Archive for the ‘குடிபோதை’ Category

யார் செய்தது குற்றம்..?

ஜூன் 29, 2007

29-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

என்றும்போல் அன்றும் அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவன் போன் செய்தான். தன் தந்தையை GH-ல் அட்மிட் செய்திருப்பதாகவும், தனக்கு அர்ஜெண்ட்டாக பணம் கடனாக வேண்டும் என்றும் கேட்டான். என் நிலைமையே பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை சற்று நயனமாகவே சொல்லி வைத்தேன். ஆனாலும் மாலையில் GH வந்து அவனைச் சந்திப்பதாகச் சொன்னேன். சொன்னபடியே செல்லவும் செய்தேன்.

அரசு பொது மருத்துவமனையின் எலும்பு முட நீக்கியல் வார்டு. உள்ளே கட்டிலுக்கு கட்டில் காலோ, கையோ தொங்கவிடப்பட்டிருக்க நோயாளிகள் சோகத்துடன் படுத்திருந்தார்கள். என் நண்பனின் தந்தை வீட்டில் குடத்தைத் தூக்கும்போது ஸ்லிப்பாகி கையை ஊன்றியிருக்கிறார். கை முறிந்து போய் விட்டதாம். இப்போது கட்டிலில் படுத்திருந்தார்.

அரசு மருத்துவமனைகளுக்கே உரித்தான வாடை குப்பென்று தூக்க.. வார்டு முழுக்க அனைவரின் முகத்திலும் ஒரு ஏமாற்றம்.. எப்போதடா வீட்டுக்குச் செல்வோம் என்ற பரிதவிப்பு நோயாளிகளைவிட, அவர்களின் அருகில் கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தவர்களின் கண்களில் தெரிந்தது. நண்பரின் தந்தையிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். கையோடு கொண்டு சென்றிருந்த ஹார்லிக்ஸ் சிறிய பாட்டிலை கொடுத்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தேன். அவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

நிகழ்ந்ததை சாதாரண ஒரு நிகழ்வு என்ற ரீதியில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசினார். அந்தமட்டிலும் எனக்கு மகிழ்ச்சிதான். பொதுவாக நோயாளிகள் மருத்துவமனை வாசல்வரைக்கும் தெம்பாக பேசுவார்கள். உள்ளே நுழைந்தவுடன் ஆஸ்பத்திரிக்கே உரித்தான முகத்துடன் ஏதோ இனம் புரியாத பயத்திற்கு ஆட்பட்டுவிடுவார்கள்.

இவர் அருமையாக, தெளிவாகப் பேசினாலும் அடிக்கடி எதிரில் இருந்த ஒரு பெட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன அங்கே என்பதைப் போல் நானும் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு இளைஞர் கை, கால்களில் கட்டுப் போட்டு படுத்திருந்தார். வலது கால் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவரது அருகில் இளம் பெண் ஒருவர் சோகத்துடன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அவருக்கு அருகில் தரையில் கிராமத்து ஆட்களான ஒரு வயதான தம்பதியினர் அமர்ந்திருந்தார்கள்.

அந்த இளைஞன் பெண்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணோ அதைக் காதில் வாங்காதது போலவே வெறித்தப் பார்வையுடன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்கே எனது நண்பனின் தந்தை தன் மனைவியிடம், “போய் என்னன்னு கேளுடி..” என்று கோபப்பட.. நண்பனின் அம்மா அந்த பெட்டை நோக்கி விரைந்தார்.

நண்பரின் தந்தை என்னிடம், “அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி அஞ்சு நாள்தான் ஆச்சு.. பெட்ல படுத்திருக்கிறவன் அந்தப் பொண்ணோட புருஷன்தான்.. நேத்து ராத்திரி பிரெண்ட்ஸ்களுக்கு பார்ட்டி தர்றேன்னு ஹோட்டல்ல நல்லா ஊத்திருக்கானுக.. பைக்ல வீட்டுக்குப் போகும்போது லாரில மோதி அடிபட்டுட்டான்..” என்று சுரத்தமேயில்லாமல் சொன்னார். அதன்பின் அந்தப் பெண்ணை சற்று உற்றுப் பார்த்தபொழுதுதான், கழுத்தில் இருந்த தாலி கயிற்றின் பளபளப்பு தெரிந்தது.

