Archive for the ‘இயக்குநர் ஸ்ரீதர்’ Category

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-13-11-2009

நவம்பர் 13, 2009

13-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இட்லி

குதிரை குப்புறத் தள்ளி, குழியையும் தோண்டிய கதையாக நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை பதம் பார்த்த நடிகர் சூர்யாவை பதிலுக்கு பதம் பார்க்கத் துவங்கிவிட்டது பத்திரிகையாளர் படை.

சிங்களப் படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாக சிங்கள பத்திரிகைகளில் வந்த கட்டிங் செய்தியை பின்லேடன் ரேஞ்ச்சுக்கு பரப்பிவிட்டதில் ‘கடுப்பு பத்திரிகையாளர்களின்’ பங்குதான் அதிகமாம். “இதை இப்படியே விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையா இழுத்துவிட்டாத்தான், நம்ம யாருன்னு அவங்களுக்குத் தெரியும்..” என்கிறது ‘நான்காவது எஸ்டேட்.’

சூர்யா தனது தந்தையின் அட்வைஸுக்காகவும், தம்பியின் லேசான முணுமுணுப்புக்காகவும் லெட்டர்பேடில் எழுதியனுப்பிய விளக்கக் கடிதத்தைத் தூக்கிக் குப்பையில் வீசி விட்டது பத்திரிகையுலகம். ஆனாலும் பெரிய இடத்தைப் பிடித்து அதன் மூலம் ஆனந்தவிகடன் அட்டையில் இடம் பிடித்த சூர்யாவை கடுப்பாக்கவே, அவரைப் பற்றிய ‘டேமேஜ் செய்திகள்’ தினம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறதாம்..

இவர்தான் இப்படியென்றால் சின்னக் கலைவாணரின் நிலைமை அதைவிட மோசம்.. அந்த மீட்டிங்கிற்கு அடுத்த நாளே வில்லங்கம் பிடித்த பத்திரிகையாளர்கள் சிலர், “விவேக் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் ஏன் பாதியில் நிற்கின்றன..? வெளிவராமல் இருக்கின்றன..?” என்பதற்கு அடையாளமாக அந்தப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் நிலைமையை வெளிப்படையாக்கி செய்தியைப் பரப்ப.. ‘நகைச்சுவை’ திகிலடித்துப் போயிருக்கிறது.

போதாக்குறைக்கு விவேக் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில் அவரை புகைப்படம் எடுப்பதை தவிர்த்து வருகிறது பிரஸ் உலகம்.. இதை ஒரு நிகழ்ச்சியில் விவேக்கின் நேருக்கு நேராகவே செய்துகாட்டிவிட மனிதருக்கு உச்சுக் கொட்டிவிட்டதாம்.. இப்போது இந்தப் பிரச்சினை சுமூகமாக முடிய வேண்டி பல்வேறு பெரிய புள்ளிகளிடம் தூது சென்றபடியிருக்கிறாராம் விவேக். ஆனாலும் விவேக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்கிற முடிவில் மாற்றமில்லை என்கிறது பத்திரிகை வட்டாரம்.

இன்று(13-11-2009) மாலை சென்னையில் நடக்கவிருக்கும் ஒரு சினிமா நிகழ்ச்சியில் விவேக் பேசப் போவதாகச் செய்தி வர.. பத்திரிகையாளர்கள் விவேக்கிற்கு கருப்புக் கொடி காட்டுவதாக முடிவு செய்து அதனையும் உளவுச் செய்தி போல பரப்பிவிட்டனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு விவேக் தனது வருகையை ரத்து செய்திருக்கிறாராம். “இதேபோலத்தான் இனியும் தங்களது எதிர் போராட்டம் தொடர்ந்து நடக்கும்” என்கிறது பத்திரிகை வட்டாரங்கள்.

கோவணத்தில் இருந்து கோர்பசேவ் வரையிலும் பொளந்து கட்டிய சின்னக் கலைவாணருக்கு, இது போதாத காலம் போலிருக்கிறது.. ‘அடப்பாவிகளா’ என்று இப்போது யார், யாரைத் திட்டுவது..?

தோசை

மலையாளத்தில் ஏற்கெனவே திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தது சித்தாரா-ரகுமான் ஜோடி. தமிழில் இருவரும் சேர்ந்து நடித்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ சூப்பர்ஹிட்டாக.. அதைத் தொடர்ந்து இந்த ஜோடி பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தது. ஆனால் வில்லங்கம் ஒரு திரைப்படத்தில் உருவாகி அத்தனை வருட நட்பை ஒரே நாளில் முறித்தது.


