆடல், பாடல், கேளிக்கைகள் என்று மக்களுக்கு அலுப்பைத் தட்டி வருகின்றன.

சினிமா வேண்டாம் சின்னத்திரை பக்கம் போவோம் என்றால் அது சினிமாவைவிட அதிகம் பயமுறுத்துகிறது. வீட்டுக்குள்ளேயே ஒரு சிறைச்சாலை என்பதைப் போல பல்வேறு வகையான குற்றங்களையும் குடும்பத்தினர் அனைவரின் கண் முன்னாலேயே நடத்திக் காண்பிக்கிறது சின்னத்திரை.

இதுவுமில்லாமல், அதுவுமில்லாமல் கொடுக்கின்ற உழைப்பையும், செய்கின்ற வேலையையும் நான்கு பேருக்கு நல்லதாக செய்து கலையை கலையாக நடத்த வேண்டி பலரும் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் அண்ணன் ஞாநி.

பத்திரிகைகள் என்றில்லாமல் தொலைக்காட்சிகளிலும் தனது பங்களிப்பை பல்லாண்டு காலமாக நடத்தி வருகிறார் அண்ணன் ஞாநி. அதிலும் அவருடைய டிரேட் மார்க்கான சமரசம் செய்து கொள்ளாமல். இதனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளும், சந்தித்த சோதனைகளும் அதிகம்தான். ஆனாலும் அவருக்குள் இருக்கும் மன உறுதியும், அவருடன் எப்போதுமே இருந்து வரும் இளையோர் பட்டாளமும் இந்த விஷயத்தில் அவருக்கு பெரும் உதவிகரமாக இருக்கின்றன.

நல்ல சினிமாவைக் கொடுப்போம். நல்லதொரு விஷயத்தைச் சொல்லுவோம் என்கிற நோக்கில் கோலம் என்றொரு அமைப்பைத் துவக்கியிருக்கிறார் ஞாநி.

இது நம்முடைய சினிமா, நாமே தயாரிக்கும் சினிமா.. நமக்காக எடுக்கப்படும் சினிமா என்று நம்மை நாமே முன்னிலைப்படுத்தி பலரும் ஒன்றுகூட நல்ல, தரமான திரைப்படங்களை தயாரிக்கலாம் என்கிற நோக்கில் அவர் ஆரம்பித்துள்ள இந்த கோலம் இயக்கத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதற்கான துவக்க விழா நேற்று முன்தினம் மாலை சென்னை பிலிம் சேம்பர் திரையரங்கில் நடந்தது.

நிகழ்ச்சி பற்றிய செய்திகள் பரவலாக வெளியிடப்பட்டிருந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. நம் வலையுலகில் இருந்து நான், துளசி டீச்சர், அவருடைய அருமைக் கணவர், லக்கிலுக், ஆதிஷா, தண்டோரா, வண்ணத்துப்பூச்சியார், பைத்தியக்காரன் போன்றோர் கூடியிருந்தோம்.

திரையுலக ஜாம்பவான்களான இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தர், இயக்குநர் திரு.மகேந்திரன், கேமிரா கவிஞர் திரு.பாலுமகேந்திரா மூவரும்தான் இந்த விழாவினைத் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்கள்.

தொடக்கத்தில் அண்ணன் ஞாநியின் பல்வேறு அனுபவப்பட்ட குறும்படம், தொலைக்காட்சித் தொடர்கள் திரையிடப்பட்டன. இதைப் பார்த்த பின்புதான் வந்திருந்த பலருக்கும் அண்ணனின் திரைப்படத் தொடர்புகள் தெரிந்தது போலும்.. நிகழ்ச்சி முடிந்ததும் “இவ்ளோ செஞ்சிருக்காரா..?” என்றும் சிலர் கேட்டார்கள்.

இரண்டு ஷாட்டுகளில் எடுக்கப்பட்ட “திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்” என்கிற குறும்படம் மிக, மிக வித்தியாசமான முயற்சி.. இது போன்ற சின்னச் சின்ன படங்கள், சினிமாவின் மீது ஒரு ஈர்ப்பை பார்வையாளர்களுக்கு அளிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

வரவேற்றுப் பேசிய அண்ணன் ஞாநி, தற்போது தமிழ் சினிமாவில் புதுமை வர வேண்டிய சூழல் இருப்பதையும், ‘கோலம்’ ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தையும் தனது கணீர் குரலில் கர்ஜித்தார். பாலுமகேந்திரா தனது ஒரு பேட்டியில் அவர் இயக்கி, அவருக்கே பிடிக்காத திரைப்படமாக நீங்கள் கேட்டவையை சொன்னதாகச் சொன்னார் ஞாநி. “நீங்கள் கேட்டவையில் இரண்டு அர்த்தங்கள் உண்டு. அது ரசிகர்களாக நீங்கள் கேட்டது. அவர் விரும்பியது அல்ல. அதனால்தான் அதனை அவர் இருபொருள்பட சொல்லியிருக்கிறார்” என்றார் அண்ணன் ஞாநி.