நண்பனின் அம்மா அந்த இளைஞனிடம் பேசுவதும், பின்பு அந்தப் பெண்ணிடம் பேசுவதுமாக இருந்தவர் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் எங்களிடம் வந்தார். “என்னவாம்..?” என்று நண்பனின் தந்தை கேட்க.. “அவன் அவளை வீட்டுக்குப் போகச் சொல்றான்.. அவ போக மாட்டேங்குறா.. இருந்து தொலையறேன்கிறா..” என்று அலுப்பாகச் சொன்னார். இப்போது அந்தப் பெண் கணவனிடம் முகத்துக்கு நேராக கையை நீட்டி கோபமாகப் பேசுவது தெரிய.. ஒட்டு மொத்த ஹாலும் திரும்பிப் பார்க்கிறது. கணவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள..

தரையில் அமர்ந்திருந்த வயதானவர் எழுந்து அந்தப் பெண்ணின் தோளைத் தட்டி ஏதோ சொல்ல.. அவரது கையைத் தட்டிவிட்டு அந்தப் பெண் சுவரோமாகச் சென்று சாய்ந்து கொண்டு சொட்டு சொட்டாக வடிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.

அந்த வயதானவர் எங்களிடம் வந்து “கூஜா இருக்குமா? மாப்ளைக்கு பால் வேணுமாம்.. வாங்கிட்டு வந்திர்றனே..?” என்று கேட்டார். நண்பனின் மனைவி எடுத்துக் கொடுக்க.. அப்படியே என் நண்பனும் “வாடா.. ஒரு காபி குடிச்சிட்டு வருவோம்..” என்று என்னை வெளியே இழுக்க அந்த முதியவருடன் வெளியில் வந்தோம்.

முதியவரிடம் “என்னங்கய்யா பொண்ணு ஏன் இப்படி கோபப்படுது..?” என்று நண்பன் கேட்க சன்னமான குரலில் பேசத் துவங்கினார் அவர். “என்னத்தைச் சொல்றது தம்பி.. இவன் நல்ல பையன்தான்.. நம்ம ஊர் ஒன்றியச் செயலாளரோட தம்பி.. நாலு ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டு, மூணு வீட்டை வாடகைக்கு விட்ருக்காங்க.. நல்ல குடும்பம்தான்.. ஏதோ சேக்காளிகளோட போய் குடிக்கப் போய் இப்படி ஆயிருச்சு. இது அந்தப் புள்ளைக்குப் புரியலை.. ‘குடிகாரனை என் தலைல கட்டி வைச்சிட்டியே’ன்னு நேத்துல இருந்து லட்சம் தடவை எங்களைக் கரிச்சுக் கொட்டிட்டா..” என்றவர் தன் ஒட்டிப் போன வயிற்றைத் தடவிக் கொண்டே “ஏன் தம்பி.. இங்கன ஹோட்டல் இருக்குமா? ஏதாவது சாப்பிடணுமே? அவளும் சாப்பிடாம கிடக்கா..” என்றார் பரிதாபமாக.

நண்பன் என்னைப் பார்க்க.. நான் அவனைப் பார்க்க.. நண்பன் என்னிடம், “டேய் இவரை டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போ.. நான் இவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுப் போனான். கடையில் இரண்டு பால் வாங்கிக் கொண்டு நானும், முதியவரும் காபி குடித்தோம். தன் சொந்தக் கதையை சொன்னார் மனிதர்.