பாடல் காட்சியொன்றில் ஒரு பெட்ஷீட்டுக்குள் இருவரும் கசமுசா பண்ணுவதைப் போல் எடுத்துக் கொண்டிருந்தபோது சித்தாராவுக்கும், ரகுமானுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஓபாமா-ஜார்ஜ்புஷ் லெவலுக்கு பெரிசாக.. வாக்குவாதம், சண்டை, சச்சரவு, மூட் அவுட், ஷூட்டிங் கேன்சல் என்று பெரிய அளவுக்கு பஞ்சாயத்து ஆனது அப்போது.

அதன் பின்பு தமிழில் மட்டுமன்றி மலையாளத்திலும் இருவரும் ஜோடி போடாமல் தவிர்த்து சண்டைக் கோழிகளாகவே வலம் வந்து கொண்டிருந்தனர். காலம்தான் அத்தனையையும் தீர்த்து வைக்கும் மருந்தாச்சே..

இப்போது மிகச் சமீபத்தில் மலையாளக் கரையோரம் ஒரு திரைப்படத்திலும், தொலைக்காட்சித் தொடரிலும் இந்த ஜோடி இணைந்து நடித்திருக்கிறது.. இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் ‘கேளடி கண்மணியாக’ நட்பு துளிர்த்திருக்கிறதாம்.. வெல்டன்..

பொங்கல்

வலையுலகத்தின் பெருமைகள் பெருகிக் கொண்டே போக.. அதன் பெருமூச்சு கலையுலகத்தின் உள்ளேயும், வெளியேயும் அனல் காற்றாய் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பலரும் வலையிலும் எழுதத் துவங்கியிருக்கும் இந்த நேரத்தில், மற்றுமொரு மூத்தப் பத்திரிகையாளரும் நமது வலையில் விழுந்திருக்கிறார்.


‘தேவிமணி’ என்கிற பெயரைத் தெரியாத சினிமாக்காரர்களே இருக்க முடியாது. அரைநூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் இருக்கிறார். கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன் நடத்திய பத்திரிகைகளில் பணியாற்றியவர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக ‘தேவி’ வார இதழில் சினிமா செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். ‘கலைமாமணி’ விருதையும் பெற்றவர்.

நம்முடைய ‘அந்தணன்’, ‘உதயசூரியன்’ வரிசையில் இன்னுமொரு சூரியனாக வந்திருக்கிறார். என்னைப் போல் அல்லாமல் சின்ன சின்னதான கருத்து முத்துக்களை பதித்திருக்கிறார். இங்கே சென்று படித்துப் பாருங்கள்..

காரச் சட்னி

நடிகர் சங்கக் கூட்டத்தில் பேசிய ‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ், எம்.ஜி.ஆர் யாரோ ஒரு பத்திரிகையாளரை மேக்கப் அறைக்குள் வைத்து அடித்ததாக சொல்லியிருந்தார். அது யார், எவர், எப்போது நடந்தது என்று விசாரித்தபோது கிடைத்த விஷயங்கள் இது.

‘இதயம் பேசுகிறது’ மணியன் தயாரித்த ‘இதயவீணை’ படத்தின் பூஜை ஜெமினி ஸ்டூடியோவில் நடந்தது. அந்த பூஜைக்கு ‘பிலிமாலயா’ பத்திரிகையின் ரிப்போர்ட்டர் லட்சுமணன் வந்திருக்கிறார். ‘பிலிமாலயா’ பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வந்த லட்சுமணன், எம்.ஜி.ஆர். தனது படமொன்றில் நடிகை ரோஜாரமணியை வெறும் பாவாடை மட்டும் கட்டிக் கொண்டு வரும்படி சொன்னதாக எழுதியிருக்கிறார். இதைப் படித்த எம்.ஜி.ஆருக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் பட பூஜைக்கு வந்த லட்சுமணனை அன்போடு அணைத்து தோளில் கை போட்டு மேக்கப் ரூமுக்குள் அழைத்துச் சென்று நிஜமாகவே ‘பூஜை’ செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுதான் உண்மையாக நடந்தது என்கிறார்கள் திரையுலக சீனியர்கள். உபரி நியூஸ்.. அடி வாங்கிய லட்சுமணன், திரைப்பட இயக்குநர் பஞ்சு அருணாசலத்தின் தம்பி..

