Archive for the ‘கர்நாடகா’ Category

நினைத்தேன் எழுதுகிறேன் – கர்நாடக, ஆந்திரத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்

ஜூன் 2, 2008

02-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தேர்தல்கள் என்பதே முகமூடிக் கொள்ளைதான் என்பது பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நமக்குத் தெரிய வந்தாலும், நமது அரசியல்வாதிகள் அதனை சோடியம் லைட் வெளிச்சமாக்கி “நிலா காயுது.. அதைப் பார்க்கத்தான் உங்களுக்கு சோடியம் லைட் வசதியெல்லாம் செஞ்சு கொடுத்திருக்கோம்” என்று தமது புகழ் பாடி பிச்சையெடுத்து பெருமாளாகும் வைபவம் என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இனிமேல் வரக்கூடிய தேர்தல்கள் அனைத்துமே அரசியல் கட்சிகளுக்கு அவர்களுடைய நிலையை அவர்களுக்கே உணர்த்துகின்ற ஒரு அனுபவமாகத்தான் இருக்கும் என்பதனை கர்நாடக மக்களும், ஆந்திரப் பிரதேச மக்களும் நடத்திக் காட்டியிருக்கின்றனர்.

முதலில் கர்நாடகத்தை பார்ப்போம்..

முன்பெல்லாம் ‘கழைக்கூத்தாடிகள்’ என்பவர்கள் ரோட்டோரமாக கயிற்றின் மீது பிடி இல்லாமல் நடந்தும், சாய்வான கயிற்றில் இருந்து பிடிமானமில்லாமல் மேல் நோக்கி நடந்தும் சர்க்கஸ் வித்தை காட்டி நெளிந்து போன தகர டப்பாவைக் குலுக்கி அதன் மூலம் தங்களது வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த வித்தையையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும்படியாக ஒரு அப்பாவும், இரண்டு மகன்களுமாக கர்நாடகாவில் சென்ற சட்டமன்ற காலத்தில் நடத்திய கூத்து இந்தியாவில் பிரசித்தி பெற்றுவிட்டது. “இப்படியொரு அப்பனுக்கு இப்படித்தான் பிள்ளை பிறப்பான்” என்ற தமிழ் கூற்றுக்கு நிஜமான உதாரணத்தை திருவாளர் தேவகவுடாவின் மகன் குமாரசாமியை சொல்லலாம்.

செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு போவது அரசியல்வாதிகளுக்கு தண்ணி பட்ட பாடுதான் என்றாலும், அதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரி, வரியாக மாற்றி மாற்றி பேசியதுதான் கர்நாடக வெகுஜன மக்களை கடுப்படுத்திருக்கிறது என்பது அம்மாநிலத் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிகிறது.

மதசார்பற்ற ஜனதா தளம் 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் அது ஜாதி ரீதியாக பெற்ற வாக்குகள்தான் என்று சொல்லலாம். பெருவாரியான ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளால்தான் அக்கட்சிக்கு இப்போது மூச்சு கொஞ்சமாச்சும் இருக்கிறது.

இந்த ஜாதி பெல்ட்டை உடைப்பது என்பது இன்னொரு ஜாதியினரால்தான் முடியும்.. அந்த வகையில் தேவேகெளடா தான் சாகின்றவரையிலும் தன் பெயரில் இருக்கும் ‘கெளடா’ என்கிற பெயரை நீக்க மாட்டார் என்கின்றபோது அந்த பெல்ட் அவருக்குத்தான் என்பதிலும் சந்தேகமில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் காசு, பணம் புழங்குவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. இத்தேர்தலிலும் ஓட்டுப் போடவிருக்கும் மக்களுக்குக் கொடுப்பாதற்காக வைத்திருந்த அன்பளிப்பு பணத்தை அதிகாரிகள் அள்ளிக் கொண்டு போன பாதகமும் நடந்திருக்கிறது..

இப்போது மாநிலத்தில் ஆட்சிக்கும் வர முடியாமல் போனதால் நிச்சயம் அப்பணம் மத்திய ஆட்சியாளர்களால் பறி கொடுத்தவர்களிடமே திரும்பிப் போகும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் வாக்காளர்கள் கூடுகிறார்களோ இல்லையோ சாமியார்களும், ஜோதிடர்களிடம் கருத்து கேட்பவர்களும் கூடிக் கொண்டேதான் செல்கிறார்கள்.

படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என்ற நிலையில் இருந்த தங்களை நிஜமாகவே படுக்க வைத்த மக்களிடம், எழுவதற்கு என்ன வழி என்று காங்கிரஸ்காரர்கள் ஜோதிடர்களிடம் சென்று மண்டியிட்டு காத்திருந்தார்கள்.

“எதிரிகளை சம்ஹாரம் செய்ய இப்போது துர்காதேவிதான் வர வேண்டும். அவளுடைய அம்சம்தான் உங்களது கட்சியின் ராசிக்கு வந்திருக்கிறது.. யாராவது இரண்டு பெண் தேவிகளைப் பிடித்து அவர்களை ஏவி அப்பன், பிள்ளைகளான அரக்கர்களை கொல்லுங்கள்” என்று எவனோ ஒரு ஜோல்னாப் பை ஜோஸியக்காரன், வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாமல் ஒப்பாரி வைத்திருக்கிறான்.

“நிச்சயம் ஜெயிப்போம்.. எங்கள் துர்கா கை விடமாட்டாள்” என்ற கோஷத்தோடு குமாரசாமிக்கும் எதிராகவும், அவருடைய அண்ணன் ரேவண்ணாவுக்கு எதிராகவும் இரண்டு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி வைத்து “சூலாயுதத்தால் பிளவுபடப் போகிறார்கள் அண்ணன், தம்பிகள்..” என்று ரதத்தில் வந்தபடியே கர்ஜித்தார் மும்பையிலிருந்து வந்து போர்க்களத்தில் குதித்த கிருஷ்ணா.

தம்பி குமாரசாமி போட்டியிட்ட ராம்நகர் தொகுதியில் கர்நாடகத்தின் முன்னாள் ‘மிஸ்டர் கிளீன்’ முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டேயின் மகள் மம்தா நிச்சானியை நிறுத்தியது ஜோதிடர் தயவுடைய காங்கிரஸ் கட்சி.

அதே போல் அண்ணன் ராவண்ணாவை எதிர்த்து அனுபமா என்ற பெண்ணை வேட்பாளராக நிறுத்திவைத்துவிட்டு, ஜோதிடரைவிடவும் நகத்தைக் கடித்துக் கொண்டு முடிவுக்காகக் காத்திருந்தது.

அப்பன்,. பிள்ளைகள் மட்டும் சாதாரணப்பட்டவர்களா..? முதல்வராக ஆட்சியில் இருக்கும்போதே திருநள்ளாறுக்கு ஓடோடி வந்து சனீஸ்வரனுக்கு லஞ்சம் கொடுத்து “எப்படியாவது இன்னொரு இரண்டரை வருஷத்துக்கு எக்ஸ்டென்ஷன் வேண்டும்” என்று பெட்டிஷனை போட்டு அழுது புலம்பிய குடும்பம் அது..

இந்தச் சம்பவத்தால் சனீஸ்வரன் கொஞ்சம் உச்சி குளிர்ந்து போய்விட்டான் போலிருக்கிறது.. குமாரசாமி 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவைத் தோற்கடித்தார். ரேவண்ணா 28 யிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அனுபமாவைத் தோற்கடித்து ஜோதிடரை தலைமறைவு நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இப்போது சனீஸ்வரன் ஜோதிடரை பிடித்தானா அல்லது கிருஷ்ணாவை பிடித்தானா என்பதை அவனே வந்து சொன்னால்தான் தெரியும்.

பாரதீய ஜனதா கட்சி ஏழு நாட்கள் ஆட்சியிலிருந்து முதுகில் குத்திய நம்பிக்கைத் துரோகத்தால் பதவி விலகியபோதே முடிவு கட்டிவிட்டது கர்நாடகாவைக் கைப்பற்றியே தீருவது என்று.. அன்றைக்கே “அடுத்த முதல்வர் எடியூரப்பாதான்” என்று தெளிவுபடச் சொல்லிவிட்டது அக்கட்சி.