கல்யாணமாகி இருபது வருடம் கழித்து பிறந்த மகளாம் இவர். ஆசையாக அத்தனை ஆண்டுகள் கழித்து பிறந்தவள் என்பதால் எப்போதும்போல செல்லமாகவே வளர்த்திருக்கிறார்கள். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் படித்துள்ளார். அந்த ஊரிலேயே இந்தப் பெண்தான் அழகு என்பதால் நிறைய பேர் பொண்ணு கேட்டு வந்து தொந்தரவு கொடுக்க.. இவர்தான் உள்ளூர்லேயே கட்டிக் கொடுத்தால் நம்ம கண்ணு முன்னாடியே பொண்ணு நல்லா வாழறதை பார்க்கலாமே என்ற முடிவில் இந்தப் பையனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். மாப்பிள்ளை நிஜமாகவே பையன்தான்.. வயது 22. பெண்ணுக்கு வர்ற ஆவணி வந்தா 22-ஆம்.

கல்யாணத்திற்கு இரண்டு அமைச்சர்கள், நான்கு எம்.எல்.ஏ.க்கள் வந்ததால், “பெரிசா குலதெய்வம் சாமி கும்பிட்ட மாதிரி நடந்துச்சு தம்பி.. எல்லாம் எங்க செலவுதான்.. கையை மீறி 2-கிட்ட போயிருச்சு.. அடுத்த வருஷம் முந்திரி தோப்பை மாப்ளை மூலமா ஏலத்துல எடுத்து, கடனை அடைச்சிரலாம்னு நினைச்சேன். என் நேரம்… ஆரம்பத்துலேயே இப்படி ஆயிருச்சு..” என்று புலம்பியபடியே வந்தார்.

பெண்ணிடம் வந்து பாலை நீட்ட அவள் கையில் வாங்கிக் கொள்ளவே இல்லை.. பின்பு தரையில் அமர்ந்திருந்த பெண்ணின் அம்மாவே அதை வாங்கி டம்ளரில் ஊற்றிக் கொடுக்க இதையும் வாங்க புதுப்பெண் மறத்துவிட்டாள். இளைஞன் தன்னைக் கஷ்டப்பட்டு முதுகு வளைத்து எழுந்து கையில் வாங்கி குடித்தான். பார்க்கவே பாவமாக இருந்தது. அந்தப் பெண்ணோ தலையை சுவற்றில் சாய்ந்து கொண்டு உலகமே மூழ்கிவிட்டதைப் போல் நின்றிருந்தாள்.

நண்பன் இப்போது ஹோட்டலிலிருந்து திரும்பி வந்து அவர்களிடம் பார்சலை நீட்ட முதியவர் அதை வாங்கி தன் மனைவியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். அந்தம்மாவோ அதை எடுத்து பிரித்து தன் மகளிடம் கொடுத்து சாப்பிடச் சொல்ல.. அந்தப் பெண் அசையவில்லை.

பக்கத்து பெட்டில் சுற்றியிருந்த பெண்கள் இருவரும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்த முடியாது என்று மறுத்து முகத்தைத் திருப்பிக் கொள்ள, அந்த அம்மா அழுகவே ஆரம்பித்துவிட்டார். இப்போது அந்தப் பெண் சுவற்றில் தலையைப் புதைத்துக் கொண்டு அழுக.. மாப்பிள்ளைதான் பாவம்.. பரிதாபத்தில் இருந்தான். தேவையா அவனுக்கு..?

நண்பனின் தந்தை சொன்னார்.. “எதுக்கு இப்படி குடிக்கணும்? குடிச்சிட்டு பைக் ஓட்டணும்? இப்ப யார் அழுகுறது? இவனுகளையெல்லாம்..” என்று பொருமினார். உண்மைதானே..? ஏன் மது அருந்த வேண்டும்? எதற்காக..? நண்பர்கள் தேவைதான். இல்லை என்று மறுக்கவில்லை. அது உடலைக் குழியில் இறக்கும்வரையில் வரும் நட்பாக இருக்க வேண்டும். கொண்டாட்டங்கள் தேவைதான்.. அது வாழ்வின் ஆதாரமான நம் உடலையே பாதிப்பதாக இருக்கக்கூடாது.. திருமணம் என்றாலே பார்ட்டி வைப்பது என்பது பொருளாதாரத்தில் அளவுகோல் இல்லாத குடும்பத்தினர் கையில் வைத்திருந்த வாக்கிங்ஸ்டிக். அது இப்போது கிராமம்வரைக்கும் பரவி.. சாணி தட்டுவோரின் கையில்கூட வந்து உட்கார்ந்துவிட்டது.

‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று டாஸ்மாக் கடை வாசலில் எழுதி வைத்திருந்தாலும் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருக்கிறான். ‘எக்கேடு கெட்டாவது செத்துத் தொலைந்து போங்கடா. எங்களுக்கு பணம்தான் முக்கியம்’ என்று அரசுகளும் ஒரு முடிவு கட்டிவிட்டன. இதில் சாதாரண பொதுஜனத்தைப் பற்றி யாருக்கு கவலை?

இப்போது இந்த இளைஞனின் அருகில் இருந்து இவனைப் பார்த்துக் கொள்வது யார்? பாட்டிலை எடுத்துக் கொடுத்த டாஸ்மாக் கடைக்காரனா? அல்லது உடன் இருந்து சியர்ஸ் சொன்ன நண்பர்களா? இல்லையே.. சம்பந்தமே இல்லாமல் அவன் மனைவியும், மனைவியின் பெற்றோர்களும்.. இதென்ன கொடுமை..?

இன்றைய இளைய சமுதாயத்தினரை கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்து வருகிறது நமது குடும்ப சமூகம். மருத்துவமனையில் யாரையாவது பார்க்கச் சென்றால்கூட ‘ஆபீஸில் இருந்து வரும்போது அப்படியே பார்த்திட்டு வந்திரலாம்..’ என்றுதான் ஐடியா செய்கிறார்களே ஒழிய.. ‘பிள்ளைகளை அழைத்துச் செல்வோம். அவர்களுக்கும் ஆஸ்பத்திரி பற்றிய ஒரு அறிவும், தெளிவும் பிறக்கட்டும்’ என்று யாரும் சொல்வதில்லை. செய்வதுமில்லை.

பாருங்கள்.. அந்தப் மாப்பிள்ளை பையனுக்கு இப்போதைய கவலை.. 16,000 ரூபாய் கொடுத்து வாங்கிய செல்போன் காணவில்லையாம். “எந்த இடத்தில் விழுந்திருந்தேன். செல்போனை யாராவது எடுத்தார்களா? யாராவது கேட்டீர்களா?” என்று நினைவு தெரிந்த நேரம் முதல் கேட்டுக் கொண்டேயிருந்தானாம்.. என்ன செய்வது இந்த இளைஞனை..?

உயிர் பிழைத்தது முக்கியம் என்ற நினைப்போ, இப்படி சம்பந்தமில்லாதவர்களை கஷ்டப்படுத்துகிறோமே என்ற குற்றவுணர்வும் அந்த இளைஞனிடம் துளியும் இல்லாமல் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறானே.. அதிலும் அந்தப் பெரியவரை அந்த இடத்திற்கே சென்று தேடச் சொன்னானாம். நண்பனின் தந்தைதான் சத்தம்போட்டு அமைதிப்படுத்தினாராம்.

விளிம்பு நிலை மக்களைக் கை தூக்கிவிடுகிறோம் என்று சொல்லி வரும் அரசுகள் அதே விளம்பு நிலை மக்களை தங்களுடைய முட்டாள்தனத்தால் அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்று உயிரோடு புதைத்து வருகின்றன. படித்தவர்கள், பணக்காரர்கள் எப்படியாவது தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த மக்கள்.. இவர்களுக்கு அப்போதைய சந்தோஷம்தான் ஒரு கண வாழ்க்கை. அதுவே போதும் என்கின்ற அற்ப திருப்தியுடையவர்கள். அதனால்தான் ஜெயிக்கின்ற அரசுகள் அனைத்தும் அவர்களுடைய பணத்தையே சூறையாடி, அவர்களுக்கே கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றுகின்றன.