இவர் ஒருவர்தான் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியிருக்கிறாரா என்றால் இல்லை.. இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார்கள் சினிமாத்துறையினர். ‘தர்மஅடி’ வாங்கிய இன்னொரு புண்ணியவான் மிகப் பெரும் எழுத்தாளர்.. பிரபலமானவர்.. வெளியில் சொன்னால் நம்ப முடியாத அளவுக்கு முக்கியஸ்தர்.. அவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் திரு.தமிழ்வாணன்.


1972-களில் தமிழ்வாணன் ஏதோ ஒரு காரணத்துக்காக எம்.ஜி.ஆரை தாக்கி ‘தினமணிகதிரில்’ எழுதி வந்திருக்கிறார். சினிமா துறையில் எம்.ஜி.ஆர் சண்டியர் போலவும், அவருக்குப் பிடிக்காவிடில் ஒருவரும் சினிமாத் துறையில் இருக்க முடியாது என்பதைப் போலவும் தமிழ்வாணன் எழுதி வந்தது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக ஜப்பான் சென்றிருந்த எம்.ஜி.ஆரை வேறொரு வேலையாக அங்கே சென்றிருந்த தமிழ்வாணனும், மஸ்தான் என்றொரு தயாரிப்பாளரும் எம்.ஜி.ஆரின் ஹோட்டல் அறையில் சந்தித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் தமிழ்வாணனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து நாலு சாத்து சாத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர். இதன் பின் நடந்தது என்ன என்பதையெல்லாம் மஸ்தான் தனது புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார். நல்லவேளை அந்தப் புத்தகம் வந்தபோது தமிழ்வாணனும் உயிரோடு இல்லை. எம்.ஜி.ஆரும் உயிருடன் இல்லை..

சாம்பார்

பெப்ஸி உறுப்பினர்களுக்கு அரசே வீடு கட்டித் தரும் என்ற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து பெப்ஸியுடன் இணைந்த 28 சங்க அலுவலகங்களிலும் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது. தினம்தோறும் ஐந்து பேராவது சங்கங்களில் இணைந்து கொண்டேயிருக்கிறார்களாம். வருகின்றவர்களை அள்ளிப் போட்டு கல்லாவை நிரப்புவது என்று முடிவு செய்து அவசரம், அவசரமாக அட்மிஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கத்தினர்.

அதே நேரம் கூட்டம் வரும்போதே காசு அள்ளினால்தான் ஆச்சு என்பதை உணர்ந்திருக்கும் சங்கத்தினர் தங்களது உறுப்பினர் கட்டணத்தை உயர்த்தலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ஏற்கெனவே திரையுலக சங்கங்களில் உறுப்பினர் கட்டணங்கள் பிளைட் டிக்கெட் ரேஞ்ச்சுக்கு உயர்ந்துதான் இருக்கிறது.

இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநராவதற்கு ஐம்பதாயிரம் ரூபாய்.. டான்ஸ் யூனியனில் சேர்வதற்கு ஒன்றரை லட்சம், ஸ்டண்ட் யூனியனில் சேர்வதற்கு ஒரு லட்சம்.. ஏன்..? பாத்திரம் கழுவும் வேலையை செய்யும் நளபாக சங்கத்தில் சேர்வதற்கே எழுபத்தைந்தாயிரம் என்று அனைத்தும் சுயநிதிக் கல்லூரிகள் ஸ்டைலிலேயே இருக்கின்றன. இருப்பதிலேயே குறைவான உறுப்பினர் கட்டணம் எழுத்தாளர்கள் சங்கம்தான்.. இருபதாயிரம் ரூபாய்..

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து வீடு கட்ட இடம் தேடி ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்க.. இந்தப் பக்கம் உள்ளே நுழைய ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

கேசரி

‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷின் வாழ்க்கை வரலாற்றில் இயக்குநர் ஸ்ரீதருக்கு பெரும் பங்குண்டு. ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’தான் முதன்முதலில் நாகேஷுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தத் திரைப்படம். இதற்குப் பின் ஸ்ரீதரின் அத்தனை திரைப்படங்களிலும் நாகேஷ் நடித்திருக்கிறார். தமிழ்ச் சினிமாவின் மறக்க முடியாத ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் நாகேஷின் அந்த ‘செல்லப்பா’ கேரக்டர்தான் தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத கேரக்டர்.