அக்கட்சியின் இன்னொரு பிரபலம் ஆனந்தகுமார் அவ்வப்போது எடியூரப்பாவுக்கு இடைஞ்சல் கொடுத்து வந்தாலும், தலைமையின் உருமலால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுவது, லீவு எடுப்பது என்று சின்னச் சின்ன அழுவாச்சி வேலைகளில் மட்டும் ஈடுபட்டு தனது எதிர்ப்பை காட்டி வந்தார்.

காங்கிரஸிலோ வழக்கம்போல தொண்டர்களைவிட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் யாரை முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற பிரச்சினைக்குள்ளேயே ஜன்பத் ரோடு ‘ஆத்தா’ தலையைக் கொடுக்கவில்லை.

இருக்கின்ற தலைவர்களையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு ஆளுக்கொரு ரதத்தில் பவனி வர வைத்தது. ஆனால் வாக்காளர்கள் சுதாரிப்பாக இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.. கடைசி நிமிடத்தில் முதல்வர் பதவிக்கு கார்கேயும், தரம்சிங்கும், கிருஷ்ணாவும் அடித்துக் கொள்ளப் போகும் கண்றாவிக்கு நம்ம எடியூரப்பாவே மேல் என்று நினைத்து ஓட்டுக்களைக் குத்திவிட்டார்கள்.

துர்கையம்மன் தோற்று கிங்கிரர்கள் வெற்றி பெற இப்போது கிருஷ்ணாவின் புலம்பல் வேறு மாதிரியிருக்கிறது.. “என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காததுதான் கர்நாடக மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் காங்கிரஸ் தோற்றுவிட்டது” என்று வருத்தப்படுகிறார்.

இருக்காதா பின்ன..? மும்பையின் கவர்னர் என்கின்ற எவ்ளோ பெரிய பதவியை ஒரு நொடியில் தூக்கிப் போட்டுவிட்டு, ஓடோடி வந்தவரை இப்படி நட்டாற்றில் விட்டால் அவர் என்ன செய்வார்? பாவம்..

பாஜகவுக்கோ தென் இந்தியாவில் முதன் முறையாக கால் ஊன்றிவிட்டோமே என்பதில் முதல் மகிழ்ச்சி. மெஜாரிட்டிக்கு சற்றுக் குறைவாக, எளிதில் ஆளைத் தூக்கிப் போகும் அளவுக்கான எண்ணிக்கையில் சுயேச்சைகள் ஜெயித்தது இரண்டாவது மகிழ்ச்சி.

இந்த இரண்டாவது மகிழ்ச்சியை வைத்துத்தான் தனது கட்சி எதிரிகளை வரும் 5 வருட காலமும் எடியூரப்பா சமாளிக்கப் போகிறார். “கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அடுத்த தேர்தலில் நாம் எவரையும் தூக்கும் நிலைக்கு ஆளாகாமல் இருக்கும்படி ஜெயிக்க வேண்டும். அதற்காக இன்னும் உழைக்க வேண்டும்” என்று வழக்கம்போல மந்திரி பதவி கிடைக்காதவர்களுக்கு ஆறுதல் சொல்லி தனது பாட்டை துவக்கிவிட்டார் முதல்வர் எடியூரப்பா.

மொத்தத்தில் இந்த கர்நாடகத் தேர்தலில் அம்மாநில மக்கள் அளித்த தீர்ப்பு. ஒன்று “நிலையான ஆட்சியைத் தர முடியுமெனில் வா.. இல்லாவிடில் போ..” என்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆக.. இது ஒன்றுக்காகவே கர்நாடக மக்களை வாழ்த்தியே தீர வேண்டும்.

அடுத்தது ஆந்திரா.

“அடைந்தால் மகாதேவி.. இல்லையேல் மரணதேவி” என்ற ‘மகாதேவி’யின் வசனத்தை மாற்றிப் போட்டு “தனித் தெலுங்கானாவை அடைந்தே தீருவேன்” என்று மந்திரியாக இருந்த அனுதினமும் சூளுரைத்துக் கொண்டிருந்தார் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் திரு.சந்திரசேகர்ராவ்.