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால்தான் என்ன? அரசுக்கு வருவாய் போய்விடும்.. டாஸ்மாக்கில் மட்டும் 4000 கோடி ரூபாய் சுளையாக வருமானமாக வருகிறது என்கிறது அரசு. இது யாருடைய பணம்? மக்கள் பணம்? மக்களுக்கு யார் பணம் கொடுத்தது? அரசு.. அரசுக்கு யார் பணம் கொடுத்தது.. அரசுகளேதான்.. அவர்களே அச்சடித்து அவர்களே கொடுத்து.. பின்பு அவர்களே வாங்கிக் கொள்கிறார்கள்.

தங்க நகைகளை உருக்கும்போது சேதாரமாக சில துளிகள் போய்விடுமே.. அதைப்போல் இங்கே மனித உயிர்கள் போய்க் கொண்டிருக்க அரசுகள் மட்டும் நீடித்து வருகின்றன. அரசுகளுக்குத்தான் முழு பொறுப்பா? ஏன் குடிக்காமலேயே குடிமகன்களால் இருக்க முடியாதா?

முடியும். அதற்கு முதலில் அவனுக்கு ஒரு தெளிவு வேண்டும். குடிப்பதனால் வரக்கூடிய தீமைகள் என்னென்ன என்பது அவன் மூளைக்கு எட்டியிருக்க வேண்டும். குடிப்பழக்கத்தினால் இன்னென்ன நோய்கள் ஏற்படும். மரணம் நிச்சயம்.. குடும்பமே சீரழிந்துவிடும். ஒருவரின் வாழ்க்கை பாதையும் மாறிவிடும்.. அது ஆபத்தானது என்று எந்தப் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருக்கவில்லை. ‘இதுவெல்லாம் அவுங்கவுங்க வீட்லயே கத்துக்குவாங்க. நாங்க எதுக்கு அதைக் கத்துக் கொடுக்குறோம்.. எல்கேஜிலேயே உங்க பிள்ளை மவுஸ். மானிட்டர்ன்னு கலக்குறான் பாருங்க..’ என்று சொல்லி நம் பெற்றோர்களின் மூளையும் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.

குடிப்பழக்கத்தின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்.. அதை வழங்குவது கல்விதான்.. அந்தக் கல்வி பாடத் திட்டத்திலேயே இது இல்லையென்பதால்தான் சில மாதங்களுக்கு முன் ஈரோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் டாஸ்மாக் கடையில் ஸ்கூல் யூனிபார்மோடு பீர் குடித்துக் கொண்டிருக்கும் அற்புதக் காட்சி பத்திரிகைகளில் வலம் வந்தது.

இவர்களில் ஒருத்தராவது இப்போது துன்பப்படுகின்ற இந்த இளைஞரைப் போல் வேதனையடைய மாட்டார் என்பது என்ன நிச்சயம்? என்றைக்கோ ஒரு நாள் அப்படியரு சூழல் வரும்போதுதானே யோசிப்பார்கள், இந்த வித்து எங்கிருந்து ஆரம்பித்தது என்று..?

இப்போது அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இளைஞன் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.. ஒட்டு மொத்த அறையும் அவர்களைத்தான் வேடிக்கை பார்த்தது. ஒரு நர்ஸ் அவர்கள் அருகில் சென்று, “இந்தா.. ரொம்ப ஓவரா பந்தா காட்டாத.. நீ செய்யாம வேற யார் செய்வா..? நாங்கெல்லாம் செய்ய முடியாது..” என்று சொல்ல அந்தப் பெண் எரித்து விடுவதைப் போல் பார்த்தார். அந்தப் பார்வையின் கொடூரம். அப்பா.. அப்படியரு பார்வை..