ஸ்ரீதருக்கும், நாகேஷுக்குமான நட்பு திரையுலகத்தையும் தாண்டியது. ஸ்ரீதர் உடல் நலமில்லாமல் பாரிசவாயு வியாதியால் பீடிக்கப்பட்டபோது நாகேஷ்தான் தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதரின் அருகில் அமர்ந்து அவருடனான தனது தொடர்புகளை, சந்திப்புகளை மீண்டும், மீண்டும் ஞாபகப்படுத்தி அவருக்கு மெமரி பவரை திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டவர். இதுபோல் நிறைய கலைஞர்கள் செய்தார்கள். ஆனாலும் நாகேஷின் இந்த முயற்சியை அவருடைய குடும்பத்தினர் அதன் பின் கண்கலங்கிப் போய் பல பேட்டிகளில் சொல்லியிருந்தார்கள்.

இப்போது இது எதற்கு என்கிறீர்களா..? இதனை இப்போது சொல்ல வந்ததன் காரணம், இயக்குநர் ஸ்ரீதர் இறந்து போனது அப்போது உயிரோடு இருந்த நாகேஷுக்கு அவர் சாகின்றவரையிலும் தெரியாது என்கிற உண்மையைச் சொல்லத்தான். இது எவ்ளோ பெரிய கொடுமை..?


இதனைக் கேள்விப்பட்டு உறுதிப்படுத்திய பின்பு என்னாலும் நம்ப முடியவில்லை. நாகேஷின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தச் செய்தியை அவரிடம் சொல்ல நாகேஷின் குடும்பத்தினர் மறுத்துவிட்டார்களாம்.. இத்தனைக்கும் ஸ்ரீதரின் மனைவியே நாகேஷை வரச் சொல்லி கேட்டுக் கொண்டும் முடியவில்லையாம். அதேபோல் நாகேஷின் கடைசி நேரம் வரையிலும் ஸ்ரீதர் பற்றி ஒரு விஷயம்கூட நாகேஷுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.

நாகேஷ் என்ன நினைத்துக் கொண்டு வாழ்ந்திருப்பார் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. இன்னுமொரு விஷயமும் உண்டு. ஸ்ரீதருக்கு அடுத்து இறந்து போன நடிகர் நம்பியாரின் மரணமும் நாகேஷிடம் சொல்லப்படவே இல்லையாம்.. இரண்டு நண்பர்கள் தனக்கு முன்பாக விடைபெற்றது தெரியாமல்தான் இந்த நண்பனும் விடைபெற்றிருக்கிறான்.

ம்ஹும்.. நினைத்தால் மனம் ரொம்பவே கனக்கிறது..

தேங்காய் சட்னி

சினிமாவில் பெரும்பாலான சாதனையாளர்கள் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது படைப்புகளை பற்றி மட்டுமே கவலைப்பட்டு ஓய்ந்து போகிறார்கள். அவர்களுடைய திரைப்படங்களைப் பற்றிய முழுத் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அது மட்டும் கிடைக்கவே கிடைக்காது.

நல்லவேளையாக சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிகள் போல இருந்ததால், புள்ளிவிபரங்களைத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு..? ‘பிலிம் நியூஸ் ஆனந்தன்’ என்கிற மகத்தான மனிதரின் தொண்டு காரணமாகத்தான் தமிழ்ச் சினிமாவின் வரலாறும், கூடவே நடிகர்களின் திரைப்படங்கள் பற்றிய பட்டியலும் இப்போது நம் கையில் கிடைத்திருக்கிறது.

ஆச்சி மனோரமா ஆயிரம் திரைப்படங்களில் நடித்து முடித்த ஆதாரங்களைக்கூட பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்தந்த நடிகர், நடிகைகளே தங்களது திரைப்படங்களைப் பற்றிய செய்திகளை குறித்து வைத்திருந்தால் அவர்களுக்கு அது நல்லது என்பது தெரியாமல் உள்ளது.

இனிவரும் காலங்களிலும் அதுவும் ஒருவகையில் அவர்களுக்கு பிற்காலத்தில் உதவும் என்பதால் இப்போதுதான் அந்த வேலையை பலரும் செய்து வருகிறார்கள். தமிழில் இப்போதைக்கு நடிகர் சிவகுமாரிடம் மட்டுமே அவர் நடித்த திரைப்படங்கள் பற்றிய முழு விபரங்கள் உள்ளன. மற்றவர்களிடம் சில்லறைகள்தான் தேறும்.

