May 31, 2007
எனக்கு இது போன்ற கருத்து தோன்றியது. ஆனால் கார்ட்டூன் வரையத் தெரியவில்லை. எனவே துக்ளக்கிடம் இரவல் வாங்கிப் போட்டுள்ளேன். பார்க்க.. படிக்க.. புரிந்து கொள்க..
தினகரன் வெளியிட்ட பிரச்னைக்குரிய கருத்துக் கணிப்பு, அதைத் தொடர்ந்து நடைபெற்றத் தாக்குதல் ஆகியவற்றைப் பற்றி, சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சின் ஒரு பகுதி இது :
“…..கனிமொழி இப்போதுதான் தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு கவிஞர் என்ற முறையில் கலந்து கொண்டிருக்கிறாரே தவிர, அவரும் பல பேட்டிகளில் தனக்கு அரசியலில் நுழைய விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவும், சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார்..”
– சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேச்சு (முரசொலி : 11.5.2007)
இதன் பிறகு மே 26-ம் தேதி, கனிமொழியை ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவித்ததை ஒட்டி வந்த செய்தி இது :
“…..கனிமொழி ஏற்கெனவே அரசியலில் இருக்கிறார். அதனால்தான் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது..”
– ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கருணாநிதி கூறியது (‘தி ஹிந்து’ : 27.5.2007)
அதாவது மே 10-ம் தேதி வரை கனிமொழி அரசியலில் இருக்கவும் இல்லை; அரசியலில் நுழைய விரும்பவுமில்லை. “தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில், ஒரு கவிஞர் என்ற முறையில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்..” என்பது முதல்வரே கூறியது..
ஆனால் திடீரென்று 26-ம் தேதி அவர், “ஏற்கெனவே அரசியலில் இருப்பராகிவிட்டார். அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்தார் என்று வைத்துக் கொண்டாலும் வந்து, உடனே ராஜ்யசபை அங்கத்தினராகவிருக்கிறார். வரலாறு காணாத வளர்ச்சி!
இந்த நியமனத்தை விளக்குவதற்கு, மாற்றி மாற்றிப் பேசி முதல்வர் திண்டாட வேண்டியதில்லை.
‘கழகம் ஒரு குடும்பம்’ – ‘அது என் குடும்பம்’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். அதற்குப் பின் கேள்விக்கு ஏது இடம்!