Archive for the ‘கர்கிரத்சிங்’ Category

ஈழத்தில் நடந்தது என்ன? இந்திய ராணுவ அதிகாரியின் வாக்குமூலம்

நவம்பர் 24, 2008

நவம்பர் 24, 2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நண்பர் கொழுவி அனுப்பியுள்ள அடுத்த கட்டுரைத் தொகுப்பு இது.

இந்திய அமைதிக் காப்புப் படையில் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்கிரத்சிங் அவர்கள் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தைத் தொகுத்துள்ளார் கொழுவி.

படிக்க சில இடங்களில் சுவாரஸ்யமாகவும், பலவிடங்களில் நம்ப முடியாத அதிர்ச்சியையும் தருகிறது.. இது போன்ற வரலாற்று ஆவணங்கள் நமக்கு என்றென்றைக்கும் தேவை.. அதிலேயும் ஈழத்து விஷயத்தில் தொடர்ந்து வெளிவரும் பூதங்களையெல்லாம் பார்த்தால் ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்வி நம் மனதில் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறது. பதில் கிடைக்காத இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப் போவது யார் என்றுதான் தெரியவில்லை. தொடர்ந்து படியுங்கள்..

இனி அண்ணன் கொழுவி பேசுகிறார்.

“தொடர்ந்தும் புலிகள் சொன்னார்கள்; ஈழத்தமிழர்கள் சொன்னார்கள் என நாம் வெளியிடும் ஆவணங்கள் ஒரு பக்கச் சார்பானவையாக இருப்பதாக நினைக்கிறோம். ஆதலால் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து கௌரவித்து மாற்றுக் குரல்களையும் அனுமதிக்கும் நோக்கில் – இம்முறை IPKF இல் பணிபுரிந்த ஒரு அதிகாரியின் வாக்குமூலத்தை தருகிறோம்.

”ஒரு இந்திய இராணுவத் தளபதியின் அரசியல் வாக்குமூலம்” எனும் தலைப்பில் இதனைத் தனிப்பதிவாக இட்டு ஜனநாயகமும் மாற்றுப் பார்வைகளும் தளைத்தோங்க ஆவன செய்யவும்.

“இலங்கையில் தலையீடு” – “மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள்” என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார்.

72 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் – இந்தியத் தூதர் ஜே.என்.டிக்சிற் – மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்; ஆகியோர் பலாலிப் படைத்தளத்தில் – ஒரு சந்திப்பின் பின் – ஒன்றாக நின்று எடுத்த நிழல்படம் நூலின் முன் அட்டையை அலங்கரித்துள்ளது.

இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் முதல் 137 பக்கங்களுடன் நூல் நிறைவடைகின்றது. ஏனைய பக்கங்கள் ‘இலஸ்ரேட்டட் வீக்லி’ என்ற இந்தியச் சஞ்சிகைக்கு நூலாசிரியர் 1991-ல் வழங்கிய செவ்வி மற்றும் இந்தியத் தளபதிகளின் கடிதங்கள் – கட்டளைகள்-தகவல், அட்டவணைகளுடன் நிறைக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர் கூறும் தகவல்கள்

ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தினால் ஆரம்பம் முதலே இந்திய சமாதானப்படை குழப்பகரமான நோக்கங்களுடன்- பிழையாக வழி நடத்தப்பட்டன என்று நூலாசிரியர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குழப்பங்களை, பிழைகளைச் சரி செய்ய தான் முயன்று தோற்றதாக நூலாசிரியர் சம்பவங்களுடன் கூறுகின்றார்.

தனி ஈழம் என்ற தமிழரின் அரசியல் அபிலாசையை ஈடேற்றக்கூடிய ஒரே இயக்கம் புலிகள் இயக்கம்தான் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக இருந்ததை, தான் கண்டுணர்ந்ததாக நூலாசிரியர் பிரகடனப்படுத்துகின்றார்.

