Archive for the ‘உலக அரசியல்’ Category

உலகின் தற்போதைய முன்னணி பெண் அரசியல் தலைவர்கள்..!

மார்ச் 2, 2010

02-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த மாதம் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கோஸ்டாரிகா நாட்டில் லாரா சின்சில்லா மிராண்டா என்கிற பெண்மணி புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்கம்பக்கமெல்லாம் அம்மணிகளுக்கு ‘ஜே’ போடத் துவங்கிவிட்டார்களா என்கிற ஆச்சரியத்துடன், தற்போது உலக அரசியல் களத்தில் முன்னணியில் இருக்கும் பெண்மணிகளின் பட்டியலைத் தேடினேன். கிடைத்தது.

அந்தப் பட்டியலில் இருப்பவர்களில் சிலரது ஜாதகத்தையும், பூர்வாசிரமத்தையும் கூகிளாண்டவரின் துணையோடு துழாவியபோது கிடைத்தவை இங்கே..!

1. லாரா சின்சில்லா மிராண்டா (Laura Chinchilla Miranda)

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டாரிகா நாட்டில் சென்ற மாதத் துவக்கத்தில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் லாரா.


51 வயதான இவர் இதற்கு முன்பு முந்தைய அதிபர் ஆஸ்கர் ஓரியாஸின் அமைச்சரவையில் துணை அதிபராகவும், நிர்வாகத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏற்கெனவே மற்றொரு தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் கிறிஸ்டினாவோடு இவரது வருகையும் தென் அமெரிக்க கண்டத்தில் அரசியல் களங்களை மாற்றியமைக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


ஆனாலும் இதில் ஒரு சுவாரசியமான விஷயம் கிறிஸ்டியானாவுக்கு அப்படியே நேர் எதிர் லாரா என்கிறார்கள். பழமைவாதக் கொள்கைகளைக் கொண்டுள்ள லாரா கருக்கலைப்புக்கும், ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கும் எதிர்ப்பாளர் என்பதால் நடக்கப் போவது என்ன என்பதை வேடிக்கை பார்க்க அந்நாட்டு மீடியாக்கள் காத்திருக்கின்றன.

2. கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்சுனர் (Cristina Fernadez de Kirchner)

அர்ஜென்டினா நாட்டின் தற்போதைய பெண் அதிபர் இவர். அந்நாட்டின் முன்னாள் அதிபரான பெர்னாண்டஸ் டி கிர்ச்சுனரின் மனைவி.


நமது லாலூ பிரசாத் யாதவ் பாணியில் சென்ற தேர்தலில் கணவரால் முன் நிறுத்தப்பட்டு ஏழைகளின் புரட்சித்தலைவி இவர்தான் என்ற பிரச்சாரத்தில் சொக்கிப் போன அர்ஜென்டினா நாட்டின் ஏழை, எளியகுடிகள் பலரும் ஓட்டுக்களை அள்ளித் தெளிக்க 22 சதவிகித ஓட்டுக்களை அதிகம் வாங்கி வெற்றிபெற்றிருக்கிறார்.


தான் தேர்வாகியிருக்கும் நீதிக்கட்சியில் 1970-ல் இருந்தே ஊழியராக இருக்கும் கிறிஸ்டினாவின் 40 வருட பொதுவாழ்க்கை உழைப்புதான் இப்போது அவரை உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


இத்தாலியின் பிரதமர் பெர்லூஸ்கோனியைவிடவும் அதிகமான உண்மைகளை வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பதால் உயர்மட்ட மக்களிடத்திலும் தற்போது இவருக்கு மவுசு கூடி வருகிறது என்கிறார்கள்.

சமீபத்தில் இப்படி இவர் பேசிய உண்மை. “அந்த’ விஷயத்தில் வயாக்ரா மாத்திரையைவிட பன்றிக் கறிதான் பெஸ்ட். நானும் என் கணவரும் வார இறுதியில் உல்லாசப் பயணத்தில் இருக்கும்போது பன்றிக் கறியை ஒரு வெட்டுவெட்டிட்டு ‘மஜாவாக’ இருப்போம்..” என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்க, இப்போது அர்ஜென்டினாவில் பன்றிக்கறியின் விற்பனை அமோகமாம்.

3. யூலியா டைமோஸ்ஹென்கோ (Yulia Tymoshenko)

யூலியா, ரஷ்யாவில் இருந்து பிரிந்த உக்ரைன் நாட்டின் தற்போதைய பிரதமர். ரஷ்யாவில் இருநது பிரிந்த நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மேற்கத்திய தாக்கத்திற்கு முதல் உதாரணமாக உக்ரைன் நாட்டைச் சொல்லலாம்.