ஆனால் எனக்கு இந்தத் திரைப்படம் மிகவும் பிடிக்கும். திரைக்கதையும், பாடலும், ஆடலுமாக கமர்ஷியல் திரைப்படங்களுக்குக் கூட ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்தது இத்திரைப்படம். மேலும் பாலுமகேந்திராவின் அனைத்துப் படங்களுமே ஒரு கவிதைப் புத்தகம்தான். அந்த வரிசையில் இதுவும் ஒரு கவிதைதான். இதைப் பற்றி தனிப் பதிவே போடலாம் என்று நினைக்கிறேன்..

முதலில் பேச வந்த பாலுமகேந்திரா “சினிமா பற்றிய பாடங்களை பள்ளியில் வைக்க வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே சினிமா அறிவைப் புகுத்தினால் அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு சினிமா பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகமாகி தரமான திரைப்படங்கள் நன்கு ஓடக்கூடிய சூழல் ஏற்படும்” என்றார்..

“புதிய திரைக்கலைஞர்கள் புதிய சிந்தனையோடு வருவார்கள். அதுதான் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம். அதோடு பள்ளிப் பருவத்திலேயே சினிமா என்பதால் மாணவர்களும் ஆர்வத்தோடு பள்ளியை கட் அடிக்காமல் படிக்க அமர்வார்கள். ஒரு டிவியும், டிவிடியும் மட்டும் இருந்தாலே போதும்.. பாடத்தை நடத்திவிடலாம்..” என்றார் உறுதியாக.

ஞாநியின் இந்த ‘கோலம்’ அமைப்புக்கு தான் எந்த விதத்திலும் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் பாலுமகேந்திரா.

கடைசியாக கலைஞானி கமலஹாசன் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்தார். “50 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 12 அன்றுதான் களத்தூர் கண்ணம்மா ரிலீஸ் ஆனது.. எனது இனிய நண்பனுக்கு இது 50 ஆண்டுகள் நிறைவு என்றாலும், கமலஹாசன் பிறவி நடிகர். அவர் பிறந்ததில் இருந்தே நடித்து வருவதால் அவருடைய வயதுதான் அவருடைய திரையுலக அனுபவம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார் பாலுமகேந்திரா.

அடுத்து பேச வந்த இயக்குநர் மகேந்திரன் தமிழ் சினிமாக்காரர்களை ஒரு பிடிபிடித்தார். “எந்த நாட்டு சினிமாலேயும் இல்லாத ஒண்ணு நம்ம இந்திய சினிமாலதான் இருக்கு.. அது டூயட் பாடுறது.. அதை விட்டொழிக்க எவ்வளவோ முயன்றும், புதிது புதிதாக வருபவர்கள் கெடுத்து விடுகிறார்கள்..” என்றார்.

“உலகத்திலேயே தலைசிறந்த நகைச்சுவை நடிகர்கள் தமிழில்தான் இருக்கிறார்கள். இதை எங்க வேண்ணாலும் வந்து சொல்வேன். சார்லி சாப்ளினைத் தவிர உலகளாவிய நகைச்சுவை நமது நடிகர்களிடம் மட்டுமே உண்டு. இந்தச் சக்தியை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்றுதான் எனக்குத் தெரியவில்லை..” என்றார் மகேந்திரன்.

முத்தாய்ப்பாக ஞாநியின் இந்தக் ‘கோலம்’ அமைப்புக்கு தானும் உதவிகள் செய்யக் காத்திருப்பதாகச் சொன்ன மகேந்திரன் ஸார், “இந்தக் கோலம் அமைப்பு ‘அபூர்வ ராகங்களாக’, ‘அழியாத கோலங்களாகத்’ திகழ வாழ்த்துகிறேன்..” என்று ‘சினிமா அட்டாக்’ செய்து விட்டு அமர்ந்தார்.

இறுதியாகப் பேச வந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் என்னமோ குஷி மூடில் இருந்தார் போல. மிகவும் பிரெண்ட்லியாகப் பேசினார்.

