என் இனிய வலைத்தமிழ் மக்களே..
மூன்று வருட உழைப்பு.
சூர்யா, விக்ரம், அஜீத், ஆர்யா என்று நான்கு கதாநாயகர்கள்.
பாவனா, கார்த்திகா, பூஜா என்ற மூன்று கதாநாயகிகள் மாற்றப்பட்ட செய்தியினால், தமிழ்த் திரையுலகை பதைபதைக்க வைத்தத் திரைப்படம்.
சமீப காலமாக இத்திரைப்படம்போல் வேறு எந்தத் திரைப்படமும் பரபரப்பை ஏற்படுத்தியதில்லை.
முதலில் 7 கோடி பட்ஜெட் என்று சொல்லி துவங்கி, கடைசியில் 15 கோடியில் வந்து முடிந்திருக்கும் மெகா பட்ஜெட் திரைப்படம்.
இத்திரைப்படத்தினால் மூன்று வருடம் தாடி வளர்த்த புண்ணியத்தையும், மூன்று கதாநாயகிகளுடன் ஒரே காட்சியை மாற்றி, மாற்றி நடித்ததையும் ஆர்யா தன் எதிர்காலத் திரை வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளலாம்.
மற்றபடி அவருடைய முந்தையத் திரைப்படங்களில் அவர் நடித்து கஷ்டப்படுத்தியது போன்று இதில் எதுவும் இல்லை. அனைத்துமே ஆக்ஷன்தான்.
அவர் பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம். அவ்வளவுதான்.. ஆனால் மனிதர் ஓடுவது, நடப்பது.. அடிப்பது, துரத்துவது என்பதையெல்லாம் கணக்கில் எடுத்தால் ஷாட்டுகளின் எண்ணிக்கை 400 வரும்.
வலையுலகில் சமீபத்தில் நான் படித்த “நான் கடவுள்” படத்தின் கதையைப் போலவேதான் திரைப்படமும் உள்ளது. ஒரே ஒரு சின்ன மாறுதல்தான்.. ஆகவே நான் எதிர்பார்த்ததுதான் நடந்துள்ளது.
டைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.
இந்துக் கடவுள் கைவிட்டவுடன் அன்னியக் கடவுளான இயேசுவை உடனடி தெய்வமாக கருதி அழைக்கும் பட்டென்ற மாறுதல்.. உச்சக்கட்டமாக கடவுளை, “அந்தத் தேவடியா பையன்” என்று செல்லமாக அழைக்கின்ற பாங்கு..
இதையெல்லாம் பார்த்த பின்பும் இது நிச்சயமாக ஜெயமோகனின் கதை இல்லை.. வசனம் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. வாழ்த்துக்கள் ஜெயமோகன் ஸார்..
உடல்மொழியைத் தவிர வேறு நாகரிக மொழி தெரியாது. ஆனால் ஆம்பளை.. சினிமா ஹீரோவின் வயது. ஏதோ ஒரு மன அழற்சி நோய் என்பது போல் நமக்குத் தெரிகிறது. எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பது தெரியாது. ஆனால் உக்கிரமானவன். அடி என்றால் அடி பின்னுவான்.. பத்து பேர் சேர்ந்தாலும் அவன் எதிரில் நிற்க முடியாது.. இது போன்ற கதாநாயகர்கள்தான் பாலாவின் ஹீரோக்கள். இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல.. ஆர்யா இதில் அப்படித்தான் இருக்கிறார்.
சிக்ஸ் பேக் என்பார்களே.. அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்விதமாக சிக்ஸ்ட்டீன் பேக்கில் இருக்கிறார் ஆர்யா. எனக்குத் தெரிந்து “பதினாறு வயதினிலே” படத்திற்குப் பிறகு, ஒரு ஹீரோ கோவணத்துடன் பல காட்சிகளில் இடம் பெறுவது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன்.
