Archive for the ‘கழகத்திற்குள் கடிதம’ Category

போலி உண்மைத்தமிழன் யார்?

ஜூன் 28, 2007

28-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

தெரிந்தோ, தெரியாமலோ நான் உங்களிடமோ அல்லது உங்களிடம் நானோ மாட்டிக் கொண்டு உண்மைத்தமிழன் என்ற பெயரில் குப்பை கொட்டி வருகிறேன்.

‘போலிகளிடம் ஏமாறாதீர்கள்’ என்ற வசனத்தை ஊதுபத்தி வியாபாரத்திலிருந்து காயகல்பம் வியாபாரம்வரையிலும் நான் கேட்டிருக்கிறேன்.. இந்தப் போலி என்ற முகமூடி போட்ட நபர்களால் உங்களில் சிலரைப் போலவே நானும் என்ன பாடுபட்டிருக்கிறேன் என்பதனை இந்தப் பதிவிலும் , தொடர்ந்து இந்தப் பதிவிலும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

அதன் பின் சிறிது காலம் அமைதியாக இருந்த போலி உண்மைத்தமிழன் கடந்த சில நாட்களாக வீறு கொண்டு எழுந்து முடி வெட்ட வருபவனுக்கு மொட்டையே அடித்து விடுபவனைப் போல் பின்னூட்டங்களைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறான். நானும் வழக்கம்போல புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

என் புலம்பலை கேட்டவர்களில் பலரும் வழக்கம்போல ஆறுதல் சொல்லிவிட்டு, “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க கண்ணா..” என்கிறார்கள். சிலர் ஆறுதலையும் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் போலியையும் தெரியாத்தனமாக அனுமதித்து விடுகிறார்கள்.

போலியால் நான் வாங்கிய முதல் குட்டு மோதிரக்கையால் கிடைத்ததுதான்.

நண்பர் மிதக்கும்வெளி ஐயாவின் பெரியார் படம் பற்றிய இந்தப் பதிவில் போய் தன் வீரத்தைக் காட்டியிருக்கிறான் போலி. அதுவும் எப்படி பாருங்கள்?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
சுகுணா ஐயா.. இந்த படம் வெளிவரும் முன்பே எனக்கு தெரியும் படம் நல்லா இருக்காது என்று.. துக்ளக்கில் எழுதியிருந்தார்களே? பகுத்தறிவு கோட்டை கட்ட நினைத்து எதையோ கோட்டை விட்டுவிட்டார்கள்..

இதற்குப் பதில் எப்படி வந்திருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள்? இதோ இப்படித்தான்..

உண்மைத்தமிழன்,
துக்ளக்கைப் படித்துவிட்டு பெரியாரை அளக்க நினைப்பதைவிடவும் கேணத்தனமான விடயம் வேறொன்றுமில்லை. இதுபோல மொக்கத்தனமாக எதையாவது தொடர்ந்து உளறினால் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுவது குறித்து நான் நிறைய யோசிக்கவேண்டியிருக்கும்.

எனக்கு இது தேவையா..?

கோவையில் நடந்த பதிவர் சந்திப்புக்கு நான் போயிருந்த சமயம் பாலபாரதி, “தலைவா.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. விட்டுத் தொலைங்க.. அவன் உங்களோட ரசிகனா இருக்கான். அதான் ரசிகர் மன்றம்னு பிளாக்கர் ஆரம்பிச்சிருக்கான்.. விடுவீங்களா இதைப் போயி..” என்றார்.

அங்கே வந்திருந்த நண்பர்கள் வினையூக்கி, முகுந்த்ராஜ், மா.சிவக்குமார், மோகன்தாஸ் ஆகியோரும் இதையே முன் மொழிந்தார்கள். சரி விட்டுத் தொலைவோம் என்ற நினைப்புடன்தான் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

அதே கோவையில் மிதக்கும்வெளி ஐயாவிடமும் அவர் பதிவில் போட்டிருக்கும் போலியின் பதிவுகளை நீக்கும்படி சொன்னேன்.. நான் இப்படிச் சொன்னதையே கோவை சந்திப்பு பற்றிய இந்தப் பதிவில் எழுதியிருக்கிறார்.