“தனித்தெலுங்கானாதான் தனது உயிர்.. மற்றதெல்லாம் பிண்டங்கள்” என்று ‘ஜன்பத் ரோடு அம்மா’விடம் தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் மந்திரி பதவியை வாங்கிக் கொண்டார். ஆனால் “காங்கிரஸ் அமைச்சர்களைப் போல பதவிக்குக் கட்டுப்பட்டு இனிமேல் அடங்கியிருப்பார்” என்று ஜன்பத் ரோட்டு அம்மா நினைத்துவிட்டார்.

இங்கே தொகுதி மக்கள் “ஓட்டு போட்டோமே.. தனி வீடு என்னாச்சு?” என்று துளைத்தெடுக்க.. மேலேயும் கேட்க முடியாமல், வீட்டுக்கும் வர முடியாமல் தவித்து ஒரு நிலையில், பதவியையே ராஜினாமா செய்துவிட்டுத் தனது தியாகத்தை பறை சாற்றினார் சந்திரசேகர்ராவ்.

ஆனால் மக்களோ இந்தத் தேர்தலில் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். “உனக்கு காரியத்தை நிறைவேற்றும் தகுதி இல்லை” என்று சொல்லி ஏற்கெனவே இருந்த 4 மக்களவைத் தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் ராஜினாமா செய்த 16 சட்டமன்றத் தொகுதிகளில் 7 தொகுதிகளை மட்டுமே தெலுங்கானா மக்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இதுவும் ராவ்காருக்கு ஒரு எச்சரிக்கைதான். இனிமேலும் ஒழுங்கா இல்லைன்னா இதுவும் கிடைக்காது என்பது.. ராவ்காரோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யலாமா என்று யோசித்து வருகிறராம்.

கர்நாடகாவில் பெற்ற தோல்வியால் துவண்டு போயிருந்த காங்கிரஸ் ஆந்திராவில் கிடைத்த திடீர் வெற்றியால் கொஞ்சுண்டு வாயைத் திறந்து சிரிக்கிறது.. 1 மக்களவைத் தொகுதியையும் 6 சட்டசபைத் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி மூச்சு விட்டுள்ளது.

ஆனாலும் மத்தியில் இருக்கும் காங்கிரஸ்வாதிகளுக்கு தேர்தல் பயம் என்ற வியாதி இப்போதே வந்துவிட்டதை உணர்கிறேன்.. அதுதான் பெட்ரோல், டீஸல் விலை ஏற்றத்திற்காக மூன்று முறை கூடியும் முடிவெடுக்க முடியாமல் காபி, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டுவிட்டு கலைந்து போயிருக்கிறார்கள்.

அடுத்தாண்டு வர வேண்டிய மக்களவைத் தேர்தலை இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்தி விடலாமா என்ற யோசனையை முன் வைத்திருக்கிறார்கள் மூத்த மந்திரிகள்.

எத்தனை களம் கண்டவர்கள் அவர்கள்..? அவர்களது கணிப்பின்படி விலைவாசி உயர்ந்தது.. உயர்ந்ததுதான். இறங்கவே இறங்காது..

அடுத்தாண்டு இறுதிவரையிலும் தேர்தலுக்காகக் காத்திருப்பது என்றால் அது நமக்குத் தற்கொலை முயற்சிதான்.. அதற்குள்ளாக பொதுமக்களின் கோபம் கொப்பளித்துவிடும்.. துப்புகிற துப்பில் நமக்கு கண்ணைத் திறக்கக் கூட இடமிருக்குமா என்பது சந்தேகம்தான் என்பதை நாசூக்காக ஜன்பத் ரோடு வீட்டம்மாவின் காதில் போட்டிருக்கிறார்கள்.

ஆனால் ‘அம்மா’வோ சிதம்பரத்தை மலை போல் நம்பியிருக்கிறார். சிதம்பரமோ சிதம்பரம் ஆண்டவனை உயிர் போல நம்பியிருக்கிறார். இனிமேல் சிதம்பரம் ஆண்டவன் ஏதாவது ஆசி வழங்கி அதிசயம் நடத்தினால்தான் 2 ரூபாய் இட்லியின் விலை குறையும்.

ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் 2 ரூபாய் இட்லியையெல்லாம் சாப்பிடும் பழக்கமில்லாததால் நீங்களும் நானும் அடுத்தத் தேர்தல் வரை காத்திருந்து நமது கோபத்தைக் காட்ட வேண்டியதுதான்..

வேறென்ன செய்வது..?.