50 வயதான யூலியா உக்ரைன் அனைத்து மக்கள் கட்சியின் சார்பில் பிரதமரானவர். விதம்விதமான ஸ்டைலில் தலை அலங்காரங்கள், அணியும் ஆடைகளில் கச்சிதம், அலட்டல் இல்லாத பேச்சும், அவரது ஸ்டைலும் ஊடகங்களுக்கு நன்றாகவே தீனி போட்டு வருகின்றன.

ஆனாலும் அம்மணியின் அரசியல் வாழ்க்கை பளபளா ஹைவேஸ் ரோடு போல இல்லை. நம்மூர் புரட்சித்தலைவியின் ஸ்டைலில் பல்வேறு ஊழல் வழக்குகள், அரெஸ்ட் வாரெண்ட்டுகள், தலைமறைவு வாழ்க்கை என்று பல போராட்டங்களுக்குப் பின்புதான் தற்போது பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கிறார்.


உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய ஆயில் நிறுவனத்தின் உரிமையாளரும் இவராகவே இருப்பதால் தொழில் சாம்ராஜ்யத்தில் திளைத்த இவரை மடக்கப் பார்த்த முன்னாள் ஆட்சியாளர்களை எப்படி, எப்படியோ சரிக்கட்டி முன்னுக்கு வந்துள்ளார்.

ஆனாலும் தற்போது உக்ரைனில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் யூலியா. வெற்றி பெற்ற அதிபர் யானுகோவியாச்சின் அரசியல் விளையாட்டுக்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் தனது விதவிதமான, அழகழகான தலை அலங்காரங்களைக் காட்டியே மீடியாக்களை கவர்ந்து வருகிறார் யூலியா.


சென்ற மாதம் ரஷ்யாவில் இருந்து உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்குப் பயணமாகும் கியாஸ் விஷயத்தில் ரஷ்யாவுடன் கடுமையாக மோதி கடைசியில் மிகப் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் போட்டு ஐரோப்பிய யூனியனுக்கு மண்டைக் காய்ச்சல் கொடுத்திருக்கிறார். அதிரடி அரசியலுக்கு உதாரணமானவர் இவர் என்கிறார்கள்.

4. ஜூலியா கில்லார்ட் (Julia Gillard)

ஆஸ்திரேலியாவின் துணை பிரதமராக இருக்கும் இந்த 49 வயது அம்மாதான் இப்போதைக்கு ஆஸ்திரேலிய பத்திரிகைகளின் ப்ளோஅப் போட்டோக்களை பில்லப் செய்து வருகிறார்.


செக்ஸி எனகிற வார்த்தைக்கு முழு அர்த்தம் இவர்தான் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் ஜொள்ளோ ஜொள்ளுவிட்டு வருகிறார்கள். ஆண்களின் பத்திரிகையான ரால்ப் முன்னாள் உலக பிரபஞ்ச அழகி ஜெனிபர் காப்கின்ஸுக்கு அடுத்து ஜூலிதான் நம்பர் செகண்ட்டு என்று போட்டி வைத்து முடிவை அறிவித்திருக்கிறது..


ஒரு பிகினி டிரெஸ் போட்டோவுக்கு 50000 டாலர் என்று விலை வைத்து தாம்பாளத் தட்டில் நீட்டியும் இந்த பெண் அரசியல்வாதி மசியவில்லை. மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிறார்.

ஆளும் கட்சியான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் இவர்தான் துணை பிரதமர் பொறுப்புக்கு வந்திருக்கும் முதல் பெண்.

தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளைக் கட்டி மேய்க்கும் இந்த அம்மாவின் பணி ஆஸ்திரேலியா கண்டம் முழுவதும் மீடியாக்களின் பிளாஷ் லைட்டுகளையும் தாண்டி பாராட்டப்படுகிறது.

5. சாராபாலின் (Sarah Palin)

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டதில் இருந்தே அதிகம் பிரபலமாகிவிட்ட சாரா பாலின் அமெரிக்காவின் ஒரு கோடியில் இருக்கும் அலாஸ்கா என்கிற மாகாணத்தின் கவர்னராக இருந்து தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.


