Archive for the ‘குசும்பன்’ Category

குசும்பனுக்கு ஒரு எச்சரிக்கை

செப்ரெம்பர் 24, 2008

குசும்பா..

அடங்குவாய் என்று நினைத்துத்தான் கால்கட்டுப் போட்டோம்.. நிச்சயம் அடங்க வேண்டும் என்று நினைத்துத்தான் அனைவரும் வாழ்த்துச் சொன்னோம்.. அடங்கியே ஆக வேண்டும் என்று சொல்லித்தான் பரிசுப் பொருள்களை வழங்கினோம்.. இன்னமும் அடங்காமல் ஆடினால் என்ன அர்த்தம்..?

எங்கே பார்த்தாலும் குசும்பன்.. எதில் பார்த்தாலும் குசும்பன்.. குசும்பன் இல்லாத வலைப்பதிவே இல்லை என்பது மாதிரி வலையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

“அடங்க மறு” என்பதெல்லாம் காட்டில் வாழும் சிங்கங்களுக்கும், கழுதைப் புலிகளுக்கும் மட்டுமே சொன்னது.. குசும்பா உனக்கல்ல..

மொக்கைப் பதிவை போடவே கூடாது, மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த, என்னை இப்படியொரு பதிவை போட வைத்துவிட்டாயே கிராதகா..

நான் என்ன சொல்லி வாழ்த்தினேன் ஞாபகமிருக்கிறதா..? “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழு..” என்றேன்.. பரவாயில்லை.. இப்போதும் வாபஸ் வாங்க மாட்டேன்.. ஆனால் கூடுதலாக ஒன்றையும் சொன்னேன்.. “பார்சலைப் பிரித்துப் பார்த்துவிட்டு அலமாரியில் வைக்கக்கூடாது.. அட்டை டூ அட்டை படித்துப் பார்த்து அர்த்தம் புரிந்து உணர வேண்டும். உணர்த்தியதை வெளிப்படுத்த வேண்டும்” என்றேன்.. மறந்துவிட்டதா..?

உனக்காக, உனக்கு நல்ல புத்தி வர வேண்டுமென்பதற்காக அவசரம், அவசரமாக ஓடோடிப் போய் கடையைப் பூட்டப் போன நேரத்தில் கடைக்கார அம்மணியிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த விலை மதிக்க முடியாத புத்தகத்தை வாங்கி வந்தேன்..

என் ஸ்கூல் புத்தகத்திற்குக்கூட நான் இப்படி ஒழுங்காக அட்டை போட்டதில்லை. முந்தின நாள் பெய்த மழையோடு மழையாக கடைக்கு ஓடிப் போய் குசும்பனுக்கு சிவப்பு கலர்தான் பிடித்தமானது என்று சொல்லி அதே நிறத்தில் அட்டை வாங்கி புத்தகத்திற்கு அதனைப் போர்வையாகப் போர்த்தி, கூடவே அதற்குப் பொட்டு வைத்து, இரவு முழுவதும் என் தலைமாட்டிலேயே வைத்திருந்து அவ்வப்போது பார்த்துப் பார்த்து வைத்திருந்தேன்.. தெரியுமா உனக்கு..?

சந்திப்பு நாளன்று காலையில் எழுந்தவுடனேயே பல்லைக்கூட விளக்காமல் மறந்து விடுவோமோ என்றெண்ணி எனது பி.எம்.டபிள்யூ., வண்டியின் சைட் பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு, அதையும் பத்து நிமிடத்திற்கொரு முறை பூட்டியிருக்கிறதா என்று சோதனை செய்துபார்த்து பைத்தியம் போல் இருந்தேன்.. இதையெல்லாம் நான் அன்றைக்கே http://truetamilans.blogspot.com/2008/04/30.html – இந்தப் பதிவில் எழுதவில்லை.

எழுதியிருந்தால் “கால் லூஸ¤, அரை லூஸ¤, முக்கால் லூஸ¤, முழு லூஸ¤” என்று நீயே அனானி பெயரில் போட்டுத் தாக்கியிருப்பாய் என்பது எனக்குத் தெரியுமடா குழந்தை..

ஆனாலும் அவ்ளோ தூரம் ஆசையாய், அன்பாய், பாசமாய் வாங்கிக் கொடுத்த அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தையாவது நீ இதுவரையில் படித்தாயா என்பது எனக்குத் தெரியவில்லை. ஊருக்குப் போனதும் ஒரு வரி “புத்தகம் நன்று.. அருமை.. பிடித்திருந்தது” என்று எழுதினாயா..? இல்லையே.. உனக்குத்தான் இங்கே வெட்டித்தனமாக கும்மியடிக்கவே நேரமில்லையே..

எந்தப் பதிவிற்குள் கால் வைத்தாலும் உன் பெயர்தான் இருக்கிறது. அதுவும் ஒரே பதிவில் 20 இடங்களில்கூட பார்த்துத் தொலைத்தேன். இதற்கெல்லாம் எங்கேயிருந்து கிடைக்கிறது நேரம்..? இந்த நேரத்தில் அந்தப் புத்தகம் முழுவதையும் படித்து முடித்திருக்கலாமே.. எனக்கும் சொல்லியிருக்கலாமே..

குசும்பா கடைசியாக கேட்கிறேன்..

இனிமேல் எனக்கு மடல் எழுதி சொல்ல வேண்டாம்.. இதுவரையில் செய்யாததற்கு தண்டனையாக 25 பக்கத்திற்கு அந்தப் புத்தகம் பற்றி உனது பதிவில் விமர்சனம் எழுத வேண்டும்.

எழுதாவிட்டால் நீ அடுத்த முறையும் இங்கு வரும்போது அதே புத்தகம் உன் கையில் திணிக்கப்பட்டு, அங்கேயே அதனைப் பிரித்துப் படிக்கும் ஸ்கூல் தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கிறேன்..

பின்குறிப்பு :

உன்னை மாதிரியே அன்னிக்கு மாயவரத்துல இருந்து நடந்தே வந்தேன்னு ஒருத்தர் கதை விட்டுட்டு, ‘வெங்கட்-தீபா’ மாதிரி லேசா நடிச்சுக் காமிச்சுட்டுப் போனாரே.. அவர்கிட்டேயும் சொல்லி வை.. உனக்கிடப்பட்ட எச்சரிக்கையினால் சுதாரித்து அவர் முந்திக் கொண்டால் நல்லது.. இல்லாவிடில் ‘வெங்கட்-தீபா’ சீரியலில் எப்படி பேசுவாரோ அதே பாணியில் அவருக்கும் கடிதம் வரும்… சொல்லி வை..

நன்றி

வருகிறேன்..