27-09-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கமல் ‘உன்னைப் போல் ஒருவனை’ எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.
‘ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது’ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.
தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..
ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே…. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..
நீங்களும் படித்துப் பாருங்கள்..
உன்னைப் போல் ஒருவன் – சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்
“ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்” என்றார் பாரதி. அதைபோல ஒரு தனி மனிதனின் பேரன்பும், பெரும் கோபமும்தான் இப்படத்தின் கதை.
ரயில் பெட்டி, பேருந்து நிலையம், ஷாப்பிங் மால், அண்ணாசாலை காவல் நிலையம் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கனமான பேக்கைக் கொண்டு வந்து மறைத்து வைக்கிறார் கமல்ஹாசன். அதன் பிறகு மார்க்கெட்டுக்குச் சென்று மனைவி தந்தப் பட்டியல்படி காய்கறிகளை வாங்கிக்கொண்டு திரும்பும் அவர், பாதி கட்டிய நிலையில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் ஏறுகிறார். மாடியில் ஒரு பலகையை எடுத்து அதை மேஜை போல் அமைத்து தன்னிடம் இருக்கும் இன்னொரு பையை எடுத்து அதிலிருந்து லேப்-டாப், செல்ஃபோன் சிம் கார்டு போன்றவற்றை எடுத்து அமர்கிறார்.
பிறகு சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு ஃபோன் செய்து ஐந்து இடங்களில் அதி பயங்கர வெடி குண்டுகள் வைத்திருப்பதாகச் சொல்கிறார். இதை அவர் நம்ப மறுக்க, அண்ணாசாலை காவல் நிலையத்தில் வைத்திருக்கும் குண்டுப் பற்றி சொல்கிறார்.
அங்கு போலீஸ் படையை அனுப்பி சோதனை செய்து பார்க்கும் கமிஷனர், அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதை கண்டு பிடிக்கிறார். அதனை செயல் இழக்க வைப்பதற்கான வழியையும் சொல்லும் கமல், அதன் பிறகு மற்ற குண்டுகள் வெடிக்காமல் இருக்க வேண்டுமென்றால் ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்கும்படி கெடு வைக்கிறார்.
போலீஸ் கமிஷனர் கோபமாகிறார். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை தகர்க்கப் போகும் தீவிரவாதியின் திட்டங்களையும், அவனது கெடுவையும் உள்துறை செயலாளரிடம் கூறுகிறார்.
உள்துறை செயலாளர் லட்சுமி அதிர்ந்து போவதோடு, முதல்வர் தரும் அதிகாரத்தை வைத்து மிரட்டல்காரனைப் பிடிக்கவும், முடியாவிட்டால் அவன் கேட்பதுபோல் அந்த தீவிரவாதிகளை அவனிடம் ஒப்படைத்து குண்டு வெடிக்காமல் நாட்டை பாதுகாக்கும்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார்.
கமல் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொலைபேசியில் இருந்து பேசுகிறார். போலீஸ் அந்த நம்பரை தேடிப் பார்த்தால் அது இறந்து போனவர்களின் எண்களாகவே இருக்கிறது. அதனால் கமல் எங்கிருந்து பேசுகிறார்? அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்? என்பது தெரியாமல் போலீஸ் கமிஷனரும் அவரது உளவுத் துறையும் திணறுகிறது.
இந்நிலையில் கமல் வைத்த கெடு முடிவடையும் நிலையில் வேறு வழியில்லாமல் அவரது கோரிக்கையை ஏற்கிறார் கமிஷனர். நான்கு தீவிரவாதிகளையும் கமல் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றனர்.
அவர்களிடம், “மேலிட உத்தரவுபடி உங்களை விடுவிக்கிறேன், வேனில் தப்பிச் செல்லுங்கள்” என்று கமல் ஃபோனில் கூறுகிறார். தங்கள் இயக்கம் தங்களை மீட்டதாக நினைத்துச் செல்லும் அந்த தீவிரவா
திகள் அடுத்து என்ன நிலைக்குஆளாகிறார்கள் என்பது பரபரப்பான க்ளைமாக்ஸ்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்படுவதால் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்ற பரபரப்பை உண்டு பண்ணுகிறார்கள். பிறகு வரும் ஒவ்வொரு காட்சியிலும் அந்த பரபரப்பின் டெம்போ கூடிக்கொண்டே போகிறது.