மறுபடியும், மறுபடியும் அவருடைய பதிவுகளில் போலி உண்மைத்தமிழன் தலைகாட்ட ஆரம்பிக்க, நிஜமாகவே எனக்கு அவர் மீது வருத்தம் இருந்தது. ஆனால் இன்றுதான் ஐயா ஒரு கேள்வி கேட்டார்.. “எலிக்குட்டி சோதனை என்றால் என்ன?” என்று.. ‘அடக்கடவுளே..!’ இவரையெல்லாம் என்ன செய்றது..? வேறு வழியில்லாமல் நானும் அதைச் சொன்னேன். “இனிமே பார்த்துக்குறேன் ஸார்..” என்றிருக்கிறார்.

ஆச்சா.. சென்ற திங்களன்று சகோதரி கவிதாவின் இந்தப் பதிவிலும் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளான் போலி. அதுவும் எப்படி? MNC-யில் பணியாற்றும் பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தும்விதமாக..

கவிதா இதைப் படித்துவிட்டு, இது போலி உண்மைத்தமிழன் எழுதியது என்பதையும் தெரிந்து கொண்டு அதை அனுமதித்து, அதற்கு பதிலும் எழுதினார்.

அவரைப் பொறுத்தவரை அது சரி.. “போலியாக இருந்தாலும் அவன் மனதுக்குள் இந்த எண்ணம் இருக்கே.. அதுக்கு நான் பதில் சொல்லிருக்கேன்..” என்று எனக்கு மெயில் செய்தார். நானோ, “அது தப்பும்மா.. இப்போ போலியோட மனசுக்குள்ள நான்தான் இருக்கேன். என் பேரை ரிப்பேராக்கணும்னுதான் உனக்குப் போட்டிருக்கான்.. மொதல்ல டெலீட் பண்ணிரு.. இல்லாட்டி நாளைக்கும் போடுவான்.. உனக்கு ஒரு வேலை கூட வரும்..” என்றேன்.. “சரி..” என்று பெருந்தன்மையோடு டெலீட் செய்தார். இவரிடம் போலியின் IP அட்ரஸ் கேட்டேன். “ஸாரி ஸார்.. அது என்னுடைய பெர்ஸனலுக்கு மட்டும்தான்..” என்றார். சரி என்றுவிட்டுவிட்டேன்.

இது இப்படி.. இன்னொருவர் ‘தோழர்’ வரவனையான்.. அவரோட இந்தப் பதிவிலேயும் போய் போட்டுட்டான் போலி.. அவர் எப்பேர்ப்பட்ட ஆளு..? “தலைவா அது போலி போட்டதா..? தெரியாமப் போச்சு.. தூக்கிர்றேன்..” என்றவர், போலியை நீக்கிவிட்டு, அடுத்து இந்தப் பதிவில் அனுமதித்துவிட்டார். “என்ன ஸார்..?” என்று நான் சண்டைக்குப் போனவுடன், “ஸாரி ஸார்.. அசுரன், மாமா, ம.க.இ.க. பிடுங்கி, மயிரு என்ற டென்ஷன்ல இருந்தேன்.. அதான்.. இப்ப தூக்கிர்றேன் தலைவா..” என்றார். சொன்னபடியே டெலீட்டும் செய்தார். “சரி.. உங்களுக்குப் போட்டவரைக்கும் சந்தோஷம்தான் சாமி.. அந்த IP நம்பரை மட்டும் கொடுங்க.. மீதியை நான் பார்த்துக்குறேன்..” என்று ஏதோ பெரிய சிபிஐ கார்த்திகேயன் மாதிரி சவுடால் விட்டேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் IP நம்பர் டீடெயில்ஸை மெயில் செய்தார் வரவனையான். அது இதுதான்.. அவருக்கு கோடானுகோடி நன்றிகள்..

IP Address:
Host: dsl-TN-static-204.247.22.125.airtelbroadband.in
ISP: Btnl-chn-dsl
Entry Page Time : 26th June 2007 13:01:51
Visit Length: 14 mins 54 secs
Browser: MSIE 6.0
OS: Windows XP
Resolution: 1024×768
Location: Tamil Nadu, Chennai, India
Returning Visits: 5

இது சென்னையில் உள்ள Airtel Company-யின் கனெக்ஷன் நம்பர். ஆனால் நான் IP Address கண்டறியும் வலைத்தளங்களில் இதை செக் செய்தால் ஆத்தாடி.. கலிபோர்னியாவுக்கு போய் நிக்குதுங்கோ.. உள்ளூர்லேயே என்னை அடிச்சுப் போட்டாக்கூட கேட்க நாதியில்லை. இதுல கலிபோர்னியால இருந்து ஒரு உடன்பிறப்பாம்.. நம்பவா முடியுது.. தலை சுத்தி உக்காந்திருந்தேன்.