பாகிஸ்தானின் பத்து பெர்செண்ட் அதிபர் சர்தாரியை ஜொள்ளுவிட வைத்த பெருமைக்குரிய சாரா பழமைவாதியாக இருந்ததுதான் சென்ற அதிபர் தேர்தலில் அவர் தோற்றுப் போனதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.


ஆனாலும் மனம் தளராமல் அடுத்த அதிபர் தேர்தலுக்காக இப்போதே முனைப்புடன் கட்சிகளை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காகவே தற்போது தன்னுடைய அலாஸ்கா மாகாண கவர்னர் பதவியை தியாகம் செய்துவிட்டு களத்தில் குதித்துள்ளார்.


அமெரிக்காவில் சாரா பாலின் ஸ்டைல் என்று ஒரு தனி பிராண்டையே கொண்டு வரும் அளவுக்கு முக கவர்ச்சியுடைய இவரைத் தவிர அடுத்த அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்க்க அமெரிக்க குடியரசு கட்சியில் வேறு ஆளே இல்லை என்கிறார்கள்.

6. ஹிலாரி கிளிண்டன் (Hillary Clinton)

பில்கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் இவர்கள் இருவரையும்தவிர ஹிலாரி என்ன செய்யப் போகிறார் என்று உலகமே எதிர்பார்த்து காத்திருந்தது. அப்போது அவர் எடுத்த மன்னிப்பு என்கிற முடிவு தமிழ் டிவி சீரியல்களின் கிளைமாக்ஸையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.


அவ்வளவு தீர்க்கமாக முடிவெடுக்கும் இவர்தான் இப்போது அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர். அதிபர் தேர்தலின்போது ஒபாமாவை அவ்வளவு கடுமையாக விமர்சித்தும்கூட ஒபாமாவின் அமைச்சர் அழைப்பை கட்சிக்காக ஏற்றது இவரது விட்டுத்தரும் குணத்தை பறைசாற்றியது.

எந்தவகையான பெண்ணிய அடையாளத்திலும் சிக்காமல் இருக்கும் இவரது நளினம்தான் தற்போதைக்கு பெண் அரசியல்வாதிகளுக்குத் தேவையான ஒன்று.


அடுத்த முறை நிச்சயம் தேர்தலிலோ, அமைச்சர் பொறுப்பிலோ இருக்கப் போவதில்லை என்று இப்போதே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு காத்திருக்கும் இவர் ஒரு நாகரிக அரசியல்வாதியாகத்தான் தெரிகிறார்.

இதனாலேயோ என்னவோ உலக மீடியாக்கள் இவரை அம்மா வேடத்திலேயே விட்டு வைத்திருக்கின்றன.

7. மரியா ரொசாரியா கார்பக்னா (Mara Rosaria Carfagna)

35 வயதான இந்த முன்னாள் டிவி தொகுப்பாளினி, மாடல் அழகிதான் இப்போது இத்தாலியின் ஹாட் டாபிக். ஹாட்டுக்கு காரணம் இவரது அழகோடு அரசியல் பதவியும் சேர்ந்ததுதான்.


பேஷன் ஷோவுக்கும், நாகரிக உலகத்திற்கும் ஒரு வடிவாசலாக இருக்கும் இத்தாலி நாட்டில் தற்போது இவர் சமூகநீதிக்கான அமைச்சராக இருக்கிறார். சட்டம் படித்திருக்கும் இவர்தான் தற்போதைக்கு உலகின் அழகான பெண் அமைச்சர் என்று இத்தாலியில் அழைக்கப்படுகிறார்.
ஏற்கெனவே இத்தாலியில் மன்மத ராஜா ஸ்டைலில் புரட்சி செய்துவரும் பிரதமரான சில்வியோ பெர்லூஸ்கோனிதான் மரியாவின் அரசியல் நுழைவுக்குக் காரணமானவர்.


பெர்லூஸ்கோனியின் சொந்த டிவி நிறுவனத்தில் ஆறாண்டு காலம் ஷோக்கள் நடத்தி வந்த மரியாவைக் கைப்பிடித்து அரசியலுக்கு இழுத்து வந்து அமர வைத்திருப்பது பிரதமர் பெர்லூஸ்கோனிதான்.


இவர்கள் இருவரும் கிளிண்டர்-மோனிகா லெவின்ஸ்கி போல் சின்னத்தனங்களில் ஈடுபட்டது பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வந்தாலும், அதைப் பற்றியெல்லாம் பிரதமரோ, மரியாவோ கவலைப்படவில்லை.

