11-07-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அநியாயமாக பட்டப் பகலில் கொல்லப்பட்ட தனது கணவருக்காக ஒரு மனைவி, கொலை செய்த கொலையாளி ஒருவருடன் நேருக்கு நேராக மோதிய சம்பவத்தை பார்த்தேன்..!
“தனது கணவரின் கொலைக்குக் காரணமானவர்கள் இன்றைக்கும் இதே அரங்கத்தில் கொஞ்சமும் குற்றவுணர்வில்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்” என்று தற்போதைய நாடாளுமன்றத்தின் கன்னிப் பேச்சிலேயே குற்றம்சாட்டியிருந்தார் விஜயகலா.
அதன் தொடர்ச்சிதான் சென்ற வாரம் இலங்கை அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பேசிக் கொண்டிருந்த விஜயகலாவை குறுக்கிட்டு பேசிய டக்ளஸ் என்னும் அந்த குள்ள நரி மனிதரைப் பார்த்து விஜயகலா சீறித் தள்ளிய அறச் சீற்ற நிகழ்வு..!
அதற்கு முன் மகேஸ்வரனைப் பற்றி சிறிது பார்த்துவிடுவோம்..!
அந்தக் கொடூரம் நிகழ்ந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அது 2008 ஜனவரி முதல் நாள். புத்தாண்டு தினம். புது வருடப் பிறப்பையொட்டி கோவிலுக்குச் சென்று ஆண்டவனை தரிசிக்க எண்ணினார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாச்சாரத் துறை அமைச்சருமான திரு.தியாகராஜா மகேஸ்வரன்.
ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு உள் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தபோது அங்கே நின்று கொண்டிருந்த துப்பாக்கி ஏந்திய ஒருவர் மகேஸ்வரனை சராமரியாகத் துப்பாக்கியால் சுட்டார். தடுக்க முனைந்த மகேஸ்வரனின் பாதுகாவலர்களும், கூட்டத்தில் இருந்த பொதுமக்களும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டார்கள்..!
அத்துடன், தென் பகுதியிலிருந்து மாதம் ஒரு முறை சுமார் 10 பேர்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களை வைத்தே படுகொலை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நபர்கள் தொடர்பான பெயர்கள் மற்றும், விபரங்களையும் 2008 ஜனவரி 8-ம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடர்களின்போது வெளியிடப் போவதாகவும் மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அப்போது, யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவருக்கு இதனுடன் தொடர்பிருப்பதாகவும் மகேஸ்வரன் தெரிவித்தார். “அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைதானே குறிப்பிடுகிறீர்கள்..?” என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டபோது, “நான் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நாட்டில் எல்லோருக்குமே அது யார் எனத் தெரியும்..” என பதிலளித்திருந்தார்.
இதையும் அன்றைய மின்னல் நிகழ்ச்சியில் நினைவுபடுத்திய மகேஸ்வரன், அந்தச் சம்பவத்திலிருந்து தமது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத் துறையினர் தம்மிடம் தெரிவித்ததையும் சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து நேரப் போவதை தான் உணர்வதாகவும், அப்படியொன்று நிகழ்ந்தால் இதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அவர் பயந்தது போலவே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான ஒரு வாரத்திற்குள்ளாகவே மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்..
ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு ஆட்சியில் இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்ற பெற்ற மகேஸ்வரன், ரணிலின் அமைச்சரவையில் இந்து கலாச்சார அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
இவரது நெருங்கிய நண்பரான பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் 2007-ம் வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் மகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
2007 நவம்பரில் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகேஸ்வரன், பாதிக்கப்பட்ட மக்களை திரட்டிக் கொண்டு பூசா தடுப்பு முகாமுக்கு சென்றதுடன் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தார்.
அப்போதைய நிலைமையில் பிரபாகரனது தமிழ் ஈழத்தைக் கொன்றொழிக்க வேண்டும் என்கிற வெறியில் இருந்த இலங்கை அரசு, கொழும்புவில் தமிழர்களுக்கு ஆதரவாக யாருமே இருக்கக் கூடாது என்று எண்ணத்தைக் கொண்டிருந்தது.