அப்பத்தான் பெங்களூர்ல இருந்து ஒரு அனானி எனக்கு போன் செஞ்சாரு.. “இதெல்லாம் போலி பிராக்ஸி வேலை ஸார்.. IP நம்பரையே மாத்திக் கொடுத்து உங்களை ஏமாத்துறாங்க.. அது நிச்சயம் கலிபோர்னியா நம்பரா இருக்காது. அதே மெட்ராஸ் நம்பராத்தான் இருக்கும்…” என்றவர் சில உறுதியான முன் உதாரணங்களையும் சொல்லி இருந்த மூளையையும் தலைகீழா புரட்டிட்டார்.. அந்த அனானிக்கும் எனது நன்றிகள்..

அடுத்து நம்ம மிதக்கும்வெளி இன்னொரு பதிவைப் போட்டாரு. அது இதுதான். அவரு இருந்ததே வெளியூர்ல.. அங்கன இருந்துக்கிட்டே சென்னைல நடந்த வலைப்பதிவர் கூட்டத்தைப் பத்தி அப்படியே நிசமா பக்கத்துல உக்காந்து எழுதின மாதிரி எழுதியிருந்தாருப்பா. ‘புரிஞ்சுக்குங்க’.. அதுலயே என்னைப் பத்தியும் ஒரு பாரால…

“பதினைந்து பக்கங்களுக்குக் குறையாமல் பதிவு போட்டும் பின்நவீனம், மார்க்சியம், மொக்கை, ஜல்லி என்று எந்த பதிவாக இருந்தாலும் பின்னூட்டம் போட்டு கருத்துரிமையைக் காப்பாற்றிவரும் உண்மைத்தமிழன் ஊருக்குச்சென்றுவிட்டதால் சந்திப்புக்கு வரமுடியாது என்று தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை சென்னை நந்தனம் சிக்னலில் கைலியுடன் பார்த்ததாக பட்சிகள் தெரிவிக்கின்றன.” – இப்படி எழுதிருந்தாரு..

நானும் அதுக்குப் பதிலா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்.. போட்டுட்டு அவர்கிட்ட போன்ல பேசினா ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாரு. “உங்க போட்டோவோடயே இப்ப கமெண்ட்ஸ் வருதே.. தெரியாதா உங்களுக்கு?” அப்படீன்னு அசலாட்டா சொன்னாரு. “வரவனையான் பதிவுல நேத்து பார்த்தேன்”னாரு.. ‘அதெப்படி போட்டோவும் வந்துச்சு.. வர்றதுக்கு சான்ஸ் இல்லையே’ன்னு தலையைப் பிச்சுக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள மிதக்கும்வெளி ஐயாவோட அதே பதிவிலேயே வந்துட்டான் போலி. இதைப் படிச்சுப் பாருங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
வெளியே மிதக்கும் அய்யா.. என்னை நந்தனம் சிக்னலில் கைலியோடு பார்த்த அய்யா லக்கிலுக் அய்யா தான்.. அவர் பதிவர் சந்திப்பில் இதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கியது இல்லாமல் உங்களிடமும் சொல்லிவிட்டாரா அய்யா.. அவர் நல்லா இருக்கட்டும் அய்யா..

இதைப் படிச்சப்புறம்தான் எனக்கு ஒரு விஷயம் நல்லாத் தெரிஞ்சது.. போலி உண்மைத்தமிழன் கலிபோர்னியால இல்ல.. இங்கனதான் மெட்ராஸ்ல என் பக்கத்துலதான் சுத்திக்கிட்டிருக்கான்னு..

எப்படின்னா மிதக்கும்வெளி ஐயா, தன்னோட பதிவுல “என்னை கைலியோட பார்த்ததா ஒரு பட்சி சொல்லுச்சு..” என்றுதான் எழுதியிருக்கிறார். கமெண்ட்ஸ் போட்ட நான்தான் “பேண்ட் அணிந்திருந்தேன்..” என்று திருத்தினேன்..

ஆனால் இந்த போலி உண்மைத்தமிழன் , தம்பி லக்கிலுக் அனைவரிடமும் உண்மைத்தமிழனை நந்தனம் சிக்னலில் பார்த்ததைச் சொல்லிப் பரப்பியதாக சொல்கிறான்.