ஆனால் தமிழ் மக்களிடமிருந்து புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்துவதுதான் இந்திய சமாதானப்படையின் பிரதான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று டிக்சிற் கருதினார். இது நடைபெறாதென்று தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

புலிகளின் ஆயுதக் கையளிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் பிரதம மந்திரியின் (ராஜீவ்காந்தி) அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செயலிழந்து போன மற்றைய இயக்கங்களுக்கு றோ அமைப்பினர் புதிய ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தனர் என்று நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த ஆயுத வழங்கலைப் பற்றி டிக்சிற் உட்பட தேவையான அனைவருக்கும் தான் அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் வீடியோச் சுருள் ஆதாரத்தையும் தான் டிக்சிற்றிற்குக் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோச் சுருள் புலிகளால் தனக்குத் தரப்பட்டது என்றும் கூறியுள்ளார். சமாதான காலத்தில் பேச்சிற்கு அழைத்துவிட்டு அங்கே தலைவர் பிரபாகரனைக் கொல்ல டிக்சிற் தீட்டிய சதித் திட்டமொன்றையும் நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

செப்ரெம்பர் 14 ஆம் திகதி (1987) தொலைபேசியூடாக டிக்சிற் தன்னை அழைத்து ‘பலாலி படைத் தளத்திற்குச் சந்திப்பிற்காக பிரபாகரன் வரும்போது அவரைக் கைது செய்யவும் அல்லது சுட்டுக் கொல்லவும்” என்றார். இந்தச் செய்தியைத் தனது மேலதிகாரியான லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் நூலாசிரியர் கூறினார். இதற்கு திபேந்தர்சிங் கூறினார் ‘வெள்ளைக் கொடியின் கீழ் ஒரு சந்திப்பிற்காக பிரபாகரன் வரும்போது அவரைச் சுட்டுக்கொல்ல முடியாது” என்று டிக்சிற்றுக்கு அறிவிக்கச் சொன்னார். அதை டிக்சிற்றுக்கு அறிவித்தேன். அதற்கு டிக்சிற் சொன்னார் ‘ராஜீவ்காந்திதான் இந்த அறிவுறுத்தலை எனக்குச் சொன்னார். ஆனால் அதை நிறைவேற்ற இந்தியப்படை தயங்குகின்றது. இதற்கு இந்திய சமாதானப்படையின் கட்டளை அதிகாரி என்ற வகையில் நீர்தான் பொறுப்பு” என்று தன்னைக் குற்றம் சாட்டியதாக நூலாசிரியர் தகவல் தெரிவிக்கின்றார்.

டிக்சிற்றுடன் தான் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அடுத்தநாள் ஜெனரல் சுந்தர்ஜி தனது கோபத்தை என்னிடம் காட்டினார் என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

திலீபனின் ஈகச்சாவு

திலீபனைச் சாகவிடக் கூடாது என்று திபேந்தர்சிங்கிற்கும் – டிக்சிற்றுக்கும் வலியுறுத்திச் சொன்னதாக நூலாசிரியர் எழுதியுள்ளார். அப்படி நடந்தால் அது இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் தமிழ் மக்களை மாற்றிவிடும் என்று எச்சரித்ததாகவும் கூறுகின்றார்.

செப்ரெம்பர் 25, திலீபனின் உயிர்பிரிவதற்கு முதல்நாள், திபேந்தர்சிங் ஒரு அறிவித்தலைத் தந்தார். தலைவர் பிரபாகரனைச் சந்திக்க டிக்சிற் விரும்புகின்றார் என்பதே செய்தி. அதைப் புலிகளிடம் சேர்ப்பிக்கச் செல்லும் போது வழியில் ஒரு மாபெரும் மக்கள் ஊர்வலம் எதிர்ப்பட்டது என்று நூலாசிரியர் விபரிக்கின்றார். ‘தீப்பந்தங்கள்- மாலைகளுடன் பெண்களும் ஆண்களும் இணைந்து நல்லூர் ஆலயம் நோக்கிச் சென்றனர். சாவின் வாசலில் நின்ற திலீபனைச் சந்திக்க அந்த மக்கள் கூட்டம் சென்றது. இந்திய எதிர்ப்பு – சிங்கள எதிர்ப்புக் கோசங்களைக் கூவியவாறு கூட்டம் நகர்ந்தது” என்று நூலாசிரியர் விபரித்துள்ளார்.

