Archive for the ‘காப்பி-பேஸ்ட்’ Category

எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-இறுதி பாகம்

ஜூலை 5, 2007

05-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே…

திரு.அருண்செளரி ‘தினமணி’யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார். சோனியாகாந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார்? யாரால் கொல்லப்பட்டார்? ஏன் கொல்லப்பட்டார்..? என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். கூடவே அகமது படேல், சுஷில்குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற காங்கிரஸ் உயர் தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டுவிரலைக்கூட ரஜினிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸாரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைத்து, பின்பு அவர்களிடமிருந்து எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

“எங்களுக்கு வேலைப்பளு அதிகம். இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அல்ல. சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எனவே எங்களுடைய விசாரணை இதற்குத் தேவையில்லை..” என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும், தொடர்புடையவர்களைத் தப்ப வைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜினி பாட்டீல் உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை..” என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜினி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான். ‘முக்கிய எதிரிகள்’ என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸார் அழைத்து விசாரிக்கவே இல்லை. கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜுமாலி, ராஜுசோனாவானே ஆகியோர் 03.01.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் சொல்லவில்லை. “எங்களை நிர்ப்பந்திக்கிறார்கள். குற்றங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளியுங்கள். இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்..” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

“இந்த வழக்கை விசாரிக்க முடியாது’ என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது..” என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இரு தரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது..” என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜினிபாட்டீல் மீண்டும் ஒரு முறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார். “எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன்..” என்றுகூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒரு முறை தொகுத்து குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கும் மனு செய்தார். அப்படியும் எதுவும் நடைபெறாததால், “பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக தனது அண்ணன் டாக்டர் ஜி.என்.பாட்டீலை கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்..” என்று குற்றம்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு :

“பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறானப் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது..” என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸாரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரச்சாரம் என்றால், ‘ஆஜ்தக்’ தொலைக்காட்சி ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

“இத்தனை நாட்கள் விட்டுவிட்டு பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள்..?” என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாநிலங்களிலும் இதைப் போல ஆணவத்தோடு நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரோ அல்லது அவருடைய உறவினரோ அல்ல.

எனவே, நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும், ஆட்சேபணை தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும்? அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா..?

“சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது. அதனால் தேர்வு செய்துவிட்டார்..” என்று மட்டும் கூறாதீர்கள்.

மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல.. மூன்று முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றி அவருடைய மனைவியும், கட்சித் தலைவர்களும் அலையலையாகத் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு இது சகஜமான விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம்.. அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியல் செல்வாக்கு இல்லாத மன்மோகன்சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதூர்யம் இல்லாவிட்டாலும், இன்னும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராகவே இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல், சுதந்திரமாகச் செயல்படத் துவங்கிவிட்டால் பிரச்சினையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித் தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும், சொந்தச் செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது.. ‘தலைமையின் தயவில்’தான் அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

முற்றும்