இங்கே ஒரு விஷயம். 24-06-2007 ஞாயிறு மதியம் 2.45 மணிக்கு நந்தனம் சிக்னலில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தபோது, என்னைப் பார்த்துப் பேசியது தம்பி லக்கிலுக்தான். நான் அப்போதே சொன்னேன், “என்னால் கூட்டத்துக்கு வர முடியாது. எனக்கு ஒரு வேலை இருக்கிறது..” என்று.. “சரி.. முடிந்தால் வரப் பாருங்கள்..” என்று சொல்லிவிட்டுச் சென்றார் லக்கிலுக்.

இப்போது போலி உண்மைத்தமிழன் சொல்வதைப் படித்துப் பார்த்தால் மிதக்கும்வெளி ஐயாவும் வெளியில் சொல்லாமல் இருக்கும்போதே, போலி உண்மைத்தமிழனுக்கு என்னைச் சந்தித்தது லக்கிலுக்தான் என்பதும், லக்கிலுக் அனைவரிடமும் சொல்லி, அனைவருக்கும் அது தெரிந்திருக்கிறது என்றும் சொல்லியிருப்பதைப் பார்த்தால், அந்தச் சந்திப்பிற்கு வந்த பதிவர்களில் யாரோ ஒருவர்தான் இந்தப் போலி உண்மைத்தமிழன் என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நான் யார் மீது குற்றம்சாட்ட முடியும்? யாருக்கு என் மீது தனிப்பட்ட கோபம் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது?

சரி இவர்களில் ஒருவர் இல்லை என்றால், லக்கிலுக் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிந்தது என்றால் போலி உண்மைத்தமிழனுக்கும், லக்கிலுக் சொல்லித்தானே இது தெரிந்திருக்க முடியும். அப்படியானால் லக்கிலுக் என்னைச் சந்தித்ததை யாரிடமெல்லாம் சொன்னார் என்பதை கொஞ்சம் வெளிப்படுத்தினால் நான் அவர்களிடம் கேட்க ஏதுவாக இருக்குமே…

மேலும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்த அனைவரிடமும் என்னைச் சந்தித்ததை தம்பி லக்கிலுக் சொன்னாரா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. காரணம் திங்கட்கிழமையன்று(25-06-2007) நான் நண்பர் மா.சிவக்குமார் அவர்களிடம் பேசியபோது “லக்கி என்னிடம் எதுவும் சொல்லவில்லையே..” என்றார். ஸோ.. லக்கிலுக் தேர்ந்தெடுத்த சிலரிடம் மட்டும் சொல்லியிருக்கலாம். அந்தச் சிலரில் ஒருவர் இந்த போலி உண்மைத்தமிழன் இருக்கலாம் என்பது எனது கணிப்பு.

“விட்டுத் தொலை சாமி.. காமெடி பண்றானுகய்யா.. புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே. நொச்சா இருக்கய்யா நீரு…” என்று பாலபாரதி சொன்னாலும், நேற்று என் பெரும் மதிப்பிற்குரிய பத்திரிகையாளர், ஆசிரியர் திரு.மாலன் அவர்களின் இந்தப் பதிவில் போலி உண்மைத்தமிழன் விளையாடியதை ‘காமெடி’ என்று என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனால்தான் இந்தப் பதிவையே நான் போட வேண்டி வந்தது..

திரு.மாலன் அவர்கள் பத்திரிகையியலில் எனது குருவுக்கு குருவானவர். பெரும் மதிப்பிற்குரிய வலைப்பதிவர். அவரிடம் போய் “என்ன உளறுகிறீர்கள்..?” என்று கமெண்ட்ஸ் போட்டால் இதை எப்படி ‘காமெடி’ என்று ஒத்துக் கொள்வது?

நல்லவேளை.. நான் அந்தப் பதிவில் கமெண்ட் போட்ட போதுதான் போலியின் கமெண்ட்டையும் படித்தேன். உடனேயே பதில் கமெண்ட்டையும் நான் போட்டேன். பின்பு இரவில் திரு.மாலன் அவர்களை போனில் தொடர்பு கொண்டு அந்த போலியின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டு.. எனக்கு எத்தனை சிரமங்கள்..

இவர்கள் மட்டுமல்ல.. பல பதிவர்களுக்கும் இது போல் பதிவுகளைப் போட்டு அதை அவர்கள் எலிக்குட்டி சோதனை செய்து பார்த்து தடை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..