பிரபாகரன் – டிக்சிற் சந்திப்பிற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது திலீபன் உயிர் நீத்தார். பலாலியில் இருந்த தனது தலைமைப் பணிமனையை நோக்கி தலைவர் பிரபாகரன் வந்துகொண்டிருந்த போது திலீபன் மரணித்திருந்தார்” என்று நூலாசிரியர் தனது நினைவுகளை மீட்டுள்ளார்.
‘திலீபனின் சாவுடன் ஐ.பி.கே.எவ். மீதான நம்பிக்கையைப் புலிகள் இயக்கம் இழந்துவிட்டது” என்று நூலாசிரியர் கூறுகின்றார்.

இந்தச் சம்பவத்திற்கு முன் இந்திய அமைதிப்படையையும் றோவையும் புலிகள் சரியாகவே இனம் பிரித்து அறிந்து வைத்திருந்தனர். றோவின் சதிவேலைகளைப் புலிகள் ஆதாரங்களுடன் தம்மிடம் சமர்ப்பித்தனர் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

படகுத் துயரம்

தளபதிகள் புலேந்திரன் – குமரப்பா உட்பட 12 புலிகளின் இழப்பை நூலாசிரியர் படகுத்துயரம் என்ற மகுடத்தில் எழுதியுள்ளார்.

கடலில் 17 புலிகள் சிங்களப் படையால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி புலிகளிடமிருந்து கிடைத்த உடனேயே அவர்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக பிரிகேடியர் பெர்னாண்டசை அனுப்பினேன் என்று நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனைப் பல தடவைகள் தான் சந்தித்திருந்ததால் தலைவரின் மனவோட்டத்தைத் தான் நன்றாக விளங்கிக் கொண்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அந்தப் 17 புலிகளையும் இந்திய அமைதிப் படை பாதுகாக்கத் தவறினால் பிரபாகரனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தான் நன்றாக அறிந்து வைத்திருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

அந்தப் 17 புலிவீரர்களும் பலாலி வான்தளத்தின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்தனர். அது இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த இடத்தைச் சூழ 60 சிங்களப் படையினர் சிங்களத் தளபதிகளால், நிலைகொள்ள வைக்கப்பட்டனர். அந்த 60 சிங்களச் சிப்பாய்களையும் சுற்றி ஒரு பலமான பாதுகாப்பு வேலியைப் போடுமாறு ஒரு இயந்திரப் படைக் கொம்பனிக்கும் – பரசூட் படையணிக்கும் உத்தரவிட்டேன் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

17 புலிகளையும் கொழும்புக்குக் கொண்டுசெல்ல சிங்களப்படை முயற்சித்தால் சயனைட் உண்டு புலிகள் சாகத் தயாராக இருப்பதாகத் தனது மேலதிகாரியான லெப்.ஜெனரல் திபேந்தர்சிங்கிற்கு அறிவித்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 05 ஆம் திகதி (1987) பிற்பகல் 2.15 மணியளவில் தனக்கு ஒரு அவசரச் செய்தி அனுப்பப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். (இந்திய) ‘இராணுவத் தளபதியிடமிருந்து கர்கிரத்சிங்கிற்கு” என்று அந்தச் செய்தி இருந்தது. அந்தச் செய்தியில்……….. “பலாலிப் படைத் தளத்தின் சிங்களத் தளபதி பிரிகேடியர் ஜெயரட்ணா, தான் விரும்பியதைச் செய்யட்டும். நீர் ஏன் சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தலையிடுகின்றீர்…. சிறிலங்காவின் விமானங்களை நீர் தடுக்க வேண்டாம்…” என்றிருந்தது. என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஐ.பி.கே.எவ்.இன் பாதுகாப்பை நீக்கும்படி நான் உத்தரவிட்டேன். இந்திய அமைதிப் படையினர் விலகிக்கொண்ட உடனேயே சிங்களப் படைகள் புலி வீரர்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் பாய்ந்தனர். புலிகள் சயனைட்டுக்களை உண்டனர்.

புலேந்திரனும் – குமரப்பாவும் ஆளுக்கு இரண்டு சயனைட்டுக்களை உண்டு உயிர் நீத்ததாகத் தனது மருத்துவர்கள் அறிக்கை தந்ததாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

‘(சிங்கள) எதிரிக்கு அச்சமூட்டும் ஒரு தளபதியாக புலேந்திரன் இருந்துள்ளார்” என்று கூறும் நூலாசிரியர், அவரை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்கும்படி சிங்கள இராணுவத் தளபதி ஜெனரல் ரணதுங்கா தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை நகரில் இன மோதல் நடந்த இடங்களைத் தான் நடந்து சுற்றிப் பார்த்த போது தன்னுடன் புலேந்திரனும் வந்தார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி குமரப்பா பற்றி நூலாசிரியர் குறிப்பிடும்போது ‘யாழ்ப்பாணத்தில் தான் சந்தித்த முதல் புலித்தளபதி குமரப்பாதான்” என்று எழுதியுள்ளார்.