காரணம், இப்போது மாப்ளைக்கு ‘டாய்லெட்’ அவசரம்.. யார் அந்த Tub-ஐ வைப்பது..? யார் பாத்ரூமுக்கு கொண்டு போய் அதைக் கொட்டுவது. மாமியாரோ தள்ளாடுகின்ற வயதில் இருக்கிறார். மாமனாரின் கண்ணாடியோ பூதக்கண்ணாடி.. பாத்ரூம் செல்வதற்குள் எங்காவது நிச்சயமாக மோதிக் கொள்வார். வேறு வழி.. கட்டிய மனைவிதான்.. பின்பு ஊத்திக் கொடுத்த நண்பனா வருவான்..?

ஏதோ ஒரு அருவெறுப்புடன் அந்த டப்பாவை எடுத்து கணவனின் கையில் கொடுக்க அதை அவன் அடியில் வைத்துக் கொண்டு அனைவரையும் பரிதாபமாகப் பார்க்க.. எல்லோருமே முகத்தைத் திருப்பிக் கொண்டோம்.

அந்தப் பையனின் அண்ணன் தனி ரூமுக்காக ஹெல்த் மினிஸ்டரிடம் சிபாரிசு கடிதம் வாங்க காலையில் கோட்டைக்குச் சென்றவன்தான் இன்னும் வரவில்லை. அந்தப் பையனுக்கு அப்பாதான் இருக்கிறார். அம்மா இல்லை. உடன் பிறந்தவர்கள் யாருமில்லை.

கூடி இருக்கும் சுற்றமும், நட்பும் ஆஸ்பத்திரி என்றாலே ஒற்றை இலக்க எண்ணில்தான் வரும். இந்தப் பையனுக்கு அதுகூட இல்லை. ‘நாளைக்கு ஊர்ச்சனமே ஓடி வரும்..’ என்று விளையாட்டாக தன் புது மனைவியிடம் சொல்லப் போய், “வாயை மூடுரா எருமை..” என்று புது மனைவியின் பாராட்டையும் மதியம்தான் பெற்றானாம் மாப்ளை.. பையன் ப்ளஸ்டூ பெயில்.. இதுவே முரண்பாடுகளின் முதல் புள்ளியாக உள்ளது..

அந்தப் பெண்ணின் கோபம் இதனால்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. “அந்தப் பையனை அவளுக்குச் சுத்தமா பிடிக்கலயாம் சரவணா.. ரெண்டு பேரும் ஒரே கட்சிக்காரங்கன்றதால முடிச்சிருக்காங்க.. அவ நல்லா படிச்ச பையனைத்தான் கட்டணும்னு ஆசையா இருந்திருக்கா.. கெடுத்திட்டீங்களேன்னு காலைல இருந்து அவ அப்பன், ஆத்தாகிட்ட மல்லு கட்டுறா.. வர்ற, போற நர்ஸ்க எல்லாரும் கூப்பிட்டு, கூப்பிட்டு அட்வைஸ் பண்ணியாச்சு.. ம்ஹ¤ம்.. விட்டா கொலையே பண்ணிருவா போலிருக்கு. அவ்ளோ கோபத்துல இருக்கா..” என்றார் நண்பனின் அம்மா.

பெற்றோர்கள் பார்த்துச் சொல்லும் மணமகனை ஏன் என்று கேள்வி கேட்காமல் மணக்கும் பெண்கள்தான் நம் தமிழ்நாட்டில் அதிகம். அதற்கு இந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல. நன்கு படித்த பெரிய குடும்பங்களிலேயே இந்த நிலைமைதான் என்றால், இந்தக் கிராமத்துக் குடும்பத்தில் எப்படியிருக்கும்?

திருமணத்திற்கு பெண்ணின் மனமொப்பிய ஒப்புதல் தேவை என்கிற கருத்து சமுதாயத்தில் எப்போது வலுப்பெறும் என்று தெரியவில்லை. வரும் காலங்களில் இதுதான் ஒரு திருமணத்திற்கான முதல்படியாக இருக்க வேண்டும். பிடிக்காத திருமணங்கள் எவ்வளவுதான் பாசம், பணம், அன்பு, நேசம் இவற்றால் பிளாக்மெயில் செய்து பெவிகால் போட்டு ஒட்டினாலும் பேன் காற்றில்கூட அவை இடிந்துவிடும்.