நான் மட்டும் இப்போதும் திருமணமாகாமல் இருந்திருந்தால் இப்போது மரியாவைத்தான் திருமணம் செய்திருப்பேன் என்று பேட்டியளித்திருக்கிறார் பெர்லூஸ்கோனி. இதனாலேயே இவரின் மனைவி இவரைவிட்டுப் பிரிய நேரிட்டது.

தனது இளமைக்காலத்தில் பல பத்திரிகைகளுக்கு முழு நிர்வாண போஸ் கொடுத்து அசத்தியிருக்கும் மரியா, இப்போது ஓரினச்சேர்க்கைக்கு எதிராக செயல்பட்டு வருவது கண்டு அசந்து போயிருக்கிறது இத்தாலியின் அரசியல் லாபி.

8. அலினா காபஈவா (Alina Kabaeva)

இவருமா என்று மேற்கத்திய பத்திரிகைகளை மூக்கில் விரல் வைக்க வைத்துவிட்டது ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், இந்நாள் பிரதமருமான விளாடிமிர் புதின் பற்றிய ஒரு கிசுகிசு.


ரஷ்யாவின் முதல்தரமான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா காபஈவா என்கிற பெண்ணை புடின் திடீரென்று அரசியலின் லைம்லைட்டுக்கு கொண்டு வந்தபோது ரஷ்யாவே திகைத்தது. அந்தச் செய்திக்கு பத்திரிகையாளர்களைவிடவும் மிக வேகமாக உயிர் கொடுத்தார் புடின்.18 உலக சாம்பியின்ஷிப் பதக்கங்கள், 2 ஒலிம்பிக் பதக்கங்கள், 25 ஐரோப்பிய சாம்பியின் பதக்கங்களையெல்லாம் வென்று 2007-ம் ஆண்டு ஜிம்னாஸ்டிக் உலகில் இருந்து ரிட்டையர்ட்மெண்ட் வாங்கியவர் அலினா.

ரஷ்ய பாராளுமன்றத்தின் துமா சபையில் புடின் தலைவராக இருக்கும் ஐக்கிய ரஷ்ய கட்சியின் உறுப்பினராக அலினா நியமிக்கப்பட்டதுதான் அலினாவின் முதல் அரசியல் பிரவேசம்.


புடின் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார். அலினாவைக் கைப்பிடிக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்துகின்ற விலைவாசி உயர்வுப் போராட்டத்தை எதிர்த்து ஆளும்கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கொள்கை பரப்புச் செயலாளர் வேலையைக் கச்சிதமாகச் செய்து வருகிறார் அலினா.

9. ரூபி டல்லா (Ruby Dhalla)

36 வயதான இந்திய வம்சாவழியுடைய ரூபி டல்லா சுதந்திரக் கட்சியின் சார்பில் கனடாவின் காமன்ஸ் சபையின உறுப்பினராக ஆகியிருக்கும் முதல் சீக்கியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.


அழகழகான பேன்ஸி டிரெஸ்களில் வலம் வரும் இவரது ஸ்டைலாலேயே இன்றைக்கு கனடாவின் சிக்கென்ற அரசியல் பெண்ணியவாதிகளில் முக்கியமானவராக மாறியிருக்கிறார் ரூபி.


ஆனாலும் கட்சிக்காக நீண்ட காலமாக பணியாற்றி வரும் ரூபிக்கு பொதுவாழ்க்கையில் ஒரு அசத்தலான பேக்கிரவுண்ட் கதை உண்டு.

ரூபிக்கு பத்து வயது இருக்கும்போது பஞ்சாப்பில் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி சீக்கிய தீவிரவாதிகளை கொன்ற சம்பவம் நடந்தது.


இதையடுத்து அப்போதே பிரதமர் இந்திராகாந்திக்கு அது பற்றிக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருந்தார் பத்து வயதான ரூபி.. ரூபியின் இந்தக் கடிதத்திற்கு பதில் எழுதிய இந்திராகாந்தி, ரூபியைப் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பிலும் குறிப்பிட்டு பேசியிருந்தாராம். கனடாவில் கடந்த தேர்தலின்போது அதிகமாக பரப்பப்பட்ட செய்தி இதுதான் என்கிறார்கள். எப்படியோ ரூபி இப்போதும் கனடாவின் ஆக்ட்டிவ்வான பெண்மணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

10. பெலிண்டா ஸ்ட்ரோனாச் (Belinda Stronach)

கனடாவில் இருந்து கிளம்பியுள்ள அடுத்த அரசியல் கவர்ச்சிப் புயல் இவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே மிகப் பிரபலமான பெண் தொழிலதிபராக இருந்தவர் பெலிண்டா.