தளபதிகள் புலேந்திரன், குமரப்பா ஆட்களைப் பாதுகாக்க தான் முயன்றதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களைக் கைவிட்டது டிக்சிற்தான் என்றும் கூறியுள்ளார்.

ஒக்டோபர் 08 ஆம் திகதி 1987 ஜெனரல் சுந்தர்ஜி பலாலி வந்து புலிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி தனக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் “டிக்சிற்றுடன் நீர் ஒத்துழைக்கின்றீர் இல்லை என்பது தெரியும். அவர் தனது வேலைகளைத்தான் செய்கின்றார். அவருடைய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தனக்கு அறிவுரை வழங்கினார் என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.

அத்துடன் சில பிங்கலர் தாள்களைத் தன்னிடம் தந்து வாசிக்கும்படி கட்டளையிட்டார். புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான ஜெனரல் சுந்தர்ஜியின் சிபார்சுகளைப் பிரதமர் ராஜீவ்காந்தி ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பது அந்தப் பிங்கலர் தாள்களைக் கண்டதும் தனக்குப் புரிந்து விட்டதாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.

‘இன்றிரவே (08 ஆம் திகதி) தாக்கு” என்று லெப். ஜெனரல் திபேந்தர்சிங்கின் முன்னிலையில் ஜெனரல் சுந்தர்ஜி தனக்கு உத்தரவிட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

உத்தரவை நடைமுறைப்படுத்த கிளிநொச்சி – வெள்ளாங்குளம் – முழங்காவில் போன்ற இடங்களில் புலிகளின் முகாம்களைத் தாக்குமாறு தான் படையினரைப் பணித்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் நடந்தது.

ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய புலிகள் போர் தொடங்கியது. பல முனைகளைத் திறந்து யாழ். நகரைக் கைப்பற்ற நான் படைநகர்த்தினேன்” என்கின்றார்.

தான் நடாத்திய சண்டைகளை நூலாசிரியர் வரைபடங்களின் உதவியுடன் விளக்க முயன்றுள்ளார்.

ஐ. ஆனைக்கோட்டை சமர்ஐஐ. யாழ் – பழைய பூங்காவைக் கைப்பற்றும் சண்டை ஐஐஐ. சுதுமலை நடவடிக்கை ஐஏ. உரும்பிராய் சந்தியைக் கைப்பற்றும் சண்டைஏ. கோப்பாய் சமர்ஏஐ. கந்தரோடைச் சமர் ஏஐஐ. மருதனார்மடம் சமர்.. இவ்வாறாகச் சண்டைகளை இனங் காட்டி அந்தச் சண்டைகளின் தன்மைகள் பற்றிச் சுருக்கமாக விபரம் தந்துள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் சிறிலங்கா சனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு இராணுவச் சதிமுயற்சி நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கொழும்பிலுள்ள தாஜ் தங்கு விடுதியில் 100 சிறப்புக் கொமாண்டோப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் நூலாசிரியர் தகவல் வெளியிட்டுள்ளார். சண்டை தொடங்கியதும் இந்தக் கொமாண்டோப் படையினர் பலாலிக்கு அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(பெப்ரவரி 1988) இந்திய – புலிகள் போர் தொடங்கி 4 மாதங்களின் பின்னர் லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கின் இடத்திற்கு லெப். ஜெனரல் கல்கட் நியமிக்கப்பட்டார் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

லெப். ஜெனரல் திபேந்தர் சிங் ஓய்வுபெற்றுச் செல்ல சில வாரங்களுக்கு முன்னர் (சனவரி 1988) நூலாசிரியரான மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்கும் பணி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா சென்றார்.

