Archive for the ‘கிழக்கு பதிப்பகம்’ Category

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-21-03-2009

மார்ச் 21, 2009

21-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பரந்த முதுகு.. யார்..?

இந்த பரந்த முதுகுக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்த்தவுடன் சொல்லுங்களேன்..


உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது எனில் நீங்கள் உடனடியாக கோடம்பாக்கத்திற்குள் எந்த ரூபத்திலும் பிரவேசிக்கலாம்.. தெரியாதவர்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டு கடைசிக்கு வரவும்.

கிழக்குப் பதிப்பக புத்தகங்களுக்குத் தடை


நேற்று முன்தினப் பத்திரிகைகளில் ஒரு குட்டிச் செய்தி ஒன்று வந்திருந்தது. வலையுலகத்தினர் கவனித்தார்களா என்று தெரியவில்லை. தி.நகரில் ஒரு கல்யாண மண்டபத்தில் கிழக்குப் பதிப்பகம் அமைத்திருந்த புத்தக கண்காட்சியில் பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றிய புத்தகங்களை வைக்கக்கூடாது என்று சொல்லி பறிமுதலோ அல்லது வைக்கவிடாமல் தடுத்தோ மறுபடியும் ஒரு முட்டாள்தனத்தை செய்திருக்கிறது நமது சென்னை மாநகரக் காவல்துறை.

செய்தித்தாள்களில்கூட கிழக்குப் பதிப்பகத்தின் பெயர் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். பதிப்பகம் தெரிந்தால் போன் செய்து என்ன புத்தகம் என்று விசாரித்து வாங்கி விடுவார்களே என்பதால்தானாம்..

பத்ரி ஸாரும், இட்லிவடையும், அஞ்சாநெஞ்சன் பா.ராகவனும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏதாவது கூக்குரலோ, கலகக் குரலோ, ஆட்சேபணைக் குரலோ எழுப்பினால் சமர்த்துப் பிள்ளையாக வெளியில் இருந்து ஆதரவுத் தரலாம் என்று பார்க்கிறேன்.. இப்படி நம்ம விஜயகாந்த் மாதிரி கமுக்கமா இருந்தா நாம என்ன செய்யறது..?

தமிழால் வாழ்வு..!

உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, எனது அலுவலகத்தையும் தாக்கிவிட்டது. குற்றாலத்தில் இடி இடித்து குளித்தலையில் மழை பேய்ந்த கதைதான்.. 400 பேர் வேலை பார்த்த அலுவலகத்தில் இப்போது வெறும் 60 பேர்தான் உள்ளோம்.

சென்ற வாரம் ஒரு ஊழியர் தனக்குத் திருமணம் என்று சொல்லி வாய்கொள்ளாச் சிரிப்புடனும், கொஞ்சம் வெட்கத்துடனும் கல்யாணப் பத்திரிகையை கொடுத்தார். மறுநாளே அவரை அழைத்து இன்று மாலைக்குள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறும்படி சொல்லிவிட்டார்கள்.

பார்க்க பாவமாக இருந்தது.. வாங்குகின்ற சம்பளமே எட்டாயிரம்தான்.. இதனை நம்பித்தான் திருமணமே செய்கிறார். என்ன செய்வது..? விதியோ, மதியோ கஷ்டமெல்லாம் தொடர்வது கஷ்டப்படுகிறவர்களைத்தான்..

எனது வேலைப் பிரிவிலும் ஆட்குறைப்பு ஜெகஜோதியாக நடந்தேறி இப்போது 5 பேர் மட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதில் 4 பேர் ஓகே.. தேவையானவர்கள்தான். தேவையில்லாத நான் ஒருவன் எதற்கு..? யோசித்தேன்.. யோசித்தேன்.. விடை கிடைக்கவில்லை. பொறுக்க மாட்டாமல் வாய்விட்டு கேட்டேவிட்டேன்.. பதில் வந்தது.. “தமிழ் தட்டச்சு தெரிந்த ஒரே ஆள் நீங்கதான்.. எப்படி விடுறது..?”