சினிமாக்காரர்களின் விவாகரத்துக்களை பத்திரிகைகள் பெரிதுபடுத்துவதைக் கண்டித்தார். கூடவே சினிமாக்காரர்களும் பத்திரிகைகள் விமர்சிப்பதைப் போலவே நடந்து கொள்வதை ஒப்புக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை. சென்ற மாதம் வெளி வந்த 21 தமிழ்த் திரைப்படங்களில் 5 திரைப்படங்களே முதலுக்கு மோசமில்லாமல் ஓடியதை தெரிவித்தார் கே.பி. இந்த மாதிரியான சூழலால்தான் தான் சினிமா பக்கமே வராமல் மீண்டும் நாடக உலகமான தனது தாய்க்கழகத்திற்குத் திரும்பிவிட்டேன் என்றும் சொன்னார். முதல் நாடகம் அரங்கேற்றமாகி, அடுத்த நாடகமும் தயாராகிவிட்டது என்றார்.

வெகு இயல்பாக பேசிக் கொண்டிருந்தவர் சினிமாக்காரர்களுக்கு பெண் கொடுக்க மறுத்த கதையையும் கொஞ்சுண்டூ தொட்டார்.(அவர் சோகம் அவருக்கு) அப்படிப்பட்டவர்களுக்கு ஐடியாவும் கொடுத்தார். “சினிமாவைவிட்டு விலகி நின்னுட்டு அதைச் சொல்லி கல்யாணத்தை பண்ணிக்குங்க.. அப்புறமா சினிமாவுக்குள்ள வாங்க..” என்று காலத்திற்கேற்றாற்போல் ஐடியா கொடுத்தார். (ஏற்கெனவே அவர் கூட இருக்குற ரெண்டு பேச்சுலர்ஸ்கிட்ட இதைத்தான் சொன்னாராம்..) வாழ்க கே.பி. ஐடியா எல்லாம் ஓகேதான்.. (“ஆனா பொண்ணு பார்த்து கொடுங்க ஸார்”ன்னு சொன்னா மட்டும் முறைக்குறாராம்..!)

அண்ணன் ஞாநியின் புதிய முயற்சிக்குத் தானும் எல்லாவிதத்திலும் உதவிகள் செய்யக் காத்திருப்பதாகவும் சொன்னவர், ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’ பற்றி புகழ்ந்து தள்ளினார். விகடனில் அது வெளிவந்தபோது விகடனை வாங்கியவுடனேயே முதலில் அதைத்தான் படிப்பேன் என்றும், இப்போது குமுதத்தில் வரும்போதும் அதைத்தான் தான் முதலில் படிப்பதாகவும் தெரிவித்தார்.

எழுத்தாளர் ஞாநியின் வெற்றி இங்கேதான் இருக்கிறது.. எத்தனையோ பேர் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான்.. ஹி.. ஹி..

கடைசியாக கே.பி. தன் சார்பாக நன்கொடையையும் கோலம் அமைப்புக்கு அளித்தார். எவ்வளவு என்று சொல்ல மாட்டேன் என்று ஓப்பன் மைக்கிலும் சொல்லிவிட்டுத்தான் கொடுத்தார். அதுதான் எனக்கும் ஏமாற்றம்.(எவ்வளவுன்னு தெரிஞ்சா நாமளும் ஒரு ‘பிட்டு’ ஓட்டலாம்னுதான்..)

கே.பி.யின் ஒரு அட்வைஸ்தான் அவர் யார் என்பதை மீண்டும் நிரூபித்தது. “ஞாநி எந்தக் காலத்திலும், எதற்காகவும் திரைப்படத்தில் சமரசம் செய்து கொள்ளவே கூடாது..” என்று தன்னுடைய பேவரிட் கொள்கையை ஞாநிக்கு உத்தரவாவகவே சொல்லிவிட்டு அமர்ந்தார் இயக்குநர் சிகரம்.

தொடர்ந்து கோலம் அமைப்பில் சேர விரும்பும் முதல் மூன்று பேர்களுக்கு திரையுலக ஜாம்பவான்கள் கையொப்பமிட்டு ரசீது எழுதிக் கொடுத்தார்கள். அண்ணன் ஞாநி ஏன் இப்படியொரு சென்டிமெண்ட்டில் இறங்கினார் என்று தெரியவில்லை.. இதெல்லாம் அவருக்குப் பிடிக்குமா..? ஓகே.. காலத்திற்கேற்றாற் போல் நாமளும் இறங்கிற வேண்டியதுதான்.

“மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இது போன்ற ரசிகர்கள் தரும் பணத்தில் எடுக்கப்படும் தரமான திரைப்படம் உங்களது வீடு தேடி வரும்.” என்று சொல்லியிருக்கிறார் அண்ணன் ஞாநி.

எல்லாம் கரீக்ட்டு.. நீ சேர்ந்தியான்னு கேக்குறீங்களா..?