பணிமாற்றத்திற்கான காரணம் தனக்குத் தெரியாதென்று கூறும் நூலாசிரியர் டிக்சிற்றுடனான முரண்பாடு காரணமாக இருக்கலாம். பிரபாகரனைக் கைது செய் அல்லது சுட்டுக்கொல் என்ற டிக்சிற்றின் உத்தரவைத் தான் மறுத்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

1155 இந்தியப்படையினர் புலிகளுடனான போரில் கொல்லப்பட்டனர் என்று நூலாசிரியர் விபரம் தந்துள்ளார்.

03 தொடக்கம் 07 நாட்களுக்கிடையில் படை நடவடிக்கையை முடித்து – புலிகளை அழிக்க முடியும் என்று தான் சொன்னதாக வெளியாகியிருந்த செய்திகளை நூலாசிரியர் மறுத்துள்ளார்.

இந்தக் காலக்கெடுவை ராஜிவ் காந்தியிடம் சொன்னவர் ஜெனரல் சுந்தர்ஜிதான் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டள்ளார்.

புலிகளுடன் சண்டை தொடங்கினால் அந்தப் போர் பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் நடக்கும் என்று மிசோராம் – நாகலாந்து உதாரணங்களைக் குறிப்பிட்டு லெப். ஜெனரல் றொட்டிற்கோவிற்கு தான் சொன்னதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

றொட்றிற்கோ அதை நம்பவில்லை ‘நகர்ப்புற போர்முறையில்தான் புலிகள் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள்” என்றும் காரணம் சொன்னார் என எழுதியுள்ளார்.

சமாதானக் காலத்தில் தலைவர் பிரபாகரனைக் குறிவைத்தது போல போர்க்காலத்திலும் தலைவரைக் குறிவைத்து இந்தியப்படை நடாத்திய மூன்று சம்பவங்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது சம்பவம் போர் தொடங்கிய மறுநாள் நிகழ்ந்தது அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்…..

“பலாலியில் இருந்த சிங்கள இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து நான் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்றைப் பெற்றேன். அதாவது, கொக்குவில் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் போரை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார் என்பதே அந்தத் தகவல். இந்தத் தகவலை லெப். ஜெனரல் திபேந்தர் சிங்குடன் விரிவாகக் கலந்தாலோசித்தேன். தலைவரின் இருப்பிடத்தைத் தாக்கி அழிப்பதற்கான அனுமதியையும்-அதற்குத் தேவையான மேலதிக உதவிகளையும் திபேந்தர்சிங் வழங்கினார். எனது கட்டளைப் பீடத்திலிருந்த திபேந்தர்சிங் அங்கிருந்து மேஜர். ஜெனரல் கல்கட்டிடம் ஒரு அறிவுறுத்தலை விடுத்தார். அந்தத் தாக்குதலுக்கான மேலதிக துருப்புக்களை (இந்திய) இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து கேட்டுப்பெறுமாறு அறிவுறுத்தினார். இந்தத் தாக்குதல் தமது படையினரின் ஒருங்கிணைப்பின்மையாலும் – புலிகளின் நேர்த்தியான எதிர்த் தாக்குதல்களாலும் தோல்வியடைந்தது” என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இரண்டாவது சம்பவம் டிசம்பர் 1987 இல் நடந்தது.

வடமராட்சியிலுள்ள ஒரு வைத்தியசாலை வளாகத்தில் நின்றபடி தலைவர் பிரபாகரன் அவர்கள் கடலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்ததாக ‘றோ’ அமைப்பினர் ஒரு தகவலை வழங்கியிருந்தனர். தாக்குதலுக்காகப் படையினர் அனுப்பப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கட்டளை அறையிலிருந்து தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். “ஆனால் நடு இரவு தாண்டியும் கடல்வழி தரையிறக்கத்திற்கான கடற்கலம் வந்து சேரவில்லை. விடியத் தொடங்கியதால் துருப்புக்களைப் பின்வாங்கச் சொல்லிக் கட்டளையிட்டேன். அப்போது நாங்கள் எங்கே தரையிறங்க இருந்தோமோ! அங்கிருந்து புலிகள் கடுமையாகத் தாக்கினர்” என்று நூலசிரியர் விபரித்துள்ளார்.