அந்த வரிசையில் மலையாளத் திரையுலகத்தின் ‘நகைச்சுவைத் திலகம்’ ஜெகதிஸ்ரீகுமார் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.


மனிதர் கடந்த நாற்பதாண்டுகளாக மலையாள சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறார். அன்றிலிருந்து இன்றுவரையில் தான் நடித்த திரைப்படங்களின் பட்டியலையும், அவைகள் வெளியான வருடங்களையும் தொகுத்து தனி வெப்சைட்டையே வைத்துள்ளார். பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. இங்கே சென்று பாருங்கள்.

எவ்ளோ நல்ல விஷயம். வருங்கால திரையுலகத்தினருக்காக அவர் விட்டுச் செல்கின்ற மிகப் பெரிய சொத்து இது.. இது எப்படி உன் கண்ணுல பட்டுச்சு என்கிறீர்களா..? அடுத்ததை படிங்க..

பனியாரம்

நான் வயசுக்கு வந்த பின்பு(எப்படின்னுல்லாம் சின்னப் புள்ளை மாதிரி கேக்கக்கூடாது.. சொல்லிட்டேன்) நான் பார்த்த முதல் பிட்டு படம் ‘வைன் அண்ட் வுமன்'(Wine and Woman) என்கிற மலையாள திரைப்படம்தான். அதன் பின் இத்திரைப்படத்தை பல்வேறு ஊர்களில், பல திரையரங்குகளில் சலிக்காமல் பார்த்துத் தொலைத்திருக்கிறேன். ஆனாலும் சமீபத்தில் இப்படி நான் பார்த்த மலையாள கவர்ச்சித் திரைப்படங்களின் பட்டியலை கூகிளிட்டு தேடியபோது இப்படி ஒரு பெயரில் மலையாளத் திரைப்படமே இல்லை என்பது தெரிந்தது.

அப்படியானால் ஒரிஜினலாக அந்தப் படத்தின் மலையாளப் பெயர் என்னவாக இருக்கும் என்று நினைத்து என் மனம் அலைபாய்ந்தது. இதன் தேடுதல் தொடர்ச்சியாகத்தான் ஜெகதிஸ்ரீகுமாரின் வலைத்தளம் தென்பட்டது. முதலில் நடிகர், நடிகைகள் மூலமாகத் தேடலாம் என்று நினைத்து தேடினேன். இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஜெகதிஸ்ரீகுமார், பீமன் கே.ரகு, ஸ்வப்னா, ஜலஜா ஆகிய நான்கு பேர்தான் என்னுடைய ஞாபகத்தில் இருந்தார்கள். இந்தத் தேடுதலில் ஜெகதியிடமும், பீமன் கே.ரகுவிடமும், இயக்குநர் சங்கரன்நாயரிடமும் மட்டுமே புள்ளிவிபரங்கள் கிட்டியது.

அத்தனையையும் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எனது மனதுக்கினிய இத்திரைப்படத்தின் ஒரிஜினல் மலையாளப் பெயர் 1984-ம் ஆண்டு வெளியான “Kudumbam Oru Swargam; Bharya Oru Devatha” – இதுவாகத்தான் இருக்கும் என்பது எனது அனுமானம். இது தவறு என்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அறிந்து கொள்ளத் துடிக்கிறேன்.

வடை

தமிழில் நல்ல கதைகளுக்கு மெகா பஞ்சம் போலிருக்கிறது. புதிய நடிகைகளை வைத்து ஜில்பான்ஸ் காட்சிகளை எப்படி எடுப்பது என்பதில் மட்டும் புதிய, புதிய முயற்சிகளை செய்யும் தமிழ்த் திரையுலகம் கதையில் மட்டும் நொண்டியடிக்கிறது. பழைய திரைப்படங்களை காப்பி செய்வது.. இல்லையெனில் வெளிநாட்டு டிவிடிக்களில் இருந்து கதையை மட்டுமல்ல காட்சியையும் சுடுவது என்பதுதான் தமிழ்த் திரையுலகின் இன்றைய நிலைமை.