வாழ்க தமிழன்னை..

ரஹ்மானின் பாராட்டு விழா என்னாச்சு..?


வாராது வந்த மாமணி போல் முதல் முறையிலேயே 2 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்ச் சினிமாவுலகம் இன்னமும் முறைப்படியான பாராட்டுவிழா நடத்தவில்லை.

இசையமைப்பாளர்கள் சங்கத்தினர் மட்டுமே தங்களது பிள்ளைக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். மற்றபடி அரசுத் தரப்புக்கு இப்போதைக்கு இதில் ஆர்வமில்லையாம்.. விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற அமைச்சர் பரிதிக்கு ரஹ்மான் தரப்பில் இருந்து சரியான வரவேற்பும், மரியாதையும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதோடு கூடவே தேர்தல் வேலைகள் நடப்பதாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

கலைஞரை அழைக்காமலோ, அல்லது அவரை விட்டுவிட்டோ எப்படி நிகழ்ச்சியை நடத்துவது என்று திரையுலகத் தலைகளுக்குக் குழப்பம். அவருக்கோ உடல் நிலை சரியில்லை என்பதாலும், விழா என்றால் 4 மணி நேரமாவது அவரை அமர வைத்திருக்க வேண்டுமே என்பதாலும் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள். எப்படியும் கலைஞர் டிவிக்குத்தான் ஒளிபரப்பு உரிமை தரப்பட வேண்டி வரும். கலைஞர் இல்லாமல் எப்படி என்று யோசிக்கிறார்களாம் கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள்.. ரஹ்மானும் கலைஞரை வீடு தேடிப் போய் இன்னமும் பார்க்கவில்லை என்பதும் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறதாம்.. பாவம் ரஹ்மான்.. அவருக்கு இந்த அரசியலெல்லாம் தெரியுமா என்ன..?

ரஹ்மானோ பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் அழைத்த பாராட்டு விழா அழைப்புகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, தினமும் ஒவ்வொரு ஊருக்கு நேர்த்திக் கடன் என்று சொல்லித் தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

“உச்ச நடிகர்களும், பிரபலங்களும் ரஹ்மானின் வீடு தேடிப் போய் வாழ்த்தியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு போனிலேயே பாதிப் பேர் வாழ்த்துச் சொல்லி அவரை அவமானப்படுத்திவிட்டார்கள்.. இந்நேரம் கமலஹாசனுக்கு இந்த விருது கிடைத்திருந்தால் இப்படி விட்டிருப்பார்களா..?” என்று இசைக் கலைஞர் ஒருவர் வடபழனியில் ‘சுதி’ ஏறிய நிலையில் சங்கத்து வாசலில் நின்று கத்திக் கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் கேக்குறதுக்கு யாருக்கு இங்க நேரமிருக்கு..?

செல்போன் வாங்கும்போது எச்சரிக்கை..!

நண்பன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்போது எனது செல்போன் தொலைந்துவிட்டது.. தேடித் தேடி வாங்கி வைத்திருந்த பலருடைய எண்களும் போய்விட்டன. தொலைந்த பின்புதான் ஏதாவது நோட்டில் எழுதி வைத்திருக்கலாமே என்ற யோசனையே வந்தது. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்..

புதிய செல்போன் வாங்கும் அளவுக்கு நமக்கு பொருளாதார வசதி இல்லாததால் பழைய செகண்ட் ஹேண்ட் போன் ஒன்று வாங்கினேன். தொலைந்தது நோகியோ.. புதியது சாம்சங்.. தேவையான பலரையும் சகல விதங்களிலும் தொடர்பு கொண்டு அவர்களது எண்களை வாங்கி புது செல்போனில் பதிவு செய்தேன். இதற்கே 15 நாட்கள் ஆகிவிட்டது. ஓரளவுக்கு தொடர்பானவர்களின் எண்கள் கிடைத்து கொஞ்சம் சந்தோஷத்தில் இருந்தேன்.