கடலிலிருந்து பீரங்கிச் சூட்டாதரவு செறிவாகக் கிடைத்துக்கொண்டிருந்தாலும் எங்களால் அந்த இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்று களத்தில் தலைமை வகித்துக்கொண்டிருந்த கேணல் சொன்னதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

அடுத்த சம்பவம் வித்தியாசமானது- தமது உளவுத்துறையினரின் தகவல் சேகரிப்புக்களையும்- தமது படைத்தளபதிகளையும் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார். “மட்டக்களப்பில் ஒரு புலி பிடிபட்டிருக்குது. அவரை விசாரித்த கொமாண்டர் தான் பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டேன், அவரைப் பிடித்த மாதிரித்தான் என்பது போல லெப். ஜெனரல் றொட்றிக்கோவுக்கு (மட்டு. ஐ.பி.கே.எவ். தளபதி) அறிவிக்க, இவரும் நம்பிவிட்டார். பிரபாகரனைப் பிடித்து விட்டதாகத் தான் அறிவிக்கலாம் என்று லெப். ஜெனரல் நம்பிவிட்டார். அதனால் என்னையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்புக்குப் பறந்தார். அங்கே சென்று பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது பிரபாகரனைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவித் தமிழன்தான் பிடிபட்டிருந்தான் என்று தெரிந்தது” என்று நகைச்சுவையாக எழுதியிருந்தார்.

முடிவுரை

முறுக்கு மீசை – வெங்கல ஓசைச்சிரிப்புடன் நூலாசிரியரான மேஜர் – ஜெனரல் கர்கிரத்சிங் புலிகளுக்கு அறிமுகமாகியிருந்தார். இந்திய சமாதானப் படைத் தளபதிகள் சிலர் எழுதி வெளியிட்ட நூல்களுடன் ஒப்பிடுகையில் கர்கிரத் சிங்கின் இந்த நூல் சற்று வேறுபடுகின்றது.

மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் கருத்துக்களில் வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. அவரின் கணிப்பீடுகளில் ஒரு நேர்மை வெளிப்படுத்தப்படுகின்றது. பல உண்மைகளையும் அவர் அம்பலமாக்கியுள்ளார். புலிகளுக்கும் மக்களுக்குமான பிணைப்பை அவர் சரியாக இனங்கண்டு நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய சமாதானப் படைத் தளபதியாக இங்கே அவர் பணியாற்றிய காலம் குறுகியது. சமாதான காலத்தில் மூன்று மாதமும் – போர்க்களத்தில் மூன்று மாதமும் என மொத்தம் ஆறு மாத காலம் மட்டுமே இங்கே பணியாற்றியிருந்தார். 1988 ஜனவரியில் பணிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

டிக்சிற்றுடனான முரண்பாடும் – அவரது அறிவுறுத்தல்களை ஏற்க மறுத்ததும்தான் தனது பணிமாற்றத்திற்குப் பிரதான காரணம் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

டிக்சிற்றுடன் உடன்பட்டு வேலை செய்யத் தவறுவது பற்றி ஜெனரல் சுந்தர்ஜி தன்னைக் கடிந்து கொண்டதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார். பிரதமர் ராஜிவ் காந்தியின் குரலாகத் தான் ஒலிப்பதாக டிக்சிற் தன்னிடம் கூறியதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்திய சமாதானப்படைக்கு ஒரு உத்தரவு – இந்திய புலனாய்வுத்துறை றோவுக்கு இன்னொரு உத்தரவு என்று குழம்பி எழுதும் நூலாசிரியர், அரசியலில் – இராணுவ ரீதியில் பெரும் குழப்பம் இந்தியத் தரப்பில் இருந்ததாகவும் எழுதியுள்ளார்.

நூலாசிரியரின் குழப்பம் பற்றி இங்கே அதிகம் ஆய்வு செய்வதற்கு எதுவுமில்லை.

நூலாசிரியர் கூறுவதுபோல அவை ஒரு குழப்பமான செயற்பாடு அல்ல. அவை ஒரு நாடகத்தின் பல்வேறு காட்சிகள்.

இந்திய அரசிற்குப் பெருந் தோல்வியாக முடிந்த அந்த நாடகம் பற்றிய விளக்கங்கள் இங்கே தேவையில்லை.

அரசியல் கணிப்பீடுகளில் நேர்மையும் – வெளிப்படைத்தன்மையும் காட்டிய நூலாசிரியர் தான் நடாத்திய போரில் தமிழ்மக்கள் அடைந்த கொடுமைகள் – அழிவுகள் பற்றிய விடயங்களில் நேர்மையையும் கடைப்பிடிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையையும் கைக்கொள்ளவில்லை. அவற்றை ஒட்டுமொத்தமாகவே இருட்டடிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துள்ளார்.