தெலுங்கில் இருந்து பரபரப்பான படங்களை சூட்டோடு சூட்டாக வாங்கிப் போட்டு இளையதலைமுறை ஹீரோக்கள் கல்லாகட்டுவதும் இதனால்தான்.. யூத்புல்லான ஒரு தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது எனில் அதனை பார்க்க ஆசைப்படுவதில் முதலிடம் நமது தமிழ் நடிகர்களும், தயாரிப்பாளர்களும்தான். அந்த வரிசையில் இப்போது மலையாளமும் சேர்ந்திருக்கிறது.

மலையாளத்தில் இந்த ஆண்டு மே மாதம் வெளிவந்த Passenger என்கிற திரைப்படம் செம திரில்லராம்.. சூப்பரான திரைக்கதையாம்.. திலீப்பும், சீனிவாசனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒரு டிரெயினில் பயணம் செய்து வரும் வழக்கமான சீசன் டிக்கெட் பயணிகளின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள்தான் படத்தின் கதையாம்.


இப்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுவிட்டது கவிதாலயா. அடுத்த சில நாட்களில் பரபரப்பாகச் சுழன்று ஏற்பாடுகளைச் செய்து ஆர்ட்டிஸ்டுகளை புக் செய்து இன்றைக்கு ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்டது. படப்பிடிப்பு துவங்கிய 35 நாட்களில் படத்தை முடித்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் செல்வா. சத்யராஜ், கணேஷ் வெங்கட்ராம், ரம்யா நம்பீசன் நடிக்கிறார்களாம்.. பார்ப்போம்.. அப்படியே எடுக்கிறார்களா..? அல்லது கெடுக்கிறார்களா.. என்று..?

கொத்தமல்லி சட்னி

நமக்குத் தெரிந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கும்போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தால் எப்படியிருக்கும்..?

ஒரு பத்திரிகை விஷயமாக தெலுங்குத் திரையுலகின் மூத்த அம்மாவான நிர்மலாம்மாவிடம் பேட்டியெடுக்க வேண்டும் என்று நினைத்து பல்வேறு முயற்சிகளை செய்து வந்தேன். தமிழ்த் திரையுலகின் பல பி.ஆர்.ஓ.க்களிடம் கேட்டபோது “நம்பர் வாங்கித் தருகிறேன்..” என்று உறுதியாகச் சொன்னதால் நானும் சாதாரணமாகத்தான் இருந்தேன்.

சரி.. கூகிளாண்டவரிடம் கேட்டாவது ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்போம் என்று தேடினால் கிடைத்தது மரண அடி. உண்மையில் மரணம்தான். தெலுங்குத் திரையுலகின் அம்மா கேரக்டரில் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாக அசைக்க முடியாத இடத்தில் இருந்த நிர்மலாம்மா இறந்து போய் ஏழு மாதங்களாகிவிட்டதாம்..


அடப்பாவிகளா.. தமிழ் சினிமாக்காரர்களுக்கே தெரியாத நியூஸாக போய்விட்டதே.. இந்த அம்மாவுக்கு மகனாக நடிக்காத நடிகர்களே தெலுங்கில் இல்லை.. நம்ம ஆச்சி மனோரமா மாதிரி வெகு அலட்சியமான, இயல்பான நடிப்பு இவருடையது..

எனக்கு மிகவும் பிடித்தது ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ஸில் விஜயசாந்தியுடன் அவர் நடித்திருந்தது.. ‘சிப்புக்குள் முத்து’வில் கமலஹாசனுக்கு பாட்டியாக நடித்திருந்தது.. ம்.. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் பெயர்கள் தெரியாது.. சிரஞ்சீவிக்கு மிகவும் பிடித்தமான அம்மாவாக இருந்தார்.

இந்தத் தகவல் எப்படி என் கவனத்துக்கு வராமல் போனது என்றே தெரியவில்லை. இன்னமும் நிறைய கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.. நல்லவேளை கூகிளாண்டவர் கடைசி நேரத்தில் என் மானத்தைக் காப்பாற்றிவிட்டார். வாழ்க கூகிள் குழுமம்..!

பாயாசம்

வர வர நானும் பாக்குறேன்.. சின்னஞ்சிறுசுக அல்லாரும் வயசு, வித்தியாசம் இல்லாம ‘ஏ ஜோக்ஸ்’ சொல்லவும், படிக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. முன்னாடில்லாம் இதைப் படிக்கணும்னா அந்த மாதிரி புத்தகத்தைத் தேடிப் புடிச்சுத்தான் படிக்கணும். ஆனா இப்ப என்னடான்னா நல்ல நல்ல பதிவுகளுக்கு இடையில எல்லாம் இதுவும் இருந்து, அந்த நல்ல பதிவுகளை ரசிக்க முடியாமல் போகுது..