சமீபத்தில் கோவில், கோவிலாக ஊர் சுற்றும்போது எடுத்த கோவில் புகைப்படங்களை புளூடூத் மூலமாக கணினியில் சேமிக்க முயற்சித்தேன். அப்போது ஏதோ ஒரு பாஸ்வேர்டை கேட்டது. வழக்கம்போல 0000 என்று முயற்சித்தேன். பாஸ்வேர்டு தவறு என்று வந்தது.

வாங்கிய கடையில் கேட்டேன். “ஒரிஜினல் முதலாளியிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்கள். செல்போன் சர்வீஸ் கடையில் விசாரித்தேன். “சிஸ்டத்தை பார்மட் செய்துவிட்டால் பழையபடி பாஸ்வேர்டு 0000 என்று வந்துவிடும்” என்றார்கள். திடீர் சந்தோஷத்தில் நானும் “செய்யுங்கள்” என்றேன்.. ஊழியரும் கச்சிதமாக செல்போனை சுத்தமாகத் துடைத்து எடுத்துக் கையில் கொடுத்தார்.

வாங்கிய வேகத்தில் போன் செய்ய நினைத்து contacts-ற்குள் போனால் சுத்தமாக காலியாக இருக்கிறது. சிம்கார்டில் குறைவான இடங்கள்தானே உள்ளது. சிஸ்டத்தில் அதிகம் உள்ளதே என்று நினைத்து நேற்றுத்தான் சிம்கார்டில் இருந்து அனைத்து தொடர்பு எண்களையும் சிஸ்டத்திற்கு மாற்றியிருந்தேன். ஆர்வக் கோளாறில் அந்த நேரத்தில் இதனைச் சுத்தமாக மறந்து தொலைத்துவிட்டேன்.. இப்போது எனது குடும்பத்தினரின் எண்ணே எனக்குத் தெரியவில்லை..

இதுதான் சனி பகவானின் ‘அடித்துத் துவைப்பது’ என்று நமது சுப்பையா வாத்தியார் சொல்கிறார். சரியாகத்தான் இருக்கிறது..

ஷகிலா படத்தில் நமது சக வலைப்பதிவர்!


டிவி ரிமோட்டை அழுத்திக் கொண்டே வந்ததில் கே டிவியில் சத்யராஜும், கவுண்டமணியும் ஏதோ நக்கல் செய்து கொண்டிருந்தார்கள். அவசரம், அவசரமாக மிஷினை எடுத்துக் காதில் வைத்துவிட்டு படம் பார்க்க உட்கார்ந்தேன்.

படம் ‘சுயேட்சை எம்.எல்.ஏ.’ இல்லாத அட்டூழியங்களையெல்லாம் செய்துவிட்டு சமத்துப் பையனாக அமர்ந்திருக்கும் சத்யராஜை, போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்ய வருகிறார். அந்த அதிகாரியை குளோஸப்பில் பார்த்தபோது “எங்கிட்டோ பார்த்த மாதிரியிருக்குதே..” என்று எனக்கு சந்தேகம் வந்தது. சத்யராஜ் அமைதியாக அவருடன் எழுந்து வெளியே வருகிறார்.

அடுத்தக் காட்சியில் கோர்ட்டில் கூண்டில் ஏறி மைமிங்கில் தான் எடுத்த நடவடிக்கைகளைச் சொல்கிறார் அந்த ‘சோடாபுட்டி’ அதிகாரி. இப்போது ஆள் யாரென்று நன்கு தெரிந்தது.

நீதிபதியிடம் தான் வைத்திருந்த பணத்தினை டிரக் ஒன்றில் போட்டு கொண்டு வந்து காட்டுகிறார் சத்யராஜ். கோர்ட்டுக்கு வெளியே நீதிபதியை அழைத்து வந்து அதனைக் காட்டி விளக்கமளிக்கிறார் அந்த அதிகாரி.

