Archive for the ‘ஆஸ்கர் பரிசு’ Category

ஆஸ்கார் ரஹ்மான் சொல்லியிருக்கும் உண்மை..!

பிப்ரவரி 25, 2009

25-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அல்லா ரக்கா ரஹ்மானின் பெயர் இந்தியத் திரைப்பட உலகில் முதன்மைப் பெயராகப் பொறிக்கப்பட்டுவிட்டது. இந்த இமாலய வெற்றிக்கு அடிப்படை காரணங்களாக வெற்றியாளரான ரஹ்மான் சொல்கின்ற இரண்டு விஷயங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

1.இறைவனின் கருணை.

2. கடுமையான உழைப்பு.

“இறைச்செயல் என்ற ஒன்றே இல்லை. எல்லாமே நமது உழைப்பில்தான் உள்ளது” என்கிறது நாத்திகம். ஆனால் இந்த அனுபவஸ்தர் தனக்கு கிடைத்திருக்கும் வெற்றியினால், இந்த உலகத்திற்குச் சொல்லியிருக்கும் விஷயம் “எந்தவொரு செயலாக இருந்தாலும், அதற்கு இறைச்செயலின் ஆசி வேண்டும்” என்பதே.

‘ஆஸ்கார்’ மேடையில் அவர் தமிழில் பேசியதைவிடவும், “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொன்னதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுதான் உண்மையும்கூட.

உண்மையான ஆத்திகம் என்றைக்கும் பொய்க்காது. தூய்மையான பக்திக்கு இறைவனின் கொடை நாம் எதிர்பார்க்காததாகத்தான் இருக்கும். இங்கே ஆத்திகம்தான் ஜெயித்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் அடிப்படை கடவுள் பக்தி. அது மனிதர்களிடத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். இதைத்தான் ரஹ்மானின் இந்த வெற்றி உணர்த்துகிறது..

“கடுமையாக உழை.. உழைத்துக் கொண்டே இரு.. உன்னுடைய உழைப்பு 99 சதவிகிதம் நிறைவு பெறுமானால், மிச்சமிருக்கும் அந்த 1 சதவிகிதத்தை நீ வணங்கும் இறைவன் தான் அளித்து உன்னை வெற்றி பெறச் செய்வான்..” என்பது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கை. இதற்கு முழு முதற் உதாரணம் நமது ‘ஆஸ்கார்’ ரஹ்மான்.

அவர் இன்னும் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..!