இந்தப் பையனால் வீட்டிற்கு ஆகாது.. குடும்பத்திற்கு ஆகாது என்ற நன்கு மறை கழன்ற நான்கு ஜோதிடர்களின் அறிவுறுத்தலால் காசியில் கொண்டு போய் தொலைத்துவிட்டு வந்த பையனை 15 வருடம் கழித்து தேடிப் பிடித்து சொந்த ஊருக்கு அழைத்து வரும் அப்பா..
சுடுகாட்டில் மோப்பம் பிடிக்கும் வராக சாமியார்களோடு இணைந்து பிணைந்து பழகி, பிணம் எரிகின்றபோது வெளிப்படும் வாயுவைப் பிடித்து பிடித்தே தங்களது உடலையும், மனதையும் இறுக்கி வைத்திருக்கும் வராக சாமியாரான அந்த மகன் தனது சொந்த ஊருக்கு வந்த பின்பு தன் போக்கில் போவது..
உடல் ஊனமுற்றவர்கள்.. முக அழகைத் தொலைத்து அவலட்சணமானவர்கள்.. பிச்சைக்காரர்கள்.. என்று விளிம்பு நிலை மனிதர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு பிச்சைக்கார மனதுடைய மனிதன். அவன் கட்டுப்பாட்டில் வந்து சிக்கும் கண் பார்வையிழந்த அம்சவல்லி என்கிற கதாநாயகி.
கோவில் படிக்கட்டுகளில் பிச்சையெடுக்க வந்தவர்கள் கஞ்சா சுகத்தில் மூழ்கியிருக்கும் ஹீரோவுடன் அறிமுகமாகி ஹீரோயின் அவனுக்கு அறிவுரை சொல்லப் போய் அடி வாங்கி ஓட… இது ஒன்றுதான் ஹீரோயினுக்கும், ஹீரோவுக்குமான தொடர்பு.
ஆனால் இதுதான் படத்தின் முடிவுக்கும் கொண்டு செல்கிறது. அது எப்படி என்பதுதான் படத்தின் முடிச்சு.
பின்னணி இசையில் பல இடங்களில் தனியாகத் தெரிகிறார் இசைஞானி. மறுப்பதற்கில்லை.
வசனத்தில் ஜெயமோகன் தனித்தே தெரிகிறார். இவ்வளவு சமஸ்கிருத வார்த்தைகளை மனனம் செய்ய வைத்து, ஆர்யாவை பக்தி பழமாக்கியிருக்கிறார் ஜெயமோகன். இதற்காக ஸ்பெஷலாக அவரைப் பாராட்டலாம். மறுக்கவில்லை.. “மாட்டுக் கறி தின்னாலும் மலையாளத்தான் மூளையே மூளை” என்கிற வசனத்தில் ஜெயமோகனின் மூளை பளிச்சிடுகிறது. மறுக்கவில்லை.
“பிச்சைப்பாத்திரம்..” பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. மற்றவைகள் அப்போதைக்கு மனதை வருடுகின்றன. மறுக்கவில்லை..
காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் தனித்துவம் வாய்ந்துதான் உள்ளார். காசி காட்சிகள் அசத்தல். பிணக் கூட்டங்களுக்கு மத்தியிலான காசியின் சகஜ வாழ்க்கையைப் படமாக்கியிருக்கும் விதம் புதுமைதான்.. மறுக்கவில்லை..
பூஜா என்கிற அம்சவல்லி கண் பார்வையில்லாதவராக நடிப்பில் உருக்கியிருக்கிறார். அதிலும் கடைசிக் காட்சியில் அவருடைய நீண்ட வசனமும், பேசும்விதமும் லேசான உருக்கத்தைக் கொடுத்தாலும் அவர் அளவுக்கு இதுதான் முதல் நடிப்பு என்று சொல்லலாம். மறுக்கவில்லை..
சென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.