முதலில் இங்கேயிருக்கும் நல்லவர்களையெலலாம் மேல் உலகத்துக்கு அனுப்பிவிட்டு பின்பு வடக்கு கிழக்கில் கால் வைப்போம் என்ற சூழ்ச்சியின்படிதான் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் மகேஸ்வரன் விடுதலைப்புலிகளையும் கண்டித்துப் பேசியவர்தான். எதிர்ப்பாளர்தான்..! ஆனாலும் இலங்கை அரசையும் எதிர்க்கிறாரே.. இலங்கை அரசுக்கு கைக்கூலியாக இருக்கும் வடகிழக்கு மாகாண தமிழ் அரசையும் எதிர்க்கிறார். டக்ளஸையும் எதிர்த்து போர்க்குரல் கொடுக்கிறாரே என்கிற விசனத்தோடு அவர் கதையை முடித்தது இலங்கை பேரினவாத அரசு..!
கொல்லப்படும்போது மகேஸ்வரனின் வயது 45-தான். இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஐந்து வயதான ஆண் குழந்தை என்று மூன்று வாரிசுகள் அவருக்கு..!
கொழும்புவில் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டாலோ அல்லது சட்டமீறலுடன் சிறையில் அடைக்கப்பட்டாலோ தானே வழக்கறிஞர்களை நியமித்து அந்தத் தமிழர்களை மீட்கின்ற வேலையையும் மகேஸ்வரன் செய்து வந்ததால் கொழும்பு தமிழர்களிடையே மகேஸ்வரனுக்கு நல்ல பெயர் இருந்து வந்ததாம்..!
இது அத்தனையும் குலைத்துப் போடப்பட்ட பின்பு மகேஸ்வரனின் மனைவி விஜயகலா சமயம் கிடைக்கும்போதெல்லாம் தனது கணவரின் கொலைக்குக் காரணமான குற்றவாளி டக்ளஸ்தான் என்பதை மறைமுகமாக சொல்லி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு விஜயகலா மகேஸ்வரனின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி முன் மொழிந்தது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற விஜயகலா தான் தனது கணவரின் வழிப்படியே நடக்கவிருப்பதாகவும், அவரது கொலைக்குக் காரணமானவர்களை நிச்சயம் நீதியின் வசம் நிறுத்தி தண்டிக்க வைப்பேன் என்றும் சொன்னது என்னவோ அரசியல் வசனம் போலத்தான் இருந்திருக்கும் ஆளும்கட்சியினருக்கு..!
ஆனால் சென்ற வாரத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் திடீரென்று கடுமையான வாய்த் தகராறு இடம் பெற்றது.
உரையாற்றிக் கொண்டிருந்த விஜயகலா மகேஸ்வரன் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனினும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் தங்களுக்கு தேவையான 50 பேருக்கு மாத்திரமே பயன்களை பெற்றுக் கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தா, “நீங்கள் அப்படி யாரை குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விஜயகலா மகேஸ்வரன் “அரசாங்கத்தில் பல கட்சிகள் இருப்பதாகவும் குற்றம் செய்தவர்களுக்கே உறுத்தும்..” என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா மைக் இணைப்பு அவருக்குக் கொடுக்கப்படாத நிலையிலும் விஜயகலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு போன விஜயகலா, இத்தனை நாட்கள் மனதிற்குள் வைத்திருந்த வார்த்தைகளையெல்லாம் வெளியில் கொட்டித் தீர்த்துவிட்டார்.
“நீங்கள்தானே மகேஸ்வரனை கொலை செய்தீர்கள்..?” என்று டக்ளஸ் தேவானந்தாவை பார்த்து சிங்கள மொழியில் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.
இவர்கள் இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் நடந்தபோது ஆளும் தரப்பினர் டக்ளஸுக்கு ஆதரவாகக் கூச்சலிட பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக கூச்சலிட்டனர்.
அந்தக் காட்சியை கீழே இருக்கும் காணொளியில் காணலாம்..!
ஆனால் பெரும் அதிகார வர்க்கத்தை அசைத்துப் பார்க்கும் வெறியும், வேட்கையும் கொண்ட ஒரு பெண்மணியும் அந்தத் தேசத்தில் இருக்கிறார் என்பதைக் காட்டும் இந்தச் செய்தி, தமிழகத்தைச் சேர்ந்த பெண் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமாச்சும் சூடு, சொரணையை உருவாக்கட்டும்..!
தகவல்கள் – புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : பல்வேறு இணையத் தளங்கள்