எதுக்கு இம்புட்டு பெரிய சஸ்பென்ஸ்ங்குறீங்களா..? இப்படியெல்லாம் செஞ்சாத்தான நாலு பேரு படிக்கிறீங்க.. அந்த அதிகாரி.. அட நம்மாளுதாங்க.. நம்ம கேபிள் சங்கரு.. இது மாதிரி சின்னச் சின்ன கேரக்டர்ல நிறைய படத்துல நடிச்சிருக்காராம் துரை.. இப்பத் தெரிஞ்சுக்குங்க..

கோர்ட்டு சீன்ல மந்த்ராவின் முக குளோஸப் காட்சிகள் மட்டுமே தெரிகின்றன. வேறு ஒன்றையும் காணவில்லையே என்று யோசித்து இயக்குநரிடம் கேட்டபோது, “ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி ஷூட்டிங்னு ரொம்பக் கஷ்டத்துல எடுத்த படம் இது.. கடைசி ஷெட்யூல் எடுத்தப்ப மந்த்ராவுக்கு கல்யாணமாகி, உண்டாகி, குண்டாகி வந்து நின்னாங்க.. என்னத்த செய்யறது? அதான் உக்கார வைச்சு ‘அப்படி உக்காரும்மா..’ ‘இப்படி உக்காரும்மா..’ ‘இந்தப் பக்கம் திரும்பும்மா’ என்று சொல்லி அஞ்சு ஷாட் எடுத்து முடிச்சேன்..” என்கிறார். இவர் கஷ்டம் இவருக்கு..

சரி.. அதுக்கெதுக்கு தலைப்புல ஷகிலாங்குறீங்களா..?

இந்தப் படத்துல நம்ம ஷகிலாவும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்காங்க.. அப்ப ஷகிலா நடிச்சிருக்குற படத்துல நம்ம கேபிள் சங்கரும் நடிச்சிருக்காருல்ல.. அப்ப தலைப்பு சரிதானே..

பரந்த முதுகுக்கான விடை

அந்த பரந்த முதுகைக் காண உடனேயே ஸ்குராலை உருட்டி கீழே வந்தவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள்..

முறையாக ஒவ்வொன்றாகப் படித்துமுடித்து கடைசியாக வந்து பார்க்கும் தங்கங்களுக்கு எனது நன்றிகள்..

அந்த முதுகுக்குச் சொந்தக்காரர் இவர்தான்..


‘என்னங்கடா இது.. உண்மைத்தமிழன் பதிவுல இப்படியொரு கொடுமையா..?’ அப்படீன்னு நீங்க முணுமுணுக்குறது எனக்கு நல்லாக் கேக்குது..

ஆனா நான் ஏன் இதை செஞ்சேன்னா.. சில பேரு இப்பல்லாம் சும்மாவே ‘நான் யூத்து.. நான் யூத்து.. நான் யூத்துதாங்க..!’ன்னு காய்ச்சல் வந்த மாதிரி பினாத்திக்கிட்டிருக்காங்க..

இதுல அக்மார்க் இன்னமும் கல்யாணமாகாத, கன்னி கழியாத எலிஜிபில் பேச்சுலரான என்னைப் பார்த்து ‘வயசானவன்’னு நாலு பேர் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எங்க பரம்பரை சீதனமா தலையில வெள்ளி முடி தரிக்க ஆரம்பிச்சிருச்சு.. இது தப்பா..? இது ஜீன் கோளாறு..

சில பார்ட்டிக நேர்ல பேசும்போது இப்படி என்னைப் பத்திப் பத்த வைக்க ஆரம்பிச்சு, அப்புறம் போன்ல கிசுகிசுப்பா பேசத் துவங்கி, எஸ்.எம்.எஸ் அனுப்பி, கடைசியா ‘கேபிள்’லேயே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களாம் ‘நான் வயசானவன்’னு..

அவுங்களுக்கெல்லாம் நான் இளைஞன்னு காட்ட வேணாம்.. அதுக்காகத்தான் இப்படி போட்டோ..

கடைசியாவும் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன்..

நான் யூத்து..! நான் யூத்துதான்..! நான் சத்தியமா யூத்துதாங்க..!!!