கதாநாயகன் மக்களை கொல்ல மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது? இவர் ஏன் தீவிரவாதிகளை விடுவிக்கப் போராடுகிறார்? போன்ற கேள்விகளோடும், பரபரப்போடும் படம் ஜெட் வேகத்தில் செல்கிறது. கிளைமாக்ஸில் நியாயமும், சென்டிமென்டும் வெளிப்படும்போது நம் மனம் கனக்கிறது.
ஆரம்பக் காட்சியிலேயே பத்து பேரை பறந்துப் பறந்து அடிப்பது, அறிமுக பாடல் காட்சியில் மக்களுக்கு நல்லது செய்வதான அறிவுரை பாடலுக்கு ஆட்டம் போடுவது, வில்லனிடமிருந்து கதாநாயகியை காப்பாற்றி, அவளைத் திருமணம் செய்துகொண்டு, வில்லனுக்கு வில்லனாக இருந்து வெளிநாட்டு தெருக்களில் பாட்டுப் பாடி, நடனமாடுவது, சண்டை காட்சி என்ற பெயரில் சர்க்கஸ் சாகசங்களை காட்டி ஹீரோயிஸம் காட்டும் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் “இதுதாண்டா ஹீரோயிஸம்” என்று திரைக்கதையை நம்பி கமல் ஏற்றிருக்கும் வேடத்துக்கும், அவரது நடிப்புக்கும் முதலில் ஒரு ‘சல்யூட்’ அடிக்கலாம்!
படம் முழுக்க அவருக்கு ஒரே லோகேஷன், ஒரே உடை! ஆனால் என்ன? நடிப்பில் அசத்தியிருக்கிறாரே!
ஒரு போலீஸ் கமிஷனரின் பொறுப்பு, வேகம், கேள்விகள், மனிதாபிமானம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது இயல்பான நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் மோகன்லால்.
‘அடி என்றால் இதுதாண்டா அடி’ என்பதுபோல் சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு மிரட்டும் கணேஷ் வெங்கட்ராம், ‘அபியும் நானும்’ படத்தில் த்ரிஷாவின் ‘சிங்’ கணவராக வந்தவரா இவர்? என வியக்க வைத்திருக்கிறார் தனது இயல்பான நடிப்பின் மூலம். கடைசியில் கணேஷ் வெங்கட்ராம் மீது சொல்லாமல் சுடும் பரத்ரெட்டி, போலீஸ்காரர் சக்ரியாக வரும் பிரேம்குமார் ஆகியோரும் நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள்.
மற்றும் லட்சுமி, ஸ்ரீமன், ஆர்.எஸ்.சிவாஜி, சந்தானபாரதி, அனுஜா, பூனம் ஆகியோரின் பாத்திரங்களும் மனதில் நிற்கின்றது.
ஸ்ருதி ஹாசனின் இசையும், மகேஷ் சோனியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் சேர்த்திருக்கும் சிறப்பு அம்சங்கள்.
தீவிரவாதிகளால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகிறார்கள். ஆனால் அந்தத் தீவிரவாதத்துக்கு காரணமானவர்களுக்கான தண்டனைகள் அவர்களுக்கு வலிக்காமல், தாமதமாக வழங்கப்படுகின்றன.
“தீவிரவாதத்துக்கு உடனடி தண்டனை தீவிரவாதமே” என்ற ஒரு தனி மனிதனின் கோபத்தை நம்மில் ஒருவராக இருந்து முடித்து வைத்திருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் சக்ரி டொலேடி. அவரது மன ஓட்டமும், அதை படமாக்கியிருக்கும் விதமும் அசத்தல், பாராட்டுக்குரியது. அதற்கு இரா.முருகன் எழுதியுள்ள வசனங்கள் துணை நிற்கிறது.
பார்க்க வேண்டிய படம்.
இணைப்புகள் :