நூலாசிரியர் நடாத்திய மூன்று மாதப் போர் என்பது யாழ் நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மும்முனையில் நடாத்தப்பட்ட ஒரு பாரிய மரபுச்சமர்.

இந்த மூன்று மாதப் போர்க்காலத்தில் யாழ் குடாநாட்டில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல்.

பிரம்படிப் படுகொலை – கொக்குவில் பாடசாலைப் படுகொலை – யாழ் வைத்தியசாலைப் படுகொலை…. என்பன அவற்றில் முக்கியமானவை.

மக்களின் வாழிடங்கள் மீது ஆட்டிலறிகள் – டாங்கிகளால் சுட்டு – மக்களைக் கொன்றும் – அகதிகளாக்கியும் – பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் யாழ் நகரை ஆக்கிரமித்த சாதனையை அவர் எழுதவில்லை. மாறாக, மிக உயர்ந்த கட்டுப்பாடு – ஒழுக்கத்தை இந்தியப் படையினர் கடைப்பிடித்தனர். தமிழ் மக்களிடமிருந்து நன்மதிப்பைப் பெற்றனர் என்று மனச்சாட்சியில்லாமல் நூலாசிரியர் பொய் கூறியுள்ளார்.

அதேபோன்று, யாழ்ப்பாண ஊடகங்களான ஈழமுரசு, முரசொலி மற்றும் புலிகளின் ஒளி – ஒலிபரப்பு நிலையங்களை அழித்த செயலைக் கர்கிரத் வெட்கமின்றி நியாயப்படுத்தியுள்ளார். அந்த ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளை – தகவல்களை மக்களுக்கு நேர்த்தியாக வழங்கி வந்தன. புலிகளின் இராணுவ சாதனைகளை மெச்சிப்பேசி மக்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தன என்று தாக்குதலுக்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.

இந்திய – புலிகள் போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும், இரண்டு மாதங்களுக்கும் நடந்திருந்தன. இதில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நடந்த போரின் கதையைத்தான் தனது பார்வையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்த மூன்று மாதகாலப் போருக்குள்ளேயே தலைவர் பிரபாகரன் மீது மூன்று – நான்கு தடவைகள் இந்தியப்படைகள் கொலைத் தாக்குதலுக்கு முயன்றன. ஆனால், போர் தீவிரமடைந்து வன்னி நிலப்பரப்பு முக்கிய போர்க்களமாகிய பின்னர், தலைவர் பிரபாகரனைக் கொலை செய்ய இந்தியப் படைகள் பல சமர்களையே நடாத்தியிருந்தன. எல்லாவற்றிலும் இந்தியப்படை தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்தியப்படையின் தோல்விக்கு இந்திய அரசின் குழப்பகரமான கொள்கை – பலரின் தலையீடு என்பன பிரதான காரணம் என்று நூலாசிரியர் கூறியுள்ளார். தனது இதே கருத்தையே தனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தளபதியான மேஜர் – ஜெனரல் சர்தேஸ் பாண்டேயும் சொல்லியுள்ளார். என்று நூலாசிரியர் நியாயம் சொல்லி – அதற்கு மற்றைய தளபதிகளையும் துணைக்கு அழைத்துள்ளார்.”

கொழுவி அண்ணை..

கர்கிரத்சிங் ராஜீவ்காந்தி பற்றியும், தீட்சித் பற்றியும், உங்களது தேசியத் தலைவர் மேதகு திரு.பிரபாகரனை கொலை செய்ய நடத்திய கூட்டு முயற்சி பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லி உங்கள் தரப்பு வாதமாக வைக்கும் உங்களுக்கு, இதே புத்தகத்தில் அவர் தலைமை ஏற்று நடத்திய யாழ்ப்பாணத்துப் போர் பற்றி அவர் சொல்லும் நியாயங்களை மட்டும் ஏற்க உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள்.. வாழ்க உமது தேச பக்தி..

ஆனால் நான் இவை இரண்டையுமே ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதில் 95 சதவிகிதமாவது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு என்றே நம்புகிறேன்..