அதுவெல்லாம் இருக்க வேண்டிய இடத்துலதான் இருக்கோணும். படிக்க வேண்டிய நேரத்துலதான் படிக்கோணும்.. மறைச்சு வைச்சு படிக்க வேண்டியதுக்காக ‘கந்தசஷ்டிகவசம்’ புத்தகத்துக்கு நடுவுல இதை வைச்சுப் படிக்கக் கூடாது.. ரொம்பத் தப்பு.. யாருக்குத் தெரியுது..? புரியுது..? சொன்னா.. ‘நான் யூத்து.. நான் ரொம்பவே யூத்து.. அப்படித்தான் இருப்போம்’ன்னு மேலேயும், கீழேயும் குதிக்கிறாங்க..

அதுனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். இனிமே இது மாதிரி பப்ளிக் பதிவுல யாராச்சும் ‘ஏ ஜோக்’ போட்டிருந்தாங்கன்னா தமிழ்மணம் நிர்வாகம் எனக்கு அளித்திருக்கும் கருவிப்பட்டையில் ஓட்டளிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முடிஞ்ச அளவுக்கு எம்புட்டு மைனஸ் குத்து குத்த முடியுமோ அம்புட்டையும் குத்துறதா தீர்மானம் செஞ்சுப்புட்டேன்.. யாரும் கோச்சுக்காதீங்க..

அது அவசியம் வேணும்னா மொக்கை மெயில் குரூப் மாதிரி நீங்களும் ஒரு மெயில் குரூப் ஆரம்பிச்சு அது மூலமா தேவைப்பட்டவங்களுக்கு மட்டும் அள்ளி விடலாம்.. அதைவிட்டுப்போட்டு பதிவுகளுக்கு நடுவுல அதைப் போட்டு இம்சை பண்ணாதீங்கப்பா.(முடிஞ்சா நானும் சேர்றேன்)

நேத்து ஒரு ‘யூத்’தோட தளத்தைக் காட்டி “படிச்சுப் பாரும்மா”ன்னு ஒரு ஆபீஸ்ல இருந்த கேர்ள் பிரெண்ட்கிட்ட எடுத்துக் கொடுத்திட்டு டீ குடிக்கப் போயிட்டேன். திரும்பி வந்து பார்த்தா.. அர்ச்சனையோ அர்ச்சனை.. மொத்தம் இருந்த அஞ்சு பாராவுலே, நாலு பாராவுல இருந்த நல்ல விஷயமெல்லாம் காணாமப் போயி, அஞ்சாவதா இருந்த அந்த ‘ஏ ஜோக்ஸ்’ எனக்கு வர வேண்டிய ஒரு நல்ல ஆஃபரை கெடுத்திருச்சு..

பழி வாங்கியே தீருவேன்.. விடமாட்டேனாக்கும்..!!!

பார்த்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

“நான் இது போன்ற சென்டிமென்ட்கள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒரு படத்துக்கு எங்கள் ஆபீசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆபீசில் இருந்த கடவுள் படங்களையே படம் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா..? யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமிராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்ட்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.

ஆனால் திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவன் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை வின்சென்ட் கேமராவில் பதித்து கேமராவை இயக்கினார்.

வின்சென்ட்டின் மகன் பண்ணின கலாட்டா போதாதென்று அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரெண்ட் கட். மறுபடியும் அபசகுனமா என்ற முணுமுணுப்பு என் காது படவே கேட்டது.

நான் இதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் கோபு மனம் வாட்டமுற்றது. ‘இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம். எனக்குக் கதை மீது நம்பிக்கை இருக்கிறது’ என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழு திருப்தியில்லை. “வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்..” என்றேன். அதன்படியே சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.


மறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வர வேண்டிய ஐயர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த பிராமணர் ஒருவரை வைத்து பூஜையை முடித்துட்டு குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கை தொடங்கினோம்.

படத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி.. ‘அனுபவம் புதுமை’ பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்துபோக ஷூட்டிங் தடைபட்டது.

அபசகுனம் என கருதப்பட்ட அத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் காதலிக்க நேரமில்லை.”

புத்தகம் : திரும்பிப் பார்க்கிறேன் – சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர்

போதுமென்று நினைக்கிறேன். மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..

பொறுமையாகப் படித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..