Archive for the ‘காமெடி’ Category

வாருங்கள் வலைத்தமிழர்களே ஓடி வாருங்கள்.. தங்கத் தலைவி அழைக்கிறார்!!

மே 12, 2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே…

போதும் இந்தத் திராவிட விளையாட்டு. நீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழுவுற மாதிரி அழுவுறேன்.. என்று சட்டமன்றத்திலும், வெளியிலும் நம்மிடையே மேக்கப் போடாமல் நடிக்கும் நமது திராவிட அரசியல் நடிகர்களை அடித்து விரட்ட மேக்கப்போடு இதோ புறப்பட்டுவிட்டார் நமது தங்கத் தலைவி(வர்).

‘இவர் போனால் அம்மா’; ‘அம்மா போனால் அவர்’ என்று நமக்கே சடுகுடு ஆட்டம் மரத்துப் போகும் அளவுக்கு இருவரும் ஆடிய ஆட்டத்தால் மனம் வெறுத்துப் போயிருக்கும் வாக்காளப் பெருமக்களே.. இதோ நீங்கள் எதிர்பார்த்த உங்களது ரட்சகர்(கை) வந்து விட்டார்.

எங்கு பார்த்தாலும் லஞ்சம், யாரிடம் போனாலும் கமிஷன்.. ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவனும் லஞ்சம் வாங்கிக் கொண்ட பிறகுதான் இதையே சொல்கிறான் என்று நினைக்கும்போது நமது நெஞ்சு என்ன பாடுபடுகிறது? எவ்வளவு கொதிக்கிறது? இந்தக் கொதிப்பை நீர் ஊற்றி அணைக்க..

நொந்து போயிருக்கும் நம் மனதுக்கு இதமான தென்றலைப் போல் வீச வரும் நமது தமிழ்ச் சங்கம் போற்றும் தங்கத் தலைவர்(வி) அழைக்கிறார் நம்மை.. வாருங்கள்.. உடன்பிறப்புகளே.. வாருங்கள்..

இருவரும் என்றாவது ஒரு நாள் காணாமல் போனால் கிடைக்கிற கேப்பில் நாம் உள்ளே நுழையலாம் என்று இலவு காத்தக் கிளியாகக் காத்துக் கொண்டிருக்கிற தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறிவிடும் என்று முன் வருவதை இப்போதே சொல்லிவிடும் ஆற்றல் படைத்த நமது தமிழ்நாட்டின் பேரறிவுச் சுடர் பெருந்தகைச் செல்வன்(வி)அழைக்கிறார்.. வாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.. வாருங்கள்..

நமது இதய தெய்வம், காக்கும் கடவுள், கண்ணை மூடினாலே நம் கண் முன்னால் வந்து நிற்கும் தெய்வம், கூப்பிடாமலேயே ஓடோடி வந்து நமக்கு இதமாகச் சுகமளித்து நம்மை தூங்க வைக்கும் தென்றல்.. பகுத்தறிவு தந்த தமிழகத்தின் மாசற்ற மாணிக்கம், தங்கக் குடத்தில் தகதகவென்று மின்னும் மங்காத குல விளக்கு, கண்மணிகளுக்கெல்லாம் கண்மணியாய் நம்மைத் தாங்க இருக்கும் குடும்ப விளக்கு.. தேடி வந்தோரை இனிமேல் தேடவே விடாமல் செய்யும் அளவுக்கு வாரிக் கொடுக்கும் வம்சத்தில் பிறந்த இளவல்.. எக்கையில் கொடுக்கிறார் என்பதை யாருக்கும் சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுக்கும் கர்ணன்(னி).. அழைக்கிறார் மக்களே.. அழைக்கிறார். வாருங்கள்.. அவருடன் கரம் கோர்த்து தமிழகத்தை வளர்ப்போம்.. நாமும் வளர்வோம்..

தமிழகத்தின் தங்கத் தலைவி, சீர்த்திருத்தச் செல்வி, இளைய சமுதாயத்தினரின் ஒரே விடிவெள்ளி, இதோ இவர்தான்..
தமிழகத்தைக் காப்பாற்ற வந்திருக்கும் புதிய கடவுள். இந்தத் தெய்வத்தின் உருவாக்கத்தில் விளைந்ததுதான் அனைத்திந்திய த்ரீஷா தமிழக முன்னேற்றக் கழகம்.

என்றும் மங்கா புகழ் பெற்ற சங்கத் தலைவியின் பொற்பாதம் தொட்டு அவரது ஆசியுடன் அவரது கொள்கைகளை வழி நடத்திச் சொல்லவும், செல்லவும் அவருடைய முதல் ரசிகன், முத்தான வெறியன்.. பார்த்து வா என்றால் புகைப்படத்தை வெட்டி எடுத்து வரும், கட்டழகன், கொங்கு மண்டல தளபதி, கட்சியின் முதுகெலும்பு, அண்ணன் ‘ஓசை செல்லா’ அவர்களை பொதுச் செயலாளராகவும்..
அன்றும், இன்றும், என்றும் ஒரே கொள்கை, ஒரே லட்சியம், ஒரே பார்வை என்று அனைத்தையுமே ஒரே நோக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் லட்சியவாதி, கோன் என்றாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத தடங்கோள் தவறா வீரன், எந்தக் கட்சிக்குச் சென்றாலும் ‘பொருளாளர்’ பதவியை விட்டுக் கொடுக்காத போர்வாள், உங்களது அருமைத் தம்பி ‘உண்மைத்தமிழனை’ பொருளாளராகவும் கொண்ட இந்த அனைத்திந்திய த்ரீஷா முன்னேற்றக் கழகத்தில் இணைய வாருங்கள்..

அன்னை த்ரீஷாவின் புகழ் பரப்புவதே இனி நமது முழு நேரப் பணி. அவர்தம் கொள்கைகளை பட்டித் தொட்டியெங்கும் பரப்பி, இருண்டு கிடக்கும் தமிழகத்தில் விளக்கேற்றி தமிழக மக்களைக் காக்கும் தெய்வமாக நமது அன்னை த்ரீஷாவை உயர்த்துவோம்..

வாருங்கள் தோழர்களே.. வாருங்கள்..

வீழ்வது நாமாக இருந்தாலும் சரி..
வாழ்வது நமது அன்னை த்ரீஷாவாக இருக்கட்டும்..!
வாழ்க அன்னை..!
வளர்க அவரது புகழ்..!!!