அரசியல் நுழைவு இவருக்கு மிகச் சரியான பாதையாக அமைந்திருக்கவில்லை. பல கட்சிகளில் உள்ளே நுழைந்து வெளியே வந்து, வேறு கட்சிக்குத் தாவி நம்மூர் அரசியல்வாதிகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். ஆனாலும் இப்போதும் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.


இவரது அரசியல் சேவைகளைவிடவும் தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிகம் விமர்சிக்கப்பட்டவராக இருக்கிறார் பெலிண்டா. இரு முறை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் பெற்று கனடாவின் தேசிய ஹாக்கி அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுடன் வருடக்கணக்கான தொடர்பு, கன்சர்டிவேவ் கட்சியின் துணைத் தலைவருடன் டேட்டிங் என்று பல கிசுகிசுக்கள் வரிசைகட்டி வந்தாலும், “நான் பழசையெல்லாம் நினைச்சுப் பாக்குறதில்லை. இப்ப என்ன செய்றேன்றதுதான் எனக்கு முக்கியம்” என்கிறார் பெலிண்டா.


இடையில் தன்னைத் தாக்கிய மார்பகப் புற்றுநோயை தீரமுடன் எதிர்த்துப் போராடி ஜெயித்த பெலிண்டா, மார்பகப் புற்றுநோய்க்காக தனது பெலிண்டா பவுண்டேஷனின் சார்பில் பல கோடி ரூபாய்களை செலவழித்து சமூக சேவையையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

11. சிட்ரிடா ஜியாஜியா (Sitrida Geagea)

மேற்கத்திய கலாச்சாரமும், மதச்சார்பான கொள்கைகளும் இணைந்து ஒரு கலவையாக இருந்து வரும் லெபனான் நாட்டின் தற்போதைய ஸ்வீட் ஹார்ட் அரசியல்வாதி சிட்ரிடா.


லெபனான் நாட்டின் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சிட்ரிடாவின் அரசியல் நுழைவு திட்டமிட்டு நடந்ததில்லை. அவருடைய காதல் கணவரும் லெபனான் படைகள் என்ற கட்சியின் தலைவருமான சமீர் பாரிட் ஜியாஜியாவின் பின்னணியில் செயல்பட்டு வந்தவர். லெபனானில் நடந்த மக்கள் புரட்சிக்குப் பின்பு கணவர் சமீர் அரசியல் காரணங்களுக்காக சிறைப்படுத்தப்பட இதன் விளைவாகத்தான் நேரடி அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார் சிட்ரிடா.


கணவர் சிறையில் இருந்த காலக்கட்டத்தில் கட்சியையும் ஒருங்கே நடத்தி, கணவரையும் வெளியில் கொண்டுவர வைக்கவும், தேர்தலில் தன்னுடைய கட்சிக்கென்று ஒரு தனியிடம் கிடைக்கவும் இவர் நடத்தியிருக்கும் போராட்டத்தைப் பார்த்தால் ம்ஹும்.. நமக்கு வாய்த்தது இவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கடும் அரசியல் போராட்டங்களுக்குப் பிறகு தனது கணவரை 11 வருடங்கள் கழித்து சிறையிலிருந்து மீட்டுள்ளார் சிட்ரிடா.

ஒரு போராளியின் வாழ்க்கையைப் போன்றிருக்கிறது சிட்ரிடாவின் அரசியல் வாழ்க்கை.!!!

பொதுவாகவே உலகம் முழுவதிலும் பெண் அரசியல்வாதிகளின் வருகையை விரும்பாதவர்களாகத்தான் ஆண் அரசியல்வாதிகள் இருந்து வருகிறார்கள். இவர்களுடைய முழுக் கதையையும் படிக்கின்றபோது இதுதான் தெரிகிறது. ஒரு பெண்ணை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த இவர்கள் முதலில் கையில் எடுக்கின்ற ஆயுதமே அவரது ஒழுக்கம் சார்ந்த குணங்களைத்தான்.


ஆனால் அதே ஒழுக்கம் சார்ந்த குணம் தனக்கும் உள்ளது என்பதை இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட எதிர்ப்புலகத்தையும் எதிர்கொண்டு அரசியல் களத்தில் நிற்கும் இவர்களது துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும்..!

தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும் நன்றியினைப் பெறுபவர் உயர்திரு கூகிளாண்டவர்..!