ஹி.. ஹி.. நாங்க எல்லாம் எப்பவும் அண்ணன் ஞாநியின் இதயத்துல இருக்குறவங்க.. காசு கொடுத்தாலும், கொடுக்காட்டியும் அண்ணன் நமக்கு கடைசியா படத்தைக் காட்டிருவாரு.(கைல டப்பு கம்மி.. முருகன் படுத்துறான்றதுதான் உண்மை. சீக்கிரமா கொடுத்திருவேன்.)

கடைசியாக நன்றி தெரிவிக்க வந்த அண்ணன் ஞாநி கே.பி.யின் அறிவுரைக்கு மதிப்பளித்து திரைப்படத்தில் யாருக்காகவும், “எதற்காகவும் தான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்” என்றும், “நான் தெரிவிக்கும் தேதியில் மிகச் சரியாக டிவிடி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும். இதற்கு நான் கியாரண்டி. இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் உங்களுக்கு அளிக்கிறேன்..” என்று தெளிவாகத் தெரிவித்தார்.

நானும் எதிர்பார்க்கிறேன்.. அண்ணன் ஞாநி தனது இந்த முயற்சியில் வெற்றி பெற என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

டிஸ்கி-1 : கே.பி. பேசிவிட்டு அமர்ந்ததும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஒரு பெண், கே.பி. தன் பேச்சில் ‘திருமதி ஜேம்ஸ்’ குறும்படம் பற்றிப் பேசும்போது மாற்றிச் சொல்லிவிட்ட ‘டேக்’ என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டு’ “மாத்திச் சொல்லிட்டீங்க ஸார்..” என்று ஓப்பன் மைக்கில் சொன்னது ரொம்பவே டூ மச்சு..!

டிஸ்கி-2 : ஏன் ‘அண்ணன் ஞாநி’, ‘அண்ணன் ஞாநி’ என்று நான் குறிப்பிட்டேன் என்றால், அவர் எப்போதும் தன்னை இளமையாக இருப்பதாகவே காட்டிக் கொள்வார். அப்படித்தான் பேசுவார். அதனால்தான் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அத்தனை பேருமே இளசுகளாகவே இருப்பார்கள். அவரே எனக்கு அண்ணன் என்றால் நான் எவ்ளோ இளைஞனாக இருக்க வேண்டும். அதான் நான் சொன்னனே நான் ‘யூத்’துன்னு.. ஹி.. ஹி.. ஹி…

டிஸ்கி-3

அண்ணன் ஞாநியிடம் ஒரு பகிரங்க மன்னிப்பு..!

இரண்டு மாதங்களுக்கு முன்பாக நான் எழுதிய ஒரு பதிவில் கோவையின் வலையுலக ரவுடி ஓசை செல்லாவும், நானும் அண்ணன் ஞாநியிடம் சாதாரணமா பேசிக் கொண்டிருந்ததை பதிவு செய்திருந்தேன்.

அதில் அவர் நம்ம ‘நக்கல் நாயகம்’ அண்ணன் பாமரன் பற்றி கேஷுவலாக தெரிவித்த ஒரு கேஷுவலான ஒரு வார்த்தையை நானும் கேஷுவலாகக் கேட்டுவிட்டு, கேஷுவலாகவே பதிவு செய்து தொலைத்துவிட்டேன்.

ஆனால் இதைப் படித்து அண்ணன் ஞாநி பெரிதும் வருத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன். விஷயம் கேள்விப்பட்டு மீண்டும் அதை எடுத்துப் படித்தபோது லேசாக ஏதோ ஒரு இடறல் எனக்கே தெரிந்தது.

எனக்குக் கொழுப்புதான் .. நல்லவேளை அண்ணன் பாமரன் அதைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். தப்பித்தேன். இல்லாவிட்டால் வம்பிழுத்துவிட்ட பாவம் என்னையவே சேர்ந்திருக்கும்.

இதில் எனக்கு என்ன ஆச்சரியம் எனில் அண்ணன் ஞாநி இதற்கெல்லாம் வருத்தப்படுவாரா என்பதுதான். ஏனெனில் எனக்கு அவரை கடந்த 7 வருடங்களாக நன்கு தெரியும். எதைப் பற்றியும் கவலைப்படாதவர். யாருக்காகவும் பயப்படாதவர். மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுவார். இதையெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டார் என்று நினைத்துதான் அதை எழுதித் தொலைத்தேன். மனிதர்கள் எப்பவும், ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் அல்லவா.. எனக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்..

அந்த கேஷுவலான பேச்சை வெளியிட்டமைக்காக அண்ணன் ஞாநியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அண்ணன் மன்னிப்பாராக..

பொறுமையாகப் படித்தமைக்கு எனது நன்றிகள்..

புகைப்படம் உதவிக்கு நன்றிகள் பெறுபவர் நம்ம துளசி டீச்சர்..!