21-08-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள் தெரிந்து கலைஞரும், அவர் தம் பரிவாரங்களும் அடைந்திருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியில், ஒரு சதவிகிதம்கூட குறையாத அளவிற்கு இதே நேரத்தில் கொடநாடு எஸ்டேட்டில் இருக்கும் புரட்சித்தலைவியும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருப்பார்.
தன்னுடைய தலைமையில் ஒரு அணியில் இருந்து கொண்டே தன் பேச்சை மீறி தேர்தலில் நின்றிருக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது அளவற்ற கோபத்தில் இருந்தாலும், இருப்பவர்களையும் விரட்டிவிட்டு பின்பு என்ன செய்வது என்று அடக்கிக் கொண்டிருந்த அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
ஐயாவின் சந்தோஷத்திற்கு காரணம் ஐந்து தொகுதிகளும் அவருடைய கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது.
அம்மாவின் சந்தோஷத்திற்கு காரணம், தன் வார்த்தையை மீறி தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்கள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலுமே டெபாசிட் தொகையை இழந்து மரண அடி வாங்கியிருப்பதுதான்.
கொஞ்சம் புள்ளி விபரத்தைப் பாருங்கள்..
தொண்டாமுத்தூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.என்.கந்தசாமி பெற்ற வாக்குகள் 112350. தே.மு.தி.க. வேட்பாளர் தங்கவேலு பெற்ற வாக்குகள் 40863. இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெருமாள் பெற்ற வாக்குகள் 9126.
கம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 81516. தே.மு.தி.க. வேட்பாளர் அருண்குமார் பெற்ற வாக்குகள் 24142. இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜப்பன் பெற்ற வாக்குகள் 2303.
பர்கூர் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.கே.நரசிம்மன் பெற்ற வாக்குகள் 89401. தே.மு.தி.க. வேட்பாளர் வீ.சந்திரன் பெற்ற ஓட்டுக்கள் 30378. வலது கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கண்ணு பெற்ற வாக்குகள் 1640.
திருவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுடலையாண்டி பெற்ற வாக்குகள் 53827. தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியன் பெற்ற வாக்குகள் 22468. போட்டியிட்ட வலது கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனலட்சுமி பெற்ற வாக்குகள் 3407.
இளையான்குடி தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சுப.மதியரசன் பெற்ற வாக்குகள் 61084. தே.மு.தி.க. வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 19628.
தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடது கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 11429.
பர்கூர், திருவைகுண்டம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வலது கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 5407.
இந்த இரு கட்சிகளும் சேர்ந்து நான்கு தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 16836-தான்.
இவர்கள் இப்படியென்றால், தாமரைக் கட்சிக்காரர்களும் இவர்களுக்கு சளைக்காமல் தேர்தலில் போட்டியிட்டு தங்களது செல்வாக்கை நிலை நாட்டியுள்ளார்கள்.
இளையான்குடி தொகுதியில் 1487 வாக்குகளும், பர்கூரில் 1482 வாக்குகளும், தொண்டாமுத்தூரில் 9045 வாக்குகளும், திருவைகுண்டத்தில் 1794 வாக்குகளும், கம்பம் தொகுதியில் 946 வாக்குகளையும் பெற்று அசுர சாதனை படைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. ஐந்து தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகள் 14754.
இதில் என்னை யோசிக்கவும், சிரிக்கவும் வைத்தது கம்பம் தொகுதிதான். இத்தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளாரான சசிகுமார் கூடலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு கம்பம் திரும்பும் வழியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அண்ணன் அழகிரியைப் பார்த்து அவரிடம் திடீரென்று சரண்டரானதுதான்..
பாவம் பா.ஜ.க. தொண்டர்கள்.. இப்படி இவர் செய்வார் என்பது தெரியாமல் காசை அள்ளி வீசிய வயித்தெரிச்சலில் அன்றைய இரவில் டாஸ்மாக் கடையையே காலி செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள்.
“தேர்தலை எங்கள் கட்சி புறக்கணிக்கிறது. எங்களைப் பின்பற்றி மக்களும் புறக்கணிக்க வேண்டும்..” என்று புரட்சித்தலைவி சொல்லியும் பொதுமக்கள் கேட்காமல் சராசரியாக 65 சதவிகிதத்திற்கும் மேலாக ஓட்டுக்களை மக்கள் பதிவு செய்திருப்பதும் ஆச்சரியமான ஒன்றுதான்.
தொகுதிக்குள் ஓட்டளிக்காமல் இருந்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர் என்றால், அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் பட்டியல் கணக்கும் இடிக்கிறது.
இதில் மொட்டை அடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் தைரியமாகத் தலையைக் கொடுத்திருக்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
இந்த முறை அ.தி.மு.க.வும் போட்டியிடாததால் அவர்களுக்கு மிகவும் வசதியாகவும் அமைந்துவிட்டது. ஓட்டுக்களைக் கூடவே அள்ளிவிடலாம் என்று நினைத்து உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்புக்கேற்ற வாக்குகள் கிடைத்திருக்கிறது.. பாராட்டுவோம்..