சின்னச் சின்ன கேரக்டர்கள்.. உடல் ஊனமுற்றவர்களின் முக பாவனைகள்.. அவர்களது தேர்வுகள்.. பிச்சைக்காரர்களை வேலை வாங்குபவன் என்றாலும் அவனுக்குள் இருக்கும் மனோபாவம்.. அவர்களைத் தூக்கிச் செல்லும் ஒரு திருநங்கை என்று இந்த சாக்கடை உலகத்தில் சிக்கிக் கொண்டவர்களின் நிஜ வாழ்க்கையை அப்பட்டமாக்கியிருக்கும் விதம்.. எந்த வார்த்தைகளைக் குவித்தும் சொல்லிவிட முடியாது.. மறுக்கவில்லை..
பாலாவுக்கு பழைய திரைப்படப் பாடல்கள் மீதிருக்கும் பாசவுணர்ச்சியில் தாளம் போட வைத்த பழைய திரைப்பாடல்கள் மீண்டும் இங்கே ஒளிபரப்பாகி தூங்குபவர்களைத் தட்டி எழுப்புகின்றன. அங்கதம் என்பதை எந்தவித சோகத்திலும் அனுபவிக்க வேண்டும் என்கிற கவலையற்ற மனிதனின் தனது மனோபாவத்தை நம்மிடமும் திணித்திருக்கிறார் பாலா.
பிச்சைக்காரர்களின் அவல நிலையில் அவர்களது கூத்தும், பேச்சும், பாட்டும் அவர்கள் மேல் பரிதாபத்தைத் தவிர மற்ற அனைத்தையும் கொண்டு வந்து கொட்டிவிட்டது. போதாக்குறைக்கு நடிகர்களின் நடிப்பு பற்றியும், நடிகைகள் தொழிலதிபர்களைத் திருமணம் செய்து கொள்வது பற்றியும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார். பாலா என்பதால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியம்..
ரயிலும், ரயில் பயணமும், ரயில் பயணிகளும், கஞ்சா அனுபவிக்கும் பின்நவீனத்துவ காட்சிகளும் வழக்கம்போல இது பாலா படம் என்பதை நிரூபிக்கின்றன.
அவ்வப்போது பாலாவின் இயக்கம் பலவிடங்களில், பலவிதங்களில் பளிச்சிடுகிறது.. மறுக்கவில்லை.. ஆர்யாவின் கோபம் கொண்டு குடும்பத்தினர் பயப்படுவது. போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு சவுண்ட்டிற்கே கக்கத்தில் தொப்பியை வைத்துக் கொண்டு ஓடி வந்து விழுவது.. கோர்ட்டில் நீதிபதி இன்ஸ்பெக்டரை எடக்கு, மடக்காகக் கேட்டு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடப்பது என்று அனைத்துவித குசும்புகளையும் உள்ளடக்கியது பாலாவின் இயக்கம்.
வழமையான பாலாவின் திரைப்படம்போல் சண்டைக் காட்சிகள்.. “சொத்..” “சொத்..” என்ற தாக்குதல்கள். கண்மூடித்தனமான பேயாட்டாங்கள்.. 24 நாட்கள் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் என்று வெறித்தனமான சண்டைக் காட்சிகள்.. பாலாவால் மட்டுமே இதனை எடுக்க முடியும் என்பது தெளிவு.
எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. ஏதோ ஒன்று.. ஏதோ ஒன்று..
எனது வழக்கமான விமர்சனப் பதிவுகளின்படி 15 பக்கங்களுக்கு “நான் கடவுள்” என்கிற இந்தக் காவியத்தின் வரலாற்றை எழுத வைக்காமல் தடுத்துவிட்டது.
அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை..
ஆகவே அன்பு பதிவர்களே.. தப்பித்தீர்கள்.. சந்தோஷப்படுங்கள்..
தயவு செய்து திருட்டு விசிடியில் படத்தைப் பார்த்துத் தொலைக்காமல், திரையரங்குகளுக்கு தைரியமாகச் சென்று படத்தைப் பார்த்துவிட்டு, என்னை ஏமாற்றிய அந்த ஒன்று எது என்பதனைக் கண்டுபிடித்து எழுதுங்கள்..
தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்..
நன்றி
வணக்கம்..