இன்னும் எத்தனை பேரிடம்தான் நான் மன்னிப்பு கேட்பது? கண்டு கொள்ளாமலேயே சென்றுவிடுங்கள் என்றால்.. மாலன் ஸாரிடம் நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? நாளைப் பொழுதுகளில் நான் அவரிடம் பேச வேண்டிய கட்டாயம், சந்திக்க வேண்டிய அவசியமும் கண்டிப்பாக இருக்கிறது. அப்போது, “அது நான் இல்லை ஸார்.. போலி..” என்று நான் சொல்ல முடியுமா?

காமெடி செய்வதற்கும் ஒரு அளவு உண்டு.. மிதக்கும்வெளி, வரவனையான், டோண்டு ஸார் என்றால் நண்பர்கள் என்ற ரீதியில் போனில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். மற்ற எல்லாரிடமும் இதே போல் தினமும் பேச வேண்டும் என்றால் எனக்கு இதுதான் வேலையா..?

எனது கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் அந்தப் போலியிடம் இருக்கிறது என்றால் அனானியாகவோ, அல்லது வேறு ஒரு பெயரிலோ போட்டுத் தொலைய வேண்டியதுதானே.. எதற்கு எனது முகமூடி..? நான் கோபப்படுவது இதற்குத்தான்..

எனக்குக் கிடைக்கின்ற சொற்ப நேரத்திலேயே பதிவுகள் போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்.. இந்த லட்சணத்தில் பொழுது விடிந்து, பொழுது போனால் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று ஒப்பாரி வைக்க வேண்டும் என்றால் எப்படி?

“கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்..” என்று அண்ணன் மா.சிவக்குமார் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஆனால் நட்பே பெரிதென்று நினைக்கும் எனக்கு போலியின் ஒவ்வொரு கமெண்ட்டும், என்னை அனைவரிடமிருந்தும் தூரத்திற்குத் தூக்கிச் செல்வதைப் போல் தெரிகிறது.

அதனால்தான் பல வலையுலக நண்பர்களின் எதிர்ப்பையும், அறிவுரையையும் மீறி இந்தப் பதிவைப் போட்டிருக்கிறேன். வலைத்தமிழர்கள் தங்களைச் சந்தேகப்பட்டுவிட்டேன் என்பதற்காக என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். சூழல் என்னை அப்படி கேட்க வைத்துள்ளது. நீங்களே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. முட்டாள்தனமாக இருந்தால் சிரித்துக் கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை.

ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தால் குண்டு எந்தத் துப்பாக்கியிலிருந்து வந்தது என்பதனைத்தான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.. இப்போது அது யாருடைய துப்பாக்கி என்பதனை தம்பி லக்கிலுக்தான் சொல்ல வேண்டும்.. இது அவருடைய கடமையும்கூட..

“இல்லை.. இல்லை.. வலைப்பதிவர் கூட்டத்துக்கு வந்தவர்கள் யாராவது வெளி நண்பர்களிடம் சொல்லியிருக்கலாம்.. அவர்களில் ஒருவர் உங்களுடைய போலி உண்மைத்தமிழன் இருக்கலாம்..” என்று லக்கிலுக் கருதினால் இது எனது தலையெழுத்து என்று நினைத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் வலைப்பதிவர்களுக்கு கடைசியாகவும் ஒரு வேண்டுகோள். இது மாதிரியான போலிகளை நீங்கள் அனுமதித்தால், அது அவர்களை ஊக்கப்படுத்துவதைப் போல் ஆகும். இதே IP நம்பரில் இருந்து மேற்கொண்டும் கமெண்ட்ஸ் வந்தால் எனக்குத் தகவல் தெரிவித்தால் என்றென்றும் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்..

நன்றி..

சிறுகுறிப்பு : 24-06-2007 அன்றைய வலைப்பதிவர் கூட்டத்திற்கு நான் வர முடியாததற்குக் காரணம்.. எனக்கு, இந்த உண்மைத்தமிழனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது ‘பிச்சை’ போட்டு வரும் பெரியவர் ஒருவர், டைப்பிங் வேலைக்காக என்னை அழைத்திருந்தார். தட்ட முடியவில்லை. அதோடு அந்த வேலைக்காக அவர் கொடுத்த 200 ரூபாய்தான், உண்மைத்தமிழனின் இன்றைய நாள்வரையிலான 4 நாள் சாப்பாட்டுக்காக செலவானது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..