அந்தப் பெண் அந்த டேபை கையில் எடுத்துக் கொண்டு மறுகையால் தன் முந்தானையை எடுத்த தன் மூக்கையும் பொத்திக் கொண்டு பாத்ரூம் நோக்கிச் செல்ல.. அனைவரும் அவசர அவசரமாக ஒதுங்கி நின்று வழி விட்டார்கள். அந்த ஸ்டைலில் இருந்தது அந்தப் பெண்ணின் நடை. இப்போது பையன் ஒரு சைடாக கஷ்டப்பட்டு படுத்திருக்கிறான். பாத்ரூம் சென்ற மனைவி திரும்பி வந்து துடைத்துவிட்டால்தான், அவனால் நேராகப் படுக்க முடியும். என்ன கொடுமை இது..?

ஏதோ கஷ்டம்.. கஷ்டம்.. என்கிறார்களே.. அவர்களை தயவு செய்து இந்த வார்டுக்குள் வந்து ஒரு பத்து நிமிடம் நிற்கச் சொல்லுங்கள்.. புரிந்து கொள்வார்கள் அவர்கள் அனுபவிப்பதெல்லாம் சர்வ சாதாரணம் என்று.. அப்பாவுக்கு மகனும், கணவனுக்கு மனைவியும், புள்ளைக்கு அம்மாவும் என்று விதவிதமான மனித உறவுகள் இந்த இடத்தில் தலைக்கு மேல் ஒரே ஆறுதலாக ஓடிக் கொண்டிருக்கும் பேன் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.

இன்பத்தையும், துன்பத்தையும் ஒரு சேரத்தான் தருகிறான் ஆண்டவன். இன்பம் வரும்போது குடும்பத்தோடு அதை அனுபவிக்கிறோம். துன்பம் வரும்போது பெரியவர்கள் மட்டுமே எதிர்கொள்கிறோம். துன்பம் என்ற ஒன்றும் நம் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த ஆசிரியர்தான் என்பதை நாம் உணர்வதில்லை.

இவர்களில் இந்தச் சம்பவத்திற்கு யாரைக் குற்றவாளியாக்குவது?

குடிப்பது குடிமக்களுக்கு மரணத்தைத் தரும் என்பது தெரிந்திருந்தும் மதுக்கடை பிஸினஸ் செய்யும் அரசாங்கத்தைச் சொல்வதா?

குடிப்பழக்கம் நம் குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிடும் என்பது பாலபாடமாக இருந்தும் விடாமல் கடையை நோக்கி ஓடுகிறானே இந்த இளைஞனைப் போன்றவர்கள்.. இவர்கள்தான் குற்றவாளியா..?

நல்ல படிப்பு இருந்தும், தங்கள் கண் முன்னாலேயே இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான, மூடத்தனத்தில் பெண்ணின் விருப்பம் இல்லாமலேயே அவளுக்குத் திருமணத்தைச் செய்து வைத்திருக்கும் இந்தப் பெற்றோர்கள் குற்றவாளியா..?

நேரமாகிவிட்டதே என்று கிளம்பி வரும்போது அந்தப் பெரியவர் தன் மனைவியிடம் கல்யாணத்திற்காக அவர்கள் விற்ற கறவை மாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். “வீட்டுக்கே லஷ்மி மாதிரி இருந்துச்சு.. அதைப் போய் வித்தோம்ல.. அதான் இப்படி…” என்று அவர் சொல்ல அவர் மனைவி ‘ஆமாம்’ என்பதைப் போல் தலையாட்ட..

இந்த முதியவர்களுக்கு, தங்களது சோகத்தை ஆற்றிக் கொள்ள தங்களது மனதை அமைதிப்படுத்த இதைவிட வேறு வகை ஆறுதல் வார்த்தைகள் இருக்காது என்றே நம்புகிறேன்..