தோல்வி என்றிருந்தால்கூட கொஞ்சம் கவுரவமாக இருந்திருக்கும்.. ஆனால் ஒரு இடைத்தேர்தலில் நான்கு தொகுதியிலும் டெபாஸிட் காலி என்பது சிவப்புக் கொடி தோழர்களுக்கு புதுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கேள்விப்பட்டவுடன் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காம்ரேடுகளுக்கு இந்த அளவுக்குக்கூடவா தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பஞ்சம்..? கட்சி மாநாடு எனில் சிவப்புக் கொடியேந்தி வரும் கூட்டத்தினை பார்க்கவே திருவிழா கணக்காக இருக்கும். குடும்பம், குடும்பமாக இருக்கும் இந்த தோழர்கள், இந்த முறை சுணங்கியதற்கு என்ன காரணம் என்று முழுமையாகத் தெரியவில்லை.
ஆனாலும் தொகுதிகளில் மெஜாரிட்டியாக இருக்கக் கூடிய ஜாதிக்காரர்களை நிறுத்தாமல், கட்சிக்கு நீண்ட நாள் உழைத்தவர்கள் என்ற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தியதுதான் முதல் காரணம் என்கிறார்கள் அக்கட்சித் தோழர்கள்.
எது எப்படியோ இந்த இடைத்தேர்தலின் மூலம் தேர்தல் நடந்த தொகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க தொண்டர்களும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இந்தத் தேர்தலில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துபோய்விட்டது. இனி என்ன ஆகும்..?
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோழர்களின் கதி அதோகதிதான்.. அம்மா எத்தனை தொகுதிகள் தருகிறார்களோ, அதனை கையது, வாயது பொத்தி அமைதியாக வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போக வேண்டியதுதான்.
இல்லை.. இப்போதே கூட்டணியை முறித்துக் கொண்டு ஐயா பக்கம் போனாலும் ஐயாவும் அம்மாவின் பாணியைத்தான் கடைப்பிடிப்பார். என்ன.. ஐயா கொஞ்சம் தட்டிக் கொடுத்து மென்மையாகச் சொல்லுவார்.. அம்மா தட்டாமல் அதட்டிச் சொல்லப் போகிறார். இதுதான் வித்தியாசமாக இருக்கப் போகிறது..
“மக்கள் சேவையில் இருப்பவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது.. அது மக்களை உதாசீனப்படுத்துவது போல..” என்று சொல்லித்தான் இரண்டு கம்யூனிஸ்டு இயக்கங்களும் வரிந்து கட்டிக் கொண்டு அம்மாவின் பேச்சையும் மீறி களத்தில் இறங்கின.
இந்த ஒரு வரி கொள்கைக்காகவே நான் இவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அதே நேரத்தில் ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மக்கள் பணிகளில் அக்கறையின்மை ஆகிய நோய்களைத் தாங்கிக் கொள்ளாத இந்த கம்யூனிஸ்டு இயக்கங்களை, மக்கள் இந்த அளவுக்குப் புறந்தள்ளியிருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் வருகின்ற விடை சுயநலம்.
நம் மக்கள் இந்த அளவுக்கா சுயநல விரும்பிகளாக இருப்பார்கள்..?
எல்லாத்தையும் ஓசில சாப்பிட்டே பழகிட்டோமா..? அதான்.. வீடு எப்படி இருக்குமோ அப்படித்தாங்க நாடும் இருக்கு.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம வந்து குத்திட்டாங்க.. இந்த ஐந்து தொகுதிகளிலுமே ஓட்டுக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
“யார் எப்படி வேண்ணாலும் போங்க..? என்ன வேண்ணாலும் பண்ணிக்குங்க..? எவ்வளவு வேண்ணாலும் கொள்ளையடிச்சுக்குங்க..? ஆனா எலெக்ஷனப்போ மட்டும் எங்களுக்கு கொஞ்சம் பிச்சை போடுங்க.. வெட்கமில்லாம நாங்க அதை வாங்கிட்டு உங்களுக்குத் தயக்கமில்லாம ஓட்டைக் குத்திருவோம்..”னு சொல்லாம சொல்லிக் குத்திட்டாங்க..
மக்களும் இந்த விஷயத்தில் தெளிவாகிவிட்டதாகவே தெரிகிறது. “நமக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. நம்மால் இந்த அரசியல்வியாதிகளை ஒன்று சேர்ந்து கவிழ்ப்பது என்பது நமக்குள் இருக்கின்ற ஒற்றுமையின்மையால் முடியவே முடியாது.. ஸோ, வருவதை வாங்கிக் கொண்டு ஓட்டைப் போட்டுக் குத்திவிடுவோம்.. பின்பு அவர்கள் நம்மைக் குத்தினால் ‘முருகா.. முருகா..’ என்று அவன் மீது பாரத்தைப் போட்டுவிடுவோம்.. வேறென்ன செய்வது..?” என்ற மக்களின் சுயநலமான, பொதுநலமில்லாத, பயந்த குணத்தைத்தான் இது காட்டுகிறது.
நமக்கு எதிரிகள் நாம்தானே ஒழிய, அரசியல்வியாதிகள் அல்ல என்பது இதிலிருந்தும் நன்கு தெரிகிறது.
ஒன்வேயில் போலீஸ் நிற்பதை பார்த்தவுடன் சைக்கிளை விட்டு இறங்கித் தள்ளிக் கொண்டு போய் தப்பிக்கும் பொதுஜனமே..
அடுத்த முறையாவது பணம் வாங்காமல், இப்படி பணம் கொடுப்பதே தவறு என்று நெற்றியில் அடித்தாற்போல் சொல்லாமல் சொல்லி, ஓட்டை எதிரணிக்குக் குத்திவிடு.
உனக்கு நீயே சவக்குழி தோண்டிக் கொள்ளாதே.
வாழ்க இந்திய ஜனநாயகம்..!
வாழ்க பொதுஜனம்..!!
வாழ்